Published:Updated:

புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...

புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...

ஷங்கர்பாபு

புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...

ருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். நோயாளிகள் எல்லாம் டோக்கன் எண்களாக மாறி டாக்டரின் அழைப்புக்குக் காத்திருந் ததைக் காண நேர்ந்தது. அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, டாக்டர்கள் சொல்லும் பரிசோதனைகளைச் செய்து, அந்தப் பரிசோதனைக் குறிப்புகள் அடங்கிய கோப்புகளைப் பராமரித்துக்கொண்டு, மருந்து மாத்திரைகளுடன் வாழ்க்கையை ஓட்டும் ஒருவர்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை உருவாக்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது.

அங்கே காத்துக்கொண்டிருந்தவர்களில் ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒரு பெண்மணி - தாங்க முடியாத முட்டி, தோள் வலிகளைப் பகிர்ந்துகொண்டவர், ‘மனுஷனுக்கு முதல் எதிரியே அவன் உடம்புதான்’ என்றும் ஆதங்கப்பட்டுக் கொண்டார். அவர் அப்படி பேசியது மற்றவர் களுக்குக் கேட்டிருந்தால் அவர்களும் அதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

மருத்துவமனையின் டி.வி-யில் அருவி ஒன்றின் காட்சி. வயதுபேதமின்றி அனைவரும் அருவிக் குளியலில் சொர்க்கத்தின் சுகானுபவத்தில் லயித்து உற்சாகமாகக் கூச்சலிடுகிறார்கள். பார்க்கும் அனைவரையுமே அந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...

சந்தோஷத்துக்காக இந்த உடலின் மூலம் நாம் என்னவெல்லாம் செய்கிறோம். நீரில் நனையும் போது நீராகவே மாறிவிடுகிறோம். இளங்காற்று நம்மை வருடிச்செல்லும்போது நாம் காற்றாகவே மாறிவிடுகிறோம்.

பசுமையான புல்வெளியைப் பார்க்கும்போது நாமும் ஒரு புல்லாகிறோம். உலகை மறந்து பரவசம் அடைகிறோம். நாம் எதை எதிரி என்று சொல்கிறோமோ... அந்த உடலின் மூலமே அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கிறோம்.

இன்பத்தை அனுபவிக்கும்போது உடல் நமக்கு எதிரி இல்லை. ஆனால், உடலில் ஒரு பிரச்னை என்றவுடன் உடல் நமக்கு எதிரியாகி விடுகிறது. அப்படி நாம் சொல்லும்போது நாம் நன்றி மறந்தவர்களாகத்தான் இருப்போம். ஏதோ உடலே அதுபாட்டுக்கு அலைந்து, கெடுத்துக் கொண்டதைப்போல் அலுத்துக்கொள்வோம்.

இயற்கையாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு நாம் எதுவும் செய்வதற்கில்லை. ஆனால், உடலுக்கு வரும் பாதி நோய்களுக்குக் காரணம் நம்முடைய செயல்கள்தான் என்கிறது மருத்துவம். உடலால்  இன்பத்தை அனுபவிக்கிற நாம், எப்போதாவது நம் உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?

இன்று நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எல்லோரும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவர்கள்தான். நடந்துபோக வேண்டிய தூரத்துக்கும் வாகனம் பயன்படுத்தும் நாம், ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்பதை ஏன் உணராமல் போனோம்?

இரவு பன்னிரண்டு மணிவரை டி.வி பார்ப்போம். ஆனால், கண்களின் துயரத்தைப் பொருட்படுத்த மாட்டோம். கண்ட நேரத்தில் கண்டதை உண்ணும் நாம், வயிற்றின் வருத்தத்தை அறியமாட்டோம்.

‘இருக்கும்வரை ஜாலியா இருந்துட்டுப் போகலாம்’ என்று நினைப்பவர்கள் செய்கின்ற பல காரியங்கள் உடலுக்குக் கேடாகத் தான் முடிகின்றன.

விரதம், பாத யாத்திரை போன்ற நம் வழிபாட் டின் நடைமுறைகள் எல்லாம் உடல்நலனைப் பேணும் பொருட்டுச் செய்யப்பட்டவையே.

ஆரோக்கியம் தரும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க உடல் ஆரோக்கியம் வேண்டும் என்பதால்தான், நம் ஞானிகளும் சித்தர்களும் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர். இறைவனின் ஆற்றல் தங்கும் வீடாகக் கருதி, இறைவனை அடையச் செய்வதில் உடலின் பங்கு பற்றித் தெளிவாக உணர்த்தியுள்ளனர். திருமூலர்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய புராணம்! - ஊனுடம்பு ஆலயம்...

‘மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றே’


என்று உடலிலிருக்கும் சீவனின் வடிவம் எவ்வாறு இருக்கும் எனத் தெரிவித்து, அத்தகைய இறைசக்தி இருக்கும் உடலின் முக்கியத்துவத்தை,

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’
என்கிறார்.

சித்திரம் வரைய வேண்டும் என்றால் பழுதுபடாத சுவர் வேண்டும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஏற்படும் உற்சாகம், மனதிலும் பிரதிபலிக்கும். ஐம்புலன்களில் மலர்ச்சி இருந்தால் மட்டுமே ஆன்மாவின் மலர்ச்சி கிடைக்கும். ஆன்மாவின் மலர்ச்சி வாய்த்துவிட்டால், ஆண்டவனின் அணுக்கம் நமக்கு வாய்த்துவிடும். எனவே, உடலைப் பேண வேண்டும். நம்முடைய உடலை ஒருவேளை வீடு, மாளிகை என்றால் நாம் அலட்சியப்படுத்திவிடுவோம் என்பதற்காகத்தான், திருமூலர் நம் உடலைக் கோயிலுக்கு ஒப்பிட்டு,

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்... ’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இப்படி தத்துவ ரீதியிலான பாடல்களின் பொருள் புரியாதவருக்கும் புரிய வைக்கும்விதமாக நாம் வழிபடும் தெய்வத் திருவுருவங்கள் திகழ்கின்றன.மனிதருக்கு அபயம் அளிக்கும் பாவனையுடன் தீயவற்றை அழிக்கும் வண்ணம் திருக்கரங்களில் ஆயுதங்களுடனும் திகழ்கின்றன. வேல், திரிசூலம், சுதர்சன சக்கரம், கதை, பாசம், அங்குசம் என்று எத்தனை எத்தனை ஆயுதங்கள்?

ஆயுதங்கள் தாங்கிய தெய்வத் திருவுருவங்கள் வெறுமனே வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரத்தை வெளிப்படுத்தத் தேவையான ஆயுதங்களைத் தாங்க வேண்டிய உடல் உறுதியையும் உடல் நலனையும் மறைமுகமாக உணர்த்துகின்றன.

நம்முடைய நிரந்தரமான பெற்றோர்களாகத் திகழும் தெய்வங்களே உடல் உறுதியைப் புரியவைப்பதுபோல் இருக்கும்போது, குழந்தைகளான நாம் உடலினை அலட்சியப் படுத்தலாமா?

இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்று சொல்லப்படும் உடல். நமக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? அப்படிச் சொல்வது இறைவனையே எதிரி என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

- புராணம் தொடரும்...