Published:Updated:

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

நல்லன எல்லாம் தருவாள்மு. இராகவன், படங்கள் : க. சதீஷ்குமார்

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

நல்லன எல்லாம் தருவாள்மு. இராகவன், படங்கள் : க. சதீஷ்குமார்

Published:Updated:
செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!
செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் என்றால் சென்ற தலைமுறையினருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்குத் தமது உபந்நியாசங்களால் புகழ்பெற்றவர். அவர் பிறந்த சேங்காலிபுரம் யுகங்களைக் கடந்தும் பிரசித்தியுடன் இருக்கும் திருத்தலம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்புடனும் மன மகிழ்ச்சியுடனும் திகழ வேண்டும் என்றால், சேங்காலிபுரம் சென்று அங்கிருக்கும் மூன்று திருக்கோயில்களைத் தரிசித்தாலே போதும்.

இங்கு மேலக்கோயில் என்ற பூம்பொழி ஈஸ்வரம், கீழக்கோயில் என்ற ராஜேந்திர சோழீஸ்வரம் ஆகிய இரண்டு சிவாலயங்களும் அவற்றுக்கு நடுவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபரிமளரங்கநாதர் கோயிலும் பேரழகோடு அமைந்துள்ளன. இந்த மூன்று கோயில்களையும் ஒருமுறை வலம்வந்து தரிசிப்போமா?

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

மணவாழ்க்கை அருளும் மருதாணி இலை அர்ச்சனை!

மேலக்கோயில் என்னும் அழகிய சிவாலயம் கௌதம தீர்த்தம் என்னும் குளத்தின் வடகரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஸ்ரீபிரஹன் நாயகி சமேதராக அருள்கிறார் ஸ்ரீதுந்துபீஸ்வரர். கௌதம முனிவர் இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தமாடி, ஈஸ்வரனைப் பூஜித்தார் என்கிறது தலபுராணம். ஆலயத்தின் திருச்சுற்றில் கணபதி, முருகன், சண்டீசர், பைரவர், கௌதம ரிஷி, அப்பர், சுந்தர், சம்பந்தர், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள்கிறார்கள். செங்கற் கோயிலாக இருந்த பழைய சிவாலயத்தைக் கருங்கற் கோயிலாகப் புதுப்பித்தவன், `கங்கைகொண்ட சோழபுரத்து முடிகொண்ட சோழப்பெருந்தெருவில் வசித்த கௌதமன் தில்லைவனமுடையான அரியான்' என்ற நெசவுத் தொழிலாளி என்கிறது கல்வெட்டு தகவல். ஆலயத்தின் மகிமை குறித்துக் கோயிலின் வாஞ்சிநாத குருக்களிடம் பேசினோம்.

‘‘அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. நவராத்திரி, விசாகத் திருவிழா, பௌர்ணமி பூஜை போன்ற வைபவங்கள் இங்கு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பரம்பரை, பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் இக்கோயிலில் பூஜை செய்து வருகிறோம். ஒருமுறை, என் தாத்தாவின் கனவில் தோன்றிய அம்பாள், ‘மருதாணி இலைக்கொண்டு எனக்கு அர்ச்சனை செய்தால் வேண்டிய வரமளிப்பேன்’ என்று அருள்புரிந்தாளாம். அதன்படியே பெளர்ணமி தினங்களில் அம்பாளுக்கு மருதாணி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் அம்பாளிடம் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள், அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளின் திருவருளால்  அவர் களது வேண்டுதல்கள் அனைத்தும் தவறாமல் பலிக்கின்றன. மருதாணி இலைக்கொண்டு வேறு எங்கும் அர்ச்சனை செய்வதில்லை’’ என்றார். 

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

மகாலட்சுமி வழிபட்ட மகாதேவன்!

ராஜேந்திர சோழீஸ்வரம் எனப்படும் கீழக்  கோயிலில், மிஸ்துலாம்பிகை சமேத சோழேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.  பஞ்சமுகம் கொண்ட சிவன் அமைந்திருப்பது இந்தக் கீழைக்கோயிலின் சிறப்பு. மகாவிஷ்ணு இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார் என்றும், மகாலட்சுமி தனது திருமணத் தடை நீங்க ஈஸ்வரனை பூஜித்தாள் என்பதும் தலவரலாறு.  சக்கர தீர்த்த மேல்கரையில் கல்யாண வரசித்தி விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.  இக்கோயில் பற்றி சற்குரு சிவாச்சாரியார் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்:

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!
செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

‘‘தங்களுக்கு ஏற்பட்ட வக்ரதோஷம் நீங்க நவ கிரகங்களும் ஈசனை நோக்கி ஒரே நேர்க்கோட்டில் நின்று வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்ற தலம் இது. எனவே, எல்லா ராசிக்காரர்களும் இங்கு வந்து வணங்கி தோஷ நிவர்த்தி பெறலாம்.  குறிப் பாக, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் மிதுனம் மற்றும் கடக ராசிகாரர்களும் அவசியம் வந்து வழிபட வேண்டிய பிரத்தியேகத் தலம். 

அம்பாளின் திருநாமமான ‘மிஸ்துலா’ என்பதற்கு `தனக்கு நிகரில்லாதவள்' அதாவது, ஒப்பில்லா மணியம்மை என்று பொருள். அம்பாளை அர்ச்சனை செய்து வழிபட திருமணத் தடை நீங்கும், நீர் சம்பந்தமான வியாதி கள், கிட்னி பிரச்னைகள் முற்றிலும் விலகும்.  ஆருத்ரா, வைகாசி விசாகம், அமாவாசை போன்ற நாள்களில் நடை பெறும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பலன் பெறுகிறார்கள்’’ என்றார்.

ஆறுவகை தோஷங்கள் நீக்கும் அருளாளப் பெருமாள்!

தனக்கு தெய்விக ஞானம் ஏற்பட வேண்டும் என்று இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளைக் குறித்து தவமியற்றிய பிருது சக்கரவர்த்தி என்பவருக்கு, பெருமாள் சுயம்புவாகத் தோன்றி அருள்புரிந்த தலம் இது.

அசுரர்களை வதம் செய்த விஷ்ணு பகவான், தம்முடைய சுதர்சன சக்கரத்தை இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராட்டி தூய்மை பெறச் செய்த காரணத்தினால், இந்தத் தீர்த்தத்துக்கு `சக்கர தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி னால், சகல பாவங்களும், நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பக்த பிரகலாதனுக்காக இரண்யகசிபுவை நரசிம்ம மூர்த்தி வதைத்த கதை தெரிந்ததே. தன் தந்தையின் மரணத்துக்கு பிரகலாதனும் ஒரு வகையில் காரணம் என்பதால், அவனுக்கும் பித்ரு ஹத்தி தோஷம் ஏற்பட்டது. பின்னர், குருநாதர் சுக்ராச்சாரியாரின் அறிவுரைப்படி இங்கு வந்து, ஒரு மண்டல காலம் சக்கர தீர்த்தத்தில் நீராடி, பரிமளரங்கநாதரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றானாம் பிரகலாதன்.

நீண்டகாலமாக புத்திரபாக்கியம் இல்லாத தசரத சக்கரவர்த்தியும் இங்குவந்து ஓராண்டு காலம் பெருமாளை வழிபட்டும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லையாம். அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நினைத்தபோது ஸ்ரீதேவி, பூமிதேவி பிராட்டிமார்கள் தசரத சக்கரவர்த்தியை அழைத்துச்சென்று பெருமாளிடம் முறையிட் டனர். பெருமாள் தசரதரிடம் அயோத்திக்குச் சென்று புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், தானே பிள்ளையாக வந்து பிறப்பதாக வரம் தந்தாராம்.அதன்படியே இந்தத் தலத்து பெருமாள் ஸ்ரீராமராக அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது.

தந்தையைப் பாம்பு கடித்துக்கொன்றதால் கோபம்கொண்ட ஜனமேஜயன், சர்ப்பங்களை அழிக்க ஒரு யாகம் செய்தான். அதன் காரணமாக அவனுக்கு சர்ப்ப தோஷமும், சரும ரோகமும் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஆஸ்திக ரிஷி, சுயநலத்துக்காகப் பாம்புகளைக் கொல்வது கூடாது என்று தர்மோபதேசம் செய்தார். மேலும் இந்தத் தலத்துக்குச் சென்று சக்கர தீர்த்தத்தில் நீராடி, பரிமள ரங்கநாதரை வழிபட்டால் சர்ப்ப தோஷம் நீங்குவதுடன், சரும வியாதிகளும் குணமாகும் என்று கூறினார். அதன்படி ஜனமேஜயன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு, தோஷ நிவர்த்தியும் சரும ரோக நிவாரணமும் பெற்றதாகத் தலவரலாறு.

இப்படி, யுகங்கள்தோறும் பிரசித்திப் பெற்றுத் திகழ்ந்திருந்த இந்தக் கோயில், காலப்போக்கில் மண்மூடி மறைந்து போனது. சுமார் 400 வருடங் களுக்கு முன்பு பைத்தியம் போல் தெரிந்த ஒருவன் அந்த மண்மேட்டைக் காட்டி, ‘இங்கே சுவாமி இருக்கிறார். அருகில் யாரும் செல்லாதீர்கள்’ என்று கூறினான். ஆனால், அவன் சொன்னதை ஊர்மக்கள் பொருட்படுத்தாமல், அந்த மண்மேட்டை மண்வெட்டியால் தோண்டத் தொடங்கினர். உடனே பைத்தியமாக வந்தவன் திடீரென்று மாயமாக மறைந்துவிட்டான். ஊர்மக்கள் மண்வெட்டியால் தோண்டியதும், பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனி வெளிப்பட்டது. அவருடைய திருத்தோளுக்கு அருகில் ஸ்ரீதேவியும், திருவடி அருகில் பூமிதேவியும் இருப்பது கண்டு மகிழ்ந்த மக்கள், அந்த இடத்திலேயே கோயில் கட்டி, பெருமாளை பிரதிஷ்டை செய்தனர் என்பது தலவரலாறு.

செழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்!

கோயிலில் இருந்த பாலாஜி பட்டாச்சாரியாரிடம் பேசினோம். ‘‘இந்தக் கலியுகத்தில் பள்ளிகொண்ட பெருமாளின் வலது திருவடியில் அபூர்வமாக ஆறு விரல்களுடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பான அம்சம். அதனால், இந்த பெருமாளை அதிர்ஷ்ட பெருமாள் என்று பக்தர்கள் பெருமையோடு அழைக்கிறார்கள்.  ஆறு விரல்கள் இருக்கும் இந்தப் பெருமாளை வழிபட்டால், மாதுர் சாபம், பிதுர் சாபம், கோ சாபம், கன்னியா சாபம், சுமங்கலி சாபம், குலதெய்வ சாபம் என்ற ஆறு வகையான சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் மாசி மகத் தீர்த்தவாரி, நவராத்திரி 10 நாள்கள் ஊஞ்சல் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜயந்தி போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், காரியசித்தி ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், வழக்குகளில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை’’ என்றார்.

நாமும் ஒருமுறை சேங்காலிபுரத்துக்குச் சென்று மூன்று கோயில் களையும் தரிசித்து வழிபட்டு வாழ்வு செழிக்க வரம்பெற்று வருவோமே!

எப்படிச் செல்வது?

தி
ருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி ஆற்றுக்கும் சோழ சூடாமணி ஆற்றுக்குமிடையே பசுமையான வயல்கள் சூழ அமைந்திருக்கிறது. சேங்காலிபுரம்.  ‘ஜெயசிங்க குலகாலபுரம்’ என்று அழைக்கப்பட்ட ஊர்தான் காலப்போக்கில் மருவி சேங்காலிபுரம் ஆனது என்கிறார்கள்.

கும்பகோணம் - திருவாரூர் பேருந்து மார்க்கத்தில், புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து  வடக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சேங்காலிபுரம் உள்ளது.