Published:Updated:

வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை
வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

பிரீமியம் ஸ்டோரி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள வீரவாஞ்சி நகரில் அமைந்துள்ளது புற்றுக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சங்கரேஸ்வரி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் வழங்கப்படும் புற்றுமண் பிரசாதம் அனைத்துவிதமான தோல் நோய்களையும் தீர்ப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

பல வருடங்களுக்கு முன்பு இப்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தில் வீடு கட்டுவதற்காகச் செடி கொடிகளை அப்புறப்படுத்தினார்களாம். அப்போது, ஒரு வேப்ப மரத்தின் அடியில் நல்லபாம்பு படமெடுத்து நிற்க, அதற்கு மேலும் பணிகளைத் தொடராமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களாம்.

அதன் பிறகு அந்த வேப்ப மரத்தின் அடியில் ஒரு புற்று வளரத் தொடங்கியது. அதேநேரம், அந்தப் பகுதியில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தோல் அலர்ஜி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டனர். இந்த நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன், `வேப்ப மரத்தின் அடியில் வளர்ந்திருக்கும் புற்றின் மண்ணை எடுத்துப் பூசினால் தோல் நோய்கள் குணமாகும்' என்று அருள்புரிந்தாள். அதன்படியே, அலர்ஜியால் பாதிக்கப்பட்ட மக்கள் அம்மனைப் பிரார்த்தனை செய்து புற்றுமண்ணை எடுத்துப் பூசிக்கொண்டதும், அவர்களின் தோல் நோய் குணமானது.

வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

அதைத் தொடர்ந்து ஊர்மக்கள் அப்பகுதியில் வெப்பத்தைத் தணிப்பதற்காக நிறைய வேப்ப மரங்களை நட்டு வளர்த்தார்கள். அத்துடன், இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புற்றின் அருகில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தனர். இப்படி, தங்களுக்குக் காட்சி தந்த பாம்பை சிவன் அம்சமாகவும் வேப்ப மரத்தைப் பார்வதியின் அம்சமாகவும் கருதி வழிபட்டவர்கள், நாளடைவில் வேப்ப மரத்தடி புற்று அம்மனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்விதமாக, புற்றின் அருகிலேயே கோயில் கட்டி, அருள்மிகு சங்கரேஸ்வரி அம்மன் -  அருள்மிகு சங்கரலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள்.

கிழக்கு நோக்கியபடி தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்  சுவாமியும் அம்பாளும். மேலும், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீமுருகப்பெருமான், கன்னிமூலையில் அருளும்  ஸ்ரீகோடிசக்தி விநாயகர்,  ஸ்ரீதுர்கை,  ஸ்ரீதட்சிணாமூர்த்தி,  ஸ்ரீகாலபைரவர் ஆகியோரையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். மட்டுமின்றி,  நாகர் சிலைகளுடன் சப்த கன்னியரும் இங்கே காட்சி தருகின்றனர்.

மரத்தடியில் உள்ள புற்றுக்கு ஆரம்பத்தில் இருந்தே பால் ஊற்றிவருவதால், இங்குள்ள வேம்ப மரத்தைப் பாலாலேயே வளர்ந்த மரம் என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். சங்கரன்கோவிலைப் போலவே இந்தக் கோயிலிலும் ஆடித் தபசு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடித் தபசு திருவிழாவின் 11-ம் நாளன்று  ஸ்ரீசங்கரலிங்க சுவாமியும்  ஸ்ரீசங்கரேஸ்வரி அம்மனும் ஒருசேர ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு அம்பாளையும் சுவாமியையும் தரிசித்து வழிபட்டுச் சென்றால் குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் குழந்தை பாக் கியத்துக்காக இங்கு நடைபெறும் பிரார்த்தனை விசேஷமானது.

தாம்பாளத் தட்டு ஒன்றில் மஞ்சள்  பொடி, குங்குமம், மஞ்சள் வண்ணப் பட்டு வஸ்திரம், பசும்பால், முட்டை, பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை வைத்து தம்பதியரின் பெயரைச் சங்கல்பம் செய்து, அம்பாளிடம் வைத்து பூஜை செய்கின்றனர். பிறகு மஞ்சள் நிற பட்டுத் துணியில் எலுமிச்சைப் பழத்தை வைத்து முடிந்து, அம்பாள் இடையில் கட்டி, பூமாலை சாத்தி அர்ச்சனை செய்து தம்பதியரிடமே திரும்பக் கொடுப்பார்கள்.

வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

பின்னர், தம்பதியர் புற்று சந்நிதிக்குச் சென்று, புற்றின் அருகில் உள்ள ஐந்து தலை ராகுவின் மேல் மஞ்சள் பொடியும் ஒற்றைத் தலை கேதுவின் மேல் குங்குமமும் தூவி, புற்றில் பசும்பால் ஊற்றி வழிபட வேண்டும். பிறகு, அம்பாள் சந்நிதியில் கொடுக்கப்பட்ட எலுமிச்சைப் பழம் முடிந்த பட்டுத்துணியை மனைவி எடுத்து கணவரிடம் கொடுக்க, அவர் அதை வேப்ப மரத்தில் தொட்டில் போல் கட்ட வேண்டும். தொடர்ந்து, இருவருமாகச் சேர்ந்து அந்தத் தொட்டிலை மூன்று முறை ஆட்டிவிட்டு, புற்றை மூன்று முறை வலம்வந்து வழிபட வேண்டும். இதனால், மரத்தில் தொட்டில் ஆடுவது போலவே விரைவில் வீட்டிலும் தொட்டில் ஆடும் என்று பக்தர்கள் நம்பிக்கையாகக் கூறுகின்றனர். 

ஆடித் தபசு நாளில் மட்டுமின்றி, சனிக்கிழமை தவிர மற்ற நாள்களிலும் இந்த பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஆனால், வஸ்திரத்தின் நிறம் மாறுபடும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் சிவப்பு வண்ணத்திலும், புதனன்று பச்சை, வியாழக்கிழமை மஞ்சள், வெள்ளிக்கிழமை சந்தன நிறம் என்று அந்தந்த கிழமைக்குரிய நிறத்தில் வஸ்திரம் கட்ட வேண்டும் என்பது ஐதீகம்.

அம்பாள் குழந்தை வரம் அருள்பவள் என்றால், அவளின் செல்வப் பிள்ளையான முருகப்பெருமானோ கல்யாண வரம் அருளும் மூர்த்தியாகத் திகழ்கிறார்.

வேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில்! - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை

செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானுக்குச் சந்தன நிற வேஷ்டி, வள்ளிக்குப் பச்சை நிறப் புடவை, தெய்வானைக்குச் சிவப்பு நிறப் புடவை சாத்தி, மூவருக்கும் செவ்வரளி மாலை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உடைத்த துவரம்பருப்பை ஒரு வாழை இலையில் பரப்பி, அதன்மேல் தேங்காய் மூடிகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு வாரங்கள் இங்கு வந்து வழிபட்டு, நிறைவாக ஏழு சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்குடன் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருள்களைக் கொடுத்து அவர்களது ஆசியைப் பெற வேண்டும். உள்ளம் நிறைந்த பக்தியோடு இந்த வழிபாட்டை செய்தால் விரைவில் மணமாலை தோள்சேரும்.

அதேபோல், அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று சங்கரலிங்க சுவாமிக்கு மயில்கண் வேஷ்டி அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, வில்வார்ச்சனை செய்து வழிபட்டால் காரியத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

உங்கள் கவனத்துக்கு

ஊர்: கோவில்பட்டி-வீரவாஞ்சி

சுவாமி: சங்கரலிங்க சுவாமி

அம்பாள்: சங்கரேஸ்வரி

ஸ்தல விருட்சம்: வேம்பு

பிரார்த்தனைச் சிறப்பு: குழந்தை பாக்கியத்துக்காக இங்கு நடைபெறும் தொட்டில் பிரார்த்தனை விசேஷமானது. அதேபோல் காரியத் தடைகள் நீங்க சங்கரலிங்க சுவாமிக்கும், கல்யாண வரம் வேண்டி முருகப்பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 முதல் 1 மணி வரை; மாலையில் 5.30 முதல் 9 மணி வரை.

எப்படிச் செல்வது?: கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல, பேருந்து வசதிகள் உள்ளன. ஆட்டோவிலும் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு