பிரீமியம் ஸ்டோரி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கழுகுமலை. முருகப்பெருமான் கழுகாசல மூர்த்தியாகத் திருக்கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில் மட்டும்தான் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது சூரசம்ஹார வைபவம்.

ஏன் தெரியுமா? அதைப்பற்றி அறியுமுன் இந்தத் தலத்தின் - திருக்கோயிலின் சிறப்பம்சங்களை முதலில் தெரிந்துகொள்வோம்...

கழுகாசலம்!

பெளர்ணமியில் கிரிவலம்

இங்குள்ள மலையின் பாறையைக் குடைந்து குகைக்குள் மூர்த்தியை அமைத்துள்ளமையால், இது குடைவரைக் கோயில் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது. இந்தக் கோயிலுக்கு விமானமோ, கோபுரமோ கிடையாது. மலைதான் விமானமாகவும் கோபுரமாகவும் உள்ளது. இக்கோயிலுக்குச் சுற்றுப் பிராகாரமும் கிடையாது. பிராகாரம் சுற்றிவர வேண்டுமானால் மலையைத்தான் சுற்றிவர வேண்டும். அதனால், இங்கு பெளர்ணமி கிரிவலம் வருவது  மிகவும் சிறப்பு.

சமணப் பள்ளி


ஆச்சர்யமூட்டும் சிற்பங்களுடன் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இக்கோயில் எல்லோராவில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு ஒப்பிடப்படுவதால் இந்தக் கோயிலை ‘தென்னகத்தின் எல்லோரா’ எனவும் குறிப்பிடுகின்றனர். இதே மலையிலுள்ள வேறு பாறைகளில் சமணர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர் பள்ளியும் மலை உச்சியில் ஒரு பிள்ளையார் கோயிலும் ஐயனார் சுனையும் காணப்படுகின்றன.

கழுகாசலம்!

பாடியருளிய புலவர்கள்

அருணகிரிநாதர், சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், மகாகவி பாரதியார், ‘காவடிச்சிந்து’ பாடிய புலவர் அண்ணாமலை ரெட்டியார், கழுகுமலை பிள்ளைத்தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயர் ஆகியோர் இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளனர்.

ஊரும் பெயரும்


சமணர்கள் காலத்தில் இந்த ஊருக்கு `அரைமலை’ என்று பெயர். இத்தலத்தைப் பற்றி மூன்று பாடல்கள் பாடியுள்ள அருணகிரியார், இந்தத் தலத்தை ‘குருகுமலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.  `உவணகிரி’ எனவும் இம்மலை ஒரு காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. ‘உவணம்’ என்றால் கழுகு, ‘கிரி’ என்றால் மலை எனப் பொருள். ‘சம்பாதி’ என்ற கழுகு முனிவர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டதால் இவ்வூருக்கு ‘கழுகுமலை’ எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தவிர ‘கஜமுகபர்வதம்’, ‘சம்பாதிக்ஷேத்திரம்’ ஆகிய புராணப் பெயர்களும் இவ்வூருக்கு உண்டு.

ஆய்வும் ஆலயமும்

கல்வெட்டு்களின் ஆய்வுப்படி இந்தக் கோயில் கி.பி 8-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப் பிட்டுள்ளனர். கழுகுமலைச் சீமையை ஆளும் உரிமையை மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் எட்டயபுரம் மன்னருக்கு வழங்கினாராம். தற்போது வரை எட்டயபுரம் அரண்மனை வாரிசுகள் பரம்பரையாக இத்திருக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து அறங்காவலராகவும் இருந்து வருகிறார்கள்.

கழுகாசலம்!

ஆய்வும் ஆலயமும்

கல்வெட்டு்களின் ஆய்வுப்படி இந்தக் கோயில் கி.பி 8-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப் பிட்டுள்ளனர். கழுகுமலைச் சீமையை ஆளும் உரிமையை மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் எட்டயபுரம் மன்னருக்கு வழங்கினாராம். தற்போது வரை எட்டயபுரம் அரண்மனை வாரிசுகள் பரம்பரையாக இத்திருக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து அறங்காவலராகவும் இருந்து வருகிறார்கள்.

இந்திர மயில்

பொதுவாக முருகன் ஸ்தலங்களில்...

அசுரனான சூரபத்மன் மயிலாக எம்பெருமானிடம் சரணாகதி அடைந்ததால், மயில் முருகனுக்கு வலப்புறமாக திரும்பி நிற்கும். இங்கு இந்திரனே மயிலாக மாறி முருகனுக்கு வாகனமாகியதால், மயில் இடப்புறம் நோக்கி காணப்படுவது தனிச்சிறப்பு.

`மேற்கு முகமாக அமைந்த முருகன் தலங்களில் முருகப்பெருமான் ராஜ கோலத்தில் அருளும் திருத்தலம் இது' என்று ஆன்மிக அன்பர்கள் கழுகுமலையைச் சிறப்பித்துள்ளார்கள்.

கழுகாசலம்!

திருமணத் தடை நீங்கும்

செவ்வாய் கிரகத்துக்கு மூல முதல் அதிபதி சுப்பிரமணியன். தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் சுவாமிக்குச் சிவப்பு வஸ்திரம், வள்ளிக்குப் பச்சை வஸ்திரம், தெய்வானைக்குச் சிவப்பு வஸ்திரம் சாத்தி மூவருக்கும் ரோஜா மாலை அணிவித்து, சர்க்கரைப்  பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி விரைவில் கெட்டிமேளம் கொட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஐந்து கால பூஜைகள்

தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் திருவனந்தல், காலை 8.30 மணிக்கு விளாபூஜை, பகல் 12.15 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அர்த்தசாம பூஜை மற்றும் அதைத் தொடர்ந்து பள்ளியறை பூஜை ஆகிய ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன.

கழுகாசலம்!

ஜம்புலிங்கேஸ்வரர்

கழுகாசலம் கோயிலில் ஜம்புலிங்கேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி, அம்பாள் ஆகியோர் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் தனித்தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்கள். இங்கு சிவன் சந்நிதியும் உள்ளதால் முருகனுக்கும் சிவனுக்கும் எனத் தனித்தனியாக இரண்டு பள்ளியறைகள் உள்ளன. இரவில் முதலில் முருகனுக்கும், பிறகு சிவபெருமானுக்கும் பள்ளியறை பூஜை நடைபெறும். மறுநாள் காலையில் திருவனந்தல் பூஜை முதலில் சிவபெருமானுக்கும் பிறகு முருகனுக்கும் நடைபெறுகிறது.

வெட்டுவான் கோயில்

கோயிலின் அருகிலுள்ள மலையின் மேல் சுமார் 47 அடி நீளம்; 30 அடி உயரம் கொண்ட பாறையைக் குடைந்து, அதன் நடுப்பகுதியில், சுமார் 30 அடி ஆழத்தில் சதுரமாக வெட்டப்பட்ட கோயில் உள்ளது. இதை `வெட்டுவான் கோயில்’ என்கிறார்கள். இரண்டு நிலை விமானங்களுடன்கூடிய இந்த ஆலயத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

கழுகாசல மூர்த்தி

சுமார் 300 அடி உயரமுடைய மலையில் கருவறையும், அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்தே செதுக்கப்பட்டுள்ளன. முதலில் கழுகாசல மூர்த்தியை மட்டும்தான் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் அதிமதுர பாண்டிய மன்னர். காலப் போக்கில்தான் வள்ளி, தெய்வானை சிலைகள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தற்போது கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி அருள்பாலிக்கிறார். தெற்கு, வடக்கு நோக்கி ஒருவரையொருவர் எதிரெதிரே பார்த்தபடி உள்ளனர் இரு தேவிகளும்.

கழுகாசலம்!

இந்தத் தல கழுகாசலமூர்த்தி, ஒரு முகமும் ஆறு கரங்களும் கொண்டு அருள்பாலிக்கிறார். தென் இந்தியாவிலேயே முருகப்பெருமானுக்கு இம்மாதிரியான திருக்கோலம் வேறெந்த தலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்மூர்த்தி கத்தி, கேடயம், வஜ்ராயுதம், குறிசாயுதம், வேலாயுதம் எனக் கைகளில் பல ஆயுதங்களை ஏந்தி, மயிலின் மீது அமர்ந்து இடது காலை மயில் மீது பதித்து, வலது காலை தொங்கவிட்டபடி சம்ஹார கோலத்தில்  காணப்படுகிறார்.

கழுகாசலம் ‘வாரும் பிள்ளாய் சூரபத்மா!’

ழுகுமலையில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவுக்கு தனிச் சிறப்பு உண்டு. அதுபற்றி திருக்கோயிலின் அர்ச்சகர் செல்லக்கண்ணு மெய்சிலிர்க்க விவரிக்கிறார்:

‘‘இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டியும் ஒன்று. மற்ற முருகன் கோயில்களில் அசுரர் உருவை மரச் சிற்பமாகச் செய்துவைத்திருப்பார்கள். தாரகன், சிங்கமுகன், சூரபதுமன் என ஒவ்வோர் அசுர வதத்துக்கும் குறிப்பிட்ட அசுரனின் தலையைப் பொருத்துவது போன்று அமைத்திருப்பார்கள்.

ஆனால், இங்கே சுமார் ஆறடி உயரத்துடன் திகழும் கூம்புக்கூடு அமைத்து அதை வண்ணக் காகிதங்களால் அலங்கரிப்பார்கள்.  இப்படி ஐந்து கூம்புகள் செய்யப்படும். இந்தக் கூண்டுகள் ஒவ்வொன்றிலும் விரதம் இருக்கும் ஒரு பக்தர் ஒருவர் நுழைந்து கொள்வார். அவர் அதைத் தூக்கிக்கொண்டு நடந்தும் சுற்றியும் வரும் காட்சி, சூரபொம்மைகள் உயிர்ப்பெற்று நடந்து வருவதுபோல் தத்ரூபமாக இருக்கும்.

இந்தக் கோயில், எட்டயபுரம் சமஸ்தானத்தின் கீழுள்ள கோயில்.  அரசர்கள் மற்ற அரசர்களுக்கு மரியாதை அளிப்பது மரபல்லவா? அந்த வகையில், அசுரர்களானாலும்கூட அரச வம்சத்தவர் என்பதால் சூரனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தனி மரியாதை அளிக்கும் விதமாக தனித்தனி கூம்புகள் - உருவ பொம்மைகள் உருவாக்கி சூரசம்ஹாரம் நடத்தும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.சூரபத்மன், சிங்கமுகாசூரன், தாரகாசூரன், பானுகோபன், தர்மகோபன் ஆகிய ஐந்து சகோதரர்களை கணக்கில்கொண்டு ஐந்து கூம்பு பொம்மைகள் தயாரிக்கப்படும்.

கழுகாசலம்!

சஷ்டி தொடங்கி ஆறு நாள்களும் தினமும் காலை 8 முதல் 9 மணி வரை; மாலை 6 முதல் 7 மணி வரை தூது செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். கோயில் மண்டபத்தில் ‘பட்டுப் பரிவட்டம்’ கட்டிய, இரண்டு ஓதுவா மூர்த்திகள் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். முதலில் முருகப்பெருமான் சார்பில் வீரபாகுவாக விரதமிருக்கும் ஓதுவார் எதிர்திசையை நோக்கி நடந்துசெல்வார். அடுத்து சூரபத்மனின் சார்பில் ஓதுவார் ஒருவர் எதிர்திசை நோக்கி நடந்து வருவார். இப்படியே இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முறை நடந்து சென்று, ஓரிடத்தில் எதிரெதிராக நிலைகொள்வார்கள்.

கழுகாசலம்!


பின்னர், வீரபாகுவாகத் திகழும் ஓதுவார் பேசத் தொடங்குவார். ‘வாரும் பிள்ளாய்... சூரபத்மா. நீ எத்தனையோ காலம் தபசு இருந்து சிவனிடம் கடுமையான வரங்களைப் பெற்றுள்ளாய். உன்னை யாராலும் அழிக்க முடியாது. சிவனின் அம்சம் வந்தால்தான் அழிக்க முடியும். உன்னை அழிக்க கந்தன் உருவெடுத்துள்ளான். நீ அவனை சிறு பாலகன் என நினைக்காதே. உன்னை குலத்தோடு வேரறுத்துவிடுவான். வந்திருப்பவன் கந்தன். சிறைபிடித்துள்ள தேவர்களை நீ விடுவித்தால், உன் குலத்தோடு நீடு வாழ்வாய். தவறினால்... உமையவள் சக்தி, வேலாக உருவெடுத்து வந்துள்ளாள். அவள் கந்தனிடம் கொடுத்தனுப்பும் அந்த வேலாயுதத்துக்குப் பலியாவாய். உன் வம்சம் மண்ணோடு மண்ணாகிவிடும்’ என்று அவர் முடித்ததும்,  அசுரர் சார்பிலான  தூதுவர் தனது வசனத்தைத் தொடங்குவார்.

 ‘வாரும் பிள்ளாய்... வீரபாகுவே. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் ஆட்சி செய்பவன் நான். எவராலும் அழிக்கமுடியாத நீங்காத வல்லமை படைத்தவன் நான்.  பால் குடி மறவாத ஒரு பச்சிளம் பாலகனா என்னை வதம் செய்து என் குலத்தை அழிக்கப் போகிறான்?! என் தம்பிமார்களுடன் அசுர குலத்தில் கோலோச்சி நிற்கும் எங்களை யாரும் வீழ்த்த முடியாது’ எனச் சொல்வார். 

இப்படி ஆறு நாள்களும் தூது செல்லும் வைபவம் நடைபெறும். இது வேறெந்த தலத்திலும் காண்பதற்கரிய ஒன்று. அதேபோல், அனைத்து முருகன் கோயில்களிலும் சஷ்டி திதியான ஆறாம் நாளன்றுதான் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், இங்கே ஐந்தாம் நாளன்று சரியாக மதியம் 12 மணிக்கு தாரகாசூர சம்ஹாரம் நடக்கும்.

கழுகாசலம்!

சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் பக்தர் ஒருவர் மரத்தால் செய்யப்பட்ட யானை முகத்தைத் தன் முகத்தோடு பிடித்தபடி, முருகப்பெருமானை மும்முறை வலம்வருவார். பின்னர், முருகப்பெருமானின் வேலாயுதத்தால் தாரகாசூரனை வதம் செய்ததும் யானை முகமூடி வேலில் கட்டப்பட்டுத் தூக்கி அங்கிருந்து அகற்றப்படும். அந்தப் பக்தர் அப்படியே கீழே சாய்ந்துவிடுவார். சுற்றியுள்ளவர்கள் அவரை அப்படியே படுக்க வைத்துவிடுவார்கள். தீபாராதனை ஆனதும், அவரை தூக்கிச்சென்று தெப்பக்குளத்தில் நீராட வைத்து மீண்டும் முருகப்பெருமானைத் தரிசிக்கவைப்பார்கள்.இதன்மூலம் தாரகாசூரன் விமோசனம் பெறுவதாக ஐதீகம்.

`முதல் நாள் வெற்றி முழுமையான வெற்றி' என்ற சொல் வழக்கு உண்டு. இதையொட்டி இங்கே சஷ்டி திருநாளுக்கு முதல் நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனின் வதம் நடக் கிறது என்பர். கந்த சஷ்டியின் ஆறாம் நாளன்று மாலை 4 மணிக்கு வழக்கம் போல மற்ற சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

மூங்கில் கூடுகளில் வடிவமைக்கப்பட்டுள்ள அசுர பொம்மைகளைத் தூக்கி ஆடியபடி ஒவ்வொரு சூரனாக முருகனை மூன்று முறை சுற்றி வர... ஒவ்வொரு அசுரராக வதம் செய்யப்படுவார்கள். மறுநாள் தெய்வானை அம்பிகையின் தபசுக் காட்சியும், தொடர்ந்து  திருக்கல்யாணம், பட்டினப்பிரவேசம் ஆகிய வைபவங்களும் நடைபெறும். இவற்றில் கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசித்து வழிபட சகல சுபிட்சங்களும் உண்டாகும்!’’

சூரசம்ஹார வைபவத்தைத் தரிசிக்க செந்தூருக்குச் செல்லும் அன்பர்கள், அப்படியே கழுகுமலைக்கும் சென்று ஸ்ரீகழுகாசலமூர்த்தி யைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஏற்படும் தடைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்கும்; என்றென்றும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு