Published:Updated:

சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

பிரீமியம் ஸ்டோரி
சித்திர ராமாயணம்

ராமனுடைய அருளால் விராதனுக்குச் சாபவிமோசனம் கிடைத்ததுடன் தத்துவ ஞானமும் கிடைத்தது. பழைய திவ்ய தேகத்துடன் புதிய திவ்ய ஞானக்கண்ணும் கிடைத்துவிட்டது. இந்தக் கண்ணால் பார்த்ததும் தன்னை உதைத்துத் தள்ளிய திருவடிகள், உண்மையில் தனக்கு அருள்செய்ய வந்த அடிமலர்களே என்பதும், உலகெங்கும் பட்சபாதமில்லாமல் மலர்ந்து பரந்து கிடக்கும் திருவருளின் ஸ்தூல வடிவமே என்பதும் தெளிவாகிவிட்டன.

பரம்பொருள் அறம் காத்துத் தன்னைப் போன்றவர்களுக்கும் அருள் பொழிவதற்காகப் பிறக்கவும் இறக்கவும் துணிந்துவிட்டதே. இப்படியும் ஒரு விளையாட்டா என்று ஒரே வியப்பில் மூழ்கிப்போனான் விராதன். கடவுளைத் தந்தையென்று சொல்வதைக் காட்டிலும் ‘உலகின் தாய்’ என்று கூறுவது பெரிதும் பொருத்தம் உடையது அல்லவா? எனில், தாயை அறியாத கன்று உண்டா? ‘கன்றாகிய உலகம் உன்னை அறிந்துகொள்ளவில்லையே’ என்கிறான்.

சித்திர ராமாயணம்

மெய்யைத்தான் சிறிது உணர்ந்து
    நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ?
    உனக்கென்ன குறையுண்டோ?


என்று கேட்டுவிட்டு, மேலும் தோத்திரம் செய்துகொண்டிருந்த விராதனை நோக்கி ராமன், அவன் சொன்னதையெல்லாம் உணர்ந்து கொள்ளாதவனைப் போல், ‘‘அப்பா! உன் வரலாற்றைச் சொல்லு’’ என்று கேட்டான். விராதனும் தனது சரிதத்தைச் சொல்லத் தொடங்கினான்.

விராதன் கதை!

குபேர நகரமான அளகாபுரியில் ரம்பை என்ற தெய்வப் பெண் நடனம் செய்துகொண்டிருக்கிறாள். அவளின் வசீகர ஆட்டத்தையும் அதன் விளைவுகளையும் கம்பனின் பாட்டிலேயே பார்த்துவிடுவோம்.

ஆட ரம்பை நீட ரங்கு
    ஊடு நின்று பாடலால்
ஊடல் வந்து கூடஇக்
    கூடு வந்து கூடினேன்!


ரம்பை ஒரு காதல் நாடகத்தைத் தனது ஆடல் பாடலால் அபிநயித்துக் காட்டுகிறாள். காதலர்கள் எவ்வளவு காதலோடு ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்; திடீரென்று பிணங்கி எவ்வளவு அதிருப்தியுடன் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள்.  காதலர் உலகில் சமாதானத்தைக் காட்டிலும் சண்டை பரஸ்பர நேசத்தைத் தூண்டி வளர்ப்பதும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு காட்சியை ரம்பையின் நடன வாயிலாக நாட்டியப் பிரியரான ரசிகர்களெல்லாம் கண்டு பரவசமாகிறார்கள்.

ஒரு கந்தர்வன் மட்டும் ரசிகர்களைப் போல் ரசிக்கவில்லை. அவன் சிற்றின்ப உணர்ச்சியுடன் தானே காதலனாகி, நாளடைவில் அந்த நடன மாதைக் காதலியாக்கிக் கொள்கிறான்; தனது கடமையை மறந்து மையலிலே தாழ்கிறான். இதை அறிந்த குபேரன் அந்தக் கந்தர்வன் தாழ்ந்த ராட்சஸனாக வேண்டுமென்று சபித்துவிடுகிறான்.

கரக்க வந்த காமநோய்
    துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
    அரக்க மைந்தன் ஆயினேன்.

சித்திர ராமாயணம்

`ஐயோ! அந்தக் கூட்டிலிருந்து நான் இந்நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தோம்? என்ன சம்பாதித்துக் கொண்டிருந்தோம்?’ என்று கணக்குப் பார்த்து...

அன்று மூல ஆதியாய்!
    இன்று காறும் ஏழையேன்,
நன்று தீது நாடலேன்
    தின்று தீய தேடினேனன்
என்று ஒப்புக்கொள்கிறான்.


அந்த ஆரண்யப் பகுதிக்கு ஒரு சர்வாதிகாரி போல் இருந்த விராதன், அந்த நிலையில் தன்னை ஏழை என்று ஒப்புக் கொள்வது கவனிக்கத்தக்கது. இது விராதனின் சுயசரிதை.

ஆனால், ‘உணவே பரம்பொருள்; பிறரை ஹிம்சித்தும் நம் வயிற்றை நிரப்புவதே பேரின்பம்’ என்ற கொள்கையுடன் உயர்ந்த லட்சியங்களை அறவே மறந்திருக்கும் பலருக்கும் இதுவொரு பொதுவான ஆத்ம சரிதமல்லவா?

(25.1.1948 ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

சித்திர ராமாயணம்

யாகமும் தியாகமும்!

வேதம் என்றதும் முதலில் நினைவுக்குவருவது யாகம்தான். யாகமும் தியாகமும் ஒன்றுதான்.

யாகத்திலே நெருப்பில் வஸ்துகளை, உடைமைகளைப் போட்டு தியாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்குப் ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, சுபிட்சம், நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அனுக்கிரகம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடமைகளை வேள்வித் தீயில் தியாகம் பண்ணி, இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்; கொடுக்க வேண்டும் அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வலியுறுத்துகிறது.

தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக ‘தியாகம் பண்ணினேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும். மற்ற வஸ்துகளைக் கொடுத்துவிட்டு, ‘நான் கொடுத்தேன்’ என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால், இந்த அகங்காரமானது, தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும்.

- மகா பெரியவர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு