மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?

கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? ஹோமங்கள் பல வகை. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சமித்துகளைப் பயன்படுத்த வேண்டுமா?

- சி.ராகவன், மதுரை


நவகிரக ஹோமங்களில்... எருக்கு, பலாசு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி, வன்னி, அறுகு, தர்ப்பை ஆகியன சூரியன் முதல் கேது வரையிலான நவகிரகங்களுக்கும் சமித்தாகச் செயல்படும். சிந்தில் கொடி, ஆலம் மொட்டு, நெல், எள், பால், ஹவிஸ்ஸு அறுகு ஆகியன மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் சமித்தாகச் செயல்படும். சமித்தைத் தனியாகக் குறிப்பிடாத இடங்களில் அரசு பயன்படுத்தப்படும். எல்லா ஹோமங்களிலும் நெய்யும் ஹவிஸ்ஸும் பயன்படும். அத்துடன் சமித்தைச் சேர்க்கச் சொல்லும் இடங்களில் அரசு அல்லது பலாசு சேர்த்துக்கொள்ளப்படும். தர்மசாஸ்திர நூல்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு ஹோமத்துக்கும் உரிய சமித்தை அறியலாம்.

கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?

? எங்கள் ஊர் கோயிலுக்குப் பாலாலயம் செய்து ஒரு வருடம் ஆகிறது. கல் திருப்பணிகள், பொருளாதாரம் முதலான பல காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிப்போகிறது. பாலாலயம் செய்த பிறகு எத்தனை நாள்களுக்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்?

- வி.கிரிதரன், திருநெல்வேலி-2


திருப்பணியின் தரத்தை ஒட்டி நீண்ட நாள்கள் காத்து இருக்கலாம். மொத்த கோயிலையே புதுப்பிக்க நேர்ந்தால் பல நாள்கள் தேவைப்படுவது பொருந்தும்.

கருவறை தொடர்பான திருப்பணியில் பாலாலயம் கட்டாயம் ஆகும். ஒரு மண்டல காலம் பாலாலயத்தில் இறையுருவத்தை குடி இருத்தலாம். திருப்பணியில் இறங்குபவருக்கு, ஏறக்குறைய அந்தப் பணி எப்போது நிறைவுறும் என்பது தெரிந்திருக்க வேண்டும். வீட்டைப் புதுப்பிக்கும் நாம் ஓர் இடைவெளியை நிர்ணயிப்பது உண்டு. துரதிர்ஷ்டவசமாக நாள் நீண்டு போனால் தவறு இல்லை. சண்டை - சச்சரவு, செயற்கையான தாமதம், அசிரத்தை, அலட்சியம் ஆகிய காரணங்களால் நாள்கள் நீண்டால் குற்றம் உண்டு.  இறைவனின் சாந்நித்தியமே கேள்விக்குறி ஆகிவிடும். விழாக்களும், காலாகாலம் நடக்கும் உற்சவங் களும் தொடர்ந்து பாலாலயத்தை வைத்து செயல்படுவது பொருந்தாது.

உலக நன்மைக்காக ஏற்பட்ட கோயில்களை அலட்சியப்படுத்தாமல் சுறுசுறுப்போடு இயங்கி, விரைவில் கும்பாபிஷேகத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போது சாந்நித்தியம் மேலோங்கி எல்லோரும் பயன்பெறுவர். சடுதியில் செயல்பட வேண்டிய ஒன்று கும்பாபிஷேகம்.

கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா?

? சிவனுக்கு துளசி இலைகளைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம் என்கிறார் என் பாட்டி. துளசி மகா விஷ்ணுவுக்கு உகந்தது அல்லவா?

- கே.கோதை, காஞ்சிபுரம்


`பக்தியுடன் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன்' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. குறிப்பிட்ட இந்த இலைதான் வேண்டும்; பழம்தான் வேண்டும் என்று குறிப்பாக எதையும் கூறவில்லை. அதை, பக்தர்களது விருப்பத்துக்கு விட்டுவிட்டார்.

பூரணத்துவம் அடையாதவர்களிடமே விருப்பு - வெறுப்பு இருக்கும். இறைவன் பரிபூரணமானவர். ஆகையால், அவருக்கு அர்ப்பணிக்கும் பொருள்களைத் தங்களது விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். சிவ பெருமானுக்கு துளசியையும் அளிக்கலாம்.

குறிப்பிட்ட இறை உருவத்துக்கு, குறிப்பிட்ட இலை சிறந்தது என்று புராணங்களில் சொல்லப் பட்டிருக்கும். உதாரணமாக... வில்வம் - சிவனுக்குச் சிறப்பு; துளசி - நாராயணனுக்கு உரியது என்று கூறப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒன்றின் சிறப்பை உணர்த்த புராணக் கதைகள் அவ்வாறு கூறும். உடனே, மற்றவற்றுக்குச் சிறப்பு இல்லை என்று நாம் கருதக் கூடாது.

`பிள்ளையாருக்கு 20 இலைகள் சிறப்பானவை' என்று புராணம் கூறும். அவற்றில் மாவிலையும் ஒன்று. அதற்காக, அன்றாடம் மாவிலையால் அவருக்கு அர்ச்சனை செய்வது உண்டா? `ஈசனுக்குத் தாழம்பூ கூடாது!' என்றொரு தகவலும் உண்டு. அதற்கான ஒரு கதையும் இருக்கும். அதேநேரம் ஈசனின் தேவியான அம்பாளுக்குத் தாழம்பூ அர்ப்பணிக்கலாம் என்றும் சொல்லும். `எனில், அர்த்தநாரீஸ்வரரைத் தாழம்பூவால் அர்ச்சிக்கலாமா?' என்றொரு கேள்வி பிறக்கும். தாழம்பூ நறுமணத்துடன் திகழும். உமையை ஏற்கும் சிவனார், நறுமணத்தை எப்படி நுகராமல் இருப்பார்?!

எனவே, இறை வடிவங்களுக்கு அர்ப்பணிக்கும் பொருள்களில் உகந்தது, ஆகாதது என்று விருப்பு - வெறுப்புகளை அலசுவது வீண். சபரி, தான் ருசித்து... ருசியாக உணர்ந்த பழங்களை ராமனுக்கு அளித்தாள். வேடனான கண்ணப்பர் தனக்குப் பிடித்த உணவையே இறைவனுக்கு வழங்கினார். தான் சூடிய மாலையை, ஆண்டவனுக்கு அர்ப்பணித்தாள் ஆண்டாள்.

துளசிக்கென்று ஒரு நறுமணம் உண்டு. அது, உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்தது. உகந்த பொருளைத் தன் பிரியமான இறை உருவத்துக்கு அளிக்கலாம். நறுமணம் கமழும் புஷ்பங்களும், இலைகளும் ஆண்டவனின் படைப்புகள். அவன் படைத்ததை அவனுக்கு அர்ப்பணித்து மகிழலாம்.

? பிரசாதம் பெறும்போது கை தவறி குங்குமம் தரையில் சிதறிவிட்டது. இது சுபசகுனமா, அபசகுனமா?

- எம்.வேணுப்ரியா, தூத்துக்குடி


இதை சகுனமாகப் பார்ப்பது தவறு. காரணத் துடன் கூடிய நிகழ்வை, சகுனமாக ஏற்க முடியாது. கார்த்திகையில், வாசலில் தீபம் ஏற்றி வைப்போம். அது, காற்றடித்து அணைந்து போனால் சகுனம் என்போமா? காற்றடித்தால் அணையத்தான் செய்யும். கூட்ட நெரிசலில் கடவுளின் பிரசாதத்தை வாங்கும்போது, அது கீழே விழ வாய்ப்பு உண்டு. அதுபோல்... அடுப்பிலிருந்து எடுக்கும்போது, நிவேதனம் தவறி விழுந்து விடலாம். பூஜைக்காகத் தேங்காய் உடைக்கும்போது, கைதவறி தேங்காய் தரையில் விழுவதுண்டு. இந்த அஜாக்கிரதைகளை சகுனத்தில் சேர்க்கக் கூடாது.

வெளியே கிளம்புகிறீர்கள். வாசலில் வந்து அண்ணாந்து பார்க்கும்போது, கண்ணில் கருடன் பறப்பது தென்பட்டால்... அது சகுனம். ஆக, எதிர்பாராமல் நிகழ்வதே சகுனம். எனவே, வீண் கற்பனைகளால் மனதைக் குழப்பிக்கொள்ளாமல், நிம்மதியாக இருங்கள்.

- பதில்கள் தொடரும்...