Published:Updated:

சனங்களின் சாமிகள் - 11

சனங்களின் சாமிகள் - 11
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 11

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 11

அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 11
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 11
சனங்களின் சாமிகள் - 11

முத்துப்பட்டன் கதை  (தொடர்ச்சி)

முத்துப்பட்டன், மலையாள நாட்டில் ஆரியங்காவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். இளம் வயதிலேயே போர்க் கலை பயின்றான். சிறிய பிரச்னை, சில நேரங்களில் வாழ்க்கையில் பல திருப்பங்களைக் கொண்டுவந்து விடும். அப்படி ஒருமுறை சகோதரர்களிடம் சின்னச் சண்டை, கருத்து வேறுபாடு. வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டான் முத்துப்பட்டன்.

கிளம்பியாகிவிட்டதே தவிர, எங்கே போவது, என்ன செய்வது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் கற்றுக்கொண்ட போர்க்கலை அவனுக்குக் கைகொடுத்தது. கொட்டாரக்கரை ராமராசன் என்பவருக்குப் பாதுகாப்பு வீரனாகப் போய்ச் சேர்ந்தான். நாள்கள் நகர்ந்தன. முத்துப்பட்டன் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போனதை ஒரு கட்டத்துக்கு மேல் அவன் சகோதரர்களால் தாங்க முடியவில்லை. ஊர் ஊராக அவனைத் தேடி அலைந்தார்கள். யார் யாரிடமோ பேசி, அவன் இருப்பிடம் அறிந்து கொண்டார்கள். 

ஒருநாள் முத்துப்பட்டனைத் தேடி பாண்டி நாட்டுக்கே வந்துவிட்டார்கள். சகோதரர்களைப் பார்த்ததும் பாசத்தில் விம்மினான் முத்துப்பட்டன். ``தம்பி நடந்ததை மறந்துவிடு... வீட்டுக்கு வா’’ என்றார்கள் சகோதரர்கள். முத்துப்பட்டனும் ``சரி’’ என்றான். ராமராசனிடம் சகோதரர்கள் வந்திருக்கும் விவரத்தையும், தான் ஊர் கிளம்புவதையும் சொன்னான். ராமராசன் அதுவரை பணியாற்றியதற்கு வெகுமதியாக  ஏராளமான பொருள்களை முத்துப்பட்டனுக்குக் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு  எல்லோருமாகச் சேர்ந்து ஊர் திரும்பினார்கள்.

அப்படி சகோதர்களுடன் காட்டுவழி வந்தபோதுதான் முத்துப்பட்டன் ``நான் சற்று ஓய்வெடுத்து வருகிறேன். நீங்கள் போகலாம்’’ என்று சொல்லி சகோதரர்களை அனுப்பிவைத்து விட்டு, ஓய்வெடுக்கச் சென்றான். அப்போதுதான், பெண்களின் பாடலைக் கேட்டு விழித்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 11

முத்துப்பட்டனின் வரலாற்றைப் பொறுமையாகக் கேட்டான் தலைவன். ``சரி... உன் விருப்பம் என் மக்களை மணப்பது என்றால், உன் சகோதரர்களிடம் அனுமதி பெற்று வா. நீ சொன்னபடி தோல் செருப்பைப் போட்டுக் கொண்டு வா. என் மக்களைத் தருகிறேன்’’ என்றான்.

தலைவன் கையைப் பற்றி நன்றி சொல்லிவிட்டு, தன் சகோதரர்கள் நடந்த திசையை நோக்கி ஓடினான் முத்துப்பட்டன். சகோதரர்களைப் பார்த்து, தன் ஆசையைச் சொன்னான். தலைவனின் மகள்களை மணக்க அனுமதி கேட்டான். 

பட்டனின் மூத்த சகோதரன் சீறி விழுந்தான். ``உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? நடக்கிற காரியத்தைப் பார்...’’ என்றான். 

முத்துப்பட்டனோ, ``இல்லை... நான் அவர்களை மணந்தே தீருவேன்’’ என்று உறுதியாக இருந்தான். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் முத்துப்பட்டனின் முடிவை அவர்களால் மாற்ற முடியவில்லை. வேறு வழியின்றி சகோதரர்கள் முத்துப்பட்டனைப் பிடித்து ஒரு குகையில் அடைத்து, வாயிலை மூடிவிட்டார்கள். வெகுமதி மூட்டைகளுடன் சகோதரர்கள் மட்டும் ஊருக்குச் சென்றார்கள்.

துணிந்தவனுக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. முத்துப்பட்டன் எப்படியோ குகையிலிருந்து ஒருவழியைக் கண்டுபிடித்துத் தப்பினான். 

தப்பித்தவன், தலைவன் இருக்குமிடம் சென்றான். மறக்காமல் ஒரு தோல் செருப்பை அணிந்துகொண்டான். தனது வழக்கமான அடையாளங்களைக் களைந்தான். தலைவனைப் போலவே வேட்டியை உடுத்திக்கொண்டு, தலைவன் வீடு வந்து சேர்ந்தான்.

தலைவனுக்கு முத்துப்பட்டனைப் பார்க்கப் ஆச்சர்யமாக இருந்தது. தன் அடையாளங்களை இழந்து நின்ற அவன் மேல் நம்பிக்கை பிறந்தது. தான் வாக்களித்தபடி தன் மகள்களை முத்துப்பட்டனுக்கு மணமுடித்து வைத்தான். முத்துப்பட்டன் வாழ்க்கையில் வசந்த காலம் அது. தன் இரு மனைவிகளுடன் மகிழ்ச்சிக் களிப்பில் திளைத்துக் கொண்டிருந்தான்.

விதி, அதற்கும் முடிவுகட்ட ஒரு நாளை நிச்சயித்தது. அன்றைக்கு முத்துப்பட்டனைத் தேடி ஒருவன் ஓடி வந்தான். அவன் முகத்தில் பதற்றமும் பயமும் அப்பிக்கிடந்தது. ``ஐயா.... நம் கிடையிலிருந்து பசு மாடுகளைச் சில திருடர்கள் கவர்ந்து செல்கிறார்கள். என்ன முயற்சி செய்தும் எங்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை’’ என்றான் .

``என்ன நம் இருப்பிடத்தில் திருடர்களா?’’ என்ற முத்துப்பட்டன் தன் நீண்ட வாளை எடுத்துக் கொண்டான். ``திருடர்களைக் கொன்றுவிட்டு இல்லம் திரும்பு கிறேன்’’ என்று மனைவிகளிடம் சொல்லிவிட்டு விடை பெற்றான் முத்துப்பட்டன். அவனுடன் பூச்சி நாயும் சென்றது. விரைந்து சென்றவன், திருடர்களைத் தனி ஒருவனாக விரட்டிச் சென்றான். அவர்களோடு மோதினான். அத்தனை பேரையும் மூர்க்கமாகத் தாக்கினான். அவர்களில் சிலரைக் கொன்றான். சிலரின் கைகளை வெட்டினான். அவனின் வீரத்தைக் கண்ட திருடர்கள் புறமுதுகிட்டு ஓடினார்கள். திருடர்கள் விட்டுச்சென்ற மாடுகளைப் மீட்டுத் திரும்பக் கொண்டுவந்து கிடையில் அடைத்தான் முத்துப்பட்டன்.

சனங்களின் சாமிகள் - 11

அத்தனை நேரம் சண்டைபோட்டதில் அவன் உடம்பெங்கும் ஏற்பட்டிருந்த காயங்களை அப்போதுதான் கவனித்தான். ரத்தத்தைக் கழுவினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அருகே இருந்த ஒரு சுனைக்குச் சென்றான். சுனையின் கரையில் குனிந்து காயங்களைக் கழுவ ஆரம்பித்தான். அத்தனை நேரம் முத்துப்பட்டனை ஒருவன் பின்தொடர்ந்து வந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. பின்தொடர்ந்து வந்தவன் ஒரு மரத்தின் பின்னே மறைந்து நின்றிருந்தான். நேரம் பார்த்து, முத்துப்பட்டனின் முதுகில் தன் கையில் இருந்த கத்தியால் ஓங்கிக் குத்தினான். தன் வலு அத்தனையும் பயன்படுத்தித் தாக்கினான். அந்தத் தாக்குதலில் முத்துப்பட்டன் இறந்து போனான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூச்சி நாய் குரைத்துக்கொண்டே பொம்மக்கா விடம் ஓடியது.

நாயின் அழுகையொலி அவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்ததை உணர்த்த, நாய் வழிகாட்டிய பாதையில் ஓடினார்கள் சகோதரிகள். சுனையருகே  முத்துப்பட்டனின் உடலைக் கண்டார்கள்.  கதறி அழுதார்கள். ஊர் மக்கள் முத்துப் பட்டனின் உடலை எடுத்துக் கொண்டு இருப்பிடம் திரும்பினார்கள். அவன் உடலைச் சிதையில் ஏற்றினார்கள்.

முத்துப்பட்டனின் மனைவி களால் அவன் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போது அவர்களை ஆட்சி செய்த சிங்கம்பட்டி அரசரிடம் தாங்களும் முத்துப்பட்டனோடு சிதையிலேற அனுமதி கேட்டார்கள்.  சிங்கம் பட்டியார் முதலில் மறுத்தார். இரு பெண்களும் பிடிவாதமாகத் திரும்பத் திரும்பக் கோரிக்கை எழுப்ப, பிறகு இசைந்தார். இரு சகோதரிகளும் முத்துப்பட்டனோடு சிதையில் ஏறினர். மகள்களின் உயிர் பிரிவதைத் தாங்க முடியாமல், தலைவனும் வாளை நட்டு உயிரை விட்டான். இறந்த நால்வரும் கயிலாயம் சென்றடைந்தார்கள். சிவனிடம் வரம் பெற்று தெய்வங்களாகவும் ஆனார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு அணை அருகே முத்துப்பட்டன் முக்கிய தெய்வமாகவும் பாபநாசம் சொரிமுத்தையன் கோயிலில் துணைத் தெய்வமாகவும் வழிபாடு பெறுகிறான்.  தென் மாவட்டக் கிராமங்களில் சுடலைமாடன், முத்தாரம்மன் கோயில்களில் `பட்டவராயன்’ என்கிற பெயரில் துணைத் தெய்வமாகத் திகழ்கிறான். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த  இந்தக் கதை  இப்போதும் வில்லுப்பாட்டாகப் பாடப்படுகிறது. கொடிய வியாதி தீர, பறிபோன பொருள்கள் திரும்பக் கிடைக்க, பட்டவராயனிடம் நேர்ச்சை வேண்டுவது இன்றைக்கும் நடை முறையில் உள்ளது. முத்துப்பட்டன் தெய்வமாக நின்று அதற்குத் துணைபுரிந்துகொண்டிருக்கிறான்.

- கதை நகரும்...

தொகுப்பு: பாலு சத்யா