மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 12

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  12
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 12

மகுடேசுவரன்

விஜயநகரத்துக்கு வித்யாநகரம் என்று இன்னொரு பெயரும் உண்டு. முன்னது வெற்றித் திருநகர் என்ற பொருளைக் குறிப்பது. பின்னது கலை கல்விகளின் நகரம் என்ற பொருளில் அமைந்தது. பொருள் அதுதான் எனினும் வித்யாரண்யர் என்னும் மூத்த சமயப் பெருமகனார் ஒருவரின் நினைவைப்போற்றும் வகையில் அமைந்ததுதான் அப்பெயர்.

போர்த்துக்கீசியப் பயணிகளின் குறிப்பில் இந்நகரத்தின் பெயர் பிஸ் நகர் (Bis Nagar) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துக்கீசியர்களிடம் `வி' என்ற ஒலிப்பு `பி' என்று மாறும். ஐரோப்பியர்களின் வாயில் நுழையாத, ஒலிப்பில் அமையாத நம்மூர்ப் பெயர்கள் பலவற்றையும் அவர்கள் போக்குப்படி வழங்கியிருக்கிறார்கள். சதுரங்கப்பட்டினத்தைச் சத்ராஸ் (Sadras) என்று வழங்கிவிட்டார்கள். இதன் அடிப்படையில் மெட்ராஸ் என்பது முத்துராசுப்பட்டினம் என்பதிலிருந்துதான் தோன்றியது என்ற குறிப்பும் உண்டு.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  12

புதுச்சேரி என்பதுதான் உண்மையான பெயர். ஆனால், அது பாண்டிச்சேரி ஆகியிருக்கிறது. எதனால் அப்படி ஆனது? பிரெஞ்சுக்காரர்களின் வாயில் புது என்பது நுழையாது. புது என்பதைப் பொந்து என்றே கூறியிருக்கிறார்கள். அதன்படியே புதுச்சேரியை பொந்திச்சேரி (Pondicherry) என்றே கூறவும் எழுதவும் தலைப்பட்டார்கள். பொந்திச்சேரி என்ற உச்சரிப்பை அறியாத நம்மவர்கள் அதைப் படிக்கையில் பாண்டிச்சேரி என்று ஆக்கிவிட்டார்கள்.

இதுதான் புதுச்சேரி, பாண்டிச்சேரி ஆன கதை. பாண்டியர்களுக் கும் பாண்டிச்சேரிக்கும் எத்தொடர்பும் இல்லை. இதை ஏன் கூறுகிறேன் என்றால் பிஸ் நகர் என்பது விஜயநகரம்தான் என்ற அறிதல் இல்லாவிட்டால் விஜயநகரத்தைப் பற்றிய பயணிகளின் குறிப்புகளில் திண்டாட வேண்டும்.

எட்டாம் நூற்றாண்டில் துங்கை நதிக்கரையில் சிருங்கேரி மடத்தை நிறுவியவர் ஆதிசங்கரர். இன்று அம்மடம் கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஆதிசங்கரரின் காலத்துக்குப் பிறகு அம்மடத்தின் மடாதிபதிகளாகப் பல்வேறு மகான்கள் பொறுப்பேற்றிருந்தனர். விஜயநகரப் பேரரசைத் துங்கபத்திரை நதிக்கரையில் நிறுவுவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் குரு வித்யாரண்யர் என்பதை நாமறிவோம். சிருங்கேரி மடத்தின் தலைமைப் பீடாதிபதியாக இருந்த குரு வித்யா தீர்த்தரால் சமயப்பணிக்கு அமர்த்தப்பட்டவர் வித்யாரண்யர்.

வித்யாதீர்த்தரின் காலத்துக்குப் பிறகு வித்யாரண்யர் சிருங்கேரி மடத்தின் தலைமையை ஏற்றார். வித்யாதீர்த்தர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதுதான் வித்யாரண்யர் இன்றுள்ள விஜயநகரப் பகுதியில் சில காலம் தங்கியிருந்தார். அப்போது அவருடைய வழிகாட்டுதலின்படி ஹரிஹரரும் புக்கரும் அவ்விடத்தில் ஓர் அரசை நிறுவினர்.

ஹரிஹர புக்கரின் அரசை அப்பகுதியினர் ஏற்றுக்கொண்டதற்கு முதற்காரணம் குரு வித்யாரண்யரின் ஆதரவே. வித்யாரண்யர் அவ்வரசை நிறுவியதோடு மட்டுமின்றி அரசரின் உடனிருந்து அறிவூட்டி ஞானம் நல்கிப் பேணிக்காத்தார். கி.பி 1336-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் நாள் விஜயநகரத்தில் குரு வித்யாரண்யர் முன்னிலையில் ‘முதலாம் விருபாட்ச மன்னர்’ என்ற பட்டத்தோடு முடிசூட்டி விழாவைக் கொண்டாடினார் ஹரிஹரர்.

மகுடம் சூடிய நாளில் ‘ஸ்ரீவிருபாட்ச’ என்ற சமய ஏட்டை முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து, சமயத்தையும் சமய மக்களையும் பேணிக்காப்பதாக விருபாக்சரக் கடவுள் முன்னம் வாய்மை கூறப்பட்டது.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  12

முடிசூட்டிய வித்யாரண்யருக்குக் ‘கர்நாடக சிம்மாசன பிரதிட்டாபனாச்சாரியார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவ்வாறு முடிசூட்டிக்கொண்ட நாளில் தன் மகுடத்தையும் இன்ன பிற அரச சின்னங்களையும் வித்யாரண்யரின் காலடியில் வைத்து வணங்கி ஏற்றார் ஹரிஹரர். அந்த நாளிலிருந்து விஜயநகர அரசர்கள் ஒவ்வொருவரும் வித்யாரண்யரின் வழித்தோன்றல்களான சிருங்கேரி மடத்தோடு தொடர்புடைய பீடாதிபதிகளுக்குத் தமது மகுடங்களைக் காலடியில் வைத்து மரியாதை செய்து வணங்கி வருகின்றனர்.

சிருங்கேரி மடத் தலைவர்களும் அவர்களுடைய அனைத்து மரியாதைகளையும் வணக்கங்களையும் இன்றளவிலும் ஏற்றுவருகின்றனர். எட்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட மடம், பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பேரரசின் மரியாதை முதற்று தற்கால ஆட்சித்தலைவர்களின் வணக்கங் கள் வரை ஏற்றருளல் விளங்கிக்கொள்ளக்கூடியதே.

இம்மரபுக்கு எண்ணூற்றாண்டு தொடர்ச்சி உள்ளது. இவ்வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய தலைவர்கள் மடாதிபதிகளின் முன்னமர்ந்து முகமன்கூறி நிற்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஹரிஹரரும் புக்கரும் ஆட்சியை நிறுவியதும் அவர்கள் ஏற்றுக்கொண்ட செயல்முறைகளில் ஒன்று கோவில்களைச் சிறப்பிப்பதே. அதன்படி அவர்களுடைய ஆட்சிப் பரப்பிலிருந்த கோவில் களைப் புதுப்பிப்பது, புதுப்புதுக் கோவில்களைக் கட்டுவது, இருக்கின்ற கோவில்களை விரிவு படுத்துவது என்று திட்டம் வகுத்துக்கொண்டனர்.

விஜயநகரத்தில் அரசருக்கென்று தனிக் குடியிருப்போ வீடோ இல்லை. அரசிக்குத்தான் அரண்மனை உண்டு. அரசர், அரசியின் வசிப்பிடத்தில் தங்கிக்கொள்ள வேண்டியது. இதுதான் நடைமுறை. அரசருக்கு இடமில்லாத் தலைநகரில் ஆண்டவருக்கு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன.

ஆட்சி நிறுவப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசு ஒரு மண்டல அளவிலான சிற்றரசாகவே இருந்தது. பற்பல போர்களையும் களங்களையும் கண்டபிறகே அதன் பரப்பு தென்னிந்தியத் தீபகற்பம் முழுமைக்கும் பரவியது. அதற்காக விஜயநகர அரசர்கள் தம் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டனர்.

அரசபோகம் இருந்தது என்றாலும் விஜயநகர அரசர்களில் யாரும் கடமை மறந்து இன்ப வாழ்வில் திளைத்துக் கிடந்தனர் என்று கூறுவதற்கில்லை.

ஒவ்வொருவரும் பேரரசை விரிவுபடுத்துவதிலும், ஆலயத் திருப்பணிகளைத் திட்டமிட்டுத் தொடங்கி முடுக்கிவிடுவதிலும், ஆளுநர்களுக்குக் கட்டளையிட்டு வழிநடத்துவதிலும், போர்களிலும் சுற்றுப்பயணங்களிலும் இடையறாது ஈடுபட்டனர்.

ஒரு போரில் ஈடுபட்டால் அவ்வரசர் மீண்டும் தலைநகருக்குத் திரும்புவதற்கு இரண்டாண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்று தென்னகமெங்கும் வட இந்தியாவில் இல்லாத அளவுக்குச் சிறிதும் பெரிதுமாய் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் விஜயநகரப் பேரரசர்களே.

- தரிசிப்போம்...

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  12

வம்சம் விருத்தியாக...

நாகலிங்க தரிசனம்!


நாகத்துடன் கூடிய லிங்கத்தை நாகலிங்கம் என்பார்கள். அதாவது, மூன்று அல்லது ஐந்து சுருளாக உடலைச் சுருட்டிக் கொண்டுள்ள பாம்பையே ஆசனமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கும் நாகலிங்க மூர்த்தத்தைத் தரிசித்து வழிபட்டால் வம்சம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

அனைத்து ஆலயங்களிலும் லிங்கத்தோடு சேர்த்து நாகத்தின் உருவத்தை அமைப்பது இல்லை. உலோகத்தால் செய்து நாக பாசமாக அணிவிப்பார்கள். சில திருத்தலங்களில் பிராகாரங்களில் நாகலிங்கத்துக்கான தனிச் சந்நிதி அமைந்திருக்கும்.

திருவோத்தூர் எனப்படும் திருவத்திபுரம் அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தனிச் சந்நிதியில் நாகலிங்கம் அமைந்துள்ளது.