Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வைணவர்களில் ஆண்-பெண் இருபாலாருக்கும் பஞ்ச சம்ஸ்காரம், பரன்யாசம் அல்லது ப்ரபத்தி செய்து வைக்கின்றனர். சிவ வழிபாட்டில் உள்ளவர்களுக்கும் (சைவர்களுக்கு) இது போன்ற நியதிகள் உண்டா?

- ஜெயந்தி, புவனேஸ்வர்

##~##
பரம்பொருளை எந்த இறைவடிவத்திலும் வழிபடலாம். விருப்பத்துக்கு ஏற்ற இறைவடிவம் தேர்ந்தெடுக்கப்படும்போது, இறைவனுக்கான நமது பணிவிடைகளில் ஒட்டுதல் அதிகம் இருக்கும்.

வைஷ்ணவம், சைவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் ஆகியவற்றில் சம்ஸ்காரங்கள் உண்டு. இறையுருவத்துக்கு ஏற்ப சம்ஸ்காரங்களில் மாறுபாடு தென்படும். சிவ தீ¬க்ஷயும், பஞ்சாக்ஷர மும் சைவத்தில் உண்டு. சக்தி தீ¬க்ஷயும், சக்தி பஞ்சாக்ஷரமும், பஞ்சதசாக்ஷரீ போன்ற மத்திரங்களும் சாக்தத்தில் உண்டு.  வேதத்தில் ஒலிக்கும் நம:சிவாய என்கிற மந்திரம் பஞ்சாக்ஷரமாக உருமாறி, சைவத்தின் தரத்தை உயர்த்துகிறது.

இப்படி, விருப்பப்பட்ட தந்திரத்தை அதாவது தனி வழிபாட்டு முறையை ஏற்கும்போது குரு-சிஷ்ய வடிவில் தீ¬க்ஷ, மந்திரோபதேசம், ஸஸ்தாரங்கள் பெறுவது, அவைகளின் சட்ட திட்டத்தில் ஒன்று.

சூரபத்மனை வதைத்த முருகப்பெருமான் அவனுக்கு நற்கதி அளித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஏற்றதாகப் படித்திருக்கிறேன். ஆனால்... சூர சம்ஹாரத்துக்கும் முன்னதாகவே மயிலின் மீது ஏறி முருகன் உலகை வலம் வந்தார் என்கின்றன புராணங்கள். எனில், சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?

- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்

அத்தனை உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கும் பரம்பொருள் முருகப்பெருமான். அவர், ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றியவர்; பிறந்தவர் அல்ல. பிறப்பும் இறப்பும் அற்றவர். அவர், எந்த வேளையிலும் மயில் வாகனத்தில் தோன்றலாம்.

ஒருவனது உயிர் பிரிந்ததும் பூத உடல் மறைந்துவிடும். கண்ணுக்குப் புலப்படாத சூட்சும வடிவில் அவனது ஆன்மா இருக்கும். அதுதான் அழியாத பொருள். சூரன் உயிர் பிரிந்தது. பூத உடல் மறைந்தது. சூட்சும வடிவம், வாகனமான மயிலில் ஒன்றியது. ஸாரூப்யம், ஸாமீப்யம்,

ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளில்... மயிலோடு சாயுஜ்யத்தை அளித்தார் முருகப்பெருமான். இப்போது, அவன் மயில் வடிவில் நமக்குத் தென்படுகிறான் என்றே அதற்குப் பொருள். உயிரினங்களில் நஞ்சை உமிழ்ந்த தாரகனை, நஞ்சை அழிக்கும் மயிலில் இணைத்தார் முருகப்பெருமான் என்று சொல்வது பொருந்தும்.

சூரபத்மன் இறக்கும் வரை வாகனம் இல்லாமல் இருந்து, பிறகு கிடைத்தது என்று, மனிதப் பிறவியின் சாதாரண சிந்தனையை இந்த இடத்தில் செயல்படுத்தக் கூடாது. 'உலகையே உலுக்கிய தீய சக்தியையும் அருள்பாலித்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்’ எனும் முருகனின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கத்தில் இந்த நிகழ்வு விளங்குகிறது.

வேதம் அறிமுகம் செய்த உயிரினம் மயில் (ஸெளரீ பலாக்ர்ச் யோமயூர:). வேதப்பொருள் (முருகன்) அதனுடன் என்றென்றும் ஒன்றியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. புராணங்களைத் தெரிந்து கொள்வதில் தனி அணுகுமுறை உண்டு. கதையில் ஒளிந்திருக்கும் தத்துவத்துக்கே முதலிடம் உண்டு. அவனது விளையாட்டிலும் செயல்பாட்டிலும் ஒளிந்திருக்கும் குறிக்கோளை உணர வேண்டும். பாமரர்களை ஈர்க்க கதை வடிவம் தேவைப்படுவதால், அதன் போக்கு விறுவிறுப்புடன் அமைந்திருக்கும்.

மோகினி அவதாரத்தில் அமுது பரிமாறும்போது, அரக்கன் ஒருவன் அமுதைப் பருகினான். மோகினி அதைக் கவனித்து, பாம்பாக மாறிய அவனை கரண்டியால் துண்டித்தாள். ஒருவன் இருவரானான். அவ்விருவருமே நவக்கிரகத்தில் இணைந்த ராகு- கேதுக்கள் என்ற தகவல் உண்டு.

வேதம் ராகுவை அறிமுகம் செய்தது. வேத கால வேதம் ஓதுபவர்கள், தினமும் மூன்று வேளை ராகு-கேதுவுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அப்படியிருக்க, பாற்கடலை கடைவதற்கு முன்பு ராகு-கேது இல்லை என்றாகுமா? வானவியல், ராகு சாரத்தை வரையறுத்துக் கூறும். உலகம் தோன்றிய நாளிலிருந்து கிரகணமும் தொடங்குகிறது.

காயத்ரீயை விஸ்வாமித்திரர் வெளியிட்டதாக புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலிருந்தே காயத்ரீ ஜபம் தொடர்கிறது. கங்கையை வரவழைத்தவன் பகீரதன் என்று புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலேயே கங்கை பற்றிய தகவல் உண்டு. (கங்காயமுறயோர்மத்யே...)

வேதத்தின் விளக்கவுரையாக புராணம் செயல்படுவதால், ஒரு கதையோடு அதன் தொடர்பை சிறப்பித்துக் காட்டும். யுகத்துக்கு யுகம் புராணக் கதைகளில் மாற்றம் உண்டு. வால்மீகி இயற்றிய ராமாயணம், மற்ற மொழிகளில் பல மாற்றங்களுடன் இருப்பது கண்கூடு. ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் ஆராயாமல், முன்னும் பின்னுமான தகவல்களையும் திரட்டி விரிவாக அதை அணுகும்போது உண்மை விளங்கும்.

முன்னோர் திதிக்காக சமைக்கும் பெண்கள், ஈரத் துணியுடன் சமையலில் ஈடுபடுவது உண்டு. இதன் தாத்பரியம் என்ன? முதல் நாள் மடி உலர்த்திக்கொண்டு, அதை உடுத்தியபடி சமைப்பது தவறா?

- பிரேமா பரசுராமன், சென்னை-18

முதல் நாள் மடி உலர்த்தி, அதை உடுத்திக்கொண்டு சமையல் செய்வது தவறாகாது. மாற்று மடி இல்லாத நிலையில், ஈரமான மடியை 7 தடவை உதறி, காற்றில் படவைத்துக் கட்டிக்கொண்டு செயல்படலாம். இக்கட்டான சூழலில், அவசர காலத்தில் கடைப்பிடிக்கும் பரிந்துரை. அதை பொது நியமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

மடியோடு செயல்பட வேண்டிய மற்ற காரியங்களில், முதல் நாள் மடி உலர்த்தி செயல்படுவது உண்டு. மடியில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, ஈரமான ஆடையுடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைய தினம் நனைத்து உலர்ந்ததோ உலராததோ அதைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கட்டளையிடாது.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சாஸ்திரத்தின் அணுகுமுறை அலாதியானது. அன்று பயன்படுத்தும் தயிரும் நெய்யும் முன்னதாகவே தயாராகிவிடும். அதைப் பயன்படுத்துவது உண்டு. அதேபோன்று, அன்று நெல்லைக் குத்தி அரிசியாக்கி சமைக்க இயலாது. உமி, வரட்டி, சிரா போன்றவற்றையும் அன்றைக்கு தயார் செய்ய இயலாது.  கடையில் வாங்கிய பழம், தேங்காய் போன்றவற்றை ஜலம் விட்டு சுத்தமாக்கி எடுத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் நெய், பால், எண்ணெய் போன்றவற்றை ஜலம் விட்டு சுத்தம் செய்யாமல் ஏற்கச் சொல்லும்.

ஒரு பொருளின் தரம் குறைவதற்கு அல்லது அதன் அழிவுக்கு சாஸ்திரம் துணை போகாது. நீராட இயலாத ஒருவனை நீராடியவனாக மாற்ற, ஒருவன் தலைமுழுகி அவனைத் தொட வேண்டும். இப்படி 10 முறை தலை முழுகித் தொட்டுவிட்டால், நீராடாதவன் (நீராட இயலாதவன்) மடியாகிவிடுவான் என்று சாஸ்திரம் சொல்லும். முடியாதவனை நீராட வைத்து, அவனது சுகாதாரத்தை அழிக்காது.

நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவள் ஈரத் துணியுடன் சமையலில் ஈடுபட்டால், அவளது சுகாதாரம் கெட்டுவிடும். உடல் ஆரோக்கியத்துக்குக் குந்தகம் இல்லாத வகையிலேயே தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை அமைந்திருக்கும். ஈரத் துணியோடு செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அன்று அதிகாலையில் நீராடி, ஈரத் துணியை உலர்த்திவிட்டு, முற்றிலும் உலர்ந்த பிறகு அதைக் கட்டிக்கொண்டு சமையல் செய்யலாம். திதிச் சமையலுக்கு கால அவகாசம் நிறைய இருக்கும்போது, ஈரத் துணியை அணிவது தவறு.  ஈமச் சடங்கில் ஈடுபடுபவன் ஈரத் துணியோடு இருப்பான்; மாற்றுத் துணிக்கு இடமில்லாத நிலை.

ஈரத் துணி மடியானாலும் அவனுக்கு மடி இல்லை. அவன் சுத்தமானால் மட்டுமே அவன் கட்டிய துணி சுத்தமாகும்.

சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கிறேன். இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை போன்ற தினங்களில், அந்தந்த தெய்வங்களுக்குரிய விரதங்களை அனுஷ்டிக்கலாமா?

- பி.செல்லப்பா, மதுரை

வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை போன்ற விரதங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மாலை போட்டுக்கொள்வது சம்பிரதாயம்; விரதங்கள் கடைப்பிடிப்பது தர்மசாஸ்திரம். ஆகையால், விரதங்களை விடக் கூடாது.

மாலை போட்ட பிறகு, பல கோயில்களுக்குச் சென்று, மாறுபட்ட தெய்வங்களை வழிபடுவது உண்டு. நம் முன்னோர் நினைவுநாளை நடைமுறைப்படுத்துவது உண்டு. அதுபோன்று அலுவலகம் செல்வதும், பெரியோர்களைச் சந்திப்பதும் வழக்கம்போல் நிகழும். நமது கடமைகளைப் புறக்கணித்தால், ஐயப்ப விரதம் முழுமை பெறாது. கடமைகளிலும் ஐயப்பன் இருக்கிறார். அது அறம். அது ஐயப்ப வழிபாட்டிலும் அடங்கும் என்ற எண்ணம் உயர்ந்தது.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு