Published:Updated:

புதிய புராணம்!

புதிய புராணம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்!

ஷங்கர்பாபு

புதிய புராணம்!

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்!

விருப்பங்களை விட்டு விலகுவோம்!

நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கதாபாத்திரங்களைப் பற்றி படித்திருக் கிறோம்; தெரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அவர்களில் எவரையேனும் நேரில் சந்தித்தது உண்டா?

‘இதென்ன கேள்வி... கடந்த கால மனிதர்களைக் கதைகளிலும் கற்பனைகளிலும்தானே சந்திக்க முடியும். ரத்தமும் சதையுமாக நேரில் சந்திப்பது சாத்தியமா?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனாலும் உங்களிடம் ஓர் ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆம், வெகு நிச்சயமாக நீங்கள் புராணக்காலத்து அன்பர் ஒருவரைச் சந்தித்திருக்கிறீர்கள், பழகியிருக் கிறீர்கள்.  அவர் யாரென்று அறியுமுன், நமக்குள் சில விஷயங்களைப் பேசிவிடுவோம்.

உங்களுக்கு காபி, தேநீர் அல்லது ஐஸ்க்ரீம் பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். ‘உணவுப் பொருள்களுக்கு நான் எப்போதும் அடிமையாக மாட்டேன்’ என்பவர்களுக்கு வேறொரு பட்டியல் தருகிறேன். சினிமா, சுற்றுலா, கிரிக்கெட்... இப்படி ஏதோ ஒன்றுக்கு நீங்கள் அடிமையென்று வைத்துக்கொள்ளுங்கள். நான் கட்டுரையின் வசதிக்காக ‘காபி’யை எடுத்துக்கொள்கிறேன்.

புதிய புராணம்!

உங்களுக்குக் காபி என்றால் உயிர். ஒரே நேரத்தில் இரண்டு கப் காபிகூட அருந்துவீர்கள் அல்லது நேரம் காலம் கருதாது காபி அருந்தும் அளவுக்கு காபி பிரியர் நீங்கள்.

இது பலவீனம் என்று உங்களுக்கே தெரியும்; அளவுக்கதிகமாக காபிக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்தே இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட நினைத்து என்னென்னவோ உறுதிமொழிகள் எடுப்பீர்கள். ஆனால், உங்கள் மனதை நீங்கள் எந்தளவுக்குக் கட்டுப்படுத்தினாலும் காபியின் நறுமணம் உங்களது நாசித் துவாரத்தைத் தாக்க, மறுகணம் அதன் சுவையை நினைவுபடுத்தி மூளை உங்களை உந்தித்தள்ள, மீண்டும் நீங்கள் காபி வயப்படுவீர்கள்.

மருத்துவரின் எச்சரிக்கை, நீங்களே எடுத்துக் கொண்ட சபதம் எல்லாம் காற்றில் பறந்துபோக, ‘அடடா! இதற்கு நிகரான விஷயம் உலகில் வேறேது இருக்க முடியும்’ என்று சொக்கிப் போவீர்கள் காபியின் சுவையில். அருந்தி அனுபவித்த பிறகான அடுத்த கணத்தில்தான் சுயநினைவுக்கு வருவீர்கள். வெட்கம் பிடுங்கித் தின்னும். ஆமாம்... காபி உங்களை ஜெயித்து விடும்.

இப்படியான பலவீனங்கள் பலவும்  எல்லோருக்கும் இருக்கின்றன.

நண்பர் ஒருவருக்குப் பணம் சம்பாதிப்பதில் அலாதியான மோகம்.  ஆனால், அது எப்போது தவறாகிறது என்றால், அவர் யாரைப் பார்த் தாலும் ‘‘அவருக்கென்ன நல்ல சம்பாத்தியம் பண்றான்’’ என்று ஏக்கமும் பொறாமையுமாகப் பெருமூச்சு விடும்போதுதான். பணத்தின் அடிப்படையிலான நமது அணுகுமுறை, அந்த மனிதரின் மற்ற குணாதிசயங்களை பின்னுக்குத் தள்ளிவிடும்.

காபியோ, பணமோ எல்லாமே தேவைதான். ஆனால், நம் மனம் அவற்றின் பின்னால் மட்டுமே செல்லும்போது அப்படி செல்வது தவறு என்று புத்திக்கு உறைத்தும் அதிலிருந்து விடுபட முடியாத பலவீனர்களாக நாம் இருக்கிற போது, நமது நிலைமை பரிதாபமாகிவிடுகிறது.

இப்படியான பலவீனர் ஒருவரைப் பார்க்கலாம். அவர் பெயர் யயாதி. சாதாரண ஆளில்லை; மன்னர் மரபில் வந்தவர். பிற்காலத் தில் கடும் தவம் செய்து ஞானியானவர். இன்னும் சொல்வதானால்...  தனது பலவீனத் தைத் தயங்காமல் ஒப்புக்கொள்பவராதலால், என்னைப் பொறுத்தவரையிலும் அவர் மிகுந்த தைரியசாலியும் நேர்மையானவரும் ஆவார்.

யயாதியின் பலவீனம் பெண்ணாசை. தன் மகனிடம் இளமையை இரவலாகப் பெற்று வாழ்வைச் சலிக்காமல் அனுபவிக்கும் அளவுக்கு பெண்ணாசை. பல காலம் இன்ப வாழ்வில் ஈடுபட்ட பிறகு, ஒருநாள் அவருக்கு ஞானோதயம் ஏற்படுகிறது. தனது இளமையும் ஆசைகளும் திருப்தியளிக்கப் போவதில்லை என்று உணர்ந் தார். ‘இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இளமை யுடன் இருந்து ஆண்டு அனுபவித்தாலும் ஆசைகள் தணியப்போவதில்லை’ என்பதைத் தெரிந்துகொண்டார்.

இந்த இடம்தான் முக்கியமானது. அவர் இந்த முடிவுக்கு ஒரே நாளில் வந்துவிடவில்லை; வேறுவழி எதுவும் தெரியாததால் இந்த முடிவை அவர் எடுக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இன்னும் பல காலம் இளமையை அனுபவித்திருக்க முடியும்.

ஆசைகள் ஒருபோதும் தன்னைவிட்டுப் போகப்போவதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்ததும் அவற்றிலிருந்து விலகினார்.

யயாதிக்கு இளமையின் மீதான மோகமும் விருப்பமும் என்றால் நமக்கு அதைச் சார்ந்ததும் அல்லாததுமான பல விஷயங்களையொட்டிய ஆசைகள்.

கடைசியில் யயாதியின் ஞானத்தையும் வார்த்தைகளையும்தான் நாம் அடைந்தாக வேண்டும். நமது விருப்பத்தை ஆசைகளை யெல்லாம்  எவ்வளவு அனுபவித்தாலும் அவை நம்மைவிட்டு விலகுவதில்லை.
 
இதைப் புரிந்துகொண்டு ‘இது இவ்வளவுதான்... இதற்கு மேல் எதுவும் இல்லை’ என்று நகர்ந்தால், வேறு பல நல்ல விஷயங்களை நம்மால் நுகரமுடியும்.

காபியோ, பணமோ எதுவாக இருப்பினும் அவற்றின் மீதான பற்று அளவுடன் இருந்தால் பழுதில்லை. இதைத்தான் யயாதியின் கதை உணர்த்துகிறது.

நமக்கு ஒவ்வாத, பிடிக்காத விஷயங்களில் இருந்து விலகியிருப்பதில் என்ன மனமுதிர்ச்சி இருக்கிறது? பிடித்த விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பதே ஆன்மிக முதிர்ச்சி.

இப்போது சொல்லுங்கள்... யயாதியைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? ஆமாம். ஒருவிதத்தில் நீங்களும் யயாதிதான். உன்னிப்பாகக் கவனித்தால் உங்களுக்குள் ஒரு யயாதி இருப்பதை உணரலாம். அது இயல்பானதே. ஆனால், யயாதி மீண்டதுபோல் நாம் மீள்வோமா?

இதற்கான பதிலில் அடங்கியிருக்கிறது நமது வாழ்வின் வெற்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism