Published:Updated:

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

தடைப்பட்டனவா பூஜையும் நைவேத்தியமும்?!

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

தடைப்பட்டனவா பூஜையும் நைவேத்தியமும்?!

Published:Updated:
நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

‘ஸ்ரீவில்லிப்புதூருக்குச் சென்று வருகி றேன்’ என்று கூறிச் சென்ற நாரதரிடமிருந்து பல நாள்களாகத் தகவல் இல்லை என்பதால், போனில் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும். ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்றே பதில் கிடைத்தது. ஒருவழியாகத் தொடர்பு கிடைத்தபோதும், சட்டென்று நமது அழைப்பைத் துண்டித்துவிட்டார் நாரதர்.  மறுகணமே அவரிடம் இருந்து குறுஞ் செய்தி வந்து விழுந்தது, ‘ஆன் தி வே’ என்று.தீபாவளி பலகாரங்களுடன் நாம் காத்திருக்க, அரை மணி நேரத்தில் வந்துசேர்ந்தார் நாரதர்.   

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

‘‘என்ன நாரதரே... ஸ்ரீவில்லிபுத்தூர் ரொம்பவும் பிடித்துப்போய் விட்டதோ... அங்கேயே தங்கிவிட்டீர் போலும்’’ என்று நாம் முடிப்பதற்குள், நாரதர் பதில் சொன்னார்.

‘‘நாரதர் என்றைக்கு ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார். திரிலோக சஞ்சாரி என்றே நமக்கொரு பெயர் உண்டே? உமக்குத் தெரியாதா என்ன...’’ என்றவர் நமது பதிலை எதிர்பார்க்காமல், பட்சணங்களைச் சுவைத்த படியே பேசத் தொடங்கினார்.
‘‘ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மட்டுமில்லை, வேறு சில தலங்களுக்கும் சென்று வந்தேன். அதைப் பற்றி பிறகு விவரிக்கிறேன். முதலில் ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலைப் பற்றிய தகவலைச் சொல்லிவிடுகிறேன்’’ என்ற நாரதர் விவரங்களைக் கொட்டினார்.

‘‘ஆழ்வார்களால் பாடல்பெற்ற வைணவ திவ்விய தேசங்களில் குறிப்பிடத்தகுந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கே ஸ்ரீவடபத்ரசாயி பெருமாளும் ஸ்ரீஆண்டாளும் தனித்தனிக் கோயில்களில் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீவடபத்ரசாயி கோயில் கோபுரமே நம் தமிழ் நாடு அரசு முத்திரையில் இடம்பெற்றிருக்கும் சிறப்புக்குரியது. இப்படியான சிறப்புகள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் நைவேத்திய சமர்ப்பணம் குறித்துதான் பக்தர்களிடையே பெரிதும் அதிருப்தி’’ என்ற வரை இடைமறித்துக் கேட்டோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

‘‘நைவேத்தியத்தில் என்ன அதிருப்தியாம்?’’

‘‘இக்கோயிலில் ரங்கமன்னாருக்கும் ஆண்டா ளுக்கும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பூஜை வேளையின்போதும் ஒவ்வொருவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுமாம்.  இதற்காகவே மன்னர்கள் பலரும் இக்கோயிலுக்கென நிலங்களை  நிவந்தங்களாகக் கொடுத்திருக்கின்றனர். அதிலிருந்துவரும் வருவாயைக்கொண்டு அனுதின பூஜைகளும், நைவேத்தியங்களும், விழாக்களும் சிறப்புற நடத்தப்பட்டனவாம். அதுமட்டுமின்றி தற்போது வரை பக்தர்களும் நித்ய ஆராதனை கட்டணங்களைக் கட்டி வருகிறார்கள். இருந்தபோதும் நித்ய நைவேத்திய முறைகளில் திருப்தியில்லை என்கிறார்கள் பக்தர்கள்.’’

‘‘திருப்தியில்லை என்றால் நைவேத்திய பதார்த்தங்களின் அளவை ஏதும் குறைத்து விட்டார்களா...’’ ஆதங்கத்துடன் நாம் கேள்வி கேட்கத் தொடங்க, முந்திக்கொண்டு தனது ஆதங்கத்தைக் கொட்டினார் நாரதர்.

‘‘ஆறுகால பூஜைகளில் ஒருகால பூஜையே தடைப்பட்டுவிட்டது என்கிறார்கள்’’ என்றவர் தொடர்ந்து, ‘‘விவரமாகவே சொல்கிறேன் கேளும்...’’ என்றவாறு தொடர்ந்து விளக்கினார்.

‘‘காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 8:30 மணிக்கு காலசந்தி, மதியம் 12 மணிக்கு உச்சிக்காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு அத்தாளம், இரவு 9 மணிக்கு அரவணை என்று ஆண்டாள் கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகள் உண்டு. இதில் அத்தாளம் பூஜை வெகு காலமாக நடைபெறுவது இல்லையாம். 

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

தினமும் ஆறுகால பூஜைக்கு, நித்ய ஆராதனை கட்டணமாக பக்தர்கள் ரூ.5000 வீதம் செலுத்து கின்றனர். இதில் ஆறு வேளை பூஜைக்கு 36 படி அரிசி (நாளொன்றுக்கு ஒன்பது கிலோ) பிரசாதம் ஆண்டாளுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால், அத்தாள பூஜை 1990 ஆண்டு  முதல் நிறுத்தப்பட்டுவிட்டதாம். எனில், இத்தனை ஆண்டுகளாக ஆறுகால பூஜைக் கும் சேர்த்துதானே பக்தர்கள் நித்ய ஆராதனைக் கட்டணம் கட்டி வந்தார்கள். ஐந்து வேளை பூஜை தான் நடைபெறுகிறது என்றால், அவர்களுக்கான பதில் என்ன? உச்சிக்கால பூஜையையொட்டி முன்பு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது சரிவர பிரசாதம் வழங்கப் படுவதில்லை என்கிறார்கள். இதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை.

நித்திய ஆராதனை கட்டணத்துக்கான பணம் வங்கியில் உள்ளது. நைவேத்தியங்கள் தடையின்றி நடக்க தேவையான வருவாய் ஆதாரங்களும் இருக்கின்றன. அப்படியிருக்க பூஜை, நைவேத் தியங்கள் சரிவர நடக்காததுதான் பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று ஆண்டாள் கோயில் பக்தர்களின் மனக்குமுறலை நம்மிடம் வெளிப்படுத்தினார் நாரதர்.   

நாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்

“நைவேத்தியத்தில்தான் இத்தனை பிரச்னை, அன்னதானமாவது ஒழுங்காக நடக்கிறதா?” என்றோம். ‘‘ஏதோ நடக்கிறது...’’ என்று அலுத்துக் கொண்டவர், அதுபற்றியும் விவரம் சொன்னார்.

‘‘நன்கொடைகளின்மூலம் நடக்கும் அன்ன தானம் தினமும் 100 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் கோயிலில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான். கோயில் நிதியிலிருந்து அதிக பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கலாம் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு’’ என்ற நாரதரிடம் ‘‘மன்னர்கள் காலத்திலிருந்து நிலபுலன்களும் நிவந்தங்களும் அளிக்கப்பட்ட கோயில் என்றீரே... அவையெல்லாம் என்ன ஆயின?’’

‘‘நியாயமான கேள்விதான். இப்போதும் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் அவை யெல்லாம் முறையாகக் கண்காணிக்கப்பட வில்லை; கோயில் நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.  அதனால் அவைமூலம் வரும் வருவாயும் தடைப்பட்டுப்போனது. பூஜைக்கான செலவுகளை ஈடுகட்ட தனியார் பங்களிப்பையே அதிகம் எதிர்பார்க்கவேண்டிய நிலை கோயில் நிர்வாகத்துக்கு. மேலும் சிறப்புக் கட்டணம், தரிசனக் கட்டணம் என நிர்ணயித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து நைவேத்தியம், பராமரிப்புச் செலவுகளைச் சரிசெய்து வருகின்றனர். திருக்கோயிலின் நிலங்களை மீட்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும் அறநிலையத்துறை சரிவர முயற்சி எடுக்கவில்லை என்பதே பக்தர்களின் எண்ண வோட்டமாக இருக்கிறது.’’

‘‘கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தீர்களா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?’’

‘‘இந்தப் பிரச்னைகள் குறித்து திருக்கோயிலின் செயல் அலுவலர் ராமராஜைத் தொடர்புகொண்டு பேசினேன்.

‘இந்தக் கோயிலில் இத்தனை வருடம் எப்படி நைவேத்தியங்கள் செய்து வந்தார்களோ, அதன்படி தான் இப்போதும் செய்து வருகிறோம். பூஜை களுக்குப் பின் பிரபந்தம் பாடுபவர்களுக்கு இந்த நைவேத்தியங்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளுக்கும் அனைத்து பூஜை நைவேத்தியங்களும் குறையில் லாமல்தான் நடைபெறுகின்றன. கோயிலில் படைக்கப்படும் நைவேத்தியங்களின் அளவு மட்டும் அறநிலையத்துறை வகுத்துக் கொடுத்த சட்டத்தின்படி நடக்கிறது’ என்று முடித்துக் கொண்டார்’’ என்ற நாரதர் கூறிமுடிக்கவும், நமது  தொலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. 

எடுத்துப் பேசினோம். காரைக்காலிலிருந்து வாசகர் ஒருவர்தான் பேசினார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில் குறித்து அந்த வாசகர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியளிக்க, விஷயத்தை அப்படியே நாரதர் வசம் ஒப்படைத்தோம். 

அதன் பிறகு அலுவலகத்தில் நிற்பாரா என்ன... உடனே புறப்பட்டுவிட்டார் நாரதர்!

- உலா தொடரும்...