
மகுடேசுவரன்
கமலாபுரத்தில் நான்குவழிச் சாலைகள் சேர்கின்றன. ஹோஸ்பேட்டையிலிருந்து கமலாபுரத்துக்கு வரும் சாலை அங்குள்ள பேருந்து நிலையத்தைத் தொடுகிறது. அவ்விடத்திலிருந்து நேராகச் செல்லும் வழி ஹம்பியின் கல்லடுக்குக் குன்றங்களுக்குள் புகுந்து போகும் உள்ளூர்ச் சாலையாகிறது. இடப்புறம் திரும்பும் சாலையில் துங்கபத்திரை நதிக்கரைக்குச் செல்லலாம்.ஹம்பிக்குச் சுற்றுலா வருகின்ற ஆயிரக் கணக்கானவர்கள் அந்தச் சாலையில்தான் நெரிசலை உருவாக்குமாறு செல்கின்றார்கள்.
இடப்புறமாய்த் திரும்புவதற்குப் பதிலாக வலப்புறமாய்த் திரும்பினால் பெல்லாரி செல்லும் சாலையைச் சென்றடையலாம். ஹோஸ்பேட்டைக்கும் பெல்லாரிக்கும் இடையிலுள்ள சாலைதான் தென்னிந்தியாவின் நட்டநடுச் சாலை. ஆந்திரத்திலிருந்து மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களை அடைவதற்குப் பெல்லாரி, ஹோஸ்பேட்டை வழியாகத்தான் செல்ல வேண்டும். போக்குவரத்து அருமை மிக்க அச்சாலையில் பாரவுந்துகளைத்தான் பார்க்க முடியும். அவ்வாறு செல்லும் ஓரிரு வண்டிகளைத் தவிர்த்து வேறு வண்டிகளே இல்லாமல் அச்சாலை வெறிச்சோடியிருக்கும்.

கமலாபுரத்திலிருந்து பெல்லாரி செல்லும் சாலையைத் தொடும் வரையிலான பகுதி, விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஏழடுக்குக் கோட்டை வரம்புக்குள் இருந்தது. பெல்லாரி நகரம் பழங்காலந்தொட்டே சுற்று வட்டாரப் பகுதியின் சந்தைக்கூடல் நகரம்தான்.
பெல்லாரியை அடுத்திருப்பது கூட்டி என்னும் பெருங்குன்று நகரம். தமிழ்நாட்டின் சங்ககிரி நகரத்தைச் சுற்றிலும் குடியிருப்பில்லாத பெரும் பரப்பான செம்மண் நிலம் மட்டுமே இருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கின்ற நகரம்தான் கூட்டி.
கூட்டியைப் பற்றிய பேச்சு வந்துவிட்டதால் அங்குள்ள கோட்டையைப் பற்றியும் கூற வேண்டும். இந்தக் கூட்டி நகரம்தான் விஜயநகரத் தின் கிழக்குப் பகுதி ராணுவக் கோட்டை. கூட்டியைக் கைப்பற்றாமல் கிழக்கிலிருந்து வரும் எந்தப் படையும் விஜயநகரத்தின் மண்ணைத் தொடக்கூட முடியாது.
இன்றும்கூட கூட்டி நகரத்தைச் சுற்றி எவ்விதக் குடியிருப்பும் ஏற்படவில்லை. சற்றே தொலைவில் கூட எந்தச் சிற்றூரும் உருவாகவில்லை. அதற்குக் காரணம் என்ன ?
எப்போதும் கொலைவாளேந்திய வீரர்கள் திரிந்த பகுதி அது. ஐயுறத்தக்க யாருடைய நடமாட்டத்தையும் அங்கே விட்டுவைக்க மாட்டார்கள். கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் படைகள் கூடுவதும் கலைவதுமாய் இருந்த பாசறைப் பகுதி.
அரசாங்கத்தின் படையில் லட்சக்கணக்கான காலாட்படையினரும் பத்தாயிரக்கணக்கான குதிரைகளும் நூற்றுக்கணக்கான யானைகளும் இருந்தன. அவை அனைத்தும் தலைநகரத்திலேயே நிறுத்திப் பராமரிக்கப்பட்டன என்று கருதக் கூடாது. திருவிழாவுக்கு மக்கள் கூடுவதைப் போன்றதே போருக்குப் படை திரட்டுவதும். எட்டிய தொலைவு வரையிலுள்ள மக்கள், திருவிழா நாளன்று ஓரிடத்தில் ஒன்று திரள்வார்கள். படை கூடுவதும் அதைப்போன்றதே. அரசரின் படைகள் பேரரசின் பல்வேறு திக்குகளிலும் முகாமிட்டிருக்கும். ஒவ்வொரு நகரத்திலும் அந்நகரத்தின் அதிகாரி ஒரு படையை வைத்தி ருப்பார். போர் என்று அரசர் முடிவெடுத்தால் அப்படைகள் ஓரிடத்துக்கு வருமாறு அழைக்கப் படும். அவ்வாறு அழைக்கப்பட்ட படைகள் ஒன்றாய்த் திரட்டப்படும் இடம்தான் கூட்டிக் கோட்டை.

கூட்டிக் கோட்டையைச் சுற்றி வந்தபோது அவ்விடத்தின் பாலைத்தனிமை என்னை மிரள வைத்தது. குன்றின் முகடுகளில் கோட்டைப் பெருமதில் எழுப்பியிருக்கிறார்கள். குன்றின்மீது எழுப்பப்பட்டுள்ள எந்தக் கோட்டையையும் தலைவாயிலை இடிக்காமல் கைப்பற்ற முடியாது. தலைவாயிலை நெருங்கினால் அங்கே கொடுந் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்.
குன்றின் பின்பகுதியில் ஏறி மதிலை நெருங்கி விடலாம் என்று நினைத்தால் அது முடியாது. ஒற்றையாளாக உளவாளி வேண்டுமானால் எப்படியாவது நுழையலாம். கோட்டைக்குள் இருக்கும் பெரும் படை முன்னம் ஒற்றையாள் என்ன செய்துவிட முடியும்? அம்முயற்சியை எந்தப் படைத்தளபதியும் ஏற்கமாட்டார்.
கோட்டையைக் கைப்பற்ற படையணிகள் வேண்டும். மிகச்சிறந்த தாக்குதல் முறைகளின்படி போரிட வேண்டும். இதற்குத்தான் முற்றுகை என்ற முறையைப் பின்பற்றினார்கள். கோட்டைக்குள் இருக்கும் படையினர் வெளியுலகோடு எத்தொடர்பும் கொள்ளமுடியாதவாறு கோட்டை யைச் சுற்றிப் படையோடு முற்றுகையிட்டு நாள்கணக்கில் திங்கள்கணக்கில் ஆண்டுக்கணக்கில் அமர்ந்திருப்பது. அவ்வாறு அமர்ந்திருந்தால் கோட்டைக்குள் இருக்கும் வீரர்களுக்கு உணவும் நீரும் விரைந்து தீர்ந்துவிடும். போரிடும் வலுவிழந்து எளிதில் தோற்றுவிடுவார்கள்.
கிருஷ்ணதேவராயர் ரெய்ச்சூர்க் கோட்டையைக் கைப்பற்றியதை அவருடைய போர் வெற்றிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்ச் சொல்வார்கள். கோட்டையைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார் கிருஷ்ண தேவராயர். அதன் பிறகு நடத்தப்பட்ட போரில்தான் ரெய்ச்சூர்க் கோட்டை வீழ்ந்தது.
கோட்டைக்கு வெளியே இருப்பவர்களுக்கு உணவும் நீரும் படைக்கருவிகளும் தொடர்ந்து கிடைக்கும். கோட்டைக்குள் இருப்பவருக்கு இவை எவையும் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் கோட்டைக்குள் சுரங்கப் பாதைகள் அமைப்பார்கள். கோட்டைக்குள்ளேயே நன்னீர்க் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கும். மலைக் கோட்டைகள் என்றால் நீர்ச்சுனை வற்றாத குளங்கள் இருக்க வேண்டும். உணவுத் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். நிலக்கோட்டைகள் என்றால் கோட்டைக்குள் பயிரிடுவதற்கென்றே ஒதுக்கப்பட்ட வேளாண் நிலங்களைப் பார்க்கலாம். விஜயநகரத்தின் ஏழடுக்குக் கோட்டைக்குள் துங்கபத்திரையின் வற்றா நதி நீரோடு வேளாண் மண்டலமே இருப்பதைப் பார்க்க முடியும்.
- தரிசிப்போம்...