மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?

கேள்வி பதில்
News
கேள்வி பதில் ( Elumalai PM )

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? எந்த பூஜையையும் சங்கல்பம் செய்து விட்டுதான் தொடங்க வேண்டும் என்கிறார்கள். சங்கல்பம் என்றால் என்ன? நமது சங்கல்பம் எவ்விதமாக அமைய வேண்டும்?

- கே.மனோகரன், சென்னை-54

எந்தச் செயலையும் சங்கல்பத்துடன் தொடங்குவதே சிறப்பு. செயலில் இறங்குவதற்கு முன்பு அந்தச் செயல் வடிவத்தை மனமானது ஒருமுறை அசைபோடும்தானே... அதுவே சங்கல்பம். ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தில், ஸ்ரீமந் நாராயணனின் மகிழ்ச்சிக்காக... (ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே ஜபே வினியோக) எனும் அர்த்தம் பொதிந்த வரிகள் வருவதால், தனியாக சங்கல்பம் செய்ய வேண்டும் என அவசியமில்லை. ஆகவே, நேரடியாகவே பாராயணம் செய்யத் தொடங்கலாம்.

தங்களின் சிந்தனைக்காக ஒன்றைச் சொல்கிறேன்... ‘எனக்கு அது வேண்டும், இதைக் கொடு’ என்று குறிப்பிட்டு பாராயணம் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், குறிப்பிட்டுக் கேட்டதை மட்டுமே வழங்கி அருளுவார் இறைவன். மனித மனத்துக்கு இது நிறைவு தராதுதானே.

அதாவது, வாழ்நாள் முழுவதும் நமக்கான தேவை களும் ஆசைகளும் புதிது புதிதாக முளைத்தபடியே இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகள் கழித்து, நமக்கு என்ன தேவை என்பதை இப்போதே நம்மால் எப்படி அறிய முடியும்?

ஆகவே, தேவைகளை நிறைவேற்றச் சொல்லிப் பட்டியல் போடாமல், ‘இறைவனின் மகிழ்ச்சிக் காக...’ என்று சொல்லி வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் நம்முடைய தேவைகளுக்காக அருளியபடியே இருப்பான் இறைவன்.

கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?

? அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடலாமா?

- கே.எஸ்.சிவசங்கரி, திருப்பூர்

வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில் வாஸ்து புருஷனும் உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (திசைகளிலும்) திக் பாலகர்கள் உண்டு. எண்ணற்ற இறையுருவங்களைக்கொண்ட பூஜையறையுடன் திகழும் வீடு கோயிலுக்குச் சமம்.

கடவுளை வழிபடுவதுடன், அவருடன் சேர்ந்து வாழ்கி றோம். கடவுள் இருப்பிட மான வீட்டை, அனுதினமும் காலையில் சுத்தம் செய்து வாசலில் கோலம் போட வேண்டும். இது வழிபாட்டில் ஒன்று.

பசுஞ்சாணியால் சுத்தம் செய்து கோலம் போட  வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம் (கோமயேனோபலிப்ய, ரங்கவல்யாத் யலம் கிருத்ய).

கோலத்துக்கு ரங்கவல்லீ என்று பெயர்.  வட நாட்டவர் அதை  ரங்கோலி என்பர். வீட்டுக்குள் உறைந்திருக்கும் இறை பூஜையின் ஆரம்பமே கோலம்தான். அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் ஆசை வந்தபிறகு, குடியிருக்கும் வீட்டை (ஃப்ளாட்), தங்கும் விடுதிகளுக்கு (போர்டிங் அண்டு லாட்ஜிங்) ஒப்பாகவே பார்க்கிறோம். வீட்டில் மிளிரும் தெய்விகத்தை மறந்துவிட்டோம்.

அமாவாசை - முன்னோர் ஆராதனை நாள். அது தினம் தினம் வராது. பூஜை என்பது தினம் தினம் உண்டு. இறை ஆராதனையும் முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடு வதை தள்ளிப்போட வேண் டும். இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் பெருமை.

கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?

? நான் முருகக்கடவுளுக்கு உகந்த ஷடாக்ஷர மந்திரம், ஸ்தோத்திரப் பாடல்களைப் புத்தகத்தில் படித்து மனனம் செய்துகொண்டு,  தினமும் ஜபித்து பாராயணம் செய்து வழிபட்டு வருகிறேன். இதுபோன்றவற்றை குருமுகமாக உபதேசம் பெற்ற பிறகு தான் பாராயணம் செய்ய வேண்டுமா?

- எ.வடிவேலு, காரைக்கால்

மந்திரங்களின் வடிவம் ஒலி. உபதேசம் செய்பவர் மந்திரத்தை உச்சரிக்க, அவரின் உதடு அசைவும் வாயிலிருந்து வெளிப்படும் ஒலி அளவும் நம் மனதில் பதியும். இதனால், நாமும் அந்த மந்திரத்தைக் குறையில்லாமல் உச்சரிக்க முடியும்.

கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?


மாறாக, எழுத்து வடிவில் புத்தகத்தில் உள்ளதைப் படித்து நாமாகவே ஜபிக்க முயன்றால்... முறையான உச்சரிப்பு வெளிவராது. நமக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படியே உச்சரிப்பும் இருக்கும். மந்திரத்தின் பொருள் தவறாகப் போகவும் வாய்ப்பு உண்டு.

குழந்தைகள், பெற்றோரிட மிருந்து ஒலி வாயிலாகவே வார்த்தைகளைப் பெற்று பேசத் தொடங்குவார்கள். ‘இது, இந்த ஒலியை எழுப்பும் எழுத்து வடிவம்; இந்தப் பொருளைத் தரும் எழுத்து...’ என்ற வேறுபாட்டை வளர்ந்ததும் அறிந்துகொள்வார்கள்.

வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் நபரின் தகுதியை எழுத்து வடிவில் பார்த்து திருப்தியானாலும் நேர்காணலுக்கும் அழைத்து அவரிடம் பேசிய பிறகே, அவர் முழுமையான தகுதி பெற்றவரா என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்கிறோம். ‘ஒலி’ நம்பிக்கைக்கு உகந்தது.

சங்கீதத்தில், உதட்டு அசைவுகள் குறித்த பாடமும் உண்டு. இதற்காக சங்கீத ரத்னாகரத்தில், ‘பிண்டாத்யாயம்’ என்கிற பகுதி உண்டு. சங்கீதத்தைப் புத்தகம் படித்துக் கற்றுக்கொள்வதில்லை. தடுமாற்றத்தைத் தடுக்க ஒப்புக்கு ஒரு புத்தகம் இருக்கும். நிஷாதம், ரிஷபம், காந்தாரம், ஷட்ஜமம், மத்யமம், தைவதம், பஞ்சமம் ஆகியன ஒலியின் பெயர்கள். இவை மயில், குயில், ரிஷபம் போன்ற உயிரினங்களின் ஒலியைக் குறிக்கும். குயிலின் ஒலியை உள்வாங்கியவன் ‘பஞ்சமம்’ என்ற எழுத்து வடிவைப் பார்த்து நாதம் எழுப்புவான் என்பர்.

எழுத்து வடிவிலிருந்து ஒலியைத் தெரிந்துகொள்வது தவறு. வசதி வாய்ப்புகள் நிறைந்த இன்றைய சூழலில் குரு மூலமாக மந்திர உபதேசம் பெறுவது ஒன்றும் கடினம் அல்ல. காலத்துக்கு உகந்தபடி விருப்பங்களும் தேவைகளும் மாறலாம். அதற்காக, சாஸ்திர நியதிகளையும் மாற்ற நினைப்பது எல்லா இடத்திலும் சரியாகாது.

? ராகுகாலம் - எமகண்டம் ஆகியவற்றை ஏன் விலக்கிவைக்கிறோம்?

- வே.ஜெயகுமார், ஈரோடு

கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?


உலகம் தோன்றும்போதே காலமும் தோன்றி விட்டது. யுகம், மன்வந்த்ரம், வருஷம், மாதம், பக்ஷம், தினம், நாழிகை, நொடி முதலானவை காலத்தின் அவயவங்கள்; காலத்தைப் பிரித்துக் காட்டுகிற பகுதிகள். காலத்துடன் நமக்குத் தொடர்பு இருப்பதுபோல், ராகுகாலம் - எம கண்டத்துக்கும் தொடர்பு உண்டு.

நல்ல காரியங்களை நல்ல வேளையில் செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், ராகுகாலம் மற்றும் எம கண்டம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்ட காலத்தைத் தவிர்த்து, மற்ற வேளைகளில் செயலாற்றுவதே சிறப்பு எனப் பரிந்துரைக்கிறது சாஸ்திரம். நமது செயல்பாட்டின் வெற்றியில் கால வேளைக்கும் பங்கு உண்டு என்கிறது ஜோதிடம். புராண இதிகாசங்களும் காலத் தேவையை விளக்கியுள்ளன.

காலம்... இயற்கையாக விளைந்தது; இயற்றப் பட்டதன்று. இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள நம்மை அறிவுறுத்தினர் சான்றோர். காலத்தின் பெருமையை உணர்ந்தவர்கள் இவர்கள். எனவே உபதேசித்தனர். தோலை அகற்றிவிட்டு வாழைப்பழத்தைச் சாப்பிடுகிறோம்; மாம்பழத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் சின்னதாகக் குறையிருந்தால், அதை விலக்கிவிட்டுப் பழத்தைச் சுவைக்கிறோம்.

ஆக, அனைத்துப் பொருளிலும் விலக்க வேண்டிய பகுதி என இருந்தே தீரும். அதை அகற்றிப் பயன்படுத்துவதே சிறப்பு. இதேபோல், ஒரு நாளில்... விலக்கத்தக்க பகுதியும் உண்டு. இதையே ராகுகாலம், எமகண்டம் என்கின்றனர். பழைய சிந்தனைகள் பயனுள்ளவை என எண்ணுங்கள்.

கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்?

? திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு முன்னதாக முகூர்த்தக்கால், பந்தக்கால் நடுவது எதற்காக? கல்யாண வைபவங்களுக்கு  பந்தல் அமைப்பது அவசியமா?

- லட்சுமி வேணுகோபாலன், வந்தவாசி

வீட்டு வாசலில் திருமணத்துக்காகப் புதிதாகப் பந்தல் உருவாக்குவோம். இதை ‘மணப்பந்தல்’ என்போம். இந்தப் புனிதத்துவமான பந்தலை அமைக்கும் பணியைத் தொடக்க... நல்ல நாளில், நல்ல வேளையில் பந்தல்கால் நடுவது சிறப்பு. இந்த மணப்பந்தல், நான்கு நாள் திருமணம் முடியும் வரை திடமாக உறுதியாக இருந்து, திருமணத்துக்கு வந்தவர்கள் அமருவதற்கு இடம்தந்து சிறப்பிக்கும். வெயில், மழை, காற்று ஆகியவற்றால் உண்டாகும் இடையூறுகளைத் தடுக்கும். முக்கியமாக, ‘மேற்கூரை இல்லாத இடத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது’ எனும் தர்ம சாஸ்திரக் கோட்பாட்டையும் காப்பாற்றும்.

எளிமையாகவும், நாகரிகமாகவும், சிக்கனமாகவும், தர்மசாஸ்திரத்தின் பரிந் துரைக்கு ஏற்பச் செயல்படவும் பந்தல் அமைத்துத் திருமணம் நிகழ்ந்த காலம் மலையேறிவிட்டது. திருமணங்கள் பலவற்றை நடத்துவதற்காகவே எல்லோரும் பயன்படுத்துகிற மண்டபங்கள்; பல பேர் படுத்து உறங்கிய படுக்கைகள்; பலவித மாறுபட்ட நிகழ்வுகள் நடந்த முகூர்த்த ஹால் எனத் திருமண வைபவம் நடைபெறும் சூழல் மாறிவிட்டன.

இப்படியான இடத்தில் வைத்து புதுமணத் தம்பதியை இணைப்பதில், ஒரு சிலருக்கு மன நெருடல் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய மன நெருடலைத் தவிர்ப்பதற்கு மணப்பந்தல் வரப்பிரசாதம்.

நம் குழந்தைகள் வளர்ந்து ஆளான நிலையில், அவர்களும் தம்பதி சமேதராக மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத்தான் திருமணத்தை நடத்துகிறோம். ஆனால், வீண் ஆடம்பரம், வருபவர்களைத் திருப்திப்படுத்துதல் ஆகியவற்றுக்குத்தானே முக்கியத்துவம் தருகிறோம்?!

முகூர்த்தக்கால் நடுவதைப் பின்பற்றுகிற அதேவேளையில், பந்தலிட்டுத் திருமணம் நடத்தவும் முனைந்தால், திருமண நிகழ்வு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்; சிந்தித்துப் பாருங்கள்!

- பதில்கள் தொடரும்...