Published:Updated:

மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...
மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...

கே.குமார சிவாச்சாரியார், படங்கள்: க.சதீஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று சொல்லும் அளவுக்குப் புராண ரீதியாக புனிதத்துவம் பெற்றுத் திகழும் தலம் மயிலாடுதுறை. புனிதத்துவம் பெற்ற மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் ‘துலா ஸ்நானம்’ போலவே, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ‘காவிரி புஷ்கரம்’ விழாவும் பிரசித்தி பெற்றது. அதிலும் இந்த வருடம் (செப். 12 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுவது 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரமாகும். 

மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...

நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மதேவரிடம் உள்ள மூன்றரை கோடி தீர்த்தங் களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தவம் இருந்தார். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரைப் பிரிய மறுத்துவிட்டது. எனவே, பிரம்மதேவர் குரு பகவானுக்கும் புஷ்கரத்துக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்து வைத்தார். அதன்படி குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதியில் புஷ்கரம் வாசம் செய்து, நீராடும் அன்பர்களுக்கு நன்மை செய்வது என்று முடிவானது.

அதன்படி துலாம் ராசியில் குரு பகவான் பிரவேசிக்கும்போது, துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கரம் வாசம் செய்வதை ஒட்டி நடைபெறுவதே காவிரி புஷ்கர விழாவாகும். அதே காலக்கட்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியர்களுடன் இந்திரனும் விஜயம் செய்து பக்தர்களுக்கு அருள்புரிவார்கள் என்பதுதான் புஷ்கரத்தின் மகிமையாகும்.

மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம்!

மயிலாடுதுறையில் (மாயூரம்) காவிரி புஷ்கரம் நடை பெறுவது மிகவும் சிறப்பாகும். காரணம், இந்தத் தலத்தில் இருக்கும் வள்ளலார் கோயிலில் அருளும் இறைவன் குரு வடிவாய்த் திகழ்கிறார். அவர் இப்படி இந்தத் தலத்தில் குரு வடிவாக எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு.

சிவபெருமானின் வாகனம் தர்மத்தின் வடிவமான ரிஷபம். சிவபெருமானை அவர் சொல்லும் இடங்களுக்கெல்லாம் சுமந்து சென்று திரும்பவும் கயிலாயத்துக்கு அழைத்துவருவது அதனுடைய கடமை.

ஒருமுறை அன்னை பார்வதிதேவி மயிலின் உருவம் ஏற்று, மாயூரம் தலத்துக்கு வந்து பரமனைக் குறித்துத் தவம் இயற்றிக்கொண்டிருந்தார்.  தமது மனதுக்கு இனிய தேவியை ஆட்கொளவதற்காக பரமன் ரிஷபத்தில் ஏறி பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களுடன் இந்தத் தலத்துக்கு வருகை தருகிறார். மற்ற தேவர்களின் வாகனங்களைவிட, ரிஷபம் மிக வேகமாகச் சென்று மாயூரத்தை அடைந்தது.
‘தன்னால்தான், தனது உதவியால்தான் சிவ பெருமான் சிறப்படைகிறார்; தன்னால்தான் அவரால் எல்லா இடங்களுக்கும் விரைவாகச் செல்ல முடிகிறது’ என்று ரிஷபத்துக்கு கர்வம் ஏற்பட்டது.  ரிஷபத்தின் கர்வம் பெருமானுக்குத் தெரியாதா என்ன?!

மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...

ரிஷபத்தின் கர்வத்தைப் போக்க எண்ணிய ஈசன், தம் திருமுடியில் இருந்து ஒரு கேசத்தை எடுத்து ரிஷபத்தின் முதுகில் வைத்தார். அவ்வளவுதான், அந்த ஒற்றைக் கேசத்தைச் சுமக்க இயலாமல், ரிஷபம் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டது. சற்று பொறுத்து சுயநினைவுக்கு வந்த ரிஷபம், ‘`எம்பெருமானே, சிறிது நேரம் சித்தம் கலங்கிப் போய் கர்வம் அடைந்துவிட்டேன். நான் கொண்ட ஆணவத்தால் எனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கி, என்னை ஆட்கொண்டருள வேண்டும்’’ என்று மன்றாடிப் பிரார்த்தித்தது.

ஐயனும் கருணைகொண்டு, `‘புண்ணிய தலமாம் மாயூரத்தில் உள்ள துலா ஸ்நானக் கட்டத்தில் நீராடி, தினமும் வில்வ தளத்தால் எம்மை பூஜித்து வந்தால், குரு வடிவாக எழுந்தருளி உன்னை ஆட்கொள்வோம்’’ என்று அருள்புரிந்தார்.

சிவபெருமான் அருளியபடியே மாயூரம் துலா ஸ்நானக்கட்டத்தில் நீராடி, ஐயனை பூஜித்து எம்பெருமானின் அருளைப் பெற்றது ரிஷபம். ஈசனின் ஆணைப்படி ரிஷப தேவர் துலாக்கட்டத்தில் நீராடி பூஜிதததால் அதற்கு `ரிஷப தீர்த்தம்' என்ற பெயர் ஏற்பட்டது.

ரிஷப தேவருக்கு குரு வடிவாக காட்சி தந்து ஐயன் வதான்யேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளிய ஆலயம் வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் ஐயன் மேற்கு பார்த்து திருக்காட்சி தருகிறார். ஐயன், `வழிகாட்டும் வள்ளல்' என்றும் அழைக்கப் படுகிறார். அம்பிகை ஞானாம்பிகை தேவி என்ற திருப்பெயர் ஏற்று, தெற்குப் பார்த்த சந்நிதியில் காட்சி தருகிறார். மேலும் பிரம்மா, லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, கணபதி, வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் போன்ற பரிவார மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.  சண்டன், முண்டன் ஆகிய அரக்கர்களைக் கொன்ற துர்கை, இங்கு அஷ்டபுஜ துர்கையாகக் காட்சி தருகிறார்.

மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...

காவிரி புஷ்கரத்தில் எப்படி வழிபடுவது?

புஷ்கர விழாவின்போது காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமாகப் போற்றப்படுகிறது. காவிரியின் உயர்வு பற்றி வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் கூறுவதைப் பார்த்தாலே காவிரியின் மகிமை நமக்குப் புரியும்.

கங்கையில் மூன்று நாள்கள் நீராடினால் பாவங்கள் நீங்கும்; ஏழு நாள்கள் யமுனையில் நீராடினால் பாவங்கள் நீங்கும்; ஆனால், காவிரியில் ஒருநாள் நீராடினாலே போதும், நம் வாழ்நாள் பாவங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் தங்களில் நீராடும் பக்தர்களின் பாவங்களைச் சுமந்து கருமை அடைந்த நிலையில், மாயூரத்தில் உள்ள காவிரி துலா ஸ்நானக்கட்டத்தில் நீராடித் தான் தூய்மை அடைகின்றனவாம். இதிலிருந்தே நம்மால் காவிரியின் மகிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அளவற்ற புண்ணியங்களைச் சேர்க்கும் புனித நதியான காவிரியில் நடைபெறும் புஷ்கர விழாவில் நீராடுவது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். காவிரி புஷ்கரத்தில் நீராடுவதற்கென்று சில நெறிமுறைகள் உள்ளன.

காவிரி புஷ்கர விழா செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 24 வரை நடைபெறுகிறது. முதல்நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். தொடர்ந்து மடாதிபதிகள், குருநாதர்கள், ஆன்மிக அருளாளர்கள் காவிரித் தாயின் திருவுருவப் படத்துடன் துலாக்கட்டத்தில் இருந்து ஊர்வல மாகப் புறப்பட்டுத் திரும்பவும் துலாக்கட்டத்துக்கே வந்து சேருவார்கள். பிறகு, அங்கே திரண்டிருக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தினமும் இரு வேளைகளிலும் சுவாமி புறப்பாடு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், நாம சங்கீர்த் தனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. மாலையில் காவிரியில் ஆரத்தியும் நடைபெறும்.

புஷ்கர விழாவின் தொடக்க நாளிலும் நிறைவு நாளிலும் அருள்மிகு அபயாம்பிகை சமேத ஸ்ரீமயூரநாதப் பெருமானும், ஸ்ரீவதான்யேஸ்வரரும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு தீர்த்தம் அருள்வார்கள். அந்த நேரத்தில் காவிரியில் நீராடி, காவிரித்தாயின் துதியைச் சொல்லி, காவிரியை வழிபட்ட பிறகு, மகா சங்கல்பம் செய்துகொண்டு, கன்யா பூஜை, குலதேவதா பூஜை செய்து, அன்னதானம், ஆடை தானம், இரண்யம் (காசுகள்) தானம் செய்வதுடன் பித்ரு தர்ப்பணமும் கொடுக்கலாம்.

பிறகு மயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில் சென்று இறைவனை வழிபட வேண்டும். தொடர்ந்து அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள திவ்யதேசமான திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதரையும் தரிசிக்க வேண்டும். இந்தத் தலத்தில் ஸ்ரீபரிமள ரங்கநாதர் காவிரியைத் தலைப்பக்கமும், கங்கையைத் திருவடிப் பக்கமும் அமரச்செய்து சயனக் கோலத் தில் காட்சி தருகிறார். இந்த திவ்விய தேசத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து காவிரியும் வங்கக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் நீராடி ஸ்ரீபரிமள ரங்கநாதரை வழிபடுவது குறிப்பிடத்தக்க செய்தி.

மாயூரத்தில் காவிரி புஷ்கரம்...

சங்கல்பம் செய்யும் முறை...

நீங்கள் எந்த நாளில் காவிரியில் நீராடுகிறீர்களோ... அந்த நாளின் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணத்தைச் சேர்த்து, `ஸ்ரீஅபயாம்பிகா சமேத மயூர நாத ஸ்வாமி சன்னிதெள - ஸ்ரீஞானாம்பிகா சமேத வதான்யேஸ்வர, ஸ்ரீமேதா தட்சிணாமுர்த்தி ஸ்வாமி சன்னிதெள- ஸ்ரீதுண்டிவிநாயக கால பைரவ காசிவிஸ்வேஸ்வர ஸ்வாமி சன்னிதெள- சர்வ மகாநதி தீர்த்த: புஷ்கர புண்யநாளே காவேரி ஸ்நான மஹம் கரிஷ்யே' என்று சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். பிறகு, காவிரியின் தியானத்தை மூன்று முறை கூற வேண்டும்.

ஓம் மருத் வ்ருதே மகா பாகே மகா தேவி மனோஹரே
சர்வாபீஷ்ட ப்ரதே தேவி ஸ்நானஸ்யதாம் புண்ய வர்த்தினி
ஸர்வ பாப க்ஷயகரே பரம பாபம் விநாசய:
கவேர கன்யே காவேரி ஸமுத்ர மஹிஷிப்ரியே
ப்ரதேஹி புக்திமுக்தி த்வம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி
சிந்து வர்யே தயாசிந்தோ மாமுத்தர பவாம்புஜே


கருத்து: காற்றாகப் பெருகுபவளும், மஹா பாக்யவதியும், எல்லோருடைய மனதையும் கவர்பவளும், விரதங்களை நிறைவேற்றுபவளும், ஸ்நானம் செய்பவர்களின் பாவங்களை அழித்து புண்ணியத்தைக் கொடுப்பவளுமாகிய தேவியே... நான் செய்த பாவங்களைப் போக்குவாயாக. கவேர மன்னனின் குமாரத்தியும், சமுத்திரராஜனுக்குப் பிரியமான பட்டத்து ராணியும், எல்லா புண்ணிய தீர்த்தங்களின் ஸ்வரூபமானவளும் ஆகிய காவிரி தேவியே... எனக்கு நல்ல புத்தியையும், சகல சௌபாக்யங்களையும், மோட்சத்தையும் தந்து காப்பாயாக! நதிகளில் உயர்ந்தவளே, கருணைக் கடலே, என்னை பிறவிக்கடலில் தவிக்கச் செய்யாமல் கரையேற்ற பிரார்த்திக்கிறேன்

புஷ்கர விழா என்பது தமிழகத்தின் காவிரியில் நம் வாழ்நாளில் ஒருமுறையே காணும் வாய்ப்பு கிடைக்கும்.பணி நிமித்தமாகச் செல்ல முடியாதவர்கள், நவம்பர் 16 - கடைமுகம் நீராடல் நாள் வரை புஷ்கரம் கொண்டாடிய காவிரி துலாக்கட்டத்துக்குச் சென்று நீராடி ஆலய தரிசனம் செய்து வரலாம்.

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம்!

காவிரித்தாய் இரண்டாகப் பிரிந்து திருவரங்கப் பெருமானை அரவணைத்துச் செல்லும் திருவரங்கத் திருத்தலத்திலும் காவிரி மகா புஷ்கரப் பெருவிழா நடைபெறவுள்ளது.

மழை வளம் பெருகவும், மண் வளம் சிறக்கவும், மனிதர்களின் துன்பங்கள் நீங்கி எங்கெங்கும் மகிழ்ச்சி பெருகவும் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமி அனுக்கிரகத்துடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமந்நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் அருளாசியோடு ஒரு புனித பிரம்ம யக்ஞமாகத் திருவரங்கத்தில் நடைபெறவுள்ளது காவிரி புஷ்கரம். வரும் செப்டம்பர் 12 முதல் 23-ம் தேதி வரையிலும் வேத பாராயணம், திவ்விய பிரபந்த, இதிகாச, புராண பாராயணங்களுடனும், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறச் செய்யும் யாகங்களும் நடைபெற இருக்கின்றன. மேலும், ஸ்ரீவைஷ்ணவ மடங்களைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமிகளும், சாதுக்களும், ஆசார்ய புருஷர்களும் கலந்துகொண்டு அருளாசி வழங்க உள்ளார்கள். பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு   இறையருள் பெற்றுச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு