Published:Updated:

அன்பில் அழகர்!

அன்பில் அழகர்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் அழகர்!

அன்பில் அழகர்!

அன்பில் அழகர்!

அன்பில் அழகர்!

Published:Updated:
அன்பில் அழகர்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் அழகர்!

லங்காரப்பிரியரான திருமாலே அழகுதான்! அவர் `அழகர்' என்ற திருப்பெயர்கொண்டு காட்சி தரும்

அன்பில் அழகர்!

தலங்களாகப் பிரசித்தி பெற்றுத் திகழ்பவை மூன்று. அவை பழமுதிர்ச்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர், அன்பில் வடிவழகிய நம்பி. இவர்கள் மூவர்களில் யார் மிக்க அழகு கொண்டவர் என்று கேட்டால், `அன்பில் வடிவழகிய நம்பிதான்' என்று சொல்வார்கள் வைணவ அன்பர்கள், அதற்கு ஒரு தல வரலாற்றையும் சொல்வார்கள்.

ஒருமுறை ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கும் நான்முகனுக்கும் ஒரு சந்தேகம் உண்டானதாம். வைகுண்டத்தில் சயனக்கோலத்தில் இருக்கும் அழகிய பெருமாளுக்கு ஒப்பான திருமேனி பூவுலகில் எங்காவது உண்டா என்றும், அது வைகுண்டவாசனின் அதே அழகைக் கொண்டிருக்கிறதா என்றும் கேள்வி எழும்பியதாம். அதை பெருமாளிடம் கேட்க, அவரோ அன்பில் திருத்தலம் சென்று காணுமாறும் அங்கே இருக்கும் வடிவழகிய நம்பி அழகே உருவானவர் என்றும் கூறினாராம். அது மட்டுமா? உயிர்களைப் படைத்து முடித்த நான்முகனுக்குத் தான் படைத்த உயிரினங்கள் குறித்து கர்வம் உண்டானதாம்.

தன்னுடைய படைப்புகள்தான் எத்தனை அழகு... இதை மிஞ்சும் அழகை இனி யாரேனும் உருவாக்க முடியுமா என்று எண்ணினாராம். ஆணவம் வந்தால் படைப்புக் கடவுளே ஆனாலும் அது ஆபத்துதான் இல்லையா? பிரம்மனின் ஆணவத்தை அடக்க பெருமாள் அவர் முன்னே வடிவழகிய நம்பி ரூபமாகத் தோன்றினாராம். பெருமாளின் திவ்ய எழிலைக் கண்ட நான்முகன் திகைத்து ‘`நான் உங்களைப் படைக்கவில்லையே? நீங்கள் யார்?'' என்று கேட்க, பெருமாள் ``நான் அன்பில் சுந்தரராஜ பெருமாள்'' என்று கூறி, பிரம்மனின் ஆணவத்தை அடக்கினாராம் திருமால். நான்முகன்மீது அன்புகொண்டு பெருமாள் காட்சி தந்ததால் இத்தலம் `அன்பில்' எனப்படுகிறது என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்பில் அழகர்!

இத்தலத்தில் பெருமாள்,  ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் என்ற திருப்பெயர் ஏற்று, சயனக்கோலத்தில் காட்சி தருகிறார்.பெருமாளின் திருவடிகளில் ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோரும் நாபிக் கமலத்தில் பிரம்மதேவரும் காட்சி தருகிறார்கள். தாயார் அழகியவல்லி நாச்சியார் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். உற்சவர் வடிவழகி உடனுறை வடிவழகராகக் காட்சி தருகிறார். பூலோகப் பாற்கடல் என்று போற்றப்பெறும் இந்தத் தலத்தைத் திருமழிசை ஆழ்வார் தம்முடைய நான்முகன் திருவந்தாதியில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

அன்பில் அழகர்!

வால்மீகி முனிவர் முதன்முதலாக ராம நாமத்தை உச்சரித்த தலம் இது. துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகி, தவளையாக மாறிய சுதபா என்னும் மகரிஷி தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் இது. தாரக விமானத்துடன்கூடிய கோயிலின் தீர்த்தம் மண்டூக புஷ்கரிணி. மாசி மக நாளில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாசி விசாகத்தில் தங்க கருட சேவையும், மார்கழி மாத பகல் பத்து இராப் பத்து உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பித்ரு தோஷங்களைப் போக்கும் தலமாகவும் அன்பில் தலம் போற்றப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இந்தத் தலத்தில் உள்ள கொள்ளிடம் நதியில் நீராடி, பெருமாளுக்கு அப்பம், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அதை பத்து பேருக்கு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அன்பில் வடிவழகிய பெருமாளை ஒருமுறை தரிசித்தால் போதும்... அவருடைய அழகுக்கு மட்டுமல்ல, அருளுக்கும் நாம் ஆட்பட்டுவிடுவோம். இதோ, புண்ணியம் பெருகும் இந்தப் புரட்டாசி மாதத்தில் அன்பில் தலத்துக்குச் சென்று வடிவழகிய நம்பியை தரிசித்து வரம்பெற்று வருவோம்.

 - வெ.ஜெயசுப்பிரமணியன்

படங்கள்: சே.அபினேஷ்

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்:
அன்பில்

பெருமாள்: ஸ்ரீசுந்தரராஜ பெருமாள்

உற்சவர்: ஸ்ரீவடிவழகி சமேத ஸ்ரீவடிவழகர்

தாயார்: ஸ்ரீஅழகியவல்லி நாச்சியார்

தலச் சிறப்பு: பித்ரு தோஷம் நீக்கும் தலம்

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12.30 மணி வரை; மாலை 4 முதல் 8 வரை.

எப்படிச் செல்வது?

அன்பில், திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism