Published:Updated:

நாரதர் உலா...

நாரதர் உலா...
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா...

திருவிழாவுக்குத் தயாரா திருத்தலங்கள்?!

நாரதர் உலா...

திருவிழாவுக்குத் தயாரா திருத்தலங்கள்?!

Published:Updated:
நாரதர் உலா...
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா...

‘‘நடந்தாய் வாழி காவேரி...’’ கணீர் குரலெடுத்து கனகம்பீரமாகப் பாடியபடியே பிரவேசித்தார் நாரதர். சட்டென்று புரிந்து போனது நமக்கு, அவர் எங்கிருந்து வருகிறார் என்பது. எனினும், சம்பிரதாயத்துக்குக் கேட்டுவைத்தோம்.   

நாரதர் உலா...

‘‘ஏதேது... பாட்டெல்லாம் கோலாகலமாக இருக்கிறதே? காவிரி தீரத்துக்குச் சென்று வருகிறீரோ’’

 நமது சம்பிரதாய தொனியை நாரதரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரத்தையாய் பதில் சொன்னார்.

‘‘ஆமாம்! மயிலாடுதுறைக்குத்தான் சென்று வருகிறேன். குரு பகவான் கன்னியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ந்திருக்கிறார் அல்லவா? அந்தத் துலாமுக்கு உரிய புண்ணிய நதி காவிரி.  அதையொட்டிதான் இந்த புஷ்கரம். இதன் மகிமை குறித்து கடந்த இதழில் விலாவாரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆக, நான் விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்துச் சொல்கிறேன்.’’ என்றவர் அதுபற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கடந்த இரண்டு வருடங்களாகவே காவிரியில் நீர் வரத்து போதுமானதாக இல்லை. அதைக் கவனத்தில் கொண்டு, பக்தர்கள் நீராட வசதியாக சுமார் 2 கோடி ரூபாய் செலவில், நிரந்தர நீர்த் தேக்கத் தொட்டி அமைத்துள்ளார்கள். அதில், நீர் நிரப்பவும் அழுக்கு நீர் வெளியேறவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்’’ என்றவரை  இடைமறித்துக் கேட்டோம்.

நாரதர் உலா...

‘‘வி.வி.ஐ.பி-கள் யார் யாரெல்லாம் வர இருக்கிறார்களாம்?’’

‘‘ஆதீனகர்த்தர்கள், துறவிகள் விழாவில் கலந்துகொண்டு ஆசீர்வதிக்க இருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விழாவிற்கு வருகிறாராம். மத்திய அமைச்சர்கள் சிலரும் வரக்கூடும் என்ற எதிர் பார்ப்பும் நிலவுகிறது’’

‘‘அப்படியானால் பாதுகாப்பு துவங்கி ஏற்பாடுகள் பலமாக இருக்குமே?’’

‘‘சரியாகச் சொன்னீர். சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்களாம். மேலும் இரண்டு லட்சம் பக்தர்கள் திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், சிறப்புப் பேருந்து வசதிகள், தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கண்காணிப்புக் கேமராக்கள், கழிப்பிட வசதிகள், ஆண்-பெண் இருபாலருக்கும் உடைமாற்றும் அறைகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’’ என்று கூறி முடித்த நாரதர், நாம் கேட்பதற்குள் அவராகவே முந்திக்கொண்டு சட்டென்று திருநள்ளாறு விஷயத்துக்குத் தாவிவிட்டார்.  

நாரதர் உலா...

‘‘திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மகிமையைக் குறித்து உமக்குத் தெரிந்திராதது எதுவும் இருக்காது. சனி பகவான் வழிபாடு முக்கியத்துவம் பெற்ற இந்தக் கோயிலில் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கில் திரள்வார்கள் பக்தர்கள். அப்படியான பெருங்கூட்டத்தை எதிர்கொள்ள திருத்தலம் தயாராகவில்லை என்பதுதான் பக்தர்களின் இப்போதைய கவலையும் ஆதங்கமும்’’

‘‘விவரமாகச் சொல்லும்’’

‘‘பக்தர்கள் வரிசையில் இருந்து ஆரம்பிக்கிறேன்’’ என்றவர் ஒவ்வொரு பிரச்னையாக விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘திருப்பதி உள்பட பக்தர்கள் அதிகம் கூடும் எல்லா கோயில்களிலுமே பக்தர்கள் வரிசை வழிகள் அமைப்பது வழக்கம்தான்.  எனினும், எவ்வளவுதான் சுற்றிச் சுற்றிச் செல்லும் வகையில் அந்த வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஸ்வாமியைத் தரிசிப்பதற்கு  பக்தர்கள் பிரதான வாயில் வழியாகச் செல்வது போன்றுதான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கே அப்படியில்லை; பிரதான வாசல்படியைத் தொட்டு வணங்க முடியாத வகையில் பாதை அமைத்திருக்கிறார்கள் எனப் புலம்புகிறார்கள் பக்தர்கள்.    

நாரதர் உலா...

அதுமட்டுமல்ல... ‘எப்போதும் திறந்தவெளியாக இருக்கவேண்டிய உள் பிராகாரத்துக்கு கான்கிரீட் கூரை அமைத்துள்ளார்கள். இவையெல்லாம் ஆகம விதிப்படி தவறு. மொத்தத்தில் கோயிலை புண்ணிய ஸ்தலமாகக் கருதி பராமரிக்காமல், வருமானம் ஈட்டித் தரும் வியாபாரத் தலமாகவே மாற்றிவிடுவார்கள் போல’ என்று குமுறுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்’’- என்ற நாரதர், பேச்சை சற்று நிறுத்தி இடைவெளி விட, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கேட்டோம்.

‘‘தீர்த்தங்கள் ஆக்கிரமிப்பு என்றும் தகவல் நமக்கு வந்தது. அதுபற்றி ஏதேனும் தகவல் உண்டா?’’

‘‘ஆமாம்! திருக்கோயிலைச் சுற்றிலும் 15 தீர்த்தங்கள்... அவற்றின் கரைகளில் தர்ப்பைக்காடு எனத் திகழ்ந்ததாம் இந்தத் தலம். கோயிலின் ஸ்தல விருட்சமும் தர்ப்பைதான். ஆனால், தர்ப்பாரண்யங் களைச் சீர்கெடுத்து, திருக்குளங்களை யெல்லாம் தூர்த்து கட்டடக் காடாக்கி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பக்தர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல், திருக்கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு, கோயிலுக்குச் சொந்தமான இடங்களி லிருந்து வரவேண்டிய வருமானம் வராததால் ஏற்படும் இழப்புகள் என ஒவ்வொன்றாகச் சொல்லிப் புலம்புகிறார்கள் பக்தர்கள். கோயில் நகர திட்டம் என்று கோடி கணக்கில் செலவு செய்யும் போதிலும், கோயிலைச் சுற்றித் திகழும் சாக்கடை நீர்த் தேக்கங்களை எவரும் கண்டுகொள்வதாக இல்லை. அப்படியொரு துர்நாற்றம் வீசுகிறது அங்கே!  

நாரதர் உலா...

இதைவிடக் கொடுமை என்னவென்றால்... வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு அன்னதானம் செய்வது வழக்கம். வேண்டுதலுக்கு ஏற்ப கடைகளில் விற்கப்படும் உணவுப் பொட்டலங்களை வாங்கி எண்ணிக்கை அடிப்படையில் அன்னதானம் செய்வார்கள். அதனைப் பெறுபவர்கள், அவற்றை மீண்டும் அதே கடைகளில் கொண்டுபோய் கொடுத்து பணமாக்கி விடுகிறார்கள்! அதுமட்டுமா? வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களிடம்  கைடு என்கிற பெயரில், பணம் பறிக்கும் கும்பலின் அட்டகாசத்துக்கு  முடிவே இல்லை என்கிறார்கள்’’

சிரத்தையுடன் பேசிக்கொண்டிருந்த நாரதரின் கவனத்தை, அவருக்கு வந்த போன் கால் ஒன்று திசைதிருப்ப, அழைத்தவரிடம் பேசிவிட்டு சொன்னார்.

‘‘திருநள்ளாறில் இருந்துதான் போன்! நான் பகிர்ந்துகொண்டது போக இன்னும் சில பிரச்னைகளும் உண்டு. எல்லாவற்றைக் குறித்தும் கோயில் நிர்வாகத் தரப்பில் பேசி விளக்கம் கேட்பதற்காக முயற்சி செய்து வந்தேன். அதுதொடர்பாகத்தான் போனில் நண்பர் பேசினார். நான் சென்று விசாரித்து விட்டு, இன்னும் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்’’ என்றபடியே நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...