Published:Updated:

மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!
மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

இ.லோகேஸ்வரி

பிரீமியம் ஸ்டோரி

படத்தில் நீங்கள் தரிசிப்பது, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்துள்ள வயலோகம் எனும் கிராமத்தில் திகழும் அருள்மிகு அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் திருக்கோயில். நண்பனைக் காணச் சென்ற இடத்தில், அடர்ந்து வளர்ந்த முட்புதர்களுக்குள் மறைந்துகிடந்த இந்தத் திருக்கோயிலைக் கண்டு மீட்டெடுத்திருக்கிறது ஓர் இளைஞர் பட்டாளம். அந்த அற்புத அனுபவத்தை அவர்களே சொல்லக் கேட்போம்... 

மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

`கண்டோம்... மீட்டெடுத்தோம்!'

 பார்த்திபன், திருச்சி


‘‘நா
ன் தீவிர சிவபக்தன். பழைமையைப் பாதுகாப்பதும் பிடிக்கும். எப்போது எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே சிவாலயம் இருந்தால் தவறாமல் சென்று தரிசித்துவிடுவேன்.   

மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

ஒருமுறை வயலோகம் கிராமத்தில் இருக்கும் என் நண்பனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வழக்கமான பேச்சுக்களினூடே அந்த ஊரிலோ, அருகிலோ சிவாலயம் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்தேன். அவனுக்கு விவரம் சொல்லத் தெரியவில்லை. பின்னர் ஊர்ப் பெரியவர்களிடம் விசாரித்தபோது, பெரியவர் ஒருவர் ஊருக்குள் ஓரிடத்தைக் குறிப்பிட்டு, அங்கே சிவாலயம் இருப்பதாகச் சொன்னார். நண்பனோடு அங்கு சென்றால்... அதிர்ச்சிக் காத்திருந்தது.  ஆமாம்! கோயில் இருந்த சுவடே தெரியவில்லை. யதேச்சையாக அங்கே அடர்ந்து வளர்ந்திருந்த முட்புதர்கள் சிலவற்றை விலக்கியபோது தென்பட்டது இந்த ஆலயம். முன்மண்டபம் இடிந்து சிதைந்த நிலையில் பழைமையான சிவாலயத்தைப் பார்த்ததும் நண்பனுக்கு ஆச்சர்யம்; எனக்கோ வேதனை!  

மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

அடுத்த வாரம் இன்னும் சில நண்பர்களை அழைத்துச் சென்றோம். இந்த ஆலயத்தில் அருளும் எம்பெருமானுக்கு அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் என்று திருப்பெயர் என்பதை அறிந்தோம். தொடர்ந்து, இக்கோயிலை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கோயிலைப் படம் பிடித்து முகநூலில் பதிவிட்டோம். பதறிப்போன அன்பர்கள் பலரும் கோயில் குறித்துத் தகவலைக் கேட்டுக்கொண்டார்கள். அப்புறம் என்ன... பழைமையான கோயில்களில் உழவாரப்பணி செய்துவரும் சென்னை பாண்டியன் எங்களுக்கு வழிகாட்ட, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நண்பர்கள் இணைந்து உழவாரப்பணி செய்து, இதோ இப்போதிருக்கும் நிலையில் மீட்டுவிட்டோம் ஆலயத்தை!''  

மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

‘இளைஞர்களை ஒன்றிணைத்தோம்!’

 முருகன், திருச்சி

``செப்
டம்பர் 29 அன்று வயலோகம் கிராமத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள் என 60 பேர் ஒன்றிணைந்தோம். இதில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள்தான். நாங்கள் கோயிலைச் சுத்தம் செய்வதைப் பார்த்த ஊர்மக்களும் எங்களுடன் உழவாரப்பணியில் கலந்துகொண்டனர். 

முதலில், சிதைந்தபோன கோயிலைச் சுற்றி மண்டிக்கிடந்த புதர்களைச் சுத்தம் செய்தோம். தொடர்ந்து மூன்று நாள்கள் மண் மேடு, செடி கொடிகளை அகற்றிச் சுத்தம் செய்தோம். அதன்பிறகே, கோயிலில் பல கல்வெட்டுகள் இருப்பதைக் காணமுடிந்தது.எங்களோடு வந்திருந்தவர்களில் சிலர் கல்வெட்டுகளைப் படிக்க ஆரம்பித்தனர். அதன்மூலம் இக்கோயில் சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையானது என்பதையும், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மன்னர்கள் காலத்தில், திருப்பணிகள் செய்யப்பட்ட தகவலையும் தெரிந்துகொண்டோம். கோயிலுக்கான நிலங்கள் குறித்த கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. மூன்று நாள்கள், சுமார் 90 தன்னார்வலர்கள்  ஒரே நோக்கத்தோடு ஒன்றாக உழைத்ததன் பலன், அற்புதமான ஓர் ஆலயம் மீண்டெழுந்தது!''  

மறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்!

‘இதுவே எங்கள் ஆசை!’

சுரேஷ், திருநாவலூர்

‘‘கி
ட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் கோயிலின் முன்மண்டபத்தில் இடி விழுந்திருக்கிறது. அப்போது கோயிலுக்குள் இருந்த இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு அம்மன் சிலைகள், ஆறு முகங்கள்கொண்ட முருகன் சிலை, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தி ஆகிய தெய்வ மூர்த்தங்களை வெளியே எடுத்து வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. நாளடைவில் மக்கள் யாருமே இக்கோயிலுக்குச் செல்லாததால், இன்று சேதமடையும் நிலையில் இருக்கிறது இக்கோயில்.

தற்போது கொட்டகையில் வைக்கப்பட்டுள்ள தெய்வ மூர்த்தங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு விட்டு, இனி அனுதினமும் விளக்கேற்றும் வகையில் ஊர்மக்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். அறநிலையத்துறை இக்கோயிலை எடுத்துச் சீரமைக்க வேண்டும். விரைவில் இந்தக் கோயில் பழைய பொலிவைப் பெற வேண்டும். இதுவே எங்கள் ஆசையும் விருப்பமும்!’’  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு