மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்...’’ - திருப்பாவைப் பாடலை ராகத்தோடு பாடியபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் நாரதர்.

‘‘ஏதேது... சமீபகாலமாகப் பாசுரங்களைப் பாடி அசத்துகிறீரே? சென்ற முறை காவிரிப் பாடலோடு வந்தீர். இந்தமுறை திருப்பாவை... மார்கழி பிறக்க இரண்டு மாத காலம் இருக்கிறதே...’’ என்று நாம் கேள்வியை முடிப்பதற்குள் முந்திக்கொண்டு பேச ஆரம்பித்தார் நாரதர்.

‘‘ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்ல வேண்டிய கட்டாயம். அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். அவ்வூரைப் பற்றிய சிந்தனை எழுந்ததுமே என் வாய் தானாகவே திருப்பாவையை முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது.’’

‘‘ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்கிறீரா... அப்படியென்றால் அங்கே ஏதேனும் விசேஷச் செய்தி இருக்க வேண்டுமே?’’

இந்தக் கேள்வியைச் செவிமடுத்த நாரதர், ‘‘காரணம் இல்லாமல் காரியம் இல்லையே... முக்கியமான விஷயம் இருக்கிறது. அதைச் சொல்வதற்குமுன் திருநள்ளாறு செய்திகளைக் கொட்டிவிடுகிறேன்’’ என்றதுடன் அதுபற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

‘‘திருநள்ளாறு கோயில் தொடர்பாக ‘பக்தர்கள் வரிசை’ தொடங்கி நிறைய பிரச்னைகள் குறித்து சென்றமுறை சொன்னேன் அல்லவா? அதுபற்றி அந்தக் கோயிலின் செயல் அலுவலர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினேன். நமக்காக நேரம் ஒதுக்கி, நாம் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். முதலில் பக்தர்கள் வரிசை குறித்துதான் விளக்கம் தந்தார். ‘திருப்பதியில் பாலாஜி தரிசனம் மட்டும்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இங்கேயோ விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், தியாகராஜர் ஆகிய தெய்வங்களைத் தரிசிப்பதுடன் சனி பகவானையும் தரிசிக்க நகரும் பக்தர்கள் வரிசை. அதேபோல் சனிக் கிழமைகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அளவில் கூடிவிடுவார்கள். அவர்கள் சிரமம் இல்லாமல் தரிசிக்க  வசதியாக தரிசனப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது’ என்றார். மேலும், இந்தக் கோயிலில் அடிக்கடி ஸ்வாமி புறப்பாடு நடைபெறும் என்பதால் மழையாலும் வெயிலாலும் ஸ்வாமிக்குப் பாதிப்பு இல்லாமல் இருக்கும்வகையில், தருமை ஆதீன நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படியே பிராகார மேற்கூரை அமைக்கப்  பட்டுள்ளதாகவும், ‘வேத சாஸ்திரம் நன்கு அறிந்த பெரியோர்களின் ஆலோசனைப்படியே இவற்றை அமைத்திருக் கிறோம். இதில் எவ்வித ஆகம விதி மீறலும் இல்லை’ என்றும் விளக்கம் தந்தார்’’ என்று கூறிய நாரதரிடம், தீர்த்தக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புக் குறித்து நினைவுபடுத்தினோம்.

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

‘‘ஆமாம். அதுபற்றியும் விசாரித்தேன். ‘தீர்த்தக்கரைகளில்தான் கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன’ என்று பதில் சொன்னவர், உள்ளுர் பிரச்னை ஏற்படும் என்பதால் மேற்கொண்டு வேறு ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் சனிப்பெயர்ச்சி விழாவை கருத்தில்கொண்டு, பக்தர்களது வசதிக்காக எம தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம் ஆகியவை புனரமைக்கப்பட்டு வருவதாகவும் விளக்கினார்’’ என்றார் நாரதர்.

‘‘கைடுகள் என்ற பெயரில் சிலர் அதிகம் பணம் பறிப்பதாகப் புகார் சொன்னீரே? அது பற்றி என்ன சொல்கிறார் செயல் அலுவலர்?’’

‘‘தற்போது போலீஸ் காவல் கடுமையாக்கப் பட்டுள்ளதால் கைடுகள் தொல்லை 90 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாம். அதே போல், ‘தன்னிச்சையாக யாக பூஜைகள் செய்வதும் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது’ என்கிறார் செயல் அலுவலர் பன்னீர்செல்வம். மேலும், பாதாளச் சாக்கடை குறித்தும் விளக்கம் தந்தார்.’’

‘‘அதுகுறித்து என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறார்களாம்?’’

‘‘பொதுப்பணித்துறை மூலமாக 145 கோடி ரூபாய் செலவில் ‘கோயில் நகர’ திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைத் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. அது முடிவுறும்போது சாக்கடைப் பிரச்னை தீரும் என்கிறார். அதேபோல், அன்னதானப் பொட்டலம் குறித்த பிரச்னையைப் பொறுத்தவரையிலும், சாலையோரக் கடைகளில் சுகாதாரம் இல்லாத உணவுப் பொட்டலங்களை வாங்கி அன்ன தானம் செய்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.  அன்னதானம் செய்வதற்குக் கோயில் நிர்வாகம் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தவர், ‘மற்றபடி கோயில் வளர்ச்சியடைந்து வருவதை விரும்பாதவர்களும், குறுக்குவழியில் வருமானம் பார்த்துவந்த சிலர், அது தடுக்கப்பட்டதால் ஏற்பட்ட காழ்ப்பு உணர்ச்சியிலும் கோயில் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்’ என்றார்’’ என விவரித்து முடித்தார் நாரதர்.

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

‘‘அதுசரி, டிசம்பர் 19-ல் சனிப்பெயர்ச்சி வைபவம் வருகிறதே... அதற்கான முன்னேற் பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளனவாம்?’’

‘‘அந்த விழாவையொட்டி பக்தர்கள் தரிசன வரிசைக்கான தற்காலிக செட் அமைப்பதுதான் வழக்கமாம். ஆனால், தற்போது நிரந்தரமாகவே ‘தரிசன வரிசை’ அமைக்கப்பட்டுள்ளன.வரிசையில் வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் ஓய்வு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ‘கோயில் மற்றும் நளன் தீர்த்தக்குளம் பகுதிகளில் மட்டும் நிரந்தரமாக 170 கழிப்பிட அறைகள் கட்டப்பட்டுள்ளன.   110 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் திருட்டு குற்றம் குறைந்துள்ளது. மேலும், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்தேக்கத் தொட்டி அமைத்து அதன்மூலம் 10 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்படவுள்ளது. சனிப்பெயர்ச்சி விழா அன்று 5 லட்சம் உணவுப் பொட்டலம் மற்றும் 5 லட்சம் குடிநீர் பாட்டில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட செயல் அலுவலர், சக்தி விகடன் மூலம் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் தெரிவிக்கச் சொன்னார்’’ என்று கூறி நிறுத்திய நாரதரிடம் ‘‘என்ன வேண்டுகோள் நாரதரே?’’ எனக் கேட்டோம்.

நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு?

‘‘நளத் தீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள், பிரார்த்தனை என்ற பெயரில் பழைய துணிமணிகளைக் குளத்திலேயே போட்டுச் செல்கிறார்கள். அதேபோல் எள் பொதிந்த கறுப்புத் துணி முடிப்புகளையும் தலையைச் சுற்றி குளத்தில் வீசுகிறார்கள். இவையெல்லாம் தவறு.  இப்படிச் செய்ய வேண்டும் என்று எந்த ஐதீகமும் இல்லை.  புனிதமான நளத் தீர்த்தத்தை அசுத்தப்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, பக்தர்கள் இப்படியான செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அது’’ என்றார் நாரதர்.

‘‘நிச்சயம் அவரது வேண்டுகோளை பக்தர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்ற நாம், நாரதரிடம் ஸ்ரீவில்லிப்புத்தூரை மீண்டும் நினைவு படுத்தினோம்.

‘‘ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் ஸ்வாமிக்கான நைவேத்தியம் குறித்து சில தகவல்கள் வந்தன. அவை பற்றிய உண்மை நிலவரம் குறித்து, நேரில் சென்று பக்தர்கள் தரப்பிலும் கோயில் தரப்பிலும் விசாரித்தறிய வேண்டும். விசாரித்துவிட்டு விவரங்களை விளக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்று கூறியதோடு நம்மிடமும் விடைபெற்றுக்கொண்டார் நாரதர்.

படங்கள் : க. சதீஷ்குமார்