
மகுடேசுவரன்
தென்னிந்தியக் கோவில்கள் வட இந்தியக் கோவில்களைவிடவும் தனித்தன்மையானவை, வேறுபட்டவை. குடைவரைக்கோவில் மரபு தொன்மைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்ட மெங்கும் பரவியிருந்தது. அதன்பிறகு கோவில் கட்டுமானக் கலையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு பேரரசுக் காலத்திலும் கோவில் கட்டுமானக்கலை முன்பிருந்ததைவிட மேம்பட்டபடி நகர்ந்தது. தென்னிந்தியாவின் பேரரசுகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அக்கலை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் பரவிய படியும் இருந்தது. இந்த வளர்ச்சி அவ்வப் பகுதிக்கேற்ற நிலத்தன்மை, அருகே கிட்டிய பாறை வகைகள், சிற்பங்களைச் செதுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கல்வகைகள், மழை நிலைமை ஆகியவற்றைப் பொறுத்தமைந்து தக்கவாறு தழைத்தன.

அதனால்தான் ஒரு பகுதியின் கோவில்களைப் போன்று வேறிடத்தில் இருப்பதில்லை. கேரளக் கோவில்களும் தமிழகக் கோவில்களும் வெவ்வேறு வகை கட்டுமானங்களால் ஆகியிருக்கின்றன. ஹொய்சாளர் கட்டிய கோவில்களும் சோழர்கள் கட்டிய கோவில்களும் வெவ்வேறாக இருக்கின்றன. கோதாவரி நதி தீரத்துக்குத் தென்பகுதிகளில் அமைந்த கோவில்கள் ஒருவகையாகவும் வட புலக் கோவில்களும் வேறு வகையாகவும் இருக்கின்றன. கோவில் கட்டுமானக் கலையின் வளர்ச்சிகளையும் பரிமாற்றங்களையும் கூர்ந்து ஆராய்ந்தாலே இந்நிலத்தின் வரலாற்றைத் தொகுத்துவிடலாம் என்னுமளவுக்கே நிலைமை இருக்கிறது.
குடைவரைக்கோவில் என்பது பெரும்பாறைப் பகுதியைக் குடைந்து ஒரு கட்டுமான அமைப்பாக மீட்டெடுப்பது. அங்கே கற்களை ஒட்டுகின்ற வேலை இல்லை. மாபெரும் கோவிலையே சிற்பத்தைப்போல் செதுக்கி எடுப்பதுதான் குடைவரைக்கோவில். அந்தப் பெருமுயற்சியி லிருந்தே சிற்பக் கலைகளின் நுண்ணியங்கள் தோன்றின. குடைவரைக்கோவில் அமைப்புக்குக் கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித ஆற்றலும் உழைப்பும் தேவைப்பட்டன. குடையத்தக்க மலைகளோ, பாறைகளோ இல்லாத இடங்களில் இவ்வமைப்பைத் தோற்றுவிக்க முடியவில்லை. அதனால் வளர்ச்சி பெற்ற கட்டுமான அமைப்பே இன்று நாம் காணும் கோவில் கட்டுமானங்கள். கற்களை முறைப்படச் செதுக்கி ஒன்றின்மீது ஒன்றாக அமைத்து, பெரும் சுவர்களாகவும் தூண்களாகவும் ஆக்கி நிறுத்தலாம். அதன்மீது கூரைப் பாளங்களாக அமையும் கற்பலகைகளைப் பாவி மண்டபங்களைக் கட்டிப் பழகினர். அவ்வாறு நூறு, ஆயிரம் என்றமைந்த தூண் மண்டபங்களைக் கட்டுவது கோவிற்கட்டுமானக் கலையின் செறிந்த வடிவமாயிற்று.

தூண்களையும் விதானங்களையும் அமைத்து நீள அகலமான கட்டுமானங்களைப் பெரும் பரப்பில் ஆக்கியது ஒரு வகை. விண் முட்டுமளவுக்கு உயரமான கட்டுமானங்களை எழுப்புவது இன்னொரு வேட்கை. அங்கே பிறந்தவைதாம் கோபுரங்கள். கடினமான கற்பாளங்களால் வலிதாய் நெருக்கியமைத்த அடிப்பகுதியின்மீது கற்களை அடுக்கிக்கொண்டே போவது. அக்கற்களின் வெளிப்புறம் முழுக்கச் சிற்பங்களால் நிறைப்பது. தென்னிந்தியாவின் பழைமைமிக்க கட்டுமானங்கள் எவை என்று பார்த்தால் அவை கோவில்களும் கோபுரங்களுமே. அந்தக் கட்டுமானக் கலைக்குக் காலத்தை வென்று நிற்கும் வாழ்நாள் வாய்த்தது. அவற்றை எழுப்பியவர்கள் நாம் முழுதாய் அறிய முடியாதவாறு அழிவுக்கு ஆட்பட்டார்கள் என்றாலும் அவர்களின் ஆக்கங்கள் இன்றும் பழுதில்லாமல் நிற்கின்றன.
இன்றைக்குக் கட்டப்படுகின்ற கட்டடங்களின் வாழ்நாள் நூற்றாண்டுகளுக்கு அப்பால் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. பெருநகரங்களில் எழுப்பப்படும் பன்மாடக் கட்டடங்கள் உறுதியானவைதாம். ஆனால், அவற்றின் வாழ்நாள் வரம்புக்கு உட்பட்டது. உலகெங்குமுள்ள நகரங்களின் வான்முட்டும் பல்லடுக்குக் கட்டடங்கள் யாவும் அடுத்த நூற்றாண்டின் இதே நாளில் வலுவிழந்து குற்றுச்சுவராக வேண்டியவை. அவற்றுக்குச் செலுத்தப்பட்ட செல்வமும் பொருளும் காலத்தின் இன்னொரு நாளில் பயனின்றிப் போகவிருப்பவை. அவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நம் கோவில்களில் வரலாற்று நிரந்தரத்தை உணர்ந்து மெய்சிலிர்க்க முடியும். கற்றளிகளும் கல்லடுக்கங்களும் வேறு, இன்றைய கட்டுமான நீர்க்குமிழிகள் வேறு என்பதை அறிய வேண்டும்.

தென்னிந்தியக் கோவில் கட்டுமானக் கலையின் இறுதி வடிவம் விஜயநகரக் கட்டுமானக் கலைஞர்களால் அடையப்பட்டது. தென்னிந்தியாவை ஆண்ட ஏழு வகையான பேரரசர்கள் கோவில் கட்டுமானத்தில் தனித்தன்மையான அமைப்புகளைக் கைக்கொண்டார்கள். தமிழகத்தில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள். தமிழகத்துக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் சாளுக்கியர்கள், இராட்டிரகூடர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள். இவ்வேழு அரச மரபினரால் செழுமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட கட்டுமானக் கலையை விஜயநகர அரசர்கள் மொய்ம்புறத் தழுவிக்கொண்டார்கள். பல்லவர்களுடைய குடைவு வகைகள், சோழர்களுடைய கோபுர அமைப்பு முறைகள் விஜயநகரச் சிற்பிகளுக்குப் பயன்பட்டன.
ஹொய்சாளர்களுடைய கோவிலமைப்பு முறைகளில் மென்கற்களே பயன்படுத்தப்பட்டன. மென்கற்களில் செதுக்கப்படும் சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுகளோடு அமையும். ஆனால், மென்கற்களைக்கொண்டு வான்முட்டும் கட்டுமானங்களை எழுப்ப முடியாது. அவற்றுக்குக் கடினப் பாறைக்கற்கள் வேண்டும். விஜயநகர அரசர்கள் மென்கற்களை விடுத்து, கடினப் பாறைக் கற்களைக் கையாண்டு தம் கட்டமைப்புகளை ஏற்படுத்தினர். ஒரு கோவிலானது கருவறைக் கோபுரத்தை உடையதாக இருந்தது. விஜயநகர அரசர்கள்தாம் கோவிலைச் சுற்றி உயரமான மதிற்கட்டுமானத்தை எழுப்பினார்கள். கோவில் என்பது சுற்றமைக்கப் பட்டுப் பாதுகாக்கப்பட்ட கட்டுமானமாக மாறிற்று. பிறத்தியாரால் சிதிலப்படுத்தப் படுவதற்குரிய எவ்வொரு வாய்ப்பையும் கோவில் அமைப்புகளில் விட்டு வைக்கவில்லை.

கடினப் பாறைகளைப் பயன்படுத்தப் பழகியமையால் விண்முட்டும் கோபுரங்களை எடுத்துக் கட்டினார்கள். கிருஷ்ண தேவராயரின் மிகச் சிறந்த கோபுரக் கட்டுமானங்கள் என்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கோபுரம், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம், காளஹத்தி சிவன் கோவில் கோபுரம் ஆகியவற்றைக் கூறுவர். கோவில் மதில் மீது நுழைவாயிலில் எழுப்பப்பட்ட பெருங் கோபுரம் என்றால் அக்கோவிலில் விஜயநகர அரசர்களின் கைப்படல் உண்டென்று துணிந்து சொல்லலாம்.
விஜயநகர அரசர்களால் எழுப்பப்பட்ட கோவில்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களில் புராண இதிகாசக் கூறுகள் மட்டுமின்றி உள்ளூர் வரலாற்று நிகழ்வுச் சிற்பங்களும் இடம்பெற்றன. நாட்டுப்புறக் கதைச் சிற்பங்களுக்கும் இடமிருந்தன. இத்தகைய கோவில் கட்டுமானங்களுக்காகத் தலைசிறந்த சிற்பிகளுக்கான தேவைப்பாடு மிகுதியாய் இருந்திருக்கிறது. பட்டடக்கல் கோவிலைக் கட்டுவதற்குக் காஞ்சிபுரச் சிற்பிகள் வரவழைக்கப்பட்டதாக வரலாற்றுக் கல்வெட்டுகள் இருக்கின்றன. கல்யாணி என்ற ஊரிலிருந்து உளிகளைப் பண்படுத்தும் சிறந்த கொல்லர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு கோவில் கட்டுமானத்தின் வழியே கலை பண்பாட்டு இடப்பெயர்வுகள் நிகழ்ந்தன. பிற்கால விஜயநகர அரசர்களிடமிருந்து தனியாட்சி பெற்ற வேலூர், செஞ்சி, மதுரை நாயக்கர்களும் தமிழ்நாட்டுப் பகுதியில் கோவில் கோபுரங்களையும் தூண்கள் மிகுந்த மண்டபங்களையும் எழுப்பினர் என்பது வரலாறு.
- தரிசிப்போம்...