பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்!

புத்திர தோஷம் நீங்கும்!

சக்தியர் சங்கமம்!

கோயில் பிராகாரங்களில் நாகர் பிரதிஷ்டையை நீங்கள் தரிசித்திருக்கலாம். அவற்றில் இரண்டு நாகங்கள் பின்னிப்பிணைந்திருக்க அவற்றின் படங்களுக்கு இடையே லிங்கம் அமைந்திருந்தால், அதை ‘அனந்த லிங்கம்’ என்பார்கள். இப்படியான சிவலிங்கத்துக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும்; வம்சம் விருத்தியாகும் என்கின்றன ஞான நூல்கள்.

- சு.ஈஸ்வரி, திருநெல்வேலி-2

திருவேங்கடவனுக்கு ஒரு பாட்டு!

புரட்டாசி வந்துவிட்டால் எங்கள் வீட்டில் திருவேங்கடவனுக்கு பூஜைகள் அமர்க்களப்படும். புரட்டாசி சனிக்கிழமைகள் என்றில்லாமல் அந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் விரிவாக பூஜை செய்வார் எங்கள் பாட்டி.  அப்போது மிக அருமையான ஸ்தோத்திரப் பாடலைப் பாடுவார். அப்போது சிறுமியான எனக்கு நான்கு வரிகளை அர்த்தத்தோடு சொல்லிக்கொடுத்தார். அந்த வரிகள்...

 ஸ்ரீஸேஷஸைலஸுநிகேதன திவ்ய மூர்த்தே
    நாராயணாச்யுத ஹரே நளிநாயதாக்ஷ
லீலாகடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோக
     ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்

சக்தியர் சங்கமம்!

`சேஷகிரியில் வசிக்கும் பெருமாளே... திவ்யரூபம் கொண்டவரும், நாராயணரும், அச்சுதனரும், ஹரியும், புண்டரீகாக்ஷனும், விசேஷ லீலைகளால் அருளாடல்களால் சகல உலகங்களையும் காத்தவருமான திருவேங்கட பெருமாளே... எங்களையும் காத்து ரட்சிக்க வேண்டும்’ என்று இந்தப் பாடலுக்குப் பொருளும் சொல்வார்.  சமீபத்தில்தான்   ஸ்ரீவேங்கடேச்வர கராவலம்ப ஸ்தோத்திரத்தின் முதல் பாடல் இது என்பதை அறிந்தேன். அந்த ஸ்தோத்திரப் பாடல் எவரிடமேனும் முழுமையாக இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.

- வி.ஹரிப்ரியா, சேலம்

ஏழு நாள்கள், ஏழு கோயில்கள்!

காஞ்சியைத் தொண்ட மண்டலத்தின் கோயில் நகரம் என்று சொல்வார்கள். அங்கே பக்தர்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் வணங்க வேண்டிய கோயில்கள் என்று ஒரு பட்டியலை அன்பரொருவர் பகிர்ந்து ொண்டார்.

ஞாயிறு:   ஸ்ரீகச்சபேசுவரர் கோயில்

திங்கள்:   ஸ்ரீசந்திரேஸ்வரர், ஏகாம்பரநாதர் திருக்கோயில்

செவ்வாய்: மங்கல தீர்த்தக்கரையில் உள்ள   ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில்

புதன்:   ஸ்ரீசத்திய விரதநாதர் கோயில்

வியாழன்:  ஸ்ரீகாயாரோ கணேசுவரர் கோயில்

வெள்ளி:  ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில்

சனி:  ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.

- சுமதி சாய்ராம், சென்னை-44

திருக்கோயில் தத்துவம்!

‘தத்துவம் அறிந்து வழிபடு’ என்பார்கள் பெரியோர்கள். அதற்கேற்ப, நானும் ஒவ்வொரு விரதத்துக்கும் வழிபாட்டுக்குமான தாத்பர்யத்தை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். சமீபத்தில் குடும்பத்துடன் ஆன்மிக டூர் சென்றோம். அப்போது என் சகோதரியின் நாத்தனார் `திருக்கோயில்கள் உணர்த்தும் தத்துவம்’ குறித்து, தான் படித்த மிக அருமையான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். கோயிலின் ஒவ்வொரு பாகமும் எதை உணர்த்துகிறது என்பதை அறிந்தபோது சிலிர்ப்பாக இருந்தது. அந்தத் தகவல் உங்களுக்காகவும்...

ஆலயம்: ஆன்மாக்கள் இறைவனிடம் லயிக்கும் இடம்.

கோபுரம்: ஸ்தூல லிங்கத்தைச் சுட்டும் கோபுரம் போன்று நாமும் ஆன்மிக உணர்வில் ஓங்கி உயர வேண்டும் என்பதைக் குறிக்கும்.

கொடிமரம்: யோகியானவன் பிராண வாயுவை நடு நாடியில் அசைவற்று நிறுத்தித் தியானம் செய்தால், இறை தரிசனம் உண்டாகும் என்பதை உணர்த்துவதாம்.

பிராகாரங்கள்: பெருங்கோயில்களில் ஐந்து பிராகாரங்கள் உண்டு. இவை அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகிய ஐவகை கோசங்களைக் குறிக்கும்.

சக்தியர் சங்கமம்!

படம்: மஹிதங்கம்

மும்முறை வலம்: ஸ்தூலம், சூட்சுமம், காரணம் ஆகிய மூவகை சரீரங்களைக் குறிக்கும். அதாவது, ஐவகை கோசங்களையும், மூவகை சரீரங்களையும் கடந்து அப்பால் இருப்பவன் இறைவன் என்பதையே பிராகாரங்களும் பிராகார வலமும் குறிக்கின்றன.

மண்டபங்கள்: ஆலயத்தில் அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஸ்நபன மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என்று ஐவகை மண்டபங்கள் உண்டு. இவை நிவ்ருத்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீபம் ஆகிய ஐவகைக் கலைகளை உணர்த்துபவை.

கருவறை: அனைத்துக்கும் காரணமான மூலப்பிரகிருதியின் இடம்.

- கே.விஜி, தூத்துக்குடி

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

‘சந்திராஷ்டமம் என்றால் என்ன? அந்த நாளில் செய்ய வேண்டியது என்ன?’ என்று தோழி ஒருத்தி என்னிடம் கேட்டாள். அவளுக்காகவும் எனக்காகவும் இதுகுறித்து ஆன்மிகப் பெரியவர் ஒருவரிடம் நான் கேட்டறிந்த தகவல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டமம் ஏற்படும். இந்தக் காலம் இரண்டரை நாள்கள் நீடிக்கும். சந்திரன் மனதுக்கு அதிபதி. அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மனம் சஞ்சலத்துடன் இருக்கும். ஆகவே தான், சந்திராஷ்டம தினங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். அந்த நாள்களில் மன சஞ்சலம் விலகி, சந்தோஷம் பெற பிள்ளையாரையும் பிறைசூடிய பெருமானையும் வழிபட்டுப் பலனடையலாம்.

- காவேரி நாராயணன், மதுரை-3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு