Published:Updated:

சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்
சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

நீ பக்தி செய்வாயானால் எனதருகே நீ வருவாய்.
நீ தொண்டு செய்வாயானால் நான் உன்னருகே வருவேன்.

- ஷீர்டி சாயிபாபா

`உண்ணக் கேட்டால் கொடுத்துவிடுங்கள்!'

கவிதா, சென்னை-19


நினைவுதெரிந்ததிலிருந்து நான் சாயியை வணங்கிவருகிறேன். எனினும், கடந்த இரண்டு வருடங்களாக சாயி பக்தி எனக்குள் அதிகமானது எனச் சொல்லலாம். சமீபத்தில் உடன் பணிபுரியும் தோழி அன்புடன் கொடுத்த சாயி சரிதத்தையும் தினமும் படித்து வருகிறேன்.

கடந்த சில தினங்களுக்குமுன், மாலை தேநீர் அருந்துவதற்காக அலுவலக கேன்டீனுக்குச் சென்றேன். சூடாகச் சாம்பார் வடை வைத்திருந்தார்கள். எனக்குப் பசியில்லை என்றாலும், தோழிகளின் வற்புறுத்தலுக்காகச் சாம்பார் வடை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு சாப்பிட அமர்ந்தோம். அந்நேரம் பார்த்து அலுவலக நண்பர் ஒருவர் என் அருகில் வந்து, ஏதோ கோயிலில் பிரசாதம் கேட்பதுபோல் இரண்டு கரங்களையும்... இடது உள்ளங்கையின் மீது வலது உள்ளங்கை வைத்து நீட்டியபடி ‘‘எனக்குக் கொடுங்கள்’’ என்று கேட்டார்.

நானோ அவர் கேட்பதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ விளையாட்டாகக் கேட்கிறார் எனக் கருதி, ‘‘போங்க சார் உங்களுக்குக் கிடையாது. நான் சாப்பிடப் போகிறேன்’’ என்று கூறி மறுத்ததோடு, சாப்பிடவும் ஆரம்பித்தேன். ஆனாலும், உள்ளுக்குள் ஏதோ ஓர் உணர்வு என்னை உறுத்தியது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை.

சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்


அந்த நண்பர் அப்போது அங்கிருந்து நகரவில்லை. மீண்டும் என்னிடம், “உங்களுக்கு ஒரு அட்வைஸ்... எவரேனும் கையை ஏந்தி உங்களிடம் உணவு கேட்டால், எக்காரணம் கொண்டும் மறுக்காமல் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். அவர் சொன்ன விதமும், வார்த்தை களுக்குக் கொடுத்த அழுத்தமும் எனது தவறைப் புரியவைத்தன.

‘‘சாரி சார்! ஏதோ விளையாட்டாகக் கேட்கிறீர்கள் என நினைத்துவிட்டேன். இனி அப்படிச் செய்ய மாட்டேன்’’ என்றேன்.

பதிலுக்கு அவர், ‘‘சரி போகட்டும். இப்போதாவது எனக்கு வடை வாங்கித் தருகிறீர்களா?’’ எனக் கேட்டார். அப்போதைக்கு நான் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால், உரிமையோடு அவரிடம் பணத்தைக் கொடுத்து வடை வாங்கிச் சாப்பிடச் சொன்னேன். அவரும் வாங்கிக்கொண்டு வந்து எங்கள் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டார். அவர் அப்படி ரசித்து ருசித்துச் சாப்பிட்டதை அதுவரை நான் பார்த்ததில்லை. மேலும், எப்போதும் எவரிடமும் எதையும் அவர் கேட்டதும் கிடையாது. எனக்கு ஒரே குழப்பம். அந்தக் குழப்பத்துடனேயே வீடு வந்து சேர்ந்தேன்.

இரவில் சாயி சரிதம் புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரலாம் என்று எண்ணி பக்கத்தைப் புரட்டினேன். விட்ட இடத்திலிருந்து சாயி சத்சரிதத்தைப் படிக்கத் தொடங்கினேன். என்ன ஆச்சர்யம் அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் நான் வாசித்த வரிகள் என்னை உலுக்கி எடுத்துவிட்டன. அந்த வரிகள் இவைதான்...

‘முதலில் பசியாய் இருப்போருக்கு உணவு கொடுத்த பின் நீ உண்பாயாக. இதை நன்றாகக் கவனித்துக்கொள்!’

சிலிர்த்துப்போனேன் நான். பாபா எப்போது யார் உருவத்தில் எப்படி வந்து நமக்கு தரிசனம் கொடுப்பார் என்று நமக்குத் தெரியாதே. நண்பர்களே நீங்களும் பசியோடு யார் வந்து உண்ணக் கேட்டாலும் மறுக்காமல் உண்ணக்கொடுங்கள். கேட்பது பாபாவாகவேகூட இருக்கலாம் இல்லையா?!

சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

பாபா கொடுத்த உயிர்!

ஆர்.மைதிலி, சென்னை-88


னக்கு வயது 76. சாயிபாபாவின் தீவிர பக்தை. எனது ஒவ்வொரு நாளும் தொடங்குவதும் முடிவதும் அவரின் திருநாம பாராயணத்துடன்தான். அதேபோல் வியாழன்தோறும் தவறாமல் சாயி பூஜை செய்து வருகிறேன்.

எட்டு மாதங்களுக்குமுன் ஒருநாள் திடீரென எனக்குத் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. தொடர்ந்து 10 நாள்களாக வலி குறையாமல் இருக்கவே, நரம்பியல் நிபுணரிடம் சென்று காட்டினேன். அவர் பரிசோதித்துப் பார்த்துவிட்டுச் சில மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைத்து, ஒரு மாதம் கழித்து வரும்படி கூறினார். ஆனால், அதற்குள்ளாகவே திடீரென ஒருநாள் மயங்கி விழுந்துவிட்டேன். என் பிள்ளைகள் உடனடியாக என்னை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன்  எடுத்துப்பார்த்ததில், மூளையின் வெளிப்புறம் ஒரு கட்டி இருப்பது தெரிந்தது.

மருத்துவர் எங்களிடம் அதை விளக்கிக் கூறி,  அறுவைசிகிச்சை செய்து கட்டியை அகற்றுவது நல்லது என்றும் இல்லையெனில் மீண்டும் மயக்கமோ, ஸ்ட்ரோக்கோ ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தினார்.

பிள்ளைகள் எனது முதுமையைக் கருதி அறுவைசிகிச்சை செய்வது குறித்துத் தயங்கினார்

சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

கள். அதேநேரம் அறுவைசிகிச்சையைத் தவிர்த்தால், அதன் காரணமாக அம்மாவுக்கு எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்ற தவிப்பும் அவர்களை வாட்டியது. எனக்கு அதுபற்றிய கவலை இல்லையென்றாலும், ஒருவேளை பக்கவாதம் போன்று ஏதேனும் ஏற்பட்டு, என்னால் மற்றவர்களுக்கும் சிரமம் ஏற்படுமே என்று கவலையுற்றேன். இதற்கிடையில், மருத்துவர் ஒரு தேதியைக் குறித்துக்கொடுத்து, அன்றைக்கு பி.ஈ.டி.ஸ்கேன் செய்துவரும்படியும், அதன்பிறகு அறுவைசிகிச்சை செய்வது பற்றி முடிவெடுக்கலாம் என்றும் ஆலோசனை தந்தார்.

நான், `‘பாபா என்னுடைய கடமைகள் எல்லாம் முடிந்துவிட்டன. இனி, உம்முடைய பாதக் கமலங்களில் சரணடைவதில் எனக்கு மகிழ்ச்சியே. என்னை அழைத்துக்கொள்வதானால், ஊசி மருந்து, சிகிச்சை என எதுவுமில்லாமல் உடனே அழைத்துக்கொள்'’ என்று மனமுருகி பிரார்த்தனை செய்தேன். அத்துடன், ஒன்பது வார சாய் விரதமும் தொடங்கினேன். என் மகன்களும் என்னுடன் சேர்ந்து சாய் விரதம் இருந்தனர். பாபா நம்மை கைவிட்டுவிடுவாரா என்ன?!

மருத்துவர் குறிப்பிட்ட தேதியில் பி.ஈ.டி.ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் இருந்த கட்டியின் அளவு குறைந்திருப்பது தெரிந்தது. அதனால் அறுவைசிகிச்சை தேவையில்லை என மருத்துவர் கூறி விட்டார். என் பிள்ளைகள் அடைந்த மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவே இல்லை. இன்னும் சில காலம் இவ்வுலகில் வாழ்ந்து பாபாவின் பெருமைகளை எடுத்துச்சொல்லி, என்னால் இயன்றவரை சாயி பக்தியைப் பரப்புவதற்காக பாபா எனக்கு அளித்த வரமாகவே நான் இந்த அற்புதத்தைக் காண்கிறேன்.

சகலமும் சாயி! - அனுபவம் அற்புதம்

கனவில் வந்தார்... கோயில் கொண்டார்!

ஆ.சிவசூரியன், தூத்துக்குடி

ன் பள்ளிப் பருவத்து நண்பர் குணசேகரன். பல்வேறு கட்சிகளில் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தவர். இன்றைக்கு அவர் சாயிபாபா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர். ஆன்மிகப் பாதையில் செல்ல, பாபா அவருக்கு வழிகாட்டி அருளியதற்கு சங்கரன்கோவில் நகரில் கம்பீரமாகத் திகழும் சாயிநாதர் கோயிலே சாட்சி எனலாம். சங்கரன்கோவில் - நெல்லை நெடுஞ்சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது, பாபா ஆலயம்.

ஒரு மாலைப்பொழுதில் ஆரத்தி வேளையில், விசேஷ தரிசனமும் என் நண்பரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் என்னிடம் சொன்னவற்றை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்.

‘‘பத்து வருடங்களுக்கு முன்... சில நாள்களாகக் கனவில் முதியவர் ஒருவர் வருவதும், என்னைப் பார்த்துப் புன்னகைப்பதும் வழக்கமாக இருந்தது. அதேபோல், பேருந்து பயணங்களில் அவரும் என்னுடன் பயணிப்பதுபோன்று ஓர் உணர்வு.  ‘யார் அவர்... என்னை ஏன் தொடர்கிறார்?’ என ஒருவித பயம் தொற்றிக்கொண்டது என்னை.

இதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் ஸ்ரீலஸ்ரீஞானயோகி ரவிதத்தாவைச் சந்தித்தேன். அவரிடம்,  ‘கடந்த சில நாள்களாக ஒரு கிழவர் என்னைத் தொடர்ந்துகொண்டே யிருக்கிறார். ஏன் என்பது புரியவில்லை’ என்றேன். அவர் பதில் சொல்வதற்குமுன் தியானத்தில் ஆழ்ந்தார். அதேநேரம், அங்கிருந்த ஸ்ரீசாயிபாபாவின் சிலையொன்று என் கண்ணில் பட்டது. சிலிர்த்துப்போனேன். ஞானயோகி கண் விழித்ததும், ‘ஸ்வாமி, இவர்தான் என் கனவில் வந்தது’ என்று நான் கூறியதும், ‘இவரா உங்கள் கனவில் வந்தார். நீங்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள். இவர்தான் ஷீர்டி சாயி பாபா. மிகப்பெரிய மகான். இனி உங்கள் வாழ்க்கைப் பாதை மாறப் போகிறது’ என்றார். அன்றைக்கு என்னைப் பற்றிக்கொண்டவர் தான். இதோ இந்த ஆலயம், எனது பணிகள் அனைத்தையும் வழிநடத்துவது பாபாதான்’’ என்றார் கண்ணீர்மல்க.  ஆம். மகான் பாபாவின் திருவருள் குணசேகரனுக்கு கிடைத்தது போல் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

சாயியின் அருள்பெற்ற இன்னோர் அடியார் உண்டு. அவரைப் பார்க்கும் தருணங்களில், சாட்சாத் சாயியையே நேரில் தரிசித்த பரவசம் பொங்கும் எனக்குள். ஏன் தெரியுமா?

- அனுபவங்கள் தொடரும்

அன்பார்ந்த வாசகர்களே!

ஸ்ரீசாயியின் திருவருளால் உங்கள் வாழ்விலோ, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்விலோ பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கலாம். அந்த அற்புத அனுபவங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.  அவற்றில் சிறப்பான அனுபவங்கள் சக்தி விகடன் இதழில் இடம்பெறுவதுடன், அவற்றுக்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. 

அனுப்பவேண்டிய முகவரி:

‘சகலமும் சாயி - அனுபவம் அற்புதம்’ பகுதி, சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2

இ.மெயில் முகவரி: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு