Published:Updated:

சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு!

50 அடி தூரத்துக்கு அப்பால் பெண்கள்... வித்தியாசமான துறவு மேலழகர் வழிபாடு...

சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை...  உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு!
சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு!

ங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சலுப்பை கிராமம். சாளுக்கியப் படைகளை சோழப் படையினர் துவம்சம் செய்ததன் நினைவாக 'சாளுக்கிய குல நாசினி'  என்று இந்த கிராமத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர்தான் சுருங்கி 'சலுப்பை' என்று ஆகிவிட்டது. இந்தச் சிற்றூரில்தான் ஸ்ரீ துறவு மேலழகர் அரூபமாகத் தவமிருந்து கொண்டிருக்கிறார். துறவு என்றால் கிணறு என்று பொருள். கிணற்றின் மீதமர்ந்து தவமிருந்த முனிவரை மக்கள் அரூபமாக வழிபடுவதால் இந்தக் கோயில் 'துறவு மேலழகர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் தான் பூஜை செய்த கலசத்துடன் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார். தான் கொண்டுவந்த கலசத்தை எங்கும் தரையில் வைக்காமல் பயணித்துக் கொண்டிருந்தவரின் பாதையில் பெருமாள் கோயில் தென்பட்டது. அதற்கு சற்றுத் தொலைவில் அக்ரஹாரம் ஒன்றும் இருந்தது. 

தான் கொண்டு வந்த கலசத்தைத் தரையில் வைக்கக் கூடாது என்பதால் அதைக் கிணற்று நீரில் மிதக்கும்படி வைத்துவிட்டு பெருமாளை வழிபட்டுவிட்டு தவம் செய்யச் சென்றுவிட்டார்  முனிவர் தவம் செய்துகொண்டிருந்த சமயம் அக்ரஹாரத்துப் பெண்கள் இருவர் தண்ணீர் எடுக்க வந்திருந்தனர். தண்ணீர் இரைக்கக் குடத்தை நீருக்குள் விட்டபோது அது கலசத்தால் தடுக்கப்பட்டு சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க அந்தப் பெண்கள் எட்டிப் பார்த்தனர். அடுத்த கணம் ஒரு பெண் தாமரையாகவும், மற்றொரு பெண் எலுமிச்சைப் பழமாகவும் மாறிப் போனார்கள். நடந்த நிகழ்வுகளைத் தமது ஞான திருஷ்டியின் மூலம் அறிந்த முனிவர் தவத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார். அவரால் பெண்களை மீண்டும் சுய உருவத்துக்கு மாற்ற முடியவில்லை. கிணற்றில் வைத்த கலசத்தையும் வெளியே எடுக்க முடியவில்லை. மக்கள் யாரும் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது என்று நினைத்தவர் கலசத்தோடு அந்தக் கிணற்றை மூடிவிட்டு அதன் மீதமர்ந்து தவம் செய்து சமாதியாகிப் போனார். இந்தச் சமாதி இன்றும் காணப்படுகிறது. அதன் மேல் நினைவு ஸ்தம்பத்தைக் கருங்கல்லால் அமைத்து முனிவரை அரூப நிலையில் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். 

ஸ்ரீ துறவு மேலழகரை இங்குள்ள மக்கள் சிவபெருமானின் வடிவமாக வணங்குகிறார்கள். அதனால் ஸ்ரீ துறவு மேலழகருக்கு எதிரே நந்திகேஸ்வரர் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். துறவு மேலழகருக்கு அபரிமிதமான சக்தி இருப்பதாகக் கூறுகிறார்கள். அவரை நேருக்கு நேர் யாரும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரைக் கூட அவரது நேர் பார்வையிலிருந்து சற்றுத் தள்ளியே வைத்திருக்கிறார்கள். பெண்கள் இருவரை அரூபமாக மாற்றியதால் துறவு மேலழகரை நேரடியாகத் தரிசிப்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சிறு குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் மட்டுமே சந்நிதிக்குள் சென்று வருகிறார்கள். மற்ற பெண்கள் கருவறையிலிருந்து 50 அடி தள்ளி அமைந்திருக்கும் வாயில் மண்டபத்தில் இருந்துதான் வணங்கிச் செல்கிறார்கள். இன்றும் துறவு மேலழகர் தவமிருந்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவு தள்ளித்தான் மக்கள் வசிக்கிறார்கள். 

கோயில் தீர்த்தமாகக் காணப்படும் தாமரைக் குளம் இன்றும் பல நோய்களைத் தீர்க்கும் புனிதத் தீர்த்தமாக நம்பப்படுகிறது. ஸ்ரீ துறவு மேலழகருக்குத் துணையாக வீரபத்திரர், முனியன், மதுரை வீரன் ஆகியோர் கோயிலில் காட்சி தருகிறார்கள். அதனால் தினமும் ஆடு, கோழிகளைப் பலி கொடுப்பதும், மொட்டையடித்துக் காது குத்துதல் என்று எல்லைக் காவல் தெய்வத்துக்குரிய வழிபாடுகளும், கொண்டாட்டங்களும் குறைவின்றி நடந்து கொண்டிருக்கின்றன. இவர்களை வேண்டிக்கொண்டால் துறவு மேலழகரின் தூதுவராக வந்து காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதே கோயிலில்தான் அருள்புரிகிறாள் கங்கை கொண்ட சோழபுரத்தின் வடக்கு எல்லைக் காவல் தெய்வமான துர்கை. இவள் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வெற்றிச் சின்னம். 

கோயிலுக்கு முன்பு ஒரு பிரமாண்டமான யானை ஒன்றின் சிற்பம் காணப்படுகிறது. அதன் தும்பிக்கையில் கையில் பலாப்பழத்துடன் இருக்கும் மனிதன் ஒருவன் காணப்படுகிறான். அருகில் ஒரு நாயின் சிற்பமும் காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் பின்னணியில், திருடன் ஒருவன் இந்த ஊரிலிருந்த ஒரு தோட்டத்திலிருந்து பலாப்பழத்தைத் திருடிச் சென்றதாகவும், அவனை நாய் துரத்தியதாகவும், ஊர் எல்லையை நெருங்கிவிட்ட திருடனை ஒரு யானை தும்பிக்கையால் பற்றித் தூக்கி நாயிடம் ஒப்படைத்ததாகவும் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. 

இதே கோயிலில் குதிரைச் சிலையும் உயர்ந்து காணப்படுகிறது. இந்தக் குதிரை கேரளாவிலிருந்து முனிவருடன் வந்த குதிரையின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். முனிவர் கலச நீருடன் வந்தபோது  அந்தக் கும்பத்துடன் இறைவனும் வந்துவிட்டாராம். இறைவனின் வாகனமான யானையும், குதிரையும் கோயிலுக்கு முன்பு பிரமாண்ட உருவத்தில் சிற்பமாக காணப்படுகின்றன. இந்தக் கோயிலில் இடப்புறத்தில் ஒரு தேவியுடன் விநாயகரும் காட்சி தருகிறார்.

துறவு மேலழகரிடம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தையில்லாத தம்பதியினர் துறவு மேலழகரிடம் வேண்டி குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள். குழந்தை பாக்கியம் பெற்ற ஒரு தம்பதி செய்து கொடுத்த குழந்தை சிலைதான் இன்று கோயிலில்  உற்சவ மூர்த்தியாக வழிபடப்பெறுகிறது. திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்  துறவு மேலழகரைத் தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஆதாரமாக இன்றும் பக்தர்கள் பலர் தினமும் துறவு மேலழகரை வேண்டி அவரது அருள்பெற்றுச் செல்கிறார்கள்.