Published:Updated:

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!
பிரீமியம் ஸ்டோரி
அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

மு.வெ.சம்பத் படங்கள்: தே.அசோக்குமார்

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

மு.வெ.சம்பத் படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!
பிரீமியம் ஸ்டோரி
அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் எண்ணற்ற திருத்தலங்களில் எழுந்தருளி யிருந்தாலும், எட்டு திருத்தலங்கள் சுயம்வியக்த தலங்கள் - தானாகத் தோன்றிய தலங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. திருவரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய தலங்களுடன் திருநீர் மலையும் சுயம்வியக்த தலமாகப் போற்றப் படுகிறது.

அதுமட்டுமா? நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று ஞான நூல்கள்  சிறப்பிக்கும் வகையில் இந்த நான்கு கோலங் களிலும் பெருமாளை இங்கே தரிசிக்கலாம்.

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

கண்ணன் சிறப்பித்த திருத்தலம்...

திருநீர்மலை தலத்தின் சிறப்பு பற்றி முதன் முதலாக கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்குக் கூறியிருக்கிறார். ஒருமுறை சுகப்பிரம்ம ரிஷி வேத வியாசரிடம் திருநீர்மலையின் சிறப்புகள் பற்றிக் கேட்டதற்கு, கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்குக் கூறிய திருநீர்மலையின் சிறப்புகள் பற்றி விளக்கிக் கூறினார். இதுபற்றி பிரமாண்ட புராணத்தில் விளக்கப் பட்டிருக்கிறது. மேலும், இந்தத் தலத்தை சேவித்தாலே போதும், பாவங்கள் தீர்ந்துவிடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

நாற்புறமும் புனித நீர் சூழ்ந்திருந்த காரணத் தினால், திருநீர்மலை என்ற பெயர் இந்தத் தலத்துக்கு ஏற்பட்டது. முன் மூன்று யுகத்தில் தேவர்களும், ரிஷிகளும் நிறைய யாகங்கள் செய்து அக்னி பகவானுக்கு ஆஹூதி கொடுத் தனர். ஏராளமான யாகங்களின் பொருட்டு தனக்கு அளிக்கப்பட்ட அபரிமிதமான ஆஹூதியின் காரணமாக அக்னி பகவானுக்கு மந்த நிலை ஏற்பட்டது. மந்த நிலையில் இருந்து விடுபட விரும்பிய அக்னி பகவான், பெருமாளை வேண்டி பிரார்த்தித்தார். அக்னியின் மந்த நிலை அகற்றத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், ‘`திருநீர்மலையில் உள்ள தாவரங்களைப் புசித்து மந்த நிலை நீங்கப் பெறுவாய்’’ என்று வரம் தந்தார்.

அக்னியும் அப்படியே அந்தப் பகுதியில் இருந்த தாவரங்களை உண்டு மந்த நிலை நீங்கப்பெற்றார். அதனால் புல் பூண்டுகூட இல்லாமல் அந்தப் பகுதியே உஷ்ணமான காடாக மாறிவிட, அங்கிருந்த ரிஷிகள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களது சிரமத்தை அகற்ற வேண்டி, பகவான் தொடர்ந்து மழையை வர்ஷித்து, திருநீர்மலையைச் சுற்றிலும் நீர் சூழ வைத்து, அந்தப் பகுதியைக் குளிரச் செய்தார். 

திருநீர்மலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய கோபுரத்தைக் கடந்து சென்றால், இடப்புறத்தில் நாம் நீர்வண்ணப் பெருமாளைத் (நின்ற திருக்கோலம்) தரிசிக்கலாம். இவர் சந்நிதியிலேயே வலப்பக்கத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழிரு கரங்களில் அபய கடிக ஹஸ்தம் காட்டி, திருமார்பில் சாளக்கிராம மாலை அணிந்தவராகக் காட்சி தருகிறார் திருவேங்கடமுடையான். அருகிலேயே பெருமாளை சேவித்தபடி இருக்கிறார் வால்மீகி மகரிஷி. இவருக்கும் இத்தலத்துக்கும் என்ன தொடர்பு?

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

ராமனாகக் காட்சி தந்த நீர்வண்ணப் பெருமாள்...

வால்மீகி இந்தத் தலத்துக்கு வந்தபோது, மலை மேல் ஏறி, சயனக் கோலத்தில் அருளும் அரங்கப் பெருமானையும், வீற்றிருந்த திருக் கோல நரசிம்ம மூர்த்தியையும், நடந்த திருக் கோலத்தில் திரிவிக்கிரமப் பெருமானையும் சேவித்தவர் மனதில் ஓர் ஏக்கம் ஏற்பட்டது.

தாம் காவியம் பாடிய ராமபிரானை இங்கே தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம்தான் அது. நீர்வண்ணப் பெருமாள் சந்நிதியில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தபோது, நீர்வண்ணப் பெருமாள் ராமராகவும், லட்சுமி தேவி ஜானகியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சங்கு சக்கரங்கள் பரத சத்ருக்கனர்களாகவும் நீர்வண்ண ரூபத்தில் காட்சி தந்ததாகவும், வால்மீகி மகரிஷி தாம் தரிசித்து அனுபவித்ததை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று வரம் கேட்க, பகவானும் அப்படியே அனுக்கிரகித்து அருள்புரிந்தார். இந்தத் தல மூர்த்திகளை வால்மீகி மகரிஷியே பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர். நீர்வண்ணப் பெருமாள் சந்நிதி யின் அருகில் உள்ள கண்ணாடி மண்டபத்தில், மலைமீது கோயில்கொண்டிருக்கும் அரங்கப் பெருமான், ஸ்ரீதேவி, பூமி பிராட்டி, ஆண்டாள் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

மலையடிவாரத்திலேயே நாம் கல்யாண ராமரையும், அணிமாமலர் மங்கைத் தாயாரை யும் சேவிக்கலாம். திருமங்கை ஆழ்வார் முதலில் தாயாரையே மங்களாசாசனம் செய்திருக்கிறார். தாயாருக்கு அடுத்த சந்நிதியில் வலப்புறம் சீதை, இடப்புறம் லட்சுமணனுடன் காட்சி தருகிறார் என்று கல்யாணராமர். கல்யாணக் கோலம் என்பதால் ஆஞ்சநேயர் இங்கு எழுந்தருளி இருக்கவில்லை. நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு நேராகத் தனிச் சந்நிதியில் ஆழ்வார், ஆசாரியர்களை தரிசிக்க லாம். சொர்க்கவாசலுக்கு அடுத்துள்ள சந்நிதியில் ஆண்டாள் மணக்கோலத்தில் அருள்கிறார்.

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

யுகங்கள் கடந்த திருத்தலம்...

இந்தத் தலம் யுகங்களைக் கடந்த திவ்விய திருத்தலம் என்பதை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதியந்தாதியில், `...போர்மலை வான் வந்த புகழ் வாணன் காட்டி னான் நீர்மலை வாழ் எந்தை எதிர் நின்று’ என்ற வரிகளால் குறிப்பிட்டிருக்கிறார்.

துவாபரயுகத்தில் வாணாசுரன் என்னும் அசுரன் இருந்தான். சிறந்த சிவபக்தனான அவனுக்கு ஆயிரம் கைகள். ஒருமுறை அவன் தன்னுடைய மகளின் பொருட்டு, கண்ணபிரானின் பேரன் அநிருத்தனை சிறைப்பிடித்தான். கண்ணன் அவனுடன் போர் புரிந்து அவனுடைய கரங்களைத் துண்டித்து அவனைக் கொல்லப்போன நேரத்தில் சிவபெருமான் கேட்டுக்கொண்டதால் அவனைக் கொல்லாமல் விட்டார் கண்ணன். வாணாசுரன் எஞ்சிய நான்கு கரங்களால் கண்ணனைச் சேவித்து, பின் நீர்மலைப் பெருமாள் இருக்கும் திசையை நோக்கிக் கைகூப்பித் தொழுதான்.

காத்திருந்து தரிசித்த ஆழ்வார்...

இத்தலத்துக்கு காண்டவனம் என்றும், பெருமாளுக்கு காண்டவனப் பெருமாள் என்றும் ஒரு பெயர் இருந்ததை, ‘காண்ட வனமென்பதோர் காடு அமரர்க்கரை யன்னது கண்டவன் நிற்க’ என்ற திருமங்கை ஆழ்வார் பாசுரத்திலிருந்து அறியலாம்.

திருமங்கை ஆழ்வார் இந்தத் தலத்துக்கு வந்தபோது, தொடர் மழையால் யாரும் கோயிலுக்குச் செல்லமுடியாதபடி சுற்றி லும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. ஆழ்வார் சுமார் ஆறுமாத காலம் மந்தரகிரி என்ற இடத்தில் தங்கியிருந்து, நீர் வற்றியதும் பெருமாளைக் கண்குளிர சேவித்து மங்களாசாசனம் செய்தார்.

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் 20 பாசுரங்களால் இத்தலப் பெரு மாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நான்கு விமானங்கள்... நான்கு தீர்த்தங்கள்...

சுமார் மூன்று ஏக்கர் பரப்பில் ஆலயம் அமைந்திருக்கிறது. மலையடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாளையும், திருவேங்கட நாதனையும் தரிசித்துவிட்டு, 200 படிகள் ஏறிச் சென்றால் கோயிலை அடையலாம். சுமார்
20 படிகள் ஏறியவுடன் வலப்புறமாக உள்ள சிறிய பாதையில் அருள்மிகு ஆஞ்சநேயர் சந்நிதியை நாம் தரிசிக்கலாம். கை கூப்பிய நிலையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார்.

மலைக்கோயிலில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, பிரம்மா சகிதமாக சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத் துடன் திவ்விய தரிசனம் தருகிறார். இவரை, ‘விடலரிய பெரிய பெருமாள் மெய்ப்பதங்களே’ என்று ஸ்வாமி தேசிகன் சாதித்துள்ளார். இவருடைய திருமேனி சுதை வடிவம் என்பதால், திருமஞ்சனம் இல்லாமல் சாம்பிராணி தைலம் சாற்றுதல் மட்டுமே நடைபெறுகிறது.

பெருமாளுக்கு வலப்புறத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி தாயார் தரிசனம் தருகிறார்.மலையில் கிழக்குமுகமாக ஸ்ரீசாந்த நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். மலையின் உள் பிராகாரத்தில் அருள்மிகு உலகளந்த பெருமாள் கிழக்கு நோக்கி அருள்கிறார்.

திருநீர்மலையில் உள்ள ஒவ்வொரு பெருமாளுக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. நீர்வண்ணப் பெருமாளின் விமானம் - புஷ்பக விமானம்; ரங்கநாதர் விமானம் - ரங்க விமானம்; நரசிம்மர் விமானம் - சாந்த விமானம்; திரிவிக்கிரமர் விமானம்- பிரமாண்ட விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன. கோயில் திருக் குளமும் நீராழி மண்டபத்துடன் ஸ்வர்ண புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி என்ற நான்கு தீர்த்தங்களுடன் அமைந்திருக்கின்றன.

குழந்தை வரம் கிடைக்கும்

புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ஸ்ரீரங்கநாதருக்கு அர்ச்சனை செய்து, ஒரு துணியில் கருங்கல் மற்றும் ஒரு ரூபாய் நாணயமும் வைத்து, ஸ்தல விருட்சமான வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இதனால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியதும், கண்ணனுடன்கூடிய தொட்டில் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

திருமணமாகாத பெண்கள், மஞ்சள் சரடில்  விரலி  மஞ்சள் கோத்து வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். மேலும் ஸ்ரீரங்கநாயகி தாயார் சந்நிதியில் தொடர்ந்து ஆறு வாரங்கள் பசு நெய்யினால் தரையை மெழுகி, சர்க்கரையில் கோலம் போட்டு வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீரங்கநாதரை சேவித்து, ‘மந்திர ஸ்வீகாரம்’ என்னும் பூஜை செய்தால், தோஷ நிவர்த்தி பெறலாம் என்று பலனடைந்த பக்தர்கள் கூறுகின்றார்கள்.

தீபாவளி திருநாளில் திருமாலைத் தரிசிப்பது சிறப்பல்லவா? அவ்வகையில் திருநீர்மலை பெருமாளைத் தரிசித்து வாருங்கள்; நல்லதொரு திருப்பம் ஏற்படும் உங்கள் வாழ்வில்!

அரங்கன் தரிசனம்... மந்திர ஸ்வீகாரம்... திருப்பங்கள் தரும் திருநீர்மலை!

உங்கள் கவனத்துக்கு...

மலை: தோயகிரி மலை

ஆகமம்: வைகானஸம், தென்கலை சம்பிரதாயம்

தல விருட்சம்
: வெட்பால மரம்

பிரத்தியட்சம்: வால்மீகி, மார்க்கண்டேயர், தொண்டைமான்

திருவிழாக்கள்: மாதந்தோறும் திருவிழா நடைபெறும் இந்தத் தலத்தில், சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு பிரம்மோற்சவமும், பங்குனி மாதம் நீர்வண்ணப் பெருமாளுக்கு பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றன. ஆனி சுவாதியில் நரசிம்மர் உற்சவமும், ஆடி மாதம் திருவோணத்தை அடிப்படையாகக்கொண்டு உலகளந்த பெருமாளுக்கு பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றன.

எங்கே இருக்கிறது?
: சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருநீர்மலை. பல்லாவரத்திலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.