Published:Updated:

சனங்களின் சாமிகள் - 10

சனங்களின் சாமிகள் - 10
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 10

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 10

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 10
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 10

முத்துப்பட்டன் கதை

சனங்களின் சாமிகள் - 10வெகு தூரம் வெயிலில் நடந்து வந்த களைப்பு... முத்துப்பட்டனின் கால்கள் ஓய்வுவேண்டி நடை வேகத்தைக் குறைத்தன. அதுவும் சீரான பாதை என ஒன்று இல்லாத காட்டுக்குள் கொடிகளை விலக்கி, செடிகளைத் தாண்டி, முட்களைத் தவிர்த்து, கற்கள் இடராமல் நடப்பது கடினமான காரியம். முத்துப்பட்டன் உண்மையில் சோர்ந்துதான் போயிருந்தான். காட்டுக்கு நடுவே ஒரு கறுத்த பாறையைப் பார்த்தான். பாறைக்கு நிழற்குடை பிடிப்பதுபோல அருகிலேயே ஒரு பெரிய ஆலமரம். இதமான காற்று ஆலமரத்தின் இலைகளை வருடி, அசைத்துவிட்டுச் சென்றது. அந்தச் சூழலில், காட்டுக்குள் அவனுடைய அயர்ச்சியைப் போக்கும் மஞ்சமாகத் தெரிந்தது அந்தப் பாறை. பிறகு, முத்துப்பட்டன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. தன் துண்டை விரித்தான். மல்லாந்து படுத்தான். கண்களை மூடினான். சட்டென்று தூங்கிப் போனான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 10

எல்லா உயிரினங்களுக்குமே உறக்கம் அவசியமானது. உடற் களைப்பைப் போக்குவதற்கு மட்டுமல்ல... மனம் சீராக இயங்கவும், அமைதியுறவும் தூக்கம் மிக மிகத் தேவை. அதிலும் கனவற்ற, இடையூறுகளில்லாத உறக்கம் அலாதியானது. முத்துப்பட்டனின் கண்களைத் திறக்கச் செய்தது ஒரு குரல். குரலா அது..? யாழை இழைத்து இழைத்து வாசித்ததுபோன்ற இனிமை. முதலில் இது கனவோ என்கிற பிரமை அவனுக்கு.

மெள்ள கண்விழித்தான் முத்துப்பட்டன். குரல் வந்த திசையில் பார்வையை ஓடவிட்டான். அது ஒரு தெம்மாங்குப் பாடல்.  இரண்டு பெண்கள் ஏதோ ஒரு செடியை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக ஒரு கொடியை அசைப்பதுபோல வீசியபடி வந்தார்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான குரல். ஒருத்தி பாடலை நிறுத்த, இன்னொருத்தி தொடர்ந்தாள். அவர்களைப் பின்தொடர்ந்து ஒரு நாயும் வந்து கொண்டிருந்தது.

இரண்டு பெண்களும் கறுப்பு நிறம். அதுவே, அவர்களுக்கு ஒரு தனி சோபையைத் தந்துகொண்டிருந்தது. பளிச்சென்று துலக்கிவைத்த அம்மிக்கல் போன்ற கறுப்பு. இருவரும் காட்டில் பூத்த மலர்கள்போல செழுமையான, வாளிப்பான உடல்வாகோடு இருந்தார்கள். உழைத்து உழைத்து உரம் ஏறிய, வலுவான அழகான உடல் இருவருக்கும். அவர்கள் அழகில் அப்படியே கிரங்கிப் போனான் முத்துப்பட்டன்.  அப்போதுதான் ஓர் அந்நிய ஆடவன் அங்கே இருப்பதைப் பார்த்தார்கள் இரு பெண்களும். சட்டென்று பாட்டு நின்றது. அவன் யார் என ஆராய்வது போல பார்வை அம்புகள் அவனைத் துளைத்தன. அவன் திறந்த மார்பில் படர்ந்திருந்த முப்புரி நூல், பின் கழுத்தைத் தாண்டி விரிந்திருந்த தலைமுடி, நெற்றியில் இட்டிருந்த விபூதி, சிவந்த மேனி, களையான முகம்... அனைத்தும் அவனை பிராமணன் என்று அடையாளம் காட்டின.

`இவன் ஆபத்தில்லாதவன்... அதேநேரம், தங்களுக்குச் சம்பந்தம் இல்லாதவன்’ என்பதைக் கண்களால் இரு பெண்களும் ஒருவருக் கொருவர் உணர்த்திக்கொண்டார்கள். பிறகு, அவனிடம் இருந்து விலகி நடக்க ஆரம்பித்தார்கள். முத்துப்பட்டன் சட்டென்று எழுந்து, ஓடிவந்து அவர்களை வழிமறிப்பதுபோல நின்றான்.
     
``பெண்களே யார் நீங்கள்... வன தேவதைகளா... ஏன் பாடுவதை நிறுத்திவிட்டீர்கள்? பாமரர்கள் பாடும் தெம்மாங்குப் பாட்டுதான். அடடா... என்ன ஒரு `பா'வம்! உள்ளத்தை உருக்கிவிட்டதே உங்கள் பாட்டு.’’

அவன் பேசப் பேச பெண்கள் இருவரும் அதை கவனிக்காததுபோல நகர ஆரம்பித்தார்கள்.

``நில்லுங்கள்... பாடல் மட்டுமல்ல, உங்கள் உருவமும் என்னை மயக்கிவிட்டது... என்னை மணம் செய்துகொள்வீர்களா?’’

பெண்கள் பரஸ்பரம் பார்த்துக்கொண்டார்கள். பிறகு முத்துப்பட்டனைக் கூர்ந்து, ஆழமாகப் பார்த்தார்கள்.

``ஐயா... உங்களைப் பார்த்தாலே மேல்வர்க்கத்தைச் சேர்ந்தவராக, அதிலும் அந்தண இளைஞராகத் தெரிகிறது. நாங்களோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் கள். நீர் எப்படி எங்களை மணக்க முடியும்?’’ என்றாள் ஒருத்தி.

``நீங்கள் யாராக இருந்தாலும் சரி. அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. உங்களை மணந்தே தீருவேன்.’’

``வீண் கற்பனையை வளர்த்துக்கொள்ளாதீர்கள் ஐயா. எங்கள் தந்தைதான் எங்கள் இனத்துக்குத் தலைவர். என்றாலும், நீங்கள் எங்களை மணப்பதற் குச் சாதி தடையாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் விபரீதமான எண்ணத்தைக் கைவிடுங்கள்!’’ என்றாள் மற்றொருத்தி.

சனங்களின் சாமிகள் - 10

ஆனால், அவர்களின் அழகிலும் இசையிலும் மயங்கிக்கிடந்தான் முத்துப்பட்டன். ``பெண்களே... என்னைவிட்டுப் போய்விடாதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள்... நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. உங்களுக்காக நான் எதையும் விடத் தயாராக இருக்கிறேன். நீங்கள் எங்கே சொல்கிறீர்களோ... அங்கே வருகிறேன். வாழ்நாள் முழுக்க உங்களுக்காகவே வாழ்வேன். இது சத்தியம்’’ என்றான். 

பெண்கள் இருவரும் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒருத்தி கண் ஜாடை காட்டினாள். அவ்வளவுதான். இருவரும் ஓட ஆரம்பித் தார்கள். பழகிய காடு. அதன் வழிகள் அனைத்தும் அவர்களுக்கு பால பாடம். லாகவமாகக் கொடிகளை விலக்கி, பாறைகளைத் தாண்டி, சிட்டாகப் பறந்தார்கள் இருவரும். முத்துப்பட்டன் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடினான். தன் பலம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு பின்தொடர்ந்தான்.ஆனாலும், அந்தச் சகோதரிகளின் வேகத்துக்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் காட்டு மரங்களுக்குள் நுழைந்து, வளைந்து வளைந்து ஓடினார்கள். ஒருகட்டத்துக்கு மேல் பட்டனின் கண்களில் அவர்கள் படவில்லை. களைப்பு பற்றிக்கொண்டது. அப்படியே ஓரிடத்தில் அமர்ந்தவன், அப்படியே படுத்துவிட்டான்.

காட்டின் உள்ளடங்கிய பகுதியில் இருந்தது அந்தப் பெண்களின் இருப்பிடம். சில மூங்கில் குடில்கள், ஆநிரைகள், சில வேட்டை நாய்கள் எனக் காட்டோடு இணைந்ததாக இருந்தது அந்த மனிதர்களின் குடியிருப்பு. அங்கிருந்த அவர்கள் தலைவனின் கண்கள் காட்டின் ஒரு பகுதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. உயரமான மரங்களில் இருந்து பறவைகள் கீச்சிட்டுப் பறப்பதும், அணில்கள் வழக்கத்துக்கு மாறாகத் தறிகெட்டு, கிளைக்குக் கிளை தாவுவதும், குரங்குகள் மரங்களை விட்டிறங்கி ஓடுவதையும் பார்த்தவனுக்கு, காட்டுக்குள் ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாகத் தோன்றியது. அவன் எதிர்பார்த் ததைப்போல இரு பெண்கள் அவனை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல... அவன் புதல்விகள்... பொம்மக்கா, திம்மக்கா!

``அப்பா... அப்பா...’’ என மூச்சிரைக்க ஓடிவந்தார்கள் இருவரும். பாய்ந்து, அவர்களை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான் தலைவன்.

``ஏனம்மா இப்படி ஓடிவருகிறீர்கள்... என்ன நடந்தது... ஏதாவது விலங்கு துரத்தி வருகிறதா?’’
 
``எங்களை விலங்கு துரத்தவில்லை அப்பா. ஒருவன் துரத்தி வருகிறான்’’ என்றாள் திம்மக்கா.

``என்ன... இந்தப் பகடைகளின் தலைவனின் மகள்களைத் துரத்துகிற அளவுக்குத் துணிச்சல் எவனுக்கு வந்தது. இப்போதே போய், அவனை வெட்டி, நரிக்கும் நாய்க்கும் போட்டுவிடுகிறேன்’’ குரலில் ஆவேசம் பொங்கச் சொன்னான் அந்தத் தலைவன். சொன்னதோடு, ஒரு வல்லயத்தை (ஈட்டி போன்ற ஓர் ஆயுதம்) எடுத்துக்கொண்டு, வேக வேகமாகக் காட்டை நோக்கி நடந்தான். அவன் வளர்த்த பூச்சி நாயும் அவனைத் தொடர்ந்து சென்றது.

தலைவன் காட்டுக்குள் வேகமாக நுழைந்துவிட்டானே தவிர, முத்துப்பட்டனைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை. எப்படியோ ஓரிடத்தில் முத்துப்பட்டனின் காலடித் தடத்தைக் கண்டுகொண்டான். அதைப் பின்பற்றி மெள்ள நடந்தான். ஒரு மரத்தின் அடியில் இளைஞன் ஒருவன் படுத்துக்கிடப்பதைக் கண்டான்.

`நம் பெண்கள் குறிப்பிட்டது இவனாக இருக்குமோ... இந்த இளைஞன் யாரோ... தெரியவில்லையே!  பார்த்தால் அந்தணன் போல் தெரிகிறதே. ஆக, தொட்டு எழுப்ப முடியாது’ என யோசித்தவன், ஒரு சிறு கல்லைத் தூக்கி அவன்மேல் போட்டான்.  முத்துப்பட்டன் பட்டென்று எழுந்து உட்கார்ந் தான். தனக்கெதிரே வல்லயத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கும் தலைவனைப் பார்த்தான்.

``நீங்கள் யார்?’’ என்று கேட்டான்.

``நான் இங்கு வசிக்கும் இனத்தவர்க்குத் தலைவன். என் மகள்கள் காட்டுவழி போனபோது, அவர்களை வழிமறித்து ஒருவன் காதல் பேச்சுப் பேசினானாம். அவனைத் தேடித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அவனைக் கண்ட துண்டமாக வெட்டி, காட்டு விலங்குகளுக்குப் போட வந்திருக்கிறேன்...’’

முத்துப்பட்டன் எழுந்து நின்றான். ``மாமா... உங்கள் பெண்களின்பால் ஆசைப்பட்டவன் நான்தான். அவர்கள் இருவரையும் முறைப்படி மணம் செய்ய ஆசைப்படுகிறேன். நாலு பேர் அறிய அவர்களுக்கு மங்கல நாண் பூட்டி, மனைவிகளாக ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றான்.

அவன் பேச்சில் தொனித்த பவ்யத்தையும் சிரத்தையையும் உற்றுக்கவனித்தான் தலைவன். அவன் சுத்தவீரன் என்பது அவன் பேச்சிலும் தோற்றத்திலும் தெரிந்தது.

``ஐயா இளைஞரே... நீங்கள் என் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது நடக்காத காரியம். சமூகம் ஏற்றுக்கொள்ளாது. உங்களுக்கும் எங்களுக் கும் எந்தவிதத்திலும் எட்டாது. வேண்டாம்... உங்கள் சித்தத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் என் பெண்களைத் தர மாட்டேன்’’ என்றான் தலைவன்.

``மாமா... இதற்குத்தானா அச்சப்படுகிறீர்கள். சாதிதான் பிரச்னை என்றால் அதை நான் சரி செய்துவிடுகிறேன். என் சாதியை விட்டுவிட்டு உங்கள் சாதியில் சேர்ந்து விடுகிறேன்’’ என்றான்.

உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் முத்துப்பட்டனை சற்று நேரம் கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தான் தலைவன். பிறகு, ``அப்படியானால் சரி... முதலில் நீங்கள் யார்... உங்கள் வரலாறு என்ன... அதைச் சொல்லுங்கள்’’ என்றான்.

முத்துப்பட்டன் தன் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான்.  

- கதை நகரும்...


தொகுப்பு: பாலு சத்யா

சனங்களின் சாமிகள் - 10

தங்க ரதமும் தேவாமிர்தமும்!

ஒவ்வொரு கடமையும் புனிதமானதுதான். கடமையில் பக்தியுடன் இருப்பது, தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.

புத்தரைப் போன்ற ஆழ்ந்த உணர்ச்சிகொண்டால் நீங்கள் புத்தராகலாம். இதயபூர்வமான உணர்ச்சிதான் வாழ்க்கை ஆகும். அதுவே சக்தி; அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறனைக்கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது.

அழகான பலூனை அளவுக்குமேல் ஊதினால், படாரென்று வெடித்துவிடும். இந்த நிலை நமது வாழ்வுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. வரவுக்கு ஏற்றச் செலவும், தகுதிக்கேற்ற உறவும் கொள்ள வேண்டும்.

தங்கரதமும் தேவாமிர்தமும் கிடைப்பதற்கல்ல, நம் முன்னோர் பக்தி செய்யச் சொன்னது. மனிதனாக வாழ்வதற்கு இன்றியமையாத நெறிகளைத் தருவதுதான் பக்தியின் அடிப்படை.

- சுவாமி விவேகானந்தர்