Published:Updated:

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

? ‘இன்னின்ன இப்படித்தான்...’ என்று தர்ம சாஸ்திரம் வகுத்து வைத்திருக்கும் நியதிகளுக்கு விதிவிலக்கு உண்டா?

- க.வேணுகோபாலன், மயிலாடுதுறை

சாஸ்திர விதிமுறைகளைத் தங்களது விருப்பப்படி தளர்த்த இயலாது. எந்த நேரத்தில் விதிகளை - கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று சாஸ்திரம் சொல்லும். அதை மட்டும் தாங்கள் ஏற்கலாம். தொலை நோக்குடன், மனித இனத்தின் உயர்வை மையமாக வைத்து வகுக்கப் பட்ட சட்ட திட்டத்தின் வடிவமே சாஸ்திரம். நம் போன்றவர்கள் அதில் கை வைக்க வேண்டும் எனில், அதன் குறிக்கோளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். முக்காலமும் அறிந்த முனிவர் பரம்பரையின் பரிசு அது.

உடம்பு சரியில்லை. அப்போது குளித்தால் துயரம் இரட்டிப்பாகும். குளிக்கவில்லை எனில், சாஸ்திரம் மீறப்படும். அப்போது, ‘குளிக்க வேண்டாம்; மேனியில் தண்ணீரைத் தெளித்துக்கொண்டால் போதும்’ என்று சாஸ்திரம் விதியைத் தளர்த்தும். ஆனால், குளிப்பதற்கான வாய்ப்பும் சுகாதாரமும் இருந்தும் குளிக்காமல் இருப்பதை தர்ம சாஸ்திரம் ஏற்காது. துரதிர்ஷ்டவசமாக தந்தை இறந்துவிட்டார். மகனுக்கு ஒரு வயதுதான் ஆகிறது. அப்போது, அவன் செய்ய வேண்டிய ஈமச் சடங்கை மற்றவர் வாயிலாகச் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். அதேநேரம், உடல் ஆரோக்கியத்துடன் இளம் வயதில் மகன் இருந்தால், அவனையே நேரடியாக ஈமச் சடங்கில் ஈடுபடச் சொல்லும். வாய் பேச இயலாத ஒருவர். அவரால் மந்திரம் சொல்ல இயலாது. ‘அவர், மந்திரத்தைக் காதால் கேட்டால் போதும்!’ என்று சாஸ்திரம் கட்டுப்பாட்டைத் தளர்த்தும். தர்ம சாஸ்திரம் சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமாகவே தன்னிச்சையாக சாஸ்திர விதிமுறைகளையோ, கட்டுப் பாடுகளையோ தளர்த்தக் கூடாது. தளர்த்தினால் பலன் கிடைக்காது.

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

? துர்காதேவிக்கு ராகுகால பூஜை சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது ஏன்? புராணக் காரணங்கள் ஏதேனும் உண்டா?

-பரமேஸ்வரி சிதம்பரம், காரைக்கால்

கடவுள் திருவுருவங்களுக்கு நேரம் காலம் என்ற சம்பந்தத்தால் சிறப்பு இருக்காது. முழுமை பெற்ற கடவுளுக்கு எந்த நேரமும் பணிவிடை செய்யலாம். நேரம் காலம் எல்லாம் நம்மோடு சம்பந்தப்பட்டது. மற்ற அலுவல்களிலிருந்து விடுபட்டு, பூஜையில் இறங்க வேண்டும்.

ராகு காலத்தில் வேறு அலுவல்களுக்கு இடமில்லாததால், அது பணிவிடைக்கு உகந்ததாக மாறிவிடும். நம் மனம் மற்ற அலுவல்களின் தொடர்பு இல்லாமல் இருக்கும் வேளையில், கடவுள் வழிபாட்டில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். இறை உருவத்தை மட்டுமே மனத்தில் நிறுத்தி, அதில் லயித்து வழிபடும்போது அந்த வழிபாடு சிறப்பு பெறும். இந்த அடிப்படையில் ராகுகால வழிபாடும் சிறப்பு பெற்றுவிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?நமது விருப்பப்படி மற்ற அலுவல்களைத் துறந்து, இறையுருவத்தை தியானிக்க வேண்டும். இந்த வழக்கம் வளர்வதற்கு ராகுகால பூஜை அடித்தளமாக அமையும். அதற்காக, மற்ற அலுவல்கள் இல்லாத வேளையை மட்டுமே வழிபாட்டு வேளையாக நினைக்கக் கூடாது.
அலுவல்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் பிடிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனத்தை ஒருநிலையில் நிறுத்த இயலாதவர்கள், அதைப் பழக்கப்படுத்த ராகுகால பூஜையை ஏற்கலாம். மற்றபடி, ராகுகால பூஜை மட்டும்தான் செய்வேன், அதுமட்டுமே சிறப்பு என்று இருக்கக் கூடாது.

சமீபத்தில்தான் ராகுகால பூஜை பிரபலமாகி யிருக்கிறது. மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால், அவர்களை நம்பி அந்த பூஜை நிரந்தரமாக்கப் பட்டுள்ளது. கோயில்களில் நான்கு கால பூஜை, ஆறு கால பூஜை, பிரம்மோத்ஸவம், தீர்த்தவாரி போன்ற நடைமுறைகளில் எல்லாம் ராகுகால பூஜை இருக்காது.

‘தினமும் துர்கையை நினை’ என்றால், மனம் அதைச் செய்யாது. ராகுகாலம் துர்கைக்கு விசேஷம் என்றால் உடனே ஏற்கும். ஆகையால், பூஜையில் ஈடுபட வைப்பதற்காக ராகுகாலத்தை ஏற்கலாம். காலப்போக்கில் தெளிவுவந்த பிறகு ஆஸ்திகத்தில் பற்று ஏற்பட்டு, பணிவிடையில் விருப்பத்தை அடைய வழி பிறக்கும்.

‘தேவ தார்ச்சனம்’ என்ற பெயரில் நித்தமும் வழிபடச் சொல்லும் சாஸ்திரம். அதில் ஐந்து இறையுருவங்கள் இருக்கும். அதற்கு பஞ்சாயதனம் என்று பெயர். ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடச் சொல்லும். இதுவே முழு வழிபாடாக மாறுவ தால், ராகுகால துர்கை, குளிகைகால பைரவர் என்று தேவையில்லாமல் மனம் குழம்பியிருப்பது தவறு. எந்த வேளையிலாவது ஏதாவதொரு இறையுருவை வழிபடுங்கள். விருப்பம் ஈடேறும்.

? அசுப காரியங்களில் வாழைக் காய்க்குத் தனியிடம் அளிக்கிறோமே, ஏன்?

- வி.கண்ணன், திருச்செந்தூர்

 உள்ளத்தையும் உடலையும் கெடுக்காத பொருள்களைப் பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். மனத்தூய்மை, செயல்பாட்டைச் சிறப்பிக்கும். கண்ணன் கீதையில் சாத்விக உணவைப் பரிந்துரைக்கிறார். அதில் ஒன்று வாழைக்காய். வாழை முழுவதும் பயனளிக்கும். இலை, தண்டு, பூ, காய் அத்தனையும் மருத்துவ குணம் பெற்றவை. சுகாதாரத்துக்கும் தூய்மைக்கும் தேவைப்படுகிறது. இறந்தோரின் சடங்குகளைத் தங்குதடையின்றிச் செயல்படுத்த ஆரோக்கியம் தேவை. அதில் பங்கு பெறுபவர்களின் உடல் நலனையும் நாம் கவனிக்க வேண்டும். அப்படியொரு தனிச்சிறப்பு அதற்குண்டு.

அசுப காரியத்துக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒன்றல்ல அது. வருஷம் பூராவும் கிடைக்கும் பொருள் அது. வீடுகளில் அவை வளர்க்கப்படுகின்றன. இப்படி சுலபமாகவும் சிறப்பாகவும் இருப்ப தால் அன்றாடம் உணவிலும் அதன் சேர்க்கை சிறந்தது. தர்ம சாஸ்திரம் வாழைக்காயை அசுப காரியங் களுக்குப் பரிந்துரைத்தது. பதினோரா வது நாள் செய்யப்படும் ஏகா ஹோமத்தில் வாழைக்காயோடு சேர்ந்த அன்னம் பயன்படுத்தப்படும்.

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

? என் தாத்தா, அன்போடு ஆசீர்வதித்து எனக்குக் கொடுத்த ருத்ராட்சத்தில் சிறு விரிசல் விழுந்து விட்டது. அந்த ருத்ராட்சம் கோக்கப்பட்ட மாலையை தொடர்ந்து கழுத்தில் அணியலாமா?

- கே.சாம்பசிவம், கடையம்

தாத்தாவின் ஆசி  தங்களுக்குத்தான்; ஜபமாலைக்கு அல்ல. ஜபமாலை மாறினாலும் அனுக்ரஹம் அழியாது. அனுக்ரஹம் ஜபமாலையில் ஒட்டிக் கொண்டிருப்பதாக எண்ணம் ஏற்படுவதால், அதை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. மாறாக, அனுக்ரஹம் தங்களிடம் தங்கியிருப்பதாக எண்ணினால், ஜபமாலையை மாற்றுவதில் நெருடல் இருக்காது.

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?


கோயிலில் உறைந்திருக்கும் இறை வடிவத்தில் விரிசல் ஏற்பட்டால், அதை மாற்றி கும்பாபிஷேகம் செய்வதுண்டு. மடாதிபதி நடைமுறைப்படுத்தி அருள்புரிந்த இறையுருவம் என்று எண்ணி அதையே தக்கவைத்துக்கொள்வதில்லை.  தாத்தா குளித்த கிணறு. அதில் உப்புத் தண்ணீர்தான் கிடைக்கிறது; குடிக்கப் பயன்படாது. ஆனாலும், தாத்தா குளித்த கிணறாயிற்றே என்று, அந்தக் கிணற்று நீரைக் குடிக்கப் பயன்படுத்துவோமா?

லட்சியத்துக்கு முன்னுரிமை அளிக்காமல், அதை அடையும் கருவிக்கு முன்னுரிமை அளிப்பது சிறப்பல்ல. மாறிக் கொண்டிருக்கும் உலகில் தகுதி இழப்பைத் தவிர்த்து, தகுதியுடையதை ஏற்பது சிறப்பு.

விரிசல் ருத்ராட்சத்தை அகற்றி, நல்ல ருத்ராட்சத்தை அணியுங்கள்; எல்லாம் நன்மையில் முடியும்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்?

வீணை வித்யாம்பிகை!

திருநெல்வேலி, கீழமாட வீதியில் உள்ள அருள்மிகு கோமதியம்மன் ஆலயத்தில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் சரஸ்வதி தேவிக்கு தனி சந்நிதானம் உள்ளது. சிருங்கேரி மகா சந்நிதானத்தின் ஆக்ஞைப்படி அமைந்த சந்நிதி இது என்பர். மாணவ மாணவியர் புதன்கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு வந்து சரஸ்வதி தேவியைத் தரிசித்து வழிபட, கல்வியில் சிறக்கலாம்.

சிதம்பரம் தில்லை காளியம்மன் ஆலயப் பிராகாரத்தில் நின்ற கோலத்தில் ‘வீணை வித்யாம்பிகை’ எனும் திருப்பெயருடன் அருளும் சரஸ்வதி தேவியையும், கடம்பவன தட்சிணரூபினி என்ற பெயரில் ஶ்ரீதட்சிணாமூர்த்தியின் சக்தி தேவியையும் தரிசிக்கலாம். வியாழக்கிழமைகளில் இந்தத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.