மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

டாக்டர் ஜெயம் கண்ணன், படங்கள்: செ.ராபர்ட்

குழந்தை பாக்கியம் மட்டுமல்ல; திருமண பாக்கியம்  கூடிவராத பெண்களும் திருக்கருகாவூர்

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அந்தத் தாயை மனதாரப் பிரார்த்தனை செய்து, படி மெழுகி, அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கூடிவரும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.

அதேபோல், முற்பிறவிகளின் கர்மாக்கள் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பின், வியாழக்கிழமைகளில் கர்ப்ப ரட்சாம்பிகை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால், வம்ச தோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது திண்ணம். அம்பிகை இப்படியென்றால், அடியார்களை வாட்டும் நோய்நொடிகளில் இருந்து அவர்களைக் காத்தருள செய்கிறார், சுவாமி முல்லைவனநாதர்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

வளர்பிறை பிரதோஷ நாளில், கருகாவூரின் நாயகர் முல்லைவன நாதருக்குப் புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதும் இத்தலத்துக்கான மற்றுமொரு நம்பிக்கை. வெளியிலிருந்து வாங்கி வரப்படும் புனுகை இறைவனுக்குச் சார்த்த அனுமதி கிடையாது. புனுகு சார்த்த விரும்பும் பக்தர்கள், அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி, ரசீது பெற்றுக் கொண்டால் வளர்பிறை பிரதோஷ நாளில் சேவார்த்திகள் முன்னிலையில் புனுகு சார்த்தி பிரசாதம் வழங்கப்படுகிறது. வர இயலாதவர்களுக்கு, தபாலில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

கலியுக அதிசயம் கர்ப்பரட்சகி!

கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை விவரித் தார், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பாபநாசம் குமார்.

‘‘இத்தலம் வரலாற்று காலம்தொட்டே, கருவுற்ற மகளிருக்கான ஆரோக்கியத்தலமாக இருந்து வந்துள்ளது. போர் நிகழும் காலங்களில், கருவுற்ற மகளிருக்கு அடைக்கலம் தரும் இடமாக இவ்வூர் திகழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது. பின்னர் ஏழாம் நூற்றாண்டில் கோயில் கட்டத் தொடங்கி, கருவறை பல்லவர்களாலும் பெரிய கோயிலாகச் சோழர்களாலும் கட்டப்பட்டு, சுந்தரர் காலத்தில் கற்கோயிலாகத் திகழ்ந்துள்ளது. பழங்காலத்தில் கொடிகளால் சூழப்பட்டிருந்த இக்கோயில், பெரியோர் மேற்கொள்ளும் ‘பஞ்ச வன க்ஷேத்திரம்’ என்னும் யாத்திரையில் முதலில் தரிசிக்கக்கூடிய முல்லைவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் வெளிப் பிராகாரம் மற்றும் முன் வாயிலில் இருந்து அம்மன் சந்நிதி வரையிலான மண்டபம் எல்லாமே இங்கு வந்து குழந்தைச் செல்வம் பெற்ற தம்பதியர் மனமுவந்து செய்து கொடுத்தது. ஐம்பது வருடங்களுக்குமுன் மகா பெரியவா இங்கே வந்து தங்கியிருந்தபோது, காலையில் காவிரியில் குளித்துவிட்டு வந்து வியாச பூஜை பண்ணுவார். சோமாஸ்கந்த அமைப்பில் கோயில் இருப்பதால், பெரிய பிராகாரம்தான் சுற்றி வருவார். கல்லும் முள்ளுமாகக் கிடக்கும் சுற்றுப் பிராகாரத்தில் அதன் மேலேயே வேக வேகமாக நடப்பார். பின்னாளில் இங்கே வந்து பலன் பெற்ற பக்தையான ஸ்ரீப்ரியா அம்மாதான் சுற்று மண்டபம் கட்டிக் கொடுத்திருக்காங்க!’’ என்கிறார் குமார். அறக்கட்டளை சார்பில் கோயிலுக்கு எதிரிலுள்ள குளம் தூர்வாருதல், அன்னதான மண்டபம் கட்டுதல் போன்ற பணிகளையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர்.

வீட்டில் ஒரு மழலையின் ‘குவா குவா’ சத்தம் கேட்காதா என ஏங்கும் தம்பதியர், திருக்கருகாவூர் வந்து, முறைப்படி பிரார்த்தனை செய்து, நம்பிக்கை யோடு வேண்டிக்கொண்டால் கண்டிப்பாகக் கண்திறப்பாள் கர்ப்பரட்சகி. கரு கொடுப்பாள்; உரு கொடுப்பாள்; கரு காப்பாள்; பிரசவத்தில் துணையிருப்பாள்... என்றும் துணை வருவாள்.

- தரிசிப்போம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

அன்னையின் அருள் ‘பெற்றேன்’

திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ஸ்ரீப்ரியாவும் அவருடைய கணவர் ராஜ்குமார் சேதுபதியும், அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் தீவிர பக்தர்கள். அவர்கள் வாழ்வில் அன்னை அருள்புரிந்த அந்த அனுபவத்தை ஸ்ரீப்ரியா பகிர்ந்துகொண்டார்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

‘‘என் வாழ்வில் திருக்கருகாவூருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. என்னுடைய அம்மா ஊர் கும்பகோணம். அதனால அதைச் சுத்தி இருக்கிற கோயில்கள் பத்தி எல்லாம் அவங்களுக்கு நல்லா தெரியும். என்னுடைய முதல் குழந்தை, ஆறு மாதங்களில் கருவிலேயே சிதைஞ்சுப் போயிடுச்சு. அந்தச் சமயத்தில் நான் ரொம்ப மன உளைச்சல்ல இருந்தப்போ, அம்மா திருக்கருகாவூர் கோயிலுக்குப் போய் எங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணிட்டு, பிரசாதமும், நெய்யும் கொண்டுவந்து கொடுத்தாங்க.

நாங்க கோயிலுக்குப் போகலன்னாலும், அந்த கர்ப்பரட்சகி மேல முழு நம்பிக்கையும் வெச்சு, மனதார

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

வேண்டிக்கிட்டு, முறைப்படி அந்த நெய்யைச் சாப்பிட்டு வந்தோம். அந்த வருடமே மீண்டும் நான் கருத்தரிச்சேன். என் பொண்ணு ஸ்நேகா பிறந்தாள். அடுத்தது பையன் அர்ஜுன். அதிலிருந்து எனக்கு அந்தக் கோயில் மீதும் அம்பாள் மீதும் அலாதி பிரியமும் ஆழ்ந்த நம்பிக்கையும் வந்துடுச்சு. யாராவது குழந்தை இல்லைன்னு வருத்தமா என்கிட்ட சொன்னால், உடனே நான் அவங்களுக்குச் சொல்றது ‘திருக்கருகாவூர் போய்ட்டு வாங்க!’ என்பதுதான். நான் கோயில் போறப்ப எல்லாம், குழந்தை இல்லாமல் ஏங்கும் எனக்குத் தெரிஞ்சவங்களுக்காக அங்கே வேண்டிக்கிட்டு, பிரசாதம் வாங்கி வந்து கொடுப்பேன். நான் வேண்டிக்கிட்டு வந்த எல்லோருக்குமே அந்த அம்பாள் அருளால் குழந்தை பிறந்திருக்கு. 40 வயசுக்கு மேல ஆனவங்களுக்குக் கூட, கருகாவூர் போய்ட்டு வந்து குழந்தை பிறந்திருக்கு.

நண்பர் ஒருவர் குடும்பத்தில், அவங்க குழந்தை இறந்து போனதால் ரொம்ப விரக்தியில் எதிலுமே நம்பிக்கையில்லாமல் இருந்தாங்க. திருக்கருகாவூர் போனப்போ கோயிலுக்குள்ள கூட வரலன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்காக நான் பிரார்த்தனை பண்ணிட்டு வந்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க. அடுத்த வருஷமே அவங்களுக்குக் குழந்தை பிறந்து, குழந்தையோடு கோயிலுக்கு வந்தாங்க. இதைவிட வேறு என்ன வேணும், அவளோட அருளைச் சொல்ல?! எந்தப் பிரார்த்தனையிலுமே நம் நம்பிக்கைதான் முக்கியம். கர்ப்பரட்சாம்பிகையிடமும் நம்பிக்கையோடு மனம்விட்டுக் கேளுங்கள்; நிச்சயம் அவள் உங்க மடி மீது கொடுப்பாள்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் ஸ்ரீப்ரியா.

தான் கருவுற்ற பின்னர் முதன்முறையாக அந்தக் கோயிலுக்குச் சென்ற ஸ்ரீப்ரியா, வெளிப் பிராகாரத்தில் நடந்து பிரதட்சணம் வரமுடியாத அளவு பாதங்களில் சூடு தாக்குவதைக் கண்டார். உடனேயே தன் வட்டத்தில் அனைவரிடமும் நன்கொடை திரட்டி, தானும் போட்டு, பெரும் பொருட்செலவில் சுற்றுப் பிராகாரம் முழுவதும் மண்டபம் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ!

தங்கத் தொட்டில்...

தமிழகக் கோயில்களிலேயே இங்கே மட்டும்தான் தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. `மற்ற கோயில்கள் போல தங்கரதம் செய்ய வேண்டும் என்ற யோசனை எழுந்தபோது, இது மகப்பேறு அருளும் தலம் என்பதால் தங்கத் தொட்டில் செய்துவைத்தோம்' என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், தங்கத் தொட்டிலில் தங்கள் சிசுவைப் படுக்கவைத்து, அம்பாள் சந்நிதியை ஒருமுறை வலம்வருகின்றனர். தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டிலுக்குச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அழகாக உருண்டு வரும்.  குழந்தைக்காக வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். அவர்கள், குழந்தைக்குப் பதிலாகக் கோயிலில் தரப்படும் ஸ்கந்தர் விக்கிரகத்தைத் தொட்டிலில் இட்டு, அம்பாள் சந்நிதியை வலம்வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் (இவை இரண்டுக்குமே கட்டணம் ரூ.550).

எப்படிச் செல்வது?

தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும் கும்பகோணம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாலியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தூரத்திலும் இவ்வூர் இருப்பதால், எல்லா திசைகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.