சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
'தி
ருப்பதிக்குச் சென்று வந்தால், வாழ்வில் நல்ல திருப்பங்கள் நிச்சயம்’ என்பார்கள். இன்றைய பொழுது மட்டுமின்றி, அடுத்தடுத்த பொழுதுகளும் நாட்களும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என நினைக்காதவர்கள் உண்டா என்ன?

அதனால்தான், 'அப்பா ஸ்ரீநிவாசா... இன்னிக்கி இருக்கிற வாழ்க்கையைவிட, இன்னும் மேலான, நல்லதொரு வாழ்க்கையையும் வசதியையும் எங்களுக்குக் கொடு’ என்கிற பிரார்த்தனையுடன் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்தியாவின் பல ஊர்களில் இருந்தும் திருப்பதிக்குச் சென்று வருகின்றனர். அப்படி வேங்கடவனைத் தரிசித்துப் பிரார்த்தித்து வந்த பிறகு, நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு, சகல சௌபாக்கி யங்களுடன் வாழ்பவர்கள் நம் தேசத்தில் ஏராளம். அதனால்தான், திருமலைத் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவோர், வருடத்துக்கு மூன்று நான்குமுறை சென்று வருவோர், வருடக் கணக்கு துவங்குவதற்கு முன்பாகச் சென்று தரிசிப் போர், நினைத்தபோதெல்லாம் சென்று கோவிந்தனை சேவிப்போர் என பக்தர்கள் தினமும் திருமலையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

திருப்பட்டூரின் அற்புதங்களைச் சொல்லி வருகிற இந்தத் தொடரில், திருமலையைப் பற்றி ஏன் சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள்தானே?!

இறை சாந்நித்தியங்கள் நிறைந்த திருப்பட்டூர் திருத்தலம், வெறும் ஊர் அல்ல; கோயில்களும் மக்களும் நிறைந்திருக்கிற சிறிய ஸ்தலம் இல்லை; முனிவர்களும் யோகிகளும் சித்த புருஷர்களும் அடியவர்களும் தவமிருந்து, இறையின் பேரருளைப் பெற்ற புண்ணிய பூமி. படைப்புத் தெய்வமாம் ஸ்ரீபிரம்மனின் இழந்த பதவியையே சிவனார் தந்தருளிய ஒப்பற்ற திருவிடம். இத்தனைப் பெருமைகள் கொண்ட திருப்பட்டூர், இந்தக் கலியுகத்தில் மிக மகோன்னதமான இடத்துக்கு உயரும்; இந்தத் தலத்தில் அடியெடுத்து வைக்கிற அன்பர்கள் அனைவருக்கும், வாழ்வில் நல்ல ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்து, அவர்களை உய்விக்கும் தலம் என எல்லோராலும் போற்றப்படும் என்று ஓலைச் சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓலைச் சுவடிகளில் இப்படியான தகவல்களைக் குறித்து வைத்த தவசீலர் யார் என்று தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு திருப்பட்டூர் எனும் திருத்தலம், தமிழகத்தையும் கடந்து பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களுக்கும் சென்று பரவி, தன் சாந்நித்தியத்தைத் தெளிவுற உணர்த்தி, அங்குள்ளவர்களையும் தன்னிடம் ஈர்த்து வருவதாகச் சொல்கின்றனர், திருப்பட்டூர் கோயில்களின் அர்ச்சகர்கள்.

வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோருக்கு அருள்பாலித்த ஸ்ரீகாசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரின் மகிமைகளையும் மகோன்னதங்களையும் இன்றைக்கு அறிந்திருப்பவர்கள் அநேகம் பேர். ஆனால், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, திருப்பட்டூர் கோயில்களுக்கு நித்தியப்படி பூஜைகள் மட்டுமே நடைபெறும். அந்தப் பூஜையில் கலந்துகொண்டு, ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசிப்பதற்குக்கூட பக்தர்கள் யாரும் வரமாட்டார்களாம்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூட, திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல்தான் இருந்தது. பூஜையில் ஸ்வாமிக்குப் படைத்த நைவேத்தியத்தை பெற்றுக் கொள்வதற்குக்கூட பக்தர்கள் வராத நிலையில் இருந்ததாக, பல வருடங்களாகக் கோயில் பூஜையில் ஈடுபட்டு வந்த, வயதான குருக்கள் ஒருவர் தெரிவித்தார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

பொங்கிப் பிரவாகிக்கிற கங்கையை, ஒரு குவளைக்குள் அடைக்கமுடியாது. மனித னுக்கு இயற்கையாகத் தெய்வம் தந்த திறமையை, எவராலும் மறைக்கவோ முடக்கிப் போடவோ முடி யாது. ஒரு கனிந்த தருணத்தில், ஓர் அற்புதமான பொழுதில், அந்தத் திறமை வெளிப்பட்டே தீரும் என்பது விதி!

'விதியை மதியால் வெல்ல முடியுமா?’ என்று மகான் ஒருவரிடம் கேட்டதற்கு, 'விதியை மதியால் வெல் வதும் விதியே!’ என்று, சூட்சுமமாக இறை நடத்துகிற விளையாடல்களை, சூட்சும மாகவே விளக்கினார் அந்த மகான். அதாவது, விதியை மதியால் வெல்லுகிற விதி இருந்தால், அப்படி எழுதி வைக்கப்பட்டிருந்தால், அது நடந்தே தீரும் என்பதை உணர்த்துகிற, அற்புதமான வரிகள் இவை. இதனால்தான், இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு, 'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக!’ என ஸ்ரீபிரம்மாவுக்கு உத்தர விட்டார் சிவப்பரம்பொருள்.

அன்றைக்கு, இறைவனுக்கு... அடுத்த வஸ்திரம் சார்த்து வதற்கு என்ன செய்வது எனக் கை பிசைந்து தவித்த அர்ச்சகர்கள் உண்டு. இன்றைக்கு ஸ்வாமி, அம்பாள், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீமுருகன், ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர், ஸ்ரீபதஞ்சலி முனிவர் என சகல தெய்வத் திருமேனிகளுக்கும் வஸ்திரம் சார்த்தவும், நைவேத்தியம் செய்யவும் எங்கிருந்தெல் லாமோ அன்பர்கள், தினமும் வந்தவண்ணம் இருக் கின்றனர்.

எது எப்போது வெளிப்பட வேண்டுமோ, அது அந்த தருணத்தில் வெளிப்பட்டே தீரும். குருவருள் கோலோச்சுகிற அற்புதத்தலமாம் திருப்பட்டூர், ஓலைச் சுவடியில் எந்த முனிவரோ சித்தரோ அருளிய படி, மிகப் பெரிய தலமாக, திருப்பதிக்கு நிகராகப் போற்றி வணங்கக் கூடிய ஆலயமாகத் திகழப் போகிற காலம் வந்து விட்ட தாகவே உள்ளுணர்வு சொல்கிறது.

திருப்பட்டூரில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில் களில், ஒவ்வொரு பிரதோஷ மும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் அன்னாபிஷே கம் கார்த்திகையில் தீபம் மார்கழியில் திருவாதிரை என மாதந்தோறும் விழாக்களும் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடந்து கொண் டிருக்கின்றன.

வியாழக்கிழமைகளில், ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீபதஞ்சலி முனிவரின் திருச் சமாதிகளுக்கு வஸ்திரம் சார்த்தி, சமாதிக்கு அருகில் 10 அல்லது 20 நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து தியானம் செய்கிற அன்பர்களைப் பார்க்க முடிகிறது. திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, சென்னை எனப் பல ஊர்களில் இருந்தும் அன்பர்கள் பலரும் குழுவா கத் திருப்பட்டூருக்கு வேன் மற்றும் கார்களில் வந்து இறங்குகின்றனர். கோயிலுக்குள் சென்று, சட்டென்று தனித் தனியே பிரிந்து, கோயிலின் ஓரிடத்தில் அல்லது திருச் சமாதிகளுக்கு அருகில் அல்லது ஸ்ரீபிரம்மாவின் திருச்சந்நிதிக்கு அருகில் என அமர்ந்துகொண்டு, தனக்குள் தன்னைத் தேடுகிற தியானத்தில்  லயிக்கின்றனர்.

தன்னுடைய நட்சத்திர நாளில், குடும்ப சகிதமாக இங்கு வந்து ஸ்ரீபிரம்மாவுக்கு மஞ்சள் காப்பு செய்து பிரார்த்தித்துச் செல்கிற அடியவர்களைப் பார்க்கும்போது, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்கிற சக மனிதர்களைக் காணும்போது, 'திருப்பட்டூர்... திருப்பட்டூர்... திருப்பட்டூர்...’ என உள்ளுக் குள் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறது, மனம்!

திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலிலும் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரின் ஆலயத்திலும் விமரிசையாக நடைபெறுகிற பிரதோஷ பூஜையைத் தரிசிக்க ஏங்குகின்றன கண்கள்.

பிரதோஷ பூஜையைத் தரிசிப்போம், வாருங்கள்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்