சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ர் ஆங்கிலேயன் எந்தக் காரணம் கொண்டும் இந்திய சாதுக்களின் முன்போ, யோகிகளின் முன்போ, ரிஷிகளின் முன்போ அல்லது இந்தியாவில் உள்ள குருமார்களின் முன்போ தரையில் சம்மணமிட்டு உட்காரவேண்டிய அவசியம் இல்லை; ஆங்கிலேயன் என்பவன் பிறப்பால் உயர்ந்தவன்; அடிமை நாடான இந்தியாவில் எவரும் அவனுக்கு நிகரானவர் இல்லை. அப்படி ஓர் ஆங்கிலேயன் இந்திய சந்நியாசியின் முன் சம்மணமிட்டு உட்கார்ந்தால், அது அவனின் தாய்நாட்டுக்குச் செய்யும் அவமரியாதை... இப்படித்தான் திடமாக நம்பினார்கள், இங்கு வந்து அதிகாரம் செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்கள்.

அவர்களுடைய கர்வம், இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்வதைத் தடை செய்தது. இந்தியா ரகசியங்கள் மிகுந்த நாடு என்று அவர்கள் தங்கள் நாட்டுக்குப் போய்ப் பிரசாரம் செய்தார்கள்.

'நீங்கள் இருபது வருடமாக இந்திய ரயில்வேயில் வேலை செய்கிறீர்கள். ஏதாவது ஒரு யோகியைச் சந்தித்திருக்கிறீர்களா?’ என்று ஓர் ஆங்கிலேய அதிகாரியைக் கேட்டதற்கு, 'யோகிகளா? அப்படியென்றால்..? ஏதாவது துஷ்ட வகை மிருகமா?’ என்று பதிலுக்குக் கேட்டார் அந்த அதிகாரி. 'இந்தியாவில் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது? ரயில்வே இன்ஜினா? போர்க் கப்பலா? ஆகாய விமானமா? வேறு ஏதேனும் அரிய கண்டுபிடிப்புகளா? எதுவும் இல்லையே!’ என்று அலட்டல் பேச்சு பேசினார்கள்.

இதையெல்லாம்விட கண்டுபிடிக்கவே முடியாத மனம் என்கிற ஒரு விஷயம் பற்றி, ஆத்மா என்ற விசாரம் பற்றி இந்தியர்களில் பலருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது அவர்களுக்குப் புரியவே இல்லை. ஆனால், ரபேஃல் ஹர்ஸ்ட் என்கிற ஆங்கிலேய பத்திரிகையாளரின் எண்ணம் வேறாக இருந்தது. அவர் ஆங்கில பத்திரிகைகளில் பயணக் கட்டுரை எழுதுவதில் நாட்டம் கொண் டிருந்தார். அதற்காகப் பல இடங்களுக்குப் பயணம் போனார். குறிப்பாக, ஆசியாவைச் சுற்றி வருவது அவருக்குப் பிடித்திருந்தது. இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தன்னுடைய இயற் பெயரை விட்டுவிட்டு, பால் பிரண்டன் என்கிற புனைபெயரில் அவர் கட்டுரைகள் எழுதினார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

##~##
இந்தியாவின் ரகசியங்களை அறிய வேண்டி, இமயமலைச் சாரலிலும், கங்கைக் கரை ஓரங்களிலும், வட இந்தியாவில் பல பகுதிகளிலும் அவர் சுற்றி வந்தார். மந்திரவாதிகளையும், நிர்வாண சாதுக்களையும், மிகப்பெரிய மடாதிபதிகளையும் சந்தித்தார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பு இருந்தது. அநேகமாக எல்லோருமே வியக்க வைத்தார்கள். ஆனால், முழுமையான ஈடுபாடு, 'ஹா..!’ என்ற வியப்பு பால் பிரண்டனுக்கு எவரிட மும் கிடைக்கவில்லை. சென்னைக்கு வந்தார். ரமண மகரிஷி பற்றிக் கேள்விப்பட்டார். எத்தனையோ சாதுக்களைப் பார்த்துவிட்டோம்; இவரும் ஒரு சாது என்ற எண்ணம்தான் ஆரம்பத்தில் அவருக்குள் ஏற்பட்டது. அழைத்துப் போவதாகச் சொன்ன நண்பரை தட்டிக்கழித்தார்.

பிறகு, வேறு ஒரு நண்பர் மூலம் காஞ்சிபுரம் சென்று, அங்கு ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதி பதியாக வீற்றிருந்த ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவாளை தரிசனம் செய்தார். அவரின் அமைதியான முகமும், புன்சிரிப்பும், ஊடுருவிப் பார்க்கும் பார்வையும் பால் பிரண்டனை அசைத்தது.

ஸ்ரீரமண மகரிஷி

மகா பெரியவாளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமை எழுந்தது. தனது மனதில் ஏற்பட்ட விகாரங்கள் எதுவும் எதிரே அமர்ந்திருக்கின்ற இந்த ஞானிக்கு ஏற்பட்டிருக்காது என்ற எண்ணம் திகைக்க வைத்தது. தான் திறந்த மனத்தோடு இந்தியாவைச் சுற்றி வருவதாகவும், எந்த மார்க்கத்தைப் பின்பற்றினால் தனது மனம் உயர்நிலையை அடையும் என்று தவிப்பதாகவும் அவர் மகா பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டார். ''பல சாதுக்களை தரிசித்தேன் என்று சொன்னாயே... அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடு. அவரையே குருவாகக் கொள். அவர் சொல்லும் வழியைப் பின்பற்று. அப்படி எவரும் உன்னை ஈர்க்கவில்லையெனில், உன்னுடைய மனத்தையே நீ கவனம் கொள். உன் ஆத்மாவை தரிசிக்க முயற்சி செய். அது உன்னை வழிநடத்தும்'' என்று மகாபெரியவாள் சொன்னார்.

ஸ்ரீரமண மகரிஷி

''ஏன், என்னை வழிநடத்தக்கூடிய ஒரு குரு எனக்குக் கிடைக்கக்கூடாதா? அவரை அடைய நீங்கள் எனக்கு வழிகாட்டக்கூடாதா?'' என்று இரைஞ்சலாக, பால் பிரண்டன் கேட்டார். எதிரே அமைதி நிலவியது. சிறிது நேரம் மகாபெரியவாள் எதுவும் பேசவில்லை. பிறகு, சன்னமான குரலில் அவர் சொன்னார்... ''இந்தியாவில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் காசியில் இருக்கிறார். அவர் யாரையும் சந்திப்பது இல்லை. இன்னொருவர் தெற்கே, திருவண்ணாமலையில் இருக்கிறார். அவரை நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவர் மிகப் பெரிய ஞானி!''

''ரமண மகரிஷிதானே? அவரிடம் அழைத்துப் போவதாக ஒரு நண்பர் சொன்னார். நான்தான் அவரைப் பற்றித் தெரியாமல், மறுத்துவிட்டேன்'' என்றார் பால் பிரண்டன்.

''அப்படியானால் ஒன்று செய். உன் பயணத் திட்டத்தை மாற்றி, அவரிடம் போய் வா. அவரைச் சந்திக்காமல் இந்தியாவை விட்டுப் போக மாட்டேன் என்று எனக்கு உறுதி கொடு'' என்று அந்த ஆங்கிலேயரிடம் மகா பெரியவாள் சத்தியம் கேட்டார். நிச்சயம் போய் சந்திப்பதாக பால் பிரண்டன் உறுதி அளித்தார். ஒரு மகத்தான ஞானியிடம் இன்னொரு மகத்தான ஞானி ஓர் ஆங்கிலேயரை வழியனுப்புகிறார். அந்த ஆங்கிலேயரால், தெற்கே வாழும் அந்த மகரிஷியின் பெருமை உலகம் எங்கும் தெரியப்படப் போகிறது. அந்த ஆங்கிலேயரின் கட்டுரையால் பல பேர் ஈர்க்கப்பட்டு, திருவண்ணாமலைக்கு வரப் போகிறார்கள்.

அவர்கள் வெறுமே வேடிக்கை பார்க்க வராது, இந்தியாவினுடைய ஆழ்ந்த ஞானத்தை, இந்தியாவினுடைய தேடலில் கண்டுபிடிப்பான ஆத்மவிசாரத்தை அறிந்து கொண்டு, அது பற்றிப் பேசி, அதிகம் எழுதி, இன்னும் நிறைய மக்களுக்கு, ஐரோப்பாவின் பல்வேறு திசைகளுக்கு இதைப் பரப்பப் போகிறார்கள். அதற்கு மூல காரணமாக இந்த பால் பிரண்டன் இருக்கப் போகிறார். அவர் திருவண்ணாமலை விஜயம் இதை நிகழ்த்தப்போகிறது.

இந்தியா ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடு, அங்குள்ள மக்கள் ஏழைகள், ஆசை மிகுந்தவர்கள், சில்லரைக் காசுகளில் அவர் களை வாங்கிவிட முடியும் என்றெல்லாம் ஆங்கிலேயர் கொண்டிருந்த தவறான அபிப்ராயங்கள் உடைந்து, இந்தியாவை நோக்கிக் கூப்பிய கரங்களோடு வரப் போகிறார்கள் என்று மகா பெரியவாளுக்குத் தெரிந்திருந்தது.

ஸ்ரீரமண மகரிஷி

சிறிய பாறாங்கல்லைப் புரட்டி மிகப் பெரிய நதிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததுபோல, மகா பெரியவாள் சர்வ சாதாரணமாக ஒரு மகத்தான காரியத்தைச் செய்தார். திருவண்ணாமலையில் ஏற்றி வைக்கப்பட்ட தீபத்தால் உலகமெங்கும் ஒளிபெறக்கூடிய ஒரு கால கட்டம் வந்துவிட்டது. சத்தியம் சத்தியத்தைக் கொண்டாடி, அந்தச் சத்தியத்தை உலகிலுள்ள பல பேர் மனதில் ஏற்றி வைத்தது.

'நீங்களே எனக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடாதா?’ என்று அந்த ஆங்கிலேயர்  கெட்டிக்காரத்தனமான ஒரு கேள்வியை மகா பெரியவாளிடம் கேட்டார்.

''நான் உன்னை எப்படிச் சீடனாக ஏற்றுக் கொள்வது? இப்போதெல்லாம் நான் மூன்று அல்லது நான்கு மணி நேரமே தூங்குகிறேன். அப்படிப்பட்ட காலகட்டத்தில் உன்னை அருகே வைத்துக்கொண்டு, உன்னுடைய கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்கு விதிக்கப் பட்ட வேலைகள் வேறு. நீ, நான் சொன்னபடி மகரிஷியைப் போய் பார். நீ தேடுவதை அடைவாய்'' என்று ஆசீர்வதித்தார் பெரியவா.

தென்னிந்திய நண்பருடன் புகைவண்டி ஏறி, திருவண்ணா மலைக்கு வந்த பால் பிரண்டன் ஒரு சினிமாவைப் போல, தான் திருவண்ணாமலையில் கண்ட காட்சிகளை விவரிக்கிறார்.

இன்று இருப்பது போலத் தார்ச் சாலை இல்லை. கோயிலும், கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் வீடுகளும், மடங்களும் இருந்தன. மற்ற இடங்களெல்லாம் தோப்புகளும், புதர்களுமாய்க் காட்சி அளித்தன. புழுதி நிறைந்த மண் சாலையில் ஒற்றை மாட்டு வண்டியில் அவர்கள் ரமண ஆசிரமம் நோக்கிப் பயணித்தனர். மக்கள் மிகக் குறைவான உடையே உடுத்தியிருந்தார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில மனிதர்களே தென்பட்டனர். ரமணாச்ரமம் அடைந்ததும், கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்த இளைஞன், ரமணாச்ரமத்தைச் சுற்றி வேலை செய்து கொண்டிருந்த பல மனிதர்கள் என்று பலரை வியப்போடு பார்த்தார் பால் பிரண்டன்.

ஒரு ஹாலில் வெள்ளை வெளேரென்ற சோபாவில் உட்கார்ந்து கொண்டிருப்பவரே மகரிஷி என்று புரிந்துகொண்டார். மகரிஷிக்கு அருகே குமிட்டியில் இருந்து வாசனையான புகை எழுந்துகொண்டிருந்தது. தென்னிந்தியர்கள் நிறம் போல் இல்லாது, கோதுமை உடைத்த நிறமாக மகரிஷியின் உடம்பு இருந்தது. அவருடைய உடல் அமைப்பு ஐரோப்பியர்களைப் போல் இருந்தது. இவர்கள் வந்ததைத் திரும்பிப் பார்த்து விட்டு, மகரிஷி மறுபடியும் தொலைநோக்கில் பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் தன்னை நோக்கித் திரும்புவார் என்று ஆவலோடு, தான் கொண்டு வந்த பழங்களை அருகே வைத்துவிட்டு பால் பிரண்டன் காத்திருந்தார். நேரம் கடந்தது. மகரிஷி திரும்பவேயில்லை. இவர் நடிக்கிறாரா என்ற வழக்கமான மேற்கத்திய குறுக்கு எண்ணம் பால் பிரண்டனுக்கு வந்தது.

- தரிசிப்போம்...