Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

பிரீமியம் ஸ்டோரி
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'பாஸ்கராய வித்மஹே மஹத்வஜாய தீமஹி
தந்நோ ஆதித்யாய ப்ரஜோதயாத்’

என்று மேடையில் இருந்த உபந்யாசகர் சொன்னதும், கீழே அமர்ந்திருந்த பலரும் கிழக்கு நோக்கி வணங்கினர். என்னுடன் வந்திருந்த பரமசாமி, ஒன்றும் புரியாமல் திருதிருன்னு முழிச்சாரு!

அவரிடம், ''கவலைப்படாதீங்க. சூரியனை வணங்கறதுக்கான மந்திரத்தைத்தான் அவர் சொல்றார். அதைக் கேட்டுட்டுத்தான் எல்லாரும் சூரியனை வணங்கினாங்க. இதுபத்தி, அப்புறமா விளக்கமா சொல்றேன்'' என்றேன் சன்னமான குரலில்.

##~##
கூட்டம் முடிந்து, சுண்டலை வாங்கிக்கொண்டு, கோயில் பிராகாரத்தைச் சுற்றி வந்தபோது, 'இப்ப சொல்லுங்க’ என்று கேட்டார் பரமசாமி. ''பார்த்தீங்களா... இந்தக் கோயில்ல எவ்வளவு பெரிய சுற்றுப் பிராகாரம். ஒருமுறை சுற்றி வந்தாலே, ஒரு கிலோ மீட்டர் நடந்ததுக்குச் சமம். நல்ல காற்று, நந்தவனப் பூக்களோட வாசனை, களைப்பு தெரியாம இருக்கறதுக்கு, சுண்டல்- பொங்கல்!'' என்று நான் சொல்ல... சட்டென்று பரமசாமி குறுக்கிட்டு, ''அதெல்லாம் இருக்கட்டும். மேடையில அவர் சொன்ன இந்தி ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்?'' என்று விடாப்பிடியாகக் கேட்டார்.

''சரியாப் போச்சு! அது இந்தி இல்லீங்க, சம்ஸ்கிருதம். அதிகாலைல சூரிய வழிபாடு செய்ய நினைக்கிறவங்க, இந்த மந்திரத்தைச் சொல்லி, சூரிய நமஸ்காரம் பண்ணுவாங்க. நம்ம மகாகவி பாரதியார் கூட, 'பாஞ்சாலி சபதம்’ புத்தகத்துல, 'செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்  எங்களறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர் நல்ல மங்களம் வாய்ந்த சுருதிமொழி’ன்னு தெளிவாச் சொல்லியிருக்கார். இதைத்தான் அந்தச் சொற்பொழிவாளரும் சொன்னார். செங்கதிர்த்தேவன், காய்கதிர்ச் செல்வன், வெய்யோன், ஞாயிறு, செஞ்சுடரோன், கதிரவன், பாஸ்கரன்னு சூரியனுக்கு நிறையப் பெயர்கள் உண்டு. அதனாலதான் 'பாஸ்கராய’ன்னு அந்த ஸ்லோகம் ஆரம்பிச்சுது'' என்றேன்.

சுண்டல் தீர்ந்ததும், அடுத்த கேள்வியை எடுத்து வைத்தார் பரமு. ''ஆமாம், சூரியனை வணங்கினால் அவர் நமக்கு என்ன கொடுப்பார்?'' என்றார்.

''மகாபாரதத்தில் பாண்டவர்களும் பாஞ்சாலி யும் காட்டுக்குச் சென்றபோது அட்சயபாத்திரம் என்ற அமுதசுரபியைத் தந்தவர் சூரிய பகவான். ராமாயணத்தில், ஸ்ரீராமனைச் சூரிய வம்சத்தில் வந்தவன் என்றே குறிப்பிடுகிறார் வால்மீகி. கொடையாளி கர்ணனை, குந்திதேவிக்கு வழங்கியவன் சூரிய பகவான்தான்...'' என்று நான் சொல்லிக்கொண்டே வர... அவர் இடையில் புகுந்து, ''நீங்க சொல்றதெல்லாம் புராண காலம். இன்னிக்கு நமக்கு சூரியன் என்ன தர்றார்னு சொல்லுங்க'' என்றார்.

''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? மாற்று எரிசக்தியே சூரியன்தான்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. சோலார் எனர்ஜிதான், எதிர்கால உலகத்தைக் காப்பாத்தப் போற மின்சக்தி!

'ஏ சூரிய பகவானே!
நீ குந்திதேவிக்குக் குழந்தையும் தருகிறாய்
என் சோலார் வாட்சுக்கு சாவியும்
கொடுக்கிறாயே!’
-ன்னு கமல்ஹாசன் கவிதையே

எழுதியிருக்காரே!'' என விவரித்தேன்.

ஆக, நாமெல்லோரும் கண் கெடுவதற்கு முன் சூரிய நமஸ்காரம் செய்துவிடுவோம்... என்ன, சரிதானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு