மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஸ்குமார்

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

அஷ்டவக்ரரின் சாபம் தீர்ந்த தலம்

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், செவிடு, குருடு இன்றிப் பிறத்தல்’ என்று பாடிச்சென்ற ஒளவையின் வாக்குப்படி உடலில் எந்தக் குறையும் இல்லாமல் பிறப்பதன் மகிமையும் சிறப்பும் அந்தக் குறை இருப்பவர்களுக்குத் தான் நன்றாகப் புரியும். 

அப்படி உடலில் ஏதேனும் அங்கஹீனத்தோடு பிறந்தவர்களின் குறை தீர்க்கும் திருத்தலம்தான் கூனஞ்சேரி. புள்ளபூதங்குடி, ஆதனூர் ஆகிய இரண்டு திவ்யதேசங்களுக்கும் இடையே அமைந்துள்ள சிவத்திருப்பதி இது. தேவாரத் திருத்தலம் அல்ல என்றாலும், புராணப் புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது.

இந்தத் தலத்திலுள்ள அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அஷ்ட லிங்கங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவோரின் அங்கக் குறைபாடுகள் நீங்கும் என்பது அடியார்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அருகே இருக்கிறது கூனஞ்சேரி. அழகாகக் பராமரிக்கப்பட்ட, பசுமை நிறைந்த சின்னஞ்சிறு கிராமம். மிகப் பெரியதும் அல்லாமல் சிறியதும் அல்லாமல் நடுத்தரமாக இருக்கிறது கயிலாசநாதர் திருக்கோயில். ராஜகோபுரம் இல்லையென்றாலும், பெரிய சுற்றுச்சுவருடன் காணப்படுகிறது. அர்ச்சகர்கள் நாகராஜ குருக்களும் விக்னேஷ் குருக்களும் கோயிலின் தல புராணம் குறித்து நமக்கு விவரித்தனர்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

‘‘முற்காலத்தில் தானவ மகரிஷி என்கிற முனிவர் இருந்தார். குழந்தைச் செல்வத்துக்காக சிவனை நோக்கி தியானம்புரிந்த அவருக்கு மகப்பேற்றை அருளிய ஈஸ்வரன், அதற்காக ஒரு நிபந்தனையும் விதித்தார். தானவர் அறிந்த வேத மந்திரங்களைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அது.

நிபந்தனையை ஏற்றுக்கொண்ட தானவர், தன் வீட்டுத் திண்ணையில் குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய மனைவியும் கருவுற்றார். தாயின் கருவில் இருந்தபடியே வேதங்களைக்கேட்டு, வேத ஞானத்தை அறிந்து கொண்டது குழந்தை. அதுதான் பின்னாளில் அஷ்டவக்ர மகரிஷியாக அவதரித்த திருக்குழந்தை.

ஒருநாள், தானவ முனி வேதபாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பில் ஒரு மாணவன் ஆனந்தமாகத் தூங்குவதைக் கண்டு அவனை எழுப்பி, கடுஞ்சொற்களால் திட்டினார். அப்போது, அவருடைய மனைவியின் வயிற்றில் கருவிலிருந்த குழந்தை, ‘இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படி பாடம் நடத்திக்கொண்டிருந்தால், சிறு பாலகன் தூங்காமல் என்ன செய்வான்?’ என்று கேள்வி கேட்டது. இதைக் கேட்ட முனிவர், அது தன் குழந்தை என்பதையும் மறந்து, ‘பிறக்கும் முன்னரே, அதிகப் பிரசங்கித் தனமாக என்னைக் கேள்விகேட்ட நீ, கேள்விக்குறி போல வளைந்து அஷ்ட கோணல்களுடன் பிறக்கக் கடவது!’ என்று சாபமிட்டார்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

பன்னிரு மாதங்கள் கருவிலிருந்து பிறந்த அந்தக் குழந்தை, ஸ்ரீராமரைப் போல பன்னிரெண்டு வகை ஞானங்களையும் பெற்று, பிறவியிலேயே ஞானயோகியாகப் பிறந்தது. ஆனால், தந்தையின் சாபத்தால் உடலில் எட்டுவித கோணல்களுடன் (முதுகில் கூன், கை கால்கள் வளைந்து நெளிந்து திகழ...) பிறந்த அந்தக் குழந்தையே அஷ்டவக்ர மகரிஷி.

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!


தான் கொடுத்த சாபத்தால் பாதிக்கப்பட்டு, தன் குழந்தை ஊனமாகப் பிறந்ததால் உண்டான வருத்தத்துடன் அரசவைக்குச் சென்ற தானவ மகரிஷி, அங்கே அரசவைப் புலவருடன் ஒரு வாதத்தில் தோற்க நேரிட்டது. இதனால் அவர் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போனது.

சில வருடங்களில் நன்கு வளர்ந்த அஷ்டவக்ரன், தன் தந்தையைப் பற்றி தாயிடம் வினவினான். அவர், அரசவைப் புலவருடன் தன் கணவர் போட்டியிட்டுத் தோற்றுப்போன சம்பவத்தை மகனிடம் விவரித்தார். உடனே அரசவைக்குக் கிளம்பிப்போனான் அஷ்டவக்ரன். அங்குசென்று ‘என் தந்தையுடன் யார் போட்டி போட்டது? அவரை என்னுடன் விவாதத்தில் பங்கேற்கச் சொல்லுங்கள்’ என்று அந்த பாலகன் கூற, வியப்பின் உச்சிக்குப்போன அரசர், சிறுவனின் உறுதி கண்டு, விவாதப்போட்டி நடத்த சம்மதித்தார். பின்னர், ஆஸ்தான புலவருடன் போட்டி தொடங்கியது.

அனைத்து விவாதங்களிலும் வெற்றி பெற்றான் அஷ்டவக்ரன். அதிசயித்துப் போன மன்னர், பொற்காசு  மூட்டைகளைப் பரிசாக வழங்கினார். பிறகு தன் தந்தையைச் சந்தித்து, அவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான் அஷ்டவக்ரன்.  அவனின் கோணலான உடலமைப்பைக் கண்டு கண்ணீர் வடித்த தானவர், ‘தான் கொடுத்த சாபத்துக்கு விமோசனம் கிடையாதா?’ என்று இறைவனிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தார். அவருக்கு, ‘கூனஞ்சேரி என்ற தலத்தில் இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்களை பூஜை செய்துவந்தால், உன் மகனுடைய குறைகள் நீங்கும்’ என்று அருள் வழங்கினார் ஈஸ்வரன்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

இறைவன் அருளியபடி தந்தையும் மகனும் கூனஞ்சேரி வந்து, அஷ்ட லிங்கங்களைப் பூஜிக்க, அஷ்டவக்ரனின் கூனல் நிமிர்ந்தது; குறைபாடுகள் நீங்கியது. இதனால் இவ்வூருக்கு ‘கூனல் நிமிர்ந்த புரம்’ என்றும் பெயர் உண்டு’’ என்று விவரித்தார்கள்.

கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். இங்கே கொடிமரம், நவகிரகம் கிடையாது. கொடிமரம் இல்லாததால் இங்கே உற்சவங்கள் எதுவும் நடைபெறுவதும் இல்லை. எனவே உற்சவ மூர்த்தியும் கிடையாது. அபிஷேகங்கள், பூஜைகள், அர்ச்சனைகள் அனைத்தும் மூலவருக்குத்தான்.

கோயிலுக்குள் நுழைந்ததும், இரண்டு விநாயகர்கள் அருள்புரிய, அதைத் தாண்டியதும் அருள்மிகு கயிலாசநாதர் சந்நிதி. இக்கோயிலில் அருள்மிகு சௌந்தரநாயகி மற்றும் அருள்மிகு பார்வதி என இரண்டு தேவியர் எழுந்தருளியுள்ளனர்.  

ஒரே பிராகாரம்தான். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் சண்டிகேஸ்வரரும் இருக்க, ஈசான்ய மூலையில் அஷ்ட பைரவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எல்லா கோயில்களிலும் பைரவர் மேற்கு பார்த்திருக்க, இங்கே தெற்கு பார்த்திருக்கிறார். முருகன் சந்நிதியும் உள்ளது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்ட மூர்த்தி!

சிவபெருமானை ‘அட்ட மூர்த்தி அழகன்’ என்று திருமுறைகள் போற்றுகின்றன. பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகியவைதான் ‘அட்ட மூர்த்தங்கள்’ எனப்படும். இவை எட்டின் வகையில் இறைவன் காட்சி தருவதால்தான் ‘அட்ட மூர்த்தி’ என்றழைக்கப்படுகிறார்.

இங்கே இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்கள்... பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்களாகும். 

பிரார்த்தனை முறை!

உடல் ஊனம், முதுகில் கூன் போன்ற குறைபாடுகளை உடையவர்கள், தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கே வந்து நல்லெண்ணெயால் அஷ்ட பைரவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து, பின்பு விபூதியால் அபிஷேகம் செய்து எட்டு வகை மலர்களால் (மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி) அர்ச்சனை செய்ய வேண்டும்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி!

‘‘இங்கே அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் மற்றும் விபூதியைபக்தர்கள் வாங்கிச் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்துக் குளிக்க வேண்டும். பின்பு அபிஷேக விபூதியைப் பூசிக்கொள்ள வேண்டும்.. இதுபோல செய்துவந்தால், அவர்களின் உடல் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் என்பது ஆதிகாலம் தொட்டுவரும் நம்பிக்கை’’ என்கிறார் விக்னேஷ் குருக்கள். திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து, அங்கே இருக்கும் அஷ்ட திக்கு லிங்கங்களைத் தரிசிக்க முடியாதவர்கள் கூனஞ்சேரி வந்து இந்த அஷ்ட பைரவ லிங்கங்களை வழிபாடு செய்யலாம். அதே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் குறைபாடு மட்டும் அல்லாது எந்தவித நோய்ப்பிணியும் இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்கு வந்தால் தீரும் என்பது நம்பிக்கை.

கூனஞ்சேரியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களை ரட்சித்துவரும் கயிலாசநாதரையும் அஷ்ட மூர்த்தங்களையும் வணங்கி, குறைபாடு நீங்கி, அவனருளாலே ஆரோக்கியம் பெறுவோம்!  

தொகுப்பு: பிரேமா நாராயணன்

உங்கள் கவனத்துக்கு...

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்றால், அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது கூனஞ்சேரி.

இது மிகச் சிறிய குக்கிராமம் என்பதால், பூஜைக்கு வருபவர்கள், பூஜைப் பொருள்களைக் கையோடு வாங்கிச் சென்றுவிடுவது சிறப்பு. அங்கே எதுவும் கிடைக்காது. கோயில் பூட்டியிருந்தாலும், அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், அங்கே தகவல் கேட்டுக்கொள்ளலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் 11 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை.