Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

தண்டக வனத்தில்...

காட்டுத் தீ பச்சை மரங்களையும் சாம்பலாக்கி வருகிறது. கடல் பொங்கி வருவதுபோல் அந்தத் தீக்கடலும் பொங்கிப் பாய்ந்து பரவி வருகிறது. அந்தக் காட்டின் ஒரு பக்கத்திலே சில உலர்ந்த மரங்கள் ஒதுங்கி நிற்கின்றன. பச்சை மரம் படும் பாட்டில் வற்றி உலர்ந்த மரங்கள் தப்பிப் பிழைப்பது எப்படி?

ஆனால், என்ன அதிசயம் பாருங்கள்... பச்சை மரங்களுக்கு இல்லாத அதிர்ஷ்டம் உலர்ந்த மரங்களைத் தேடி வந்துவிட்டது. அதோ திடீரென்று பெருமழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. இது தண்டக வனத்து முனிவர்களின் நிலை:

அனல் வரு கானகத்து அமுது அளாவியபுனல்வர உயிர்வரும் உலவை போல்கின்றார்கொடிய அரக்கர்களின் இருப்பிடத்துக்கு அருகே, அவர்களுடைய கடுங்கோபத்தால் வெதும்பிக்கொண்டிருக்கும், தவித்துக்கொண்டிருக்கும் பரம சாதுக்கள் எப்படிப்பட்ட பரிதாப நிலையில் இருந்தார்கள் என்பதையும், ராமனைக் கண்ணுற்றதும் அவர்களின் உள்ளம் எப்படிக் குளிர்ந்து தளிர்க்கிறது என்பதையும் இந்த உபமானம் எவ்வளவு பொருத்தமாக வெளியிடுகிறது.

சித்திர ராமாயணம்

ராட்சஸ உலகில்...

உடம்பைச் சோற்றுத் துருத்தியாகக் கொண்டிருந்தான் விராதன். ‘உணவே கடவுள்; பிறரை இம்சித்து உண்பதே பேரின்பம்’ என்ற கொள்கையுள்ளவர்களெல்லாம் விராதனுடைய நிலையிலுள்ள அரக்கர்கள். ‘நன்று தீது நாடலேன்; தின்று தீய தேடினேன்’ என்ற கொள்கையோடு கூடிய விராதனுக்கும் மூளையுண்டு. ஆனால், அவன் வயிற்றை வளர்த்து மூளையைப் பட்டினி போட்டுப் பகுத்தறிவை மழுக்கிவிட்டான். ராட்சஸ உலகில் இவனுக்கும் கீழான படியில் உள்ளவன் உண்டு.

அவன்தான் கபந்தன். பட்டினிப் போட்டு மழுக்குவதற்கு மூளையென்று ஒன்று இருந்தால்தானே? கைக்கும் வாய்க்கும் இடையே மூளை வந்து குறுக்கிடும் தொல்லையே கபந்தனுக்குக் கிடையாது. அவனுக்கு வயிற்றிலே வாய். கழுத்தின் மேல் வாய் இருந்தால், அதற்கு ஒரு மேல் மாடம் தேவையாகிறது. அந்த மேல் மாடத்திலே மூளை குடிபுகுந்து சேட்டை செய்கிறது. ஆம், மனக்குரங்கு பகுத்தறிய பார்க்கிறது. விராதனுக்கு இருந்த உபத்திரவம் கபந்தனுக்குச் சிறிதும் இல்லை.

மாரீச நிலை

ராட்சஸ உலகிலே விராதனும் கபந்தனும் தாழ்ந்த படியில் இருக்கும் சாமானியர்கள். அந்த இருளுலகத்திலே மூளையை மிக மிகக் கூர்மை செய்துகொண்டவர்களும் உண்டு. ‘மகாபாரதத்துக்கு சகுனி மாமா; ராமாயணத்துக்கு மாரீச மாமா!’ என்று சொல்வதுண்டு. இந்த மாரீச மாமா அறிவை அபாயமாகத் தீட்டிக் கூராக்கிக் கொண்டவன். இந்த மாயாவி தன் மாயா விநோதங்களால் சீதா ராமர்களையே ஏமாற்றிவிடுகிறான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சித்திர ராமாயணம்

விராதனும் கபந்தனும் மூளையில்லாதவராய் குற்றம் செய்தார்கள் என்றால், மாரீசன் முதலான அரக்கர்கள், தங்களது அபாயமான மூளைக்கூர்மையால் இன்னும் எவ்வளவு அதிகமான குற்றங்களையும் செய்யக்கூடும். இந்த ராட்சஸ உலகுக்குத் தலைவர்கள் இலங்கை அரக்கர்கள். அந்த இலங்கையில் அனைத்து வசதிகளும் பொருள்களும் உண்டு, ஒன்றே ஒன்றைத் தவிர.

இருக்கும் பொருள்களைப் பட்டியலிடுவது கடினம்; இல்லாத ஒன்றைச் சொல்வது எளிது. ஆகவே, அதுபற்றிய விவரத்தை மட்டும் தண்டகாரண்ய முனிவர்கள் ராமனிடம் குறிப்பிடுகிறார்கள்.

இரக்கம் என்(று) ஒருபொருள் இலாத நெஞ்சினர்

அ0ரக்கர்என்(று) உளர்சிலர் அறத்தின் நீங்கினார்

என்பது முனிவர்களது வாக்கு. இரக்கம் இல்லாத இடத்தில் அறம் ஏது? அறத்துக்கு ஆணிவேர் இரக்கம்தானே?

இலங்கை அரக்கரும் தண்டக முனிவரும்

ந்த முனிவர்கள் இலங்கை அரக்கர்களை ராமனுக்கு அறிமுகப்படுத்துவதே எவ்வளவு ரசமாகவும் இசைவாகவும் இருக்கிறது. இங்ஙனம் இரக்கமின்மையால் அறத்திலிருந்து நீங்கிய அரக்கர்கள், முனிவர்களையும் அறத்தினின்றும் நீக்கிவிட முயன்றார்கள். முனிவர்களது இந்த நிலையை என்னவென்பது?

சித்திர ராமாயணம்

‘வல்லியம் பலதிரி வனத்து மான் என...’ அதாவது `புலிகள் பல திரிந்துகொண்டிருக்கும் காட்டில் அகப்பட்டுக்கொண்ட மான் போல் இருக்கிறோம்’ என்று சொல்லும் முனிவர்கள், தாங்கள் நீங்கிய அந்தத் தருமநெறி இன்னதென்று விவரிக்கவும் செய்தார்கள். அவை: தவம் புரிவது, வேதம் ஓதுவது, ஓதுகிறவர்களுக்கு உதவி செய்வது அதாவது வேதம் ஓதுவிப்பது, வேள்வித் தீ வளர்ப்பது. ‘இம்முறையில் நீங்கிவிட்டதால் நாங்கள் அந்தணர்கள் இல்லை’ என்கிறார்கள்.

கடைசியாக முனிவர்கள் தங்களது பரிதாப நிலையையும், ராமனது வருகையால் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையையும் எவ்வளவு பொருத்தமான உபமானத்தால் தெரிவித்துப் பேச்சை முடிக்கிறார்கள்:

‘உருளுடை நேமியால் உலகை ஒம்பிய
பொருளுடை மன்னவன் புகல்வ! போக்கிலா
இருளுடை வைகலேம் இரவி தோன்றினாய்
அருளுடை வீர! நின் அபயம்  யாம்’
என்றார்

பகலும் இரவும் சேர்ந்தது ஒருநாள் என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள். தண்டகாரண்ய வாசிகளோ தங்களுடைய நாளில் பகலே கிடையாது, விடிவே இல்லாத ஒரே இரவுதான் எப்போதும் என்கிறார்கள். ‘அத்தகைய இரவிலே இப்போதுதான் சூரியோதயம் ஆகிறது; அதிகாலை அருணோதயம் ஆகிய அந்தக் கிரமம்கூட இல்லாமல் சூரியோதயமே ஆகிவிட்டது!’ என்கிறார்கள்.

(15.2.1948 மற்றும் 22.2.1948 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து...)