Published:Updated:

பச்சைக்காளி பவளக்காளி...

வெ.நீலகண்டன் - படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

செண்டையும், பறையும் சூழலை உக்கிரமாக்கு கின்றன. பட்டாசுச் சத்தம் செவிகளை உலுக்க, மஞ்சளாடை தரித்த இளைஞர்கள் தீச்சட்டிகளைச் சுமந்து முன்னால் நடக்கிறார்கள். கண்களில் அக்னி ஜொலிக்க, பற்கள் வாய் கடந்து துருத்தி நிற்க, ஆறு கரங்களிலும் ஆயுதம் தரித்து இசைக்கேற்ப ஆடியபடி கம்பீரமாக நகர்ந்து வருகிறார்கள் பச்சைக்காளியும் பவளக்காளியும்.  

பச்சைக்காளி பவளக்காளி...

ஒருபுறம் பெண்கள் குலவையால் காளியைச் சாந்தமாக்க, பக்தர்கள் காளிகளின் பாதம் தொட்டும், அவர்களின் உடம்பில் புடவைகளைச் சுற்றியும், பூக்களைச் சொரிந்தும்  நேர்த்திக்கடன் களைச் செலுத்துகிறார்கள். சிலர் தங்கள் குழந்தைகளைக் காளிகளின் கைகளில் கொடுத்து வாங்குகிறார்கள். சிலர், காளிகளின் கரம் பற்றி நல்வாக்குக் கேட்கிறார்கள். 

ஆண்டு முழுவதும் தம் ஆலயத்தை நாடி வந்து தங்கள் குறைகளைக்கொட்டிச் செல்லும் பக்தர் களை ரட்சிக்க, உற்சவக் காலத்தில் மனிதர்களின் உடலேறி பக்தர்களின் வீடுதேடிப் போய் தரிசனம் தருகிறார்கள் பச்சைக்காளியும் பவளக்காளியும். தஞ்சை மாவட்டத்தில் மார்கழி தொடங்கி ஆவணி மாதம் வரைக்கும் வீதியுலா வரும் கம்பீரக் காளிகளைத் தரிசிக்கலாம். 

காளி வழிபாடு, ஆதி வழிபாடு. காலத்தின் வடிவானவள் என்று காளியைப் போற்றுகின்றன இலக்கியங்கள். ஐவகைத் தமிழ் நிலங்களில் பாலை நிலத்தின் மூதாதைக் கடவுளாகக் போற்றப்படும் காளி, அநீதிக்கு எதிரானவள். அன்பின் உருவான வள். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் காளி வழிபாடு பிரதானமானது.  

பச்சைக்காளி பவளக்காளி...

பொதுவாக, கிராமப்புற வழிபாட்டு முறையில் கலையாடல்கள் இரண்டறப் பிணைந்துள்ளன. முருகனுக்குக் காவடியாட்டம், மன்மதனுக்கு லாவணி, சுடலைமாடனுக்கு கணியான் கூத்து, மாரியம்மனுக்குக் கரகாட்டம், ஜக்கம் மாளுக்குத் தேவராட்டம், கங்கை யம்மனுக்குக் கொக்காலிக் கட்டை, அண்ணன்மார் சாமிக்கு உடுக்கைப் பாட்டு என ஒவ்வொரு சாமிக்கும் ஒரு கலை அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், காளிக்கானதுதான் பச்சைக்காளி, பவளக்காளி.

தஞ்சை வட்டாரத்தில் காளியை, பச்சைக்காளி, பவளக்காளி என்று பிரித்து வணங்கும் மரபு உண்டு. பெரும்பாலான கோயில்களில் பச்சைக்காளி மட்டுமே இருப்பாள். சில கோயில்களில் பவளக்காளியும் சேர்ந்திருப்பாள்.  பச்சைக்காளி சாந்தமானவள். பவளக்காளி கோபக்காரி.

“பச்சைக்காளியும் பவளக்காளியும் அக்கா தங்கச்சி. அக்கா பச்சைக்காளிக்குக் குழந்தை யில்லை. தங்கச்சி பவளக்காளிக்கு ஆறு குழந்தைங்க. ஒருநாள், தங்கச்சியோட பிள்ளை களைப் பார்க்கிறதுக்காக ஆசை ஆசையா பலகாரம் எல்லாம் வாங்கிக்கிட்டு போனா பச்சைக்காளி. ஆனா, தங்கச்சிக்குப் பயம். ‘அக்கா குழந்தை இல்லாதவளாச்சே... நம்ம புள்ளைக மேல கண்ணு வெச்சுட்டா குழந்தைகளுக்கு முடியாமப் போயிருமே’ங்கிற பயத்துல எல்லாப் புள்ளைகளையும் ஒரு பெரிய கூடைக்குள்ளாறக் கவுத்துப்போட்டுட்டு, ‘புள்ளைகள்லாம் வெளியூருக்குப் போயிருச்சுங்க...’ன்னு அக்காக்காரிக்கிட்ட பொய்யைச் சொல்லிட்டா.

தங்கச்சி பொய் சொல்றான்னு அக்காவுக்குத் தெரிஞ்சுபோச்சு. ‘நமக்குக் குழந்தை இல்லேன்னு தானே தங்கச்சி இப்படி பிள்ளைகளை மறைச்சு வெச்சுக்கிட்டு பொய் சொல்றா’ன்னு குமுறிக் கிட்டே கண்ணீரும் கம்பலையுமா தன் வீட்டுக்குத் திரும்பிட்டா அக்கா. அக்கா கிளம்பிட்டாளான்னு உறுதிப்படுத்திக்கிட்டு புள்ளைகளை மூடிவச்ச கூடையைத் திறந்தா தங்கச்சி. எல்லாப் புள்ளை களும் மயங்கிக்கிடக்கு. ‘ஆகா... அக்காகிட்ட பொய்யைச் சொல்லி வருத்தப்பட வெச்சுப்புட் டோமே’ன்னு பரிதவிச்சு அழுதுக்கிட்டே அக்கா வீட்டுக்கு ஓடினா தங்கச்சி. அங்கே அக்காகாரி அழுதுக்கிட்டே உக்காந்திருந்தா. 

‘அக்கா... என்னை மன்னிச்சிருக்கா... எம் பிள்ளைகளைக் காப்பாத்துக்கா’ன்னு அழுது புலம்பியிருக்கா... தங்கச்சி அழுகிறதைக்கண்டு கலங்கிப்போன அக்கா, தங்கச்சி வீட்டுக்கு ஓடிவந்து, பிள்ளைகளைச் சுத்தி  மஞ்சத்தண்ணி தெளிச்சு, தன்னோட சேலை முந்தானையால புள்ளைங்க மூஞ்சியைத் தொடச்சா... எல்லாப் புள்ளைகளையும் கண் விழிச் சுடுச்சுங்க... இதுதான் பச்சைக்காளி, பவளக்காளியோட கதை. கோயில் உற்சவத்துல இந்தக் கதையாத்தான் ஆட்டமா ஆடி நடிச்சுக் காமிப்போம்...” என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜன்.   

பச்சைக்காளி பவளக்காளி...

தஞ்சாவூரில் சற்று வித்தியாசமாக நடக்கிறது இந்த நிகழ்ச்சி. ஆயிரம் ஆண்டு கால பாரம்பர்யம்கொண்ட இந்தக் கலையாடலின் தொன்மம் வேறு மாதிரி இருக்கிறது. “பராசர முனிவர், தஞ்சாவூர் வாட வாற்றங்கரையில வெண்பலான் சோலைங்கிற இடத்துல தங்கியிருந்து யாகங்கள் நடத்திக் கிட்டிருந்தார். ஒருநாள், அந்த வழியே கடந்துபோன தஞ்சன், தாராகன், தாண்டகன்னு மூணு அசுரர் களும், அந்தப்பகுதியோட பசுமையில மயங்கி அங்கேயே தங்கி முனிவர்களுக்கு இடையூறு செய்யறாங்க. அதனால பாதிக்கப்பட்ட பராசரர், ஈசனை வேண்டுகிறார். இந்த அசுரர்களை அழிக்கும் பொறுப்பைத் தன்னில் ஒரு பாகமான அம்பிகைக்கு அளிக்கிறார் ஈசன். அவள் தஞ்சனை அழிக்க, பச்சைக்காளியா உருவெடுத்தாள். ஆனால், காளி அழிக்க அழிக்க தஞ்சன் திரும்ப திரும்ப உருவெடுத்துக்கிட்டே இருந்தான். அதைக் கண்டு பச்சைக்காளியோட முகம் கோபத்துல சிவந்திடுச்சு. பவளக்காளியா விஸ்வரூபமெடுத்து தஞ்சனையும் பிற அசுரர்களையும் அழித்தாள்.    

பச்சைக்காளி பவளக்காளி...

இந்தப் பின்னணியிலதான் தஞ்சாவூர்ல பச்சைக்காளி, பவளக்காளி விழா நடக்குது. மாசி மாதம் அல்லது பங்குனி மாதம் தஞ்சாவூர்ல பச்சைக்காளி, பவளக்காளி விழா நடக்கும். கோடியம்மன் கோயில்ல காளிக்குரிய ஆபரணங்கள், உடைகளை வாங்கிக்கிட்டு பவளக்காளி ஆடுறவங்க மேலராஜ வீதியில இருக்கிற கொங்கனேஸ்வரர் கோயிலுக்குப் போயிடுவாங்க. பச்சைக்காளி ஆடுறவங்க சங்கரநாராயணர் கோயிலுக்குப் போயிடுவாங்க. எல்லாரும் ஆடிட முடியாது. பாரம்பர்யமா ஆடுறவங்களுக்கு மட்டுமே வாய்ப்பு. மொத்தம் மூணு நாளு ஆட்டம். முதல் நாள், பச்சைக்காளியும் பவளக்காளியும் தனித்தனியா நகர்வலம் வருவாங்க. இரண்டாம் நாள் கோடியம்மன் கோயிலுக்குப் பக்கத்துல ஒன்னா சேருவாங்க. மூணாம் நாள் ரெண்டு அம்மனும் ஒண்ணு சேர்ந்து ஆடி எல்லோருக்கும் விபூதி கொடுத்துத் திருவிழாவை நிறைவு செய்வாங்க...” என்கிறார் தஞ்சாவூரில் காளி வேஷம் போடும் ஞானசேகர்.

கும்பகோணம் வட்டாரத்தில் காளியாட்டத் தைக் கலையாகச் செய்யும் குழுக்கள் நிறைய இருக்கின்றன. பெரும்பாலான கோயில்களில் மரத்தால் செய்யப்பட்ட பச்சைக்காளி, பவளக் காளி சிரசுகள் வைத்திருக்கிறார்கள். தனி மாடம் வைத்துக் கோயிலில் பூட்டிவைத்திருப்பார்கள். கிரீடம், புஜங்கள், நான்கு கரங்கள், அணிகலன்கள், ஆயுதங்கள் என முழு அரிதாரம் தரித்து காளிகள் உக்கிரமாகத் தெருவில் இறங்கும். மக்கள் அந்த காளிதேவியே அவதரித்துத் தங்கள் முன் நிற்பதாகக் கருதி உயிர்ப்போடு வணங்குகிறார்கள்.

“காளியாடுறங்க ஒரு மண்டலத்துக்கு முன்னா லேயே விரதத்தைத் தொடங்கிடுவாங்க. ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பாடுதான். இருவேளை பால் பழம் மட்டும்தான். கோயில்லதான் தங்கணும். நல்லது, கெட்டதுக்கெல்லாம் போகக் கூடாது. 48-வது நாள் காளிக்கட்டு. காளிக் கட்டன்னிக்கு எதுவும் சாப்பிடக் கூடாது. கட்டுக் கட்டிட்டா உடம்புல அந்தக்காளியே ஏறி உக்காந்த மாதிரியாயிடும். சுய நினைவே இருக்காது” என்கிறார் ராஜன். இவரிடம் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காளியாட்டம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காளி வேஷம் கட்டுவதில் இரண்டு முறைகள் உண்டு. வில்லுக்கட்டு, தொப்பிக்கட்டு. தொப்பிக் கட்டு எளிது. வெறும் சிரசை மட்டும் மாட்டிக் கொண்டு ஆடுவது. வில்லுக்கட்டுதான் சவால். உடம்பில் ஒரு மெத்தையை மாட்டி ஸ்டாண்டைப் பொறுத்தி சிரசை மாட்டுவார்கள். எல்லாம் சேர்ந்து 70 கிலோவுக்கு மேல் இருக்கும். மரபுப்படி பச்சைக்காளிக்குச் சிவப்பு சேலையும், பவளக்காளிக்கு பச்சைச்சேலையும் கட்ட வேண்டும். வளையல், கொலுசு, தண்டை, மிஞ்சி, கச்சை, நெக்லஸ், திண்டுமாலை, சந்திரபிறை, சூரியபிறை என ஏகப்பட்ட ஆபரணங்கள். அனைத்தையும் உடுத்திக்கொண்டு அவ்வளவு ஆங்காரமாக ஆடுவார்கள். 

கும்பகோணம், ஆடுதுறை வட்டாரங்களில் இப்போதெல்லாம் ஏறக்குறைய ஆண்டு முழுவதுமே பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் நடைபெறுகிறது எனலாம். பிற கோயில்களின் திருவிழாக்களிலும் காளியாட்டம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.  கலையும் தெய்விகமும் கலந்துறவாடும் பச்சைக் காளி, பவளக்காளி ஏற்படுத்தும் ஆன்ம அதிர்வு, எக்காலமும் தஞ்சை மண்டலத்தின் காற்றில் கலந்தே இருக்கிறது!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு