Published:Updated:

தெய்வத்துள் தெய்வம்!

விகடன் விமர்சனக்குழு

வீயெஸ்வி - படங்கள்: தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி

டமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மகா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றுக்கு நாடக வடிவம் தந்திருக்கிறார் இளங்கோ குமரன். பயபக்தியோடு இதை வழங்கியது எஸ்.எஸ்.இன்டர்நேஷனல். தோட்டா தரணியின் அரங்க வடிவமைப்பு, மாண்டலின் யு.ராஜேஷ் இசை, கணேச சர்மாவின் தொகுப்பு என்று நீள்கிறது பங்களித்தவர்கள் பட்டியல். மொத்தம் 108 பேரின் உழைப்பு.

ஒரு மகானின் வாழ்க்கைக் கதைக்கு வடிவம்கொடுக்க நிறையவே ஹோம் ஒர்க் செய்திருக்கிறார் இளங்கோ குமரன். சென்றமுறை ‘மணியோசை’ (பாலக்காடு மணி ஐயரின் பயோ) மேடையேறியபோது, அதில் ஒரு காட்சியில் காஞ்சிப் பெரியவர் வேடத்தில் தோன்றியவர் வாசுதேவன். முசிறியைச் சேர்ந்தவர். வேடப்பொருத்தம் அப்போது பிரமாதமாகப் பாராட்டப்பட்டதால், இப்போதைய ரோலுக்கு அப்போதே அவரை ‘புக்’ செய்து விட்டார் டைரக்டர். ‘ஒரு வருடத்துக்கு வேறு யாருக்காகவும் நீங்கள் இந்த வேடம் ஏற்க வேண்டாம்’ என்பது எழுதப்படாத ஒப்பந்தம்.

தெய்வத்துள் தெய்வம்!

தெய்வத்தின் குரல் ஏழு தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தயாரானதும், மகா பெரியவர் பற்றி புத்தகங்கள் எழுதியும், உரைகள் நிகழ்த்தியும் வரும் கணேச சர்மாவிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கியிருக் கிறார்கள். இசை ராஜேஷ் என்று முடிவானதும் காஞ்சிபுரம் சென்று காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திரர் இருவரிடமும் ஸ்கிரிப்ட்டைக் கொடுத்து அவர்களது அருளாசியைப் பெற்றிருக்கிறார்கள். மூன்று மாத ஒத்திகைக்குப் பிறகு, அண்மையில் நடந்தது நாடகம்.

திண்டிவனம் அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஃபோர்த் ஃபார்மில் படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதன், ஊரில் முறுக்குப் பாட்டியைச் சந்திக்கும் இடம், ஆரம்பப் படிப்பில் படுசுட்டியாகத் திகழ்ந்த சுவாமிநாதன், அப்போது 66-வது பீடாதிபதியாக இருந்தவரைச் சந்திப்பது, அவரும் அவரைத் தொடர்ந்து பீடம் ஏறியவரும் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு முக்தி அடைய, 68-வது பீடாதிபதியாக சுவாமிநாதன்...

13 வயதில் கலவை - திண்டிவனம் - கும்ப கோணம் என்று யாத்திரை செல்கிறார். 21 வயது ஆகிறது. பெரியவர் வேடத்தில் வேறொருவர் காவி உடை தண்டமுடன். மகாமகம் வருகிறது. நாடு சுதந்திரம் அடைகிறது. தேவையே யில்லாமல் ‘ஆடுவோமே...’ பாடலுக்கு மேடையில் குரூப் டான்ஸ் ஆடுகிறார்கள். இந்தக் கட்டம் வரையில் படக்கதைக்கு அனிமேஷன் செய்த மாதிரி நாடகம் நேரம் கடக்கிறது. ஜீவன் கம்மி.

தெய்வத்துள் தெய்வம்!

53 வயது மகா பெரியவராக கணேச சர்மா வேடமேற்கிறார். மேடையும் புத்துயிர் பெறுகிறது.

கையில் காசில்லாமல், மகள் திருமணத்தை நிச்சயித்து விட்டு, செய்வதறியாமல் சுவாமிகளிடம் வந்து அழுகிறார் பெண்மணி ஒருவர். அதே சமயம், மைசூரிலிருந்து வரும் செல்வந்தர், ஏராளமான பணம் மடத்துக்குக் கொடுத்துவிட முன்வருகிறார்.

கல்யாணச் செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி பணத்தைப் பெண்மணியிடம் கொடுக்க, ‘‘இத்தனை பணம் எனக்கு வேண்டாமே...” என்கிறார் அந்தப் பெண்மணி. தேவைக்கு மீறிய பணம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் இருவரும்தான் ‘பெரியவா’ என்று அழைக்கப்பட வேண்டியவர்கள் என்கிறார் நிஜப் பெரியவா.

இப்படி சமூகத்துக்கு அவசியமான பல பயனுள்ள அறிவுரைகளைப் பக்தர்களுக்கு வழங்கியவராகவே காஞ்சி பெரியவரைப் படம்பிடித்துக் காட்டுகிறது நாடகம். நல்லவேளையாக, அவரை அற்புதங்கள் நிகழ்த்தும் சராசரி சாமியாராகச் சித்திரிக்கவில்லை.

காஞ்சிப் பெரியவரின் 70 வயது முதல் 100 வயது வரையிலான பகுதிக்கு வாசுதேவன் மேக்கப் போட்டு வந்துவிட, விறுவிறுப்பு எகிறுகிறது. தங்களுக்குப் பரிச்சயமான மாமுனிவரைப் பார்த்தது போன்ற பூரிப்பில் ரசிகர்கள்.

தெய்வத்துள் தெய்வம்!

90 வயதுக்குப் பிறகும் ஆறு வருடங்கள் நடைப் பயணமாகச் சுமார் நாலாயிரம் மைல்கள் யாத்திரை போனது... தேடிவரும் பக்தர்களுக்கு விளக்கங்கள் பல கொடுப்பது... ஏழாம் வகுப்பு சிறுவன் ஒருவன் ஓடிவந்து இவரிடம் ஆட்டோ கிராஃப் கேட்பது... கணவன் மனைவி அன்பினை தான் புரிந்துகொண்டது... ‘நான் பெரியவா இல்லை... சின்னவா’ என்று கூறி, ‘பரமாச்சார்யா’ என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது... வாசுதேவனின் நடை, உடை, உடல்மொழி, பாவனை அனைத்தும் அச்சு அசலாக மகா பெரியவரின் கார்பன் பிரதி.

பெரியவரைச் சந்திக்கவரும் பெரிய மனிதர்களில் ஒருவராக சீனியர் பாடகி அருணா சாய்ராமை (Guest appearance) மேடைக்கு வரவழைத்து, ஆடியன்ஸைப் பார்த்து உட்கார வைத்து, கொலுவுக்குப் பாடுவது போல் ஒரு பாடல் பாட வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். எதிர்பார்த்த Impact கிடைக்கவில்லை. அப்படிப் பார்த்தால், உமையாள்புரம் சிவராமனை மிருதங்கம் வாசிக்க வைத்திருக்கலாம்... விக்கு விநாயக்ராமை கடம் வாசிக்கச் சொல்லியிருக்க லாம். இவர்கள் எல்லோரும்கூட மகா பெரியவரின் தீவிர பக்தர்கள்தானே. அதேபோல், ‘அந்தத் துறவியுடன் ஒரு நாள்’ விவரிப்பதாகச் சொல்லி, கோவணத்துடன் அவரை மேடையிலேயே ஸ்நானம் செய்வதாகக் காட்டுவது எதற்கு?

முத்தாய்ப்பாக, 93-ல் காஞ்சியில் நடந்த கனகாபிஷேகம் நிகழ்வை ஆக்‌ஷன் ரீ-பிளே செய்வது மாதிரி, மேடையில் சிம்மாசனம் போட்டு, பெரியவரை அமரவைத்து, பாடசாலை சிறுவர்கள் மற்றும் மடத்துச் சிப்பந்திகள் வேத கோஷம் முழங்க, ஜெயேந்திரர்; விஜயேந்திரர் வேடமேற்கும் இருவரும் அன்னாருக்குப் பொற் காசுகளால் அபிஷேகம் செய்வது கலர்ஃபுல்.

மொத்தமாக ஒரு இருபது நிமிடங்கள் குறைத்தால், இந்த வரலாற்று நாடகம், மேடையில் சரித்திரம் படைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு