Published:Updated:

சனங்களின் சாமிகள் - 14

சனங்களின் சாமிகள் - 14
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 14

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 14

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 14
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 14

சில மனிதர்களின் அடிப்படை குணங்கள் எப்போதும் மாறுவதில்லை. சமயத்தில் அது, தன் முகத்தைக் காட்டும் போதுதான், `இத்தனை நாள் நமக்கு இனிமையானவனாக, நெருக்கமானவனாக இருந்தவனா இவன்?’ என மலைத்துப் போவோம். அந்த நிலை மந்திரமூர்த்திக்கும் ஏற்பட்டது.

புதியவன், மந்திரமூர்த்தியிடம் பணிவாக இருந்தான்; இட்ட வேலைகளைச் சிறப்பாகச் செய்தான். குருவுக்கு ஏற்ற அணுக்கத் தொண்டன் என்கிற நிலை வரை உயர்ந்தான். மெள்ள மெள்ள மந்திரமூர்த்தியின் அத்தனை மந்திர வித்தைகளையும் கற்க ஆரம்பித்தான். கல்வி, ஒரு மனிதனைப் பண்படுத்தத்தானே தவிர, கர்வம்கொள்ளவைக்க அல்ல. இது பலருக்குப் புரிவதில்லை. வேறு ஒருவருக்குத் தெரியாத கல்வியைத் தான் கற்றுவிட்டோம் என்கிற உணர்வே தலைக்குமேல் ஒரு வட்டம் உதித்துவிட்டதாகப் பலரை நினைக்கவைத்து விடுகிறது. அந்த ஆணவம், புதியவனையும் பிடித்துக்கொண்டது. அந்தத் தலைக்கனம் ஒருநாள் குருவையே சீண்டிப்பார்க்கச் செய்தது.

ஏதோ ஒரு பாடம்... அது தொடர்பான உரையாடல். மந்திர மூர்த்திக்கும் புதியவனுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடல் மெள்ள மெள்ள விவாதமாக மாறிக்கொண்டிருந்தது. விவாதம் சாதி குறித்த பேச்சாகத் திரும்ப, புதியவன், குரு என்றும் நினைக்காமல், மந்திரமூர்த்தியின் சாதியைக் கிண்டலாகப் பேசினான். மந்திரமூர்த்திக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. ஆனாலும், கற்றவன், பண்பட்டவன் அல்லவா அவன். அதிலும் அவன் இருப்பது குருஸ்தானம். ஒரே வாசகத்தோடு தன் கோபத்தையெல்லாம் மூட்டைகட்டிவைத்தான். ``இனிமேல் உனக்கு இங்கு இடமில்லை... போய்விடு.’’ அடங்காக் கோபத்தோடும், பெரும் வன்மத்தோடும் கிளம்பிப்போனான் புதியவன்.

சனங்களின் சாமிகள் - 14

திருச்செந்தூரில் இருந்த தலைவர் செம்பாரனுக்கு ஏழு ஆண் மக்கள், ஒரு பெண். மகளின் பெயர் சோணமுத்து. பெயருக்கு ஏற்ப முத்தைப்போலப் பிரகாசிக்கும் பேரழகு. மகள் சோணமுத்துவை பார்த்துப் பார்த்து வளர்த்தார் செம்பாரன். வீட்டுக்கு ஒரே செல்ல மகள். கூடப் பிறந்த சகோதரர்கள் எழுவர். ஓர் இளவரசியைப்போல் வளர்ந்தாள் சோணமுத்து.

அது ஒரு காலைப்பொழுது. சூரியனின் வெப்பம் அதிகரித்திருக்காத அழகான இளம் காலை அது. சோணமுத்துவுக்கு தாமிரபரணியில் நீராடுவது என்றால் கொள்ளைப் பிரியம். தன் தோழிகளுடன் திளைக்கத் திளைக்க ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். எதிரே அழுக்குத்துணிகளை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆறு நோக்கி வந்துகொண்டிருந்தான் மந்திரமூர்த்தி. அவளைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான். `அடடா! இப்படி ஓர் அழகா? இத்தனை நாள்களாக இவள் எங்கேயிருந்தாள்... என் கண்ணில் எப்படிப் படாமல் போனாள்... யார் இவள்?’ அடுக்கடுக்காக மந்திரமூர்த்தியின் மனதில் கேள்விகள் எழுந்தன. ஆனாலும், அவனால் தன் கண்ணை அவளைவிட்டு அப்படி இப்படித் திருப்ப முடியவில்லை. அந்தக் கணமே அவளை அழைத்துக்கொண்டு எங்காவது ஏகாந்தமாகப் போய்விட மாட்டோமா என்றிருந்தது.

சோணமுத்துவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். தன் தோழிகளுடன் எதையோ உரையாடியபடி நடந்துவந்தாலும், அவளாலும் அவனுடைய கண்ணைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. `யார் இவன்... பார்த்தால் துணி துவைக்கும் தொழில் செய்பவன் போல் இருக்கிறான்... ஆனால், அவனிடம் இருக்கும் அந்த வசீகரம்... அடடா, என்ன உயரம், என்ன கம்பீரம், அவன் கண்கள்தான் எத்தனை கூர்மை...’

மந்திரமூர்த்தி வண்டியிலிருந்து இறங்கினான். வண்டியிலிருந்து ஓர் அழகான சேலையை எடுத்தான். `பெண்ணே...’ என்று சோண முத்துவை அழைத்தான். அவள் நின்றாள். தோழிகளும் தயக்கத்துடன் நின்றார்கள். ``உன் பெயர் என்ன?’’ எனக் கேட்டான் மந்திரமூர்த்தி.

``சோணமுத்து. செம்பாரனாரின் மகள்.’’

``நல்லது. அழகான பெயர். இந்தா... இதை வாங்கிக்கொள்!’’ தன் கையில் இருந்த சேலையை எடுத்து நீட்டினான். அவன் நின்ற தோரணை, அழுத்தமாக வெளிவந்த சொற்கள் எல்லாம் சேர்ந்து அவளை மறுவார்த்தை பேசவிடாமல் தடுத்தன. தன் இரு கைகளையும் நீட்டி, சேலையை வாங்கிக்கொண்டாள். வீடு நோக்கித் தோழிகளுடன் நடந்தாள். சோணமுத்துவுக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருந்தது... அந்தச் சேலையில், அவளை வசியம் செய்யும் மந்திர மையைத் தடவியிருந்தான் மந்திரமூர்த்தி. கண் பார்வையில் இருந்து அவள் மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 14

சோணமுத்து வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு நிலைகொள்ளவில்லை. வழியில் மந்திரமூர்த்தி கொடுத்த சேலை நினைவுக்கு வந்தது. ஒரு தனியறைக்குப் போய் அந்தச் சேலையை விரித்துப் பார்த்தாள். அந்தச் சேலையில் அச்சு அசலாக அவளுடைய உருவம் வரையப்பட்டிருந்தது. கூடவே... மந்திரமூர்த்தியின் வடிவமும் வரையப்பட்டிருந்தது. சோணமுத்து, ஆவல் பொங்க அந்தச் சேலையை எடுத்து, உடுத்திக்கொண்டாள். அந்தக் கணம் முதல் அவள் நினைவெல்லாம் மந்திரமூர்த்திதான். ஏதோ பல ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்ததுபோன்ற உணர்வு.

இப்போதே அவனைப் பார்க்க வேண்டும், பல விஷயங்களைப் பேசித் தீர்க்க வேண்டும் என்கிற மயக்கம். சரி... அவனை வெறுங்கையோடு எப்ப டிப் பார்ப்பது? ருசியாக எதையாவது சமைத்து, எடுத்துப் போனால் மகிழ்வான் அல்லவா!

சனங்களின் சாமிகள் - 14

சமையற்கட்டுக்குப் போனாள். சம்பா அரிசியை எடுத்துச் சோறு சமைத்தாள். ஆட்டுக்கறியை வறுத்தாள். கோழி வறுவல் வைத்தாள். கருவாட்டுக் குழம்பு, மீன் பொரியல் செய்தாள். எல்லாவற்றையும் ஏழடுக்குச் சட்டியில் அழகாக அடுக்கினாள். அதைக் கையோடு எடுத்துக்கொண்டு மந்திரமூர்த்தி யின் வீடு நோக்கிப் போனாள். அவன், அவளைப் பார்த்துத் திகைக்கவில்லை. உண்மையில், அவள் எப்போது வருவாள் என்றுதான் காத்திருந்தான். இருவரும் ரொம்ப நாள் பழகியதுபோல் சிரித்துப் பேசினார்கள். ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார் கள். தாம்பூலம் போட்டுக்கொண்டார்கள். அந்தப் பொழுது அற்புதமாகக் கழிந்தது. அன்றோடு அந்தச் சந்திப்பு முடிந்து போய்விடவில்லை. தொடர்ந்தது. பல நாள்கள்... பல இரவுகள் மந்திரமூர்த்தியைச் சந்தித்தாள் சோணமுத்து.

மந்திரமூர்த்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பனைமரம் இருந்தது. அதில் ஏறி, அவ்வப்போது மந்திரமூர்த்தியை வேவு பார்ப்பது புதியவனின் வழக்கம். மந்திரமூர்த்தியை பழிவாங்க தருணம் எதிர்பார்த்திருந்த புதியவனுக்கு அன்றைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பனைமரத்தில் ஏறியபோது, ஜன்னல்வழியே அந்தக் காட்சி தெரிந்தது. `கட்டிலில் படுத்திருப்பது யார்? மந்திரமூர்த்தி. உடன் படுத்திருப்பது... அட... இது செம்பாரனின் மகள் சோணமுத்து அல்லவா! இப்படிப் போகிறதா கதை?’ இதைவிட மந்திரமூர்த்தியைப் பழிவாங்க அரிய சந்தர்ப்பம் வேறு உண்டா என்ன? மரத்தி லிருந்து கீழே இறங்கினான் புதியவன்.

சோணமுத்துவின் சகோதரர்களைக் கண்டு விஷயத்தைச் சொன்னான். முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. புதியவன் திரும்பத் திரும்பச் சொன்னதும், போய்த்தான் பார்த்துவிடுவோமே என முடிவு செய்தார்கள். மறுநாள் அவனுடன் கிளம்பினார்கள். முக்கியமாக சகோதரர்கள் ஏழு பேரும் கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். புதியவன் சொன்னபடி மந்திர மூர்த்தியின் வீட்டின் அருகே இருந்த மற்றொரு மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். காத்திருந் தார்கள். தூரத்தில் ஒரு பெண் நடந்துவருவது தெரிந்தது. அருகே வந்ததும் அது சோணமுத்துதான் என்பது உறுதியானது. அவள் மந்திரமூர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

சனங்களின் சாமிகள் - 14

மந்திரமூர்த்தி, மந்திரம் அறிந்தவனல்லவா?! தன் வீட்டைச் சுற்றி ஆயுதம் தாங்கிய ஏழு பேர் நிற்பதைப் பார்த்தான். அவர்கள் சோணமுத்துவின் சகோதரர்கள் என்பதையும் அறிந்துகொண்டான். ஒரு கணமும் தாமதிக்காமல், ஒரு மந்திர மையை எடுத்து, சோணமுத்துவின் நெற்றியில் தடவினான். அவள் மாயமாக மறைந்து போனாள். மந்திரமூர்த்தி ஒரு பூனையாக மாறி வீட்டின் பின் வாசல் வழி வெளியேறினான். வெளியே காத்திருந்தவர்களோடு புதியவனும் இருந்தான். அவனும் மந்திரம் கற்றவன். பூனை உருவில் மந்திரமூர்த்தி வெளியேறுவதைப் புரிந்துகொண்டான். உடனே, சோணமுத்துவின் சகோதரர்களிடம், ``அந்தப் பூனையை வெட்டுங்கள்’’ என்றான். அவர்கள் பூனையைத் தாக்க ஆயுதங்களை ஓங்கினார்கள். அதற்குள், பூனை பாம்பரணையாக மாறியது. அதைத் துரத்தினர். அரணை, எலியாக மாறி, ஒரு வைக்கோல் படைப்புக்குள் நுழைந்தது. புதியவன், படைப்புக்கு நெருப்பு வைத்தான். எலி, பெருச்சாளியாகி மண்ணைக் குடைந்து தப்பிவிட்டது. சகோதரர்கள் அவன் இறந்துவிட்டான் என நினைத்து வீடு திரும்பினர்.

சோணமுத்து மாயமாக மறைந்தாலும் மந்திரமூர்த்தியின் வீட்டிலேயே இருந்தாள். சகோதரர்கள் சென்றதும் அவளுக்குப் பழைய உரு வந்தது. மந்திரமூர்த்தி இரவானதும் வீட்டுக்கு வந்தான். இருவரும் சேர்ந்து சாப்பிட்டு, உறங்கினார்கள். அந்த இரவு மந்திரமூர்த்திக்கு மோசமான இரவு. நகர்வலம் வந்த ஊர்க்காவலன் மந்திரமூர்த்தியின் வீட்டை நோட்டமிட்டான்.

அவனுக்கு சோணமுத்துவைத் தெரியும். அதனால் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தான். அப்போதைய பாண்டிநாட்டுப் பிரதிநிதியாக இருந்த வடமலையப்பரிடம் அவர்களை இழுத்துச் சென்றான். அவர் விசாரித்தார். இறுதியில், மந்திரமூர்த்தியை தட்டபாளைக்குக் கொண்டு சென்று வெட்டிவிடுமாறு உத்தரவிட் டார். காவலர் அவனைக் கொண்டுசென்றனர். தட்டபாளையில் அவனை வெட்டினர். ஆனால், ஒரு வெட்டுக்கூட அவன் மேல் படவில்லை. எத்தனை முறை வெட்டினாலும், குறி தப்பியது.  பலமுறை முயன்று தோற்றுப்போனார்கள் வீரர்கள்.

மந்திரமூர்த்தி சிரித்தான். ``என்னை உங்களால் கொல்ல முடியாது. என் வலது கால் தொடையில் ஒரு மந்திரக்குளிகை இருக்கிறது. அது இருக்கும் வரை என்னைக் கொல்ல யாராலும் முடியாது. ஆனால், என் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. எனக்கு 18 வயது வரைதான் ஆயுள் என்பது விதி. நானே அந்தக் குளிகையை எடுத்துத் தருகிறேன். அதன் பிறகு என்னை வெட்டுங்கள்’’ என்றான். சொன்னபடி குளிகையைத் தொடையிலிருந்து எடுத்துத் தந்தான். பிறகு, காவலர்கள் அவனை இரண்டு துண்டுகளாக வெட்டினர்.

மந்திரத்தால் வசியம் செய்யப்பட்டிருந்தாலும், சோணமுத்துவுக்கு மந்திர மூர்த்தியின்பால் இருந்தது தீராக் காதல். அவன் இறந்ததை அவளால் தாங்க முடியவில்லை. சோணமுத்து கத்தியால் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டாள்; இறந்துபோனாள். இறந்த இருவரும் கயிலாயம் சென்றனர். சிவனை வேண்டி வரங்கள் வாங்கினர். ஆவியாகத் திரும்பி, பூமிக்கு வந்தனர். மந்திரமூர்த்தி புதியவனின் வீட்டைச் சூறையாடினான். அவனைக் கொன்றான். புதியவனுக்கு உதவிய அவனது உறவினர்கள் சிலரையும் கொன்றான். சோணமுத்துவின் சகோதரர்களை அழித்தான். பிறகுதான் அவன் ஆவேசம் தணிந்தது. அவர்களின் உறவினர் மந்திரமூர்த்திக்குக் கோயில் எடுத்தார்கள். `தடிவீரய்யன்’ எனப் பெயரிட்டு அவனைத் தொடர்ந்து வழிபாடு செய்தார்கள்.

தடிவீரய்யனின் காலம் நாயக்கர்களின் பிரதிநிதியாகத் திருநெல்வேலி சீமையில் இருந்த வடமலையப்பபிள்ளையின் காலம் எனத் தெரிகிறது. இவரது இறுதிக்கால ஆட்சி கி.பி.1706 என்கிறார்கள். அதனால் தடிவீரனின் கதை நிகழ்ந்த காலம் 17-ம் நூற்றாண்டின் பாதி எனக் கூற முடியும்.  தடிவீரய்யனுக்கு ஆரம்பகாலத்திலேயே வழிபாடு வந்துவிட்டது. தென்காசி, சங்கரன்கோவில் வட்டாரத்தைச் சுற்றிய சில இடங்களில் தடிவீரய்யனுக்கு இன்றைக்கும் வழிபாடு உண்டு.

- தரிசனம் தொடரும்...

தொகுப்பு: பாலு சத்யா