Published:Updated:

ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...
பிரீமியம் ஸ்டோரி
ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

வி.ஜெ.செல்வராஜு, ஓவியம்: ஸ்யாம்

ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

வி.ஜெ.செல்வராஜு, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...
பிரீமியம் ஸ்டோரி
ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

றியாமை எனும் இருளை நீக்கி,  நமது வாழ்வில் மெய்ஞ்ஞான ஒளியேற்றும் திருநாள் தீபாவளி. தீபங்களால் சிறப்புபெற்ற இத்திருநாளையொட்டி, விளக்குகளால் சிறப்புபெற்ற ஒரு தலத்தில் நிகழ்ந்த ஓர் அற்புத நிகழ்வைப் படித்தறிவோமா?

`வேதாரண்யம் விளக்கழகு' என்பது வழக்குமொழி. இந்தத் தலத்தில்தான் நம் மெய்ஞ்ஞானத்தைத் தூண்டும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வேதங்களே ஆரண்யமாக இருந்து தவமியற்றிய காரணத்தினால், வேதாரண்யம் என்று பெயர்பெற்ற இந்தத் தலம், அழகு தமிழில் திருமறைக்காடு என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே, அன்னை யாழைப் பழித்த மொழியம்மை துணையுடன் எழுந்தருளியிருக்கிறார் மறைக்காட்டு மணாளர்.

மிகப் பழைமையான திருமறைக்காடு தலத்தை தரிசிக்க, உழவாரப் பணியால் உயர்வுபெற்ற அப்பர் சுவாமிகளும், தெய்வக் குழந்தையான  திருஞான சம்பந்த சுவாமிகளும் விஜயம் செய்தனர்.

ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

எப்படியும் அவர்களை இன்முகத்துடன் அய்யன் வரவேற்பாரே... அந்த அற்புதச் சுடர் ஒளி பொருந்திய பரமனை வாழ்த்திப் பாடுவதற்கு, இருவரது நாவிலும் இருக்கும் தமிழன்னை ஆர்வத்துடன் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால்..?

கோயிலின் பிரதான வாயில் மூடப்பட்டிருக் கிறது. மக்கள் வேறொரு குறுக்கு வழியில், பின் பக்கமாகக் கோயிலுக்குள் சென்று வணங்குகிறார்கள் என்ற தகவல் வருகிறது.

“இறைவனை, எந்தையை, என் அப்பனை எப்படி வணங்க வேண்டும் என்று முறை இருக்கும்போது, இப்படிக் கொல்லைப்புற வாயிலாக உள்ளே செல்வதோ!” என்று மனம் வெதும்புகிறார் ஞானக்கன்று என்று வணங்கப்படும் ஞானசம்பந்தர் சுவாமிகள்.

அப்பரிடம் வேண்டுகோள் வைக்கிறார். ‘`கோயில் கதவங்களைத் திறக்க நீங்கள் திருக்காப்பு பாடுங்கள்” என்றார்.

அப்பர் மலைத்தார். ‘`அன்று பச்சிளம் குழந்தையாக இருந்த தாங்கள், அந்தப் பரமனைப் பார்த்த மாத்திரத்தில்,  ‘தோடுடைய செவியனே’ என்று அழைத்துப் பாடினீர் களே... அந்த அழகுத் தமிழில் இப்போதும் பாடுங்களேன்” என்றார் அப்பர்.

“என் தமிழைவிட, தங்களது தமிழில் செழுமையும், இறையருளை அணுகுவதில் பல நுணுக்கங்களும் உள்ளன. தயவுகூர்ந்து  நீங்கள்தான் பாசுரம் பாடி கதவங்களைத் திறக்க வேண்டும்” சம்பந்தரின் வேண்டுகோள் அப்பரைக் கரைத்தது. அவர் பாடினார்.

அவர் பாடிய பதிகம் அற்புதமான சுவை உடையது. வேதங்கள் கோடிக்கணக்கான மந்திரங்களைக் கோயிலுக்குள் உறையும் இறைவனிடம் உச்சரித்து, கதவங்களையே மூடிவிட்டன. இப்போது அழகிய, எளிய, இனிய தமிழில் அப்பரடிகள் பாடுகிறார். இறைவன் உருகிப்போகிறான். என்னதான் வேதங்கள் கட்டிப்போட்டாலும், கதவைத் திறக்க வேண்டும் என்று செந்தமிழ் பாசுரங் களால் அப்பர் கெஞ்சும்போது, எப்படி அதை மறுக்க முடியும்?

அதுவும் எப்படியெல்லாம் அடிகள் பாடியிருக்கிறார். முதல் வரியில் அன்னையின் சிறப்பைக் கூறி, `உமை பங்கரோ' என்று அல்லவா விளிக்கிறார். எப்படி, எப்படி?

`பண்ணின் நேர் மொழியாள்' என்று அன்னையின் குரலை வர்ணிக்கிறார் அப்பர் சுவாமிகள். இதற்குப் பின்னணியில் இரு செய்திகள் இருக்கின்றன.

ஒன்று... சம்பந்தர் தமது முதல் பாடலில் இறைவனை எப்படி அழைத்தார்? அந்த பாணியையே அப்பர் சுவாமிகள் இங்கே பின்பற்றுகிறார்.

‘தோடுடைய சிவனே’ என்கிறார் சம்பந்தர். தோடு என்ற காதணி பெண்கள் அணிவதுதானே? 

எனில், `தோடு அணிந்தவன்' என்றால்... அங்கே ஐயனை அம்மையப்பனாகக் காணலாம். மேலும், அம்மையைக்கண்டு, அடுத்து ஐயனைக் காண்ப தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அதே பாணியில் இவர் -

பண்ணின் நேர் மொழியாள்
                       உமைபங்கரோ
மண்ணினார் வலம் செய்ம் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத்திறந்து அருள் செய்ம்மினே


என்று பாடுகிறார். இதேபோல் மாணிக்க வாசகரும் பாடியிருக்கிறார். அதுசரி, அது என்ன `பண்ணின் நேர்மொழியாள்?'

ஒருமுறை யாழினை இசைத்துக் கொண் டிருந்தாள் அன்னை கலைவாணி.

அந்த இசையோ தேவலோகத்தையே மயக்கிக்கொண்டிருக்கிறது. உயிரினங்கள் தத்தம் செய்கைகளை மறந்து இசையுடன் லயித்திருக்கின்றன. வீசும் காற்று, பேசும் காற்றானது. தவழும் மேகங்கள், முகிழ்க்கும் மேகங்களுடன் மோகம்கொண்டன.

அன்னை உமையாளும் யாழிசையில் மெய்ம்மறந்து போனாள். அந்த நேரத்தில், அந்த இசைக்கேற்ப அவள் தன்னுடைய அழகிய, மெல்லிய, நளினமான குரலில் ஓரிரு வரிகளைப் பாடினாள்.

உயிரினங்கள் சிலிர்த்தன; உணர்வு
வெள்ளம் பிரவாகமாகின. தேவருலகத்தினர் மயக்கத்தின் எல்லையை அடைந்தனர்.

இப்படியொரு குரலா?! இந்தக் குரலில் இப்படியொரு இனிமையா?!

மற்றவர்களைவிட மிகவும் ஆச்சர்யத்தில் உமையாளைப் பார்த்தாள் கலைவாணி. அதற்குமேல் அவளால் யாழை இசைக்க முடியவே இல்லை. உமையவள் தன் இனிய குரலால் யாழையே பழித்துவிட்டாளே!

அவள் யாழிசைப்பதை நிறுத்திவிட்டதைக் கவனித்த உமையவள், தன் பார்வையா லேயே கேட்டாள்: “ஏன் வாசிப் பதை நிறுத்திவிட்டாய்?”

கலைவாணி உமையை வணங்கியபடி சொன்னாள். ‘`அன்னையே உங்கள் குரல் இனிமைக்குமுன் என் இசை நாணி தலைகுனிந்தது.”

இப்படி ஒரு செய்தி புராணத் தில் உண்டு. இதையே தமது பாடலின் முதல் அடியில் பதிக்கிறார் அப்பர் சுவாமிகள்.

ஆக, முதல் பாடல் முடிவுற்றது. `கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே' என்கிறார். கதவுகள் திறக்கவில்லை.

அடுத்தடுத்துப் பாடுகிறார். பத்துப் பாடல் களில் இறைஞ்சி வேண்டுகிறார். அப்போதும் கதவுகள் திறந்த பாடில்லை.

`கொஞ்சம்கூட இரக்கம் காட்ட மாட்டேன்னு அடம்பிடிக்காதீர்கள் ஐயா' என்பதுபோல, `இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானே' என்று புலம்பாத குறையாகப் பாடியபோது, கதவுகள் திறந்தன. மறைக்காடர் மனம் திறந்தார்.

கைகூப்பி வணங்கிய அப்பர் சுவாமிகள் கேட்கிறார் சம்பந்தரிடம், ‘`இப்போது திறந்த கதவங்கள் மீண்டும் மூடிட, தாங்கள் பாட வேண்டும்” என்றார்.

சம்பந்தர் பெருமான் பாடினார். ஒரே ஒரு பாடல். பெருத்த இடியோசையுடன் கதவுகள் மூடிக்கொண்டன.

இப்போது அப்பர் முகம் சுருங்கியது. “நான் கெஞ்சி, புலம்பி, இறைஞ்சி, அழுது பதினொரு பாடல்களைப் பாடிய பின்னரே இறைவன் கதவங்களைத் திறந்தார். தாங்களோ ஒரே ஒரு பாடலைப் பாடிட, கதவுகள் தாமாகவே மூடிக்கொண்டன. என்ன பேறு பெற்றிருக்கிறீர்கள்?” என்று கண்ணீர் சொரிய நின்றார் திருநாவுக்கரசர்.

சம்பந்தர் சமாதானப்படுத்தினார். ‘‘அப்படி யில்லை. தங்களது தமிழில் மகிழ்ந்து மயங்கி யதால் தங்களது பாடல்களை இறைவன் கேட்டுக்கொண்டேயிருந்தார். உங்களது பதினொரு பாடல்களும் தமிழ் அமுதை அவருக்கு வழங்கின. மறையோதும் எங்கள் பரமன் மறைகளுக்குத் திரையிட்டு, கதவங் களைத் திறந்தது தங்களது தமிழால்தானே'' என்று வணங்கினார்.

இது பொதுவான கருத்து. இப்படித்தான் இதுவரை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மறைபொருள் வேறு. அதை அறிவோம்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக, இறைவன் தன் இரு பெரும் சீடர்களின் மூலமாக எதை மறைமுகமாகக் கூற விரும்புகிறார்?

இங்கே நம் மனம்தான் கோயிலாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

`உள்ளம் பெருங்கோயில்  - ஊன் உடம்பு ஆலயம்' என்கிறார் திருமூலர். மனமே கோயில். இந்தக் கோயிலின் மூலஸ்தானம் உடம்பு.அடுத்ததாக அவர் கூறுவது... பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப அருள்புரிகின்ற சர்வேஸ்வரனுக்கு வாயே கோபுர வாசல் என்கிறார். ‘வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்’ ஆக, இப்பேர்ப்பட்ட உயர்ந்த ஸ்தானமாகிய இந்த உடம்பையும் உள்ளத்தை யும் நாம் சுத்தமாக வைத்திருக்கிறோமா?

மனதைச் சுத்தமாக வைத்திருந்ததால்தானே, வேடன் திண்ணப்பன் வழங்கிய பண்டங்களை இறைவன் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்?! மனதைச் சுத்தமாக வைத்திருந்ததால்தானே மணிவாசகருக்காகப் பிரம்படிபட்டார்?!

அந்த மனதை நாம் சுத்தமாக வைத்திருந்தால், அவர் ஏன் கோயில், குளம் என்று எங்கோ ‘தவ தவ’ என்று தனித்திருக்க வேண்டும்?! தன் மகன் வீட்டில் இருப்பதைத்தானே பெற்றவன் விரும்புகிறான். நம் அனைவரையுமே பெற்ற  இறைவனுக்கு மட்டும் அந்த எண்ணம் இருக்காதா என்ன?

`மனமது செம்மையானால்' என்பார்கள் பெரியோர்கள். அப்படி நம் அகம் எப்போது செம்மையாகும்?

அறமும் அன்பும் நிறைந்திருக்கும்போது உள்ளம் தூய்மையாகும். அறமும் அன்பும் நிறைந்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

அழுக்காறு, பேராசை, சினம், தவறான - கடுமையான சொல் ஆகியவற்றை விலக்கினால் அன்பும் அறமும் நம்முள் தங்குமாம். இந்த இரண்டும் இருக்கும் இடத்தில் இறைவனும் இருப்பான். ஆக, அந்த நான்கு பொல்லாதவற்றை நம்மிடமிருந்து விலக்கிட, பல நூறாயிரம் முறை பரம்பொருளைத் தொடர்ந்து வணங்கிட வேண்டுமாம்.

திருநாவுக்கரசு சுவாமிகளே ஒன்றுக்குப் பலமுறை பதிகம் பாடிய பின்னர்தானே கதவுகளைத் திறந்தார் இறைவன். அப்படியிருக்க நம்மைப் போன்றவர்கள் பல நூறாயிரம் முறையாவது எம்பெருமானை அழைத்தால்தான் அவர் உள்ளே வருவார்.

மாணிக்கவாசகர் பெருமானும் அன்னை யையும், அப்பனையும் வணங்கும் விதம் மிக அற்புதம்...

பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
   பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
   திருப்பெருந் துறையுறை சிவனே!
எண்ணமே உடல் வாய் மூக்கொடு
  செவிகண் என்றினை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
   வருக என்றருள் புரியாயே.

 (வாழாப்பத்து: 5)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனப் பாடுகிறார்.

நாமும் இந்த அடியவர்கள் வழிநின்று இறைவனை வேண்டி வழிபட்டு அருள் பெறுவோம்.

ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...

ஷ்ட மங்கலப் பொருள்களில் தீபமும் ஒன்றாகும். மங்கலச் சடங்குகளில் காமவர்தினி என்ற அப்சரப் பெண் திருவிளக்கை ஏந்தி நிற்பாள் என்பர். சாசனக் கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் முகப்பிலும் தெய்வ உருவங்களும் அவற்றின் இருபுறமும் விளக்குகளும் பொறிக்கப்பட்டிருக்கும்.  நடுகற்களிலும்கூட புடைப்புச் சிற்பங்களாகத் திகழ்கின்றன விளக்குகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism