Published:Updated:

புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!

புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!

ஷங்கர்பாபு

புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!

காட்சி ஒன்று: பெண்ணொருத்தி அழுது கொண்டிருந்தாள். வேலையில் செய்துவிட்ட தவறுக்காக அவளைத் திட்டிவிட்ட  மேலதிகாரி, பிறகு மனசு கேட்காதவராக அவளை ஆற்றுதல் படுத்தினார். அதுவும் அதட்டல் தொனியில்தான்.

“இப்ப அழுகையை நிறுத்தப்போறியா இல்லியா? எனக்கு பொண்ணுங்க அழறது பிடிக்கவே பிடிக்காது. எந்தச் சூழலிலும் பிரச்னையை தைரியமாகச் சந்திக்கணுமே தவிர, கோழை மாதிரி அழக்கூடாது.’’

காட்சி இரண்டு: வயது ஐம்பதைத் தாண்டிய அந்த மனிதரைத் தற்செயலாகச் சந்தித்தேன். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததில் பிரச்னை, ஒழுக்கமின்மையால் கெட்ட பெயர், பற்றாக்குறைக்கு அவரைப் பற்றிய புகார்களுடன் மொட்டைக் கடிதங்கள்.

புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!

இத்தனை பிரச்னைகளுடன் இருந்தவரைப் பார்க்க நான் அவரது அறைக்குள் சென்றதும் தான் தாமதம், சட்டென்று அறையின் கதவுகளைச் சாத்திவிட்டு ‘ஓ’வென்று கதற ஆரம்பித்து விட்டார். தேம்பலுக்கு இடையே தனக்கான பிரச்னைகளை விவரித்தவர், அவற்றால் தன் மகளின் திருமணம் தடைப்பட்டுப்போகுமே என வருந்தினார்.  ‘‘டென்ஷனா இருக்கு... எங்காவது ஓடிப்போய்விடலாம் போல் தோன்றுகிறது’’ என்று அங்கலாய்த்தும் கொண்டார்.

சரி... இதிலென்ன செய்தி இருக்கிறது என்கிறீர்களா?

முதல் காட்சியில் இருந்த மேலதிகாரிதான் இந்தப் பெரிய மனிதர் என்றால்...

நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். அடுத்தவருக்கு உபதேசம் செய்வது என்றால், அதற்கு பிரத்தியேக நாக்குகளும், வார்த்தைகளும் வைத்திருக்கிறோம்.

படித்தது, கேள்விப்பட்டது, வாட்ஸ்அப்பிலும் தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் அறிந்தது என எல்லாவற்றையும் நமது சொந்தச் சரக்கு களாக்கி உபதேச மழை பொழிகிறோம்.

அப்படியான உபதேசத்தின் நோக்கம் எப்படியிருக்கும் தெரியுமா? அடுத்தவரின் இன்னல் நீங்க வேண்டும் என்பதைவிடவும்  நமது அறிவு மேகங்களின் இருப்பை அவர்களுக்கு உணர்த்துவதாகவே இருக்கும்.

ஆம், அடுத்தவருக்கு என்றால் ‘மலையைக் கட்டி இழுக்கணும்’ என்பதாகவும், நமக்கானது என்றால் ‘இந்தத் துரும்பு ஏன் இவ்வளவு பாரமா இருக்கு?’ என்பதாகவே இருக்கும் நமது கருத்தும் பார்வையும்.

ஆனால், மகாபாரதத்தின் நாயகனான கிருஷ்ண பரமாத்மா தமது உபதேசத்தில், தனக்கொரு வார்த்தையையும் பிறருக்கொரு வார்த்தையுமாக எதையும் சொல்லவில்லை. தமது வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் அவரே உதாரணமாக வாழ்ந்து காட்டினார்.

உபநிஷத்துகளின் சாரம், பக்தி, யோகம், ஞானம் ஆகியவற்றின் வழியே மோட்சத்தை நல்கும் ஞான நூல் என்றெல்லாம் பெரியோர்கள் பகவத் கீதையைப் போற்றுவார்கள். அதேபோல், கிருஷ்ண பரமாத்மாவின் அனுபவ சாரம் என்றும் சொல்லலாம் பகவத் கீதையை.

அர்ஜுனனிடம், “உன் எதிரே நிற்பவர்களை உற்றார் உறவினர் என்று பார்க்காதே” என்கிறார் கண்ணன்.

தன் விஷயத்தில் அவரும் அப்படித்தானே நடந்துகொண்டார். அதனால்தானே தாய் மாமனான கம்சனையும் வதைக்க முடிந்தது.

“கடமையைச் செய்; பலனில் பற்று வேண்டாம்” என்பதும் அவரது உபதேசம். குருக்ஷேத்திரப் போரினால் கண்ணனுக்கு எவ்வித லாபமும் இல்லை. தனக்குச் சரியென்றுபட்டதை தர்மத் துக்கு உகந்ததைக் கடமையாக ஏற்றுச் செய்தார்.
இன்னொரு பாடமும் உண்டு.

அடுத்தவருக்குப் புத்திமதி சொல்லுமுன் நாம் அதைக் கடைப்பிடித்திருக்கிறோமா, அதைச் சொல்வதற்கு நமக்குத் தகுதி உண்டா என்பதை யெல்லாம் ஆராய்ந்தபிறகு, மற்றவருக்கு புத்திமதி சொல்ல வேண்டும். இதுவே, மனித வடிவில் வந்த கடவுள் நமக்கு மறைமுகமாக உணர்த்தும் செய்தி.

மேலே நண்பர் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டதுபோல், நம்மில் பல நண்பர்கள் ‘டென்ஷன்’ என்ற வார்த்தைக்கு ஆளாகியே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்கும் டென்ஷன், எதிலும் டென்ஷன் என வாழ்க்கையை நகர்த்தும் நமக்கெல்லாம் பாடமாக, பதிலாக அமைவது அந்த மாயக்காரனின் வாழ்க்கைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்!

ஒருத்தி மகனாய் சிறையில் பிறந்து, அதே இரவில் இன்னொருத்தியின் மகனாகி, கோகுலத்தில் வளர்ந்து, பிருந்தாவனத்தில் களித்து, காளிங்கன், சகடாசுரன் முதலான அசுரர்களை வதைத்து,  பகைமை கொண்ட ஜராசந்தனையும் சிசுபாலனையும் எதிர்கொண்டு, பாண்டவர்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து, போர் ஒன்று நடவாமல் இருக்க முயற்சி செய்து, போர் உறுதியான பிறகு தமது உதவியை வேண்டிய பாண்டவர்களுக்கு உற்ற துணையாகி, தனது கடமையை முழு மனதோடு செய்து, பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற வல்லவர்களை வீழ்த்த வியூகம் வகுத்து, வாழும் காலத்திலேயே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி... அப்பப்பா! எவ்வளவு சம்பவங்கள் கண்ணனின் வாழ்வில்!

இப்படி, டென்ஷன் அடைய எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் துளிக்கூட சலனமின்றி, சரியென்று பட்டதை வெற்றிகரமாகச் செய்து முடித்த கண்ணனுக்கு நிறைவில் கிடைத்தது என்ன?

காந்தாரியின் சாபம் மட்டுமே!

ஆம்... காந்தாரி, தன் பிள்ளைகளைக் கொன்றவர் களைக்கூட சபிக்கவில்லை. கண்ணனை மட்டுமே சபித்தாள். அதையும் “எனது விதி... தங்களின் சாப வார்த்தையாய் வருகிறது...’’ என்று அமைதியாக ஏற்றுக்கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

கீதையைப் படிப்பதோடு நின்றுவிடாமல், கண்ணனின் வழியில் வாழவும் அவரிடம் பிரார்த்திப்போம். அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும்போது, கண்ணனிடம் கேளுங்கள்... ‘‘எவ்வளவு டென்ஷனான சந்தர்ப்பம் என்றாலும் அலட்டிக்கொள்ளாமல் சலித்துக்கொள்ளாமல் வேலைப்பார்க்கும் வித்தையைக் கற்றுக்கொடு’’ என்று.

கண்ணனைத் தவிர வேறு எவரால் நமக்குக் கற்றுத்தர முடியும்.?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism