Published:Updated:

சனங்களின் சாமிகள் - 13

சனங்களின் சாமிகள் - 13
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 13

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 13

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 13
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 13

தடிவீரசாமி

`தடிவீரன்’ என அழைக்கப்படும் தடிவீரசாமியின் கதை கொஞ்சம் தனித்துவமானது. வீரம் செறிந்த சாமிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க, தன் மந்திரசக்தியால் பல அற்புதங்களையும் மாயாஜாலங்களையும் நிகழ்த்தியவன் தடிவீரன். 

அது, திருச்செந்தூரும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் நாயக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். நாயக்க அரசின் பிரதிநிதிகள் அந்தப் பகுதிகளை நிர்வாகம் செய்து வந்தார்கள். திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, முளிக்குளம், வெள்ளைக்கோவில், தெப்பக்குளம் ஆகிய ஏழு ஊர்களிலும் அந்தப் பிரதிநிதிகளுக்குச் சொந்தமான தோட்டம், நிலங்கள் இருந்தன. அவற்றைச் செம்பாரன் என்பவர்தான் பராமரித்து வந்தார். அவருக்கு உதவியாக இந்திரன், சூரியன் என இருவர் இருந்தார்கள். 

சனங்களின் சாமிகள் - 13

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழு ஊர்களில் உள்ள தோட்டங்களிலும் குடியிருப்புகள் இருந்தன. அங்கிருந்தவர்களிடம் வரி வசூலித்து, நாயக்க அரசின் பிரதிநிதிகளுக்குக் கொடுக்கும் பொறுப்பு செம்பாரனுக்கு. அந்த ஏழு ஊர் தோட்டக் கிராமங்களும் வழக்கமான கிராமத்தின் அத்தனை அடுக்குகளையும் கொண்டிருந்தன. அந்தக் கிராமங்களில் ஒன்றில் துணி வெளுக்கும் பணியைச் செய்யும் நீலன் என்பவன் இருந்தான். அவன் மனைவி மாடத்தி அவனுக்கு உதவியாக இருந்தாள். ஊரார் வீட்டுத் துணிகளின் அழுக்குகளை நீக்கி, ஆடைகளை வெளுத்துத்தரும் அந்தத் தம்பதியரின் மனமும் வெள்ளைதான். அந்த வெள்ளந்தித் தம்பதியருக்கு வேலையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. விடியும் முன்னே ஆரம்பிக்கும் வேலை, சூரியன் மறையத் தொடங்கும்போதுதான் முடிவுக்கு வரும். குறையே இல்லாத மனிதர் யாரும் இருக்க முடியாது. நீலனுக்கும் மாடத்திக்கும்கூட மனதில் ஒரு குறை இருந்தது. அது, பிள்ளை இல்லை என்கிற குறை.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட குழந்தை பாக்கியம் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மாடத்திக்கு ஊரில் எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் ஒரு சோகம் தொற்றிக்கொள்ளும். இதுபோல ஒரு குழந்தை தனக்குப் பிறக்காதா என்ற ஏக்கம் நெஞ்சைப் பிசையும். பிள்ளை பெறாத தாய்மார்கள் அந்தக் காலத்தில் எதிர்கொண்ட அத்தனைச் சமூகப் புறக்கணிப்பு களும் மாடத்திக்கும் நடந்தன. அதைக்கூட அவள் ஏற்றுக்கொள்ளவும் பொறுத்துக்கொள்ளவும் பழகிவிட்டாள். ஆனால், பிள்ளையில்லாக் குறை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைத்துக் கொண்டிருந்தது. அவளும் நீலனும் சேர்ந்து எத்தனையோ கோயிலுக்குப் போய் வந்து விட்டார்கள்; செய்யாத தான தர்மம் இல்லை. ஆனாலும், பிள்ளைப் பேற்றுக்கு வழி பிறக்கவில்லை.

அது ஒரு முன்னிரவுப் பொழுது. ஊராரின் துணிகளை அவரவர் வீடுகளில் கொடுத்துவிட்டு நீலன் வீடு திரும்பினான். வாசலில் அமர்ந்திருந்தாள் மாடத்தி. கணவன் வந்த அரவம்கூட அவளைச் சலனப்படுத்தவில்லை. அவள் கண்கள் எங்கோ நிலைகுத்தியிருந்தன. நீலன் தன் கையில் இருந்த மூட்டையை ஓரமாக வைத்துவிட்டு, அவள் தோளை மெள்ளத் தொட்டான். கணவனைப் பார்த்ததும் அவள் கண்கள் பொங்கிவிட்டன. உதடுகள் துடிக்க, கண்ணீர்விடும் அவளை வீட்டுக்குள் அழைத்துப் போய் தேற்றினான் நீலன்.

சனங்களின் சாமிகள் - 13

``நம்ம கையில என்ன இருக்கு மாடத்தி... நம்மால ஆன எல்லா முயற்சிகளையும் செஞ்சுட் டோம். இனி, சாமிதான் அருள் புரியணும். அந்த ஈசுவரன் மேல பாரத்தைப் போடு. உன் வேலையைப் பாரு. நல்லதே நடக்கும்...’’ 

மாடத்தி, நிமிர்ந்து தன் கணவனின் கண்களைப் பார்த்தாள். ``ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே...’’

``நான் ஏன் கோவிக்கப்போறேன்... நீ அழாம இருந்தா அதுவே எனக்குப் போதும்... சொல்லு... என்ன விஷயம்?’’

``நான் போகாத கோயிலு ஒண்ணுதான் பாக்கி இருக்கு. அது, சங்கரன்கோவில். அங்கே போய் சங்கரலிங்கநயினாரை வணங்கி, தவம் இருக்கணும்னு உள்ளுக்குள்ள ஒரு யோசனை ஓடிக்கிட்டே இருக்கு. அப்பிடி இருந்தா புள்ளை பொறக்கும்னு மனசு சொல்லுது. நாப்பத்தியொரு நாளுதான்... அங்கே போய் இருந்துட்டு வந்துடுறேனே.’’

நீலன், தன் மனைவியின் ஏக்கம் நிறைந்த முகத்தையும் ஒளிரும் கண்களையும் ஒரு கணம் பார்த்தான். சங்கரன்கோவிலுக்குப் போய் நாற்பத்தியொரு நாள்கள் அங்கேயே கிடையாகக்கிடப்பது அத்தனை எளிதான காரியமல்ல. பல ஊர்களைக் கடந்து பயணம் செய்ய வேண்டும். குழந்தை வேண்டும் என்ற ஆசை எந்த அளவுக்கு இருந்தால், இந்தக் கடும் விரதத்தை அனுசரிக்க அவள் துணிவாள் என வியந்தான். பிறகு அவன் மறுபேச்சுப் பேசவில்லை. ``உன் விருப்பப்படியே செய் மாடத்தி’’ என்று சொல்லிவிட்டான்.

மாடத்தி சங்கரன்கோவிலுக்குக் கிளம்ப ஆயத்தமானாள். அந்த நாள்களில் வெளியூர்ப் பிரயாணம் அத்தனை எளிதானதல்ல. பல முன் தயாரிப்புகளும், தகுந்த துணையும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் வேண்டும். மாடத்தி துணைக்குச் சில தோழிகளை அழைத்துக்கொண்டாள். ஒரு மாட்டுவண்டியில் பயணத்தின்போதும், சங்கரன்கோவிலில் தங்கியிருக்கும் நாள்களிலும் தேவையான உணவுக்கான தானியங்களையும், பாத்திரங்களையும், பொருள்களையும் சேகரித்து நிரப்பினாள். தானும் தன் தோழிகளும் பயணம் செய்ய இன்னொரு மாட்டுவண்டியைத் தயார்ப்படுத்தினாள். பொரிவிளங்காய் உருண்டைகள், மாவுப் பலகாரங்கள் போன்ற அதிக நாள் தாக்குப்பிடிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டாள். பாய், தலையணை உள்பட அனைத்தையும் மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டார்கள். சங்கரன்கோவிலுக்கு மாடத்தியின் பயணம் தொடங்கியது.

சனங்களின் சாமிகள் - 13

சங்கரன்கோவிலுக்கு வந்து சேர்ந்த மாடத்தி நாற்பத்தியொரு நாள்கள் கடும் விரதம் இருந்தாள். சங்கரலிங்க சுவாமியையே எண்ணித் தவம் இருந்தாள். இறுதியில் அவளது தவத்துக்கு மனமிரங்கினார் அந்த சங்கரலிங்கர். ஆனால், மாடத்திக்குக் குழந்தைப்பேறு வழங்குவதில் ஒரு சிக்கல் இருந்தது. இந்தப் பிறவியில் அவளுக்குக் குழந்தை பிறக்காது என்பது அவள் விதியில் எழுதிவைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மனம் பொறுக்காத சங்கரலிங்கனார் மாடத்திக்காகச் சிவனிடம் சென்று வேண்டினார். சிவன், சித்திரகுப்தனை அழைத்து ஆலோசித்தார். பிறகு சங்கரலிங்க சுவாமியிடம், ``இந்தப் பிறவியில் இவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இல்லாத ஒன்றை உருவாக்குவது தர்மமல்ல. ஆனால், இதற்கு ஒரு மாற்று உண்டு. நீயே இவள் வயிற்றில் குழந்தையாகப் பிறப்பாய்; பதினெட்டு ஆண்டுகள் மட்டும் மாடத்தியின் குடும்பத்தில் வாசம் செய்துவிட்டு நம்மிடம் வந்துவிடுவாய்’’ என்று அருளினார் ஈசன். சங்கரலிங்கம் அதை ஏற்றுக்கொண்டார்.

சங்கரன்கோவிலில் படுத்திருந்த மாடத்தியின் கனவில் தோன்றினார் சங்கரலிங்கனார். ``இன்றிலிருந்து பத்தாவது மாதத்தில் உனக்குக் குழந்தை பிறக்கும். ஊருக்குக் கிளம்பு’’ என்று வாக்குக் கொடுத்தார். மாடத்தியும் தன் பரிவாரங்களுடன் மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினாள். சரியாகப் பத்து மாதங்கள் கழித்து, ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் மாடத்தி. குழந்தைக்கு `மந்திரமூர்த்தி’ எனப் பெயரிட்டார்கள்.

பெயருக்குப் பொருத்தமாக வளர்ந்தது அந்தப் பிள்ளை. மந்திரமூர்த்தி சிறுவயதிலேயே மந்திரங்கள்மீது தீவிர ஆர்வம்கொண்டிருந்தான். செப்படி வித்தை தொடங்கி, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை வரை அனைத்து மந்திர வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான். பதினாறு வயதிலேயே பல கலைகளிலும் மந்திர வித்தைகளிலும் சாகசம் புரியும் அளவுக்குத் திறமை பெற்றவன் ஆனான். அவனது பெருமையும் திறமையும் அக்கம்பக்கத்து ஊர்களுக்கெல்லாம் பரவியது. புகழும் பெருமையும் சில நேரங்களில் தீயவர்களையும் அழைத்துவரும். அப்படி வந்துசேர்ந்தான் ஒருவன்! அவனால் மந்திரமூர்த்தி பூனையாக மாறவேண்டிய சூழலும் ஏற்பட்டது!

- தரிசனம் தொடரும்...

தொகுப்பு: பாலு சத்யா