Published:Updated:

ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’
ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்பது திருமூலர் வாக்கு. ஆனால், மனம் செம்மை அடைய வேண்டுமானால், மகேஸ்வரனை பூஜித்தால்தான் முடியும். மகேஸ்வரனை பூஜிக்கவும் மனம் ஒருநிலையில் இருக்க வேண்டும். மனதுக்குக்காரகனான சந்திரன் ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான், மனம் ஒருநிலைப்பட்டு மகேஸ்வரனை பூஜிக்கவும், மனதைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடியும்.

ஜனன ஜாதகத்தில் சந்திரனின் நிலை பாதகமாக இருந்தால், மனதைக் கட்டுப்படுத்தவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் என்னதான் செய்வது?

உலகத்து ஜீவன்களிடம் கனிந்த அன்பும் கடல் போன்ற கருணையும்கொண்ட ஐயன் கயிலை நாயகன், நமக்கெல்லாம் மனவளம் அருள்வதற்காகவே பிறைசூடிய பெருமானாக - சந்திர மௌளீஸ்வரராக பல தலங்களில் கோயில் கொண்டுள்ளார்.

ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’

அப்படி, ஐயன் சந்திரமௌலீஸ்வரராக கோயில் கொண்டிருக்கும் பல தலங்களில் ஒன்றுதான், இப்போது நாம் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக தரிசிக்க இருக்கும் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்.

தஞ்சை மாவட்டம் திருஅவளிவநல்லூர் தலத்துக்கு அருகில் உள்ள விழுதியூர் என்னும் தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஐயன் சந்திரமௌலீஸ்வரரின் திருக்கோயில், இன்று மிகவும் சிதிலமடைந்து இருப்பதைக்கண்டு, மனம் பதைபதைத்துப் போனோம். ஒருகாலத்தில் ஆறுகால பூஜைகளும் திருவிழாக்களுமாக பூரண சாந்நித்தியத்துடன் திகழ்ந்த ஐயனின் திருக்கோயில் இன்று சரியான பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்திருக்கும் நிலையைக்காணும் சிவனடியார்கள் யாருமே கண்ணீர் பெருக்கெடுக்கக் கலங்கி நிற்கத்தான் செய்வார்கள்.

ஐயனின் திருக்கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்கும் நிதர்சன சாட்சியாகத் திகழ்கிறது. ஆம், ஐயனின் ஆலயத்திலேயே ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக லக்ஷ்மிநாராயண பெருமாளும் ஆழ்வார்களும் காட்சி தருகின்றனர். பொதுவாக சிவாலயங்களில் பரிவார தெய்வமாக மகாவிஷ்ணு காட்சி தருவதை நாம் தரிசித்திருப்போம். ஆனால்,  ஐயன் சந்திரமௌலீஸ்வரரின் ஆலயத்தில் பிராட்டிமார்களுடனும் ஆழ்வாராதி களுடனும் பெருமாள் காட்சி தருவதைக் கண்டு வியப்புற்ற நாம், அது பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள நினைத்தோம்.

ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’

நமக்கு அந்த ஆலயத்தைப் பற்றி தெரிவித்த கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகளிடம் விவரம் கேட்டோம்.

‘‘முற்காலத்தில் சந்திரமௌலீஸ்வரர் கோயிலும் ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் கோயிலும் சைவ வைணவ ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் ஒரே கோயிலாகவோ அல்லது அருகருகில் இருந்த இரண்டு  கோயில்களாகவோ  இருந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. காலப்போக்கில் பெருமாள் கோயில் முழுவதும் சேதம் அடைந்துவிடவே, அந்தக் கோயிலில் இருந்த தெய்வ மூர்த்தங்களை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டு வந்திருக்கக்கூடும். தற்போது இந்தக் கோயிலும் சிதிலமடைந்து திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது’’ என்று கூறியவர் தொடர்ந்து, ‘`தற்போது ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது’’ என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்தார்.

திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சந்திரசேகர சிவாச்சாரியாரிடம் பேசினோம்.

‘`இந்தக் கோயிலில் சிவபெருமான் சந்திர மௌலீஸ்வரராக அருள்புரிகிறார். அம்பிகை சௌந்தர்யநாயகி.  இங்கே  நவகிரகங்களின் ஆற்றலையும் இறைவனே ஏற்று அருள்புரிவதால், இங்கே நவகிரகங்கள் இல்லை. ‘சந்த்ர மா மனஸோ ஜாத’ என்ற யஜூர்வேத வாக்கியத்தின்படி, மனத்துயர், சதா கவலைகள் என்று இருப்பவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து சுவாமி சந்திர மௌலீஸ்வரரை வழிபட்டால், மனம் அமைதி அடைவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இங்கு அம்பிகை, ‘நித்ய யௌவனா’ என்ற லலிதா சகஸ்ரநாம நாமாவளியின்படி சௌந்தர்யநாயகியாக அருள்புரிவதால், அம்பிகையை வழிபடுபவர் களுக்கு நோயற்ற நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத அருள்மிகு சந்திரமௌலீஸ்வரரை வழிபட்டால் ‘தாராபலம் சந்த்ரபலம் ததைவ’ என்றபடி நீண்ட ஆயுளும் மன சந்தோஷமும் பெற்றுச் சிறப்பாக வாழலாம்’’ என்றவரிடம் திருப்பணிகள் குறித்துக் கேட்டோம்.

‘`பல வருடங்களாகவே இந்தக் கோயில் இப்படித்தான் இருக்கிறது. இந்தக் கோயிலில் பெருமாள், பிராட்டிமார்களுடனும் ஆழ்வாராதிகளுடனும் எழுந்தருளி இருப்பதால் சிவா விஷ்ணு கோயிலாகவும் திகழ்கிறது. ஊர்மக்களின் ஆதரவுடன் இப்போதுதான் திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். பெருமாளையும் தாயார் மற்றும் ஆழ்வார்களுடன் இப்போது இருக்கும் நிலையிலேயே பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம்  நடத்த  நினைத்திருக்கிறோம். திருப்பணிகள் விரைவாக பூர்த்தியாகி கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை’’ என்றார்.

ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’

மனவளம் அருளும் தலமாகவும் சைவ வைணவ ஒற்றுமையை  பிரதிபலிக்கும் கோயிலாகவும் திகழும் ஐயன் சந்திரமௌலீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெற நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வது நம்முடைய கடமை என்று நினைத்து, இயன்ற பொருளுதவி செய்வோம். அதன் பலனாக, ‘எல்லாம் சிவனென்ன நின்றானும், எரிசுடராய் நின்ற இறைவனும், கொல்லுங்கூற்றொன்றை உதைத்தானும்’ ஆகிய ஐயனின் அருளால், நம் வினைகள் யாவும் அகன்று மனவளமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் பெற்றுச் சிறப்புற வாழலாம்.

ஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’

எப்படிச் செல்வது..?

தஞ்சையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது விழுதியூர். தஞ்சையில் இருந்து 38, 69 எண்ணுள்ள பேருந்துகளில் சென்று முன்னியூர் (முனியூர்) என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள விழுதியூர் தலத்தை அடையலாம்.

Bank: Indian Overseas Bank
Saliamangalam Branch
A/C No: 136301000022527
IFSC: IOBA0001363


தொடர்புக்கு:

என்.சந்திரசேகர சிவாச்சாரியார்
செல்: 9443907990

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு