மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?

கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? பூஜையறையில் சுவாமி படங்களுக்குச் சாத்தும் பூக்களை எப்போது களையலாம்? மறுநாள் புதிய பூக்களைச் சமர்ப்பிக்கும்போதுதான் நிர்மால்யத்தைக் களைய வேண்டும் என்கிறார் பெரியவர் ஒருவர். இதுகுறித்து தங்களது வழிகாட்டல் தேவை.

- கே.கார்த்திகா, கடலூர்


காலை, மாலை இரு வேளைகளிலும் புஷ்பம் சாத்தி வணங்குவது உண்டு. காலையில் சாத்திய புஷ்பம் மாலை நேரத்தில் வாடத்தான் செய்யும். அது, அதன் சுபாவம். மாலையில் பூஜை இல்லையெனில், காலையில் போட்ட மாலை அப்படியே இருக்கலாம். மறுநாள் பூஜையின் போதுதான் மாற்ற வேண்டும்.

பூஜையைப் பற்றி ஒரு விளக்கம் உண்டு. இந்த உடல் இருக்கிறதே, அது கோயில். உள்ளே உட்கார்ந்திருக்கிற உயிர் இருக்கிறதே, அது கடவுள். அஞ்ஞானம் என்பதான நிர்மால்யத்தை வெளியிலே தள்ளி பூஜையை ஆரம்பி என்பார்கள். அஞ்ஞானம் என்பது நிர்மால்யம். நேற்று போட்டது நிர்மால்யம். அதை அகற்றிவிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ‘நான் ஏற்கெனவே நாலு நாளைக்கு முன்னால் அகற்றிவிட்டேன்’ என்று சொல்லக் கூடாது.

கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?

கோயிலில் பூஜைக்கு முன் கதவைத் திறப்பதற்கே ஒரு மந்திரம் உண்டு. அதைச் சொல்லிக் கதவைத் திறந்து, முந்தைய நாளின் நிர்மால்யத்தை அகற்ற வேண்டும். அதன் பிறகுதான் ஜலமே விட வேண்டும் என்று விதி உண்டு என்கிறபோது, முதல் நாள் எப்படி அகற்ற முடியும்? கேரளாவில் நிர்மால்ய தரிசனம் என்பது பிரசித்தம். முதல் நாள் அணிவித்த பூக்களோடு சுவாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால் தான் அது நிர்மால்யம். எனவே, மறுநாள் பூஜையின்போது பூக்களை அகற்றுங்கள். முடியுமானால், மாலை வேளையிலும் பூஜை செய்ய முயலுங்கள். அப்போது வாடிய பூக்களை மாலையிலேயே அகற்றலாம்.

? காகம் தலையில் கொத்தினால் அபசகுனமா? அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமா?

- சி. குமரகுருபரன், தோவாளை


பொதுவாகவே காக்கா உடம்பில்பட்டால் குளிப்பது என்று வைத்திருக்கிறோம். இதற்கு அடிப்படை, சுகாதாரம். காக்கா எங்கெங்கோ சென்று உட்கார்கிறது. எதையோ தின்கிறது. நமக்கு அசுத்தம் வேண்டாம். அதனால் குளிக்கிறோம்.

‘காக்கா நம் மேல்பட்டு, குளிக்கவில்லை’ என்கிற சஞ்சலத்தால், செய்யும் காரியங்களில் இடையூறு ஏற்பட்டு அதனால் துக்கம் வரலாமே தவிர, காக்காயால் உறவினர் சாவது என்பது கிடையாது. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

? என் நண்பர் ஒருவர், வேலைக்குச் செல்லும் வழியில் கோயில் கோபுரத்தை மட்டும் வணங்கிவிட்டு நகர்ந்துவிடுவார். கேட்டால், ‘கோபுரத்தைத் தரிசித்தாலே கோடி புண்ணியம் உண்டு தெரியுமா...’ என்று விளக்கம் தருவார். எனில், கோபுர தரிசனம் மட்டுமே போதுமானது என்றாகிவிடுமே?!

- எம்.கே.மயூரநாதன், கும்பகோணம்


ராஜகோபுரத்தை மட்டும் வணங்கினால் போதாது. கோயிலுக்குள்ளே சென்று கருவறையில் இருக்கும் இறைவனையும் தரிசிக்க வேண்டும்.

உடல்நலக் குறைவு, முதுமை ஆகிய காரணங் களால் நடமாட இயலாதவர்கள், ‘கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க முடியவில்லையே’ என்ற தங்களது ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ள, கோபுர தரிசனம் செய்யலாம். அப்போதும் அவர் களின் மனம், கோயிலுக்குள் குடிகொண்டிருக்கும் இறைவனையே நினைக்க வேண்டும்.

ஆனால், திடகாத்திரமான உடலும் இளமையும் கொண்டிருப்பவன், ‘கோபுரத்தைத் தரிசித்து விட்டேன்; கோடி புண்ணியம் உண்டு’ என்று கருதினால் அது தவறு. அவனுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. கோபுரத்தைத் தரிசித்தாலே போதும் என்று கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்கும் மனம் இறையருளை இழந்துவிடும். அலுவல் நிமித்தமாகச் சென்றுவரும் வழியில் கோயில் கோபுரம் கண்ணில்படலாம். கிராமங் களில், மிக உயரமாக இருப்பது ராஜகோபுரம்தான். அது, நம் கண்ணில்படாமல் இருக்காது. ஆனால், இதெல்லாம் கோபுர தரிசனம் ஆகாது.

‘நான் காசிக்குப் போகப் போகிறேன். அங்கே தங்கப் போகிறேன் என்றாலே போதும். காசிக்குச் சென்று தங்கிய புண்ணியம் உண்டு!’ என்று பொருள் தரும் செய்யுள் உண்டு. அதற்காக காசிக் குப் போகத் தேவை இல்லை எனக் கருத முடியுமா? ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதும் இப்படித்தான். ஆன்மிகத்திலும் ஆண்டவன் வழிபாட்டிலும் பிடிப்பு ஏற்படுவதற்காக இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள் அவ்வளவே!

?சிவாலயங்களில் அர்த்தசோம பிரதட்சிணம் செய்வதன் தாத்பரியம் என்ன?

- கே.நெல்லையப்பன், வள்ளியூர்


வலம் வருதல் என்பது இறைவனுக்கான பணிவிடைகளில் ஒன்று. ஈசனை வலம் வருதல் மாறுபட்ட முறையில் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. அதை, அர்த்தசோம பிரதட்சிணம் என்பார்கள்.

கேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா?

ஈசனின் சிரசில் கங்கை வீற்றிருப்பாள். அபிஷேகத்தில் மகிழ்பவர் அவர் (அபிஷேகப்ரிய: சிவ:). அபிஷேக நீரானது, ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையில் பட்டு வெளிவரும். கருவறையைத் தாண்டி வெளி வரும் அந்த அபிஷேக நீரானது, பிரதட்சிண வழியின் குறுக்கே செல்லும். பிரதட்சிணம் செய்பவர்கள், கங்கையோடு இணைந்த அந்த அபிஷேக நீரைத் தாண்டிச் செல்லக்கூடாது. எனவே, அபிஷேக நீர் விழும் இடம் வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று அபிஷேக தீர்த்தத்தின் மறுபக்கத்தில் வலம் வருதலை முடித்துக் கொள்வார்கள். அதாவது, பிரதட்சிணத்தின் ஆரம்பமும் முடிவும் அபிஷேக நீரின் இருபக்கங் களில் நிகழும். அபிஷேக நீரைத் தாண்டாமல் இருப்பதற்காக பிரதட்ணம் பாதியில் திரும்புவதால், அது அர்த்தசோம பிரதட்சிணமாயிற்று.

? ஆலயங்களில்தேங்காய் - பழம் முதலாக நவகிரகங்களுக்குச் சமர்ப்பித்து தரப்படும் பிரசாதங்களை வீட்டுக்குக் கொண்டு வரலாமா?

-சி.ரேணுகா, திருப்பூர்-2


வீட்டுக்குக் கொண்டு வரலாம்; அதை உட்கொள்ளவும் செய்யலாம்; தவறில்லை. நாம் உண்டு மகிழ, நவக்கிரகங்களுக்குப் படைக்கிறோம். கிரகங்களின் பார்வை பட்டு தூய்மை பெற்ற அந்தப் பொருட்களை நாம் ஏற்று மகிழும்போது, அவற்றின் தூய்மை, நம்மையும் தூய்மைப்படுத்தி, நல்வழியில் செல்ல வைக்கிறது. கிரகங்களின் அருளானது, பிரசாதப் பொருளின் வாயிலாக நம்மில் கலக்கிறது. அது, நம்மை வாழ வைக்கிறது.

இறையுருவங்களுக்கு நாம் செய்யும் பணிவிடை கள் அத்தனையும் நமக்காகவே. இறைவனுக்கு பசி, தாகம், ஆசை, பாசம் போன்ற எதுவும் இல்லை. இறையருளுடன் இணைந்த சுத்தமான உணவானது, உடல்-உள்ளம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதுடன், அறிவைப் புகட்டி ஆனந்தத்தில் ஆழ்த்த ஏதுவாகும். ஆகவே, விபரீத விளக்கங்களை நம்பாதீர்கள்!

- பதில்கள் தொடரும்...