மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? எனக்கு அன்பர் ஒருவர் துளசிமாலையைப் பரிசளித்தார். அதன் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டு அணிய ஆசைப்படுகிறேன். அது குறித்து விளக்குங்களேன்.

- சி.வேணுகோபாலன், திருநெல்வேலி-1

துளசிமாலை உயர்ந்தது. ஜபம் செய்யும் வேளையில் துளசிமாலை அணியலாம். ‘முகுந்தன் காலடி தொட்ட துளசியை முகர்ந்து பார்’ என்கிறார் குலசேகரப் பெரு மாள். கண்ணனின் துலாபாரத்தில் துளசி வென்றது. `உயிர் பிரியும்போது துளசி கலந்த ஜலம் அருந்தினால் மறுபிறவி கிடையாது' என்கிறது புராணம்.

குறிப்பாகப் பெண்கள் தினமும் துளசி பூஜை செய்ய வேண்டும். லட்சுமி வசிக்கும் இடமாக துளசியைப் பார்க்கிறது புராணம். பிருந்தாவன துவாதசியில் துளசி வழிபாடு சிறப்பு.

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?

துளசி விரதம் ஏற்கச் சொல்லுகிறது விரதகோசம். தானம் அளிக்கும்போது துளசியைச் சேர்க்கச் சொல் கிறது தர்ம சாஸ்திரம். கடவுளுக்குப் படைக்கும் நிவேதனத்தில் துளசியைச் சேர்ப்பது உண்டு. பூஜைக்கு உரிய பொருள்களில் சிறந்தது துளசி.

‘துளசி இதழ் ஒன்றை எனக்கு அர்ப்பணி; உனது யோக க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று வாக்குறுதி தருகிறான் கண்ணன். துளசிக்கு நிர்மால்யம் கிடையாது. வாடி வதங்கினாலும் தரம் குறையாது.

மருத்துவக் குணமும் கொண்டது துளசி. விஷக்கிருமிகளை அகற்ற உதவும். உப்புடன் கலந்த கரும் துளசி, தோல் வியாதியைக் குணப் படுத்தும். வணக்கத்துக்குரிய பொருளை மாலையாக அணிந்து கௌரவிப்பது சிறப்பு.

? ஒரு கோயிலில் வழிபாட்டுக் குழு பக்தர்கள், சந்திரகலா ஸ்துதிப் பாடலைப் பாடினார்கள். அந்தப் பாடல் அம்பாளுக்கு உரியதா? அந்தப் பாடலை எப்போது பாடலாம்?

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?- எஸ்.சங்கரி, கருங்குளம்

காலையும் மாலையும் தெய்வ வழி பாட்டுக்கு உகந்த வேளை. இந்த  இரண்டு பொழுதுகளிலும் படிக்கலாம். நேரமில்லாத நிலையில், ஒருபொழுது படிக் கலாம். காலை - மாலையில் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.

சந்திரகலா ஸ்துதி- அன்னையைத் துதிப்பதற்கு உரியது. ஒருமுகப்பட்ட மனத்துடன், சந்திரகலா ஸ்துதியின் சிறு பகுதியைச் சொல்லி வழிபட்டாலும் போதும். வழிபாட்டில், ஈடுபாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

விஸ்தாரமான குளியல், சிகை அலங்காரம், ஆடை ஆபரணங்கள் அணிதல் ஆகியவற்றுக்குப் போதுமான நேரத்தை ஒதுக்குவது உண்டு. இவையெல்லாம் நமது வெளித்தோற்றத்தின் தரத்தை உயர்த்தும். அதுபோல், உள்ளத்தின் தரத்தை உயர்த்துவதற்குத் தெய்வ வழிபாட்டுக்கு சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். தவிர, தங்களின் விருப்பப்படி எந்த ஸ்தோத்திரத்தையும், இரண்டு வேளைகளிலும் படித்து மனத்தூய்மை பெறலாம்.

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?

? உடலில் உயிர் - ஆன்மா தங்கியிருக்கும் இடம் எது? இதுபற்றி புராணம் தரும் விளக்கம் என்ன?

- மு.கந்தசாமி, திருவள்ளூர்

உடலுக்குள் எங்கும் நிறைந்திருக்கிறது ஆன்மா. உடலுக்குள் புகுந்த ஆன்மாவுக்கு, ‘ஜீவாத்மா’ என்று பெயர். மரணத்துக்குப் பிறகு, வெளியே உள்ள பரந்து விரிந்து கிடக்கும் ஆன்மாவுடன் அது இணைந்துவிடும்.

உடலுக்கும் உடலுக்குள் உறைந்த ஆன்மாவுக்கு மான தொடர்பு, தாமரை இலைத் தண்ணீரைப் போன்றது. அது, உடலுடன் ஒட்டாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். உடலின் பாதிப்பு அதைத் தீண்டாது.

உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் ஆன்மாவை உடல் பிரித்துக்காட்டுகிறது. தண்ணீர் நிரம்பிய மண் குடத்தை, தண்ணீர் நிரம்பிய ஒரு குளத்தில் அமிழ்த்துங்கள். இப்போது, குடத்துக்கு உள்ளேயும் தண்ணீர்... வெளியேயும் தண்ணீர். அதாவது, குளத்துத் தண்ணீரையும், குடத்துத் தண்ணீரையும் பாகுபடுத்திக் காட்டுவது குடத்தின் வடிவம். இப்போது, குடத்தை உடைத்துவிடுங்கள்... குடத்துத் தண்ணீர் என்று தனியாக ஒன்று இருக்காது. அதுபோல், மரணத்துக்குப் பின் ஆன்மா, உடல் என்ற எல்லை அகன்றதும், வெளி ஆன்மாவுடன் தென்படுகிறது.

ஆகாசம் என்றால் இடைவெளி. அது எங்கும் நிறைந்திருக்கும். அரிசியை அளந்து போடும் படியில் இருக்கும் இடைவெளியிலும் ஆகாசம் உண்டு. படியை உடைத்தால் படியில் இருக்கும் ஆகாசம் மறைந்து வெளி ஆகாசம் மட்டுமே தெரியும். படியில் நிரப்பிய அரிசியைக் கீழே கொட்டினால் அரிசி மட்டும் கீழே விழும். படியின் இடைவெளியான ஆகாசம் விழாது. அரிசிக்கும் படி ஆகாசத்துக்கும் இருக்கும் தொடர்பு, ஒட்டாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் தொடர்பு.

ஒரே ஓர் ஆகாசம் எங்கும் நிறைந்திருப்பது போல், ஆன்மா எங்கும் நிறைந்திருக்கிறது. திறந்தவெளியில் வீடு கட்டுகிறோம். வீட்டுக்குள் ஓர் இடைவெளி, வெளியேயும் இடைவெளி உண்டு. வீடுதான் இடைவெளியைப் பிரிக்கும். வீட்டைத் தரைமட்டமாக்கினால், வீட்டுக்குள் இருக்கும் இடைவெளி தனியே தெரியாது. அதுபோல் உடலுக்குள் இருக்கும் ஆன்மா, மரணத்துக்குப் பிறகு தனியே தெரியாது.

? தெய்வங்களுக்கு உரிய அஷ்டோத்திர நாமாவழிகளில், ஒரே பொருள்கொண்ட இரண்டு நாமாக்கள் வருகின்றன என்றால், எண்ணிக்கையில் குறைபாடு உண்டாகுமா?

- கோ.ராமு பொன்மணி, திருவாரூர்

சொற்கள் இரண்டு முறை வந்தாலும், அவை இரண்டு பொருள் படைத்தவை. ஆகையால், எண்ணிக்கை குறையாது.

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?

உதாரணமாக... ‘உத்தமாய நம’ என்று ஒரு சொல்; ‘அனுத்தமாய நம’ என்று ஒரு சொல்... தோற்றத்தில் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாகத் தோன்றும். ஆனால், ‘வ்யாகரண’ சாஸ்திரப்படி அதாவது, இலக்கண மாறுபாட்டில் இரண்டு பொருள்களின் எதிரிடை மறைந்துவிடும்.

‘உத்தமன்’ என்றால் உயர்ந்தவன்; ‘அனுத் தமன்’ என்றால் ‘இவனைவிட உயர்ந்தவன் இல்லை’ என்று வேறுபாடு தெரியும்.

? சிலரது வீடுகளில் வரவேற்பு அறையில் தெய்வங்களின் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்படி வைப்பது சரியா?

- கே.வி.பழநியப்பன், சிவகங்கை

தவறல்ல. அதேநேரம், அந்தச் சிலைகளில் சாந்நித்தியம் இருக்காது. அவை வெறும் பொம்மைகள்தான். கோபுரங்களில் நிறைய திருவுருவங்கள் இருக்கும். அவை, நித்திய பூஜைகளை எதிர்பார்க்காது. சிற்பிகள் வடிக்கும் இறையுருவங்களில், முறைப்படி கும்பாபிஷேகம் நிகழ்ந்தால் மட்டுமே தெய்வம் குடிகொண்டி ருக்கும். ஆகவே, வரவேற்பறை யில் திருவுரு வங்கள் இருப்பது தவறும் அல்ல; தெய்வ குற்றமும் அல்ல.

ஓவியங்களும் சிலைகளும் மக்களை ஈர்ப்பதற்காகத் தான். அவற்றில் இறைவன் இருப்பதாக உணர்ந்தால், அந்தத் திருவுருவச் சிலைகள், வரவேற்பு அறையிலிருந்து பூஜை அறைக்கு மாறிவிடும்.

? பெரியவர்கள் சிலர் சாப்பிடும் போது கவனித்திருக்கிறேன்.அவர்கள், சாப்பிடத் தொடங்குமுன் ஒரு பிடி சாதத்தைத் தனியே எடுத்து வைப்பது உண்டு. அதற்கான தாத்பர்யம் என்ன?

- கே.சிவசுப்பிரமணியன், அலங்காநல்லூர்

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?உயிரினங்களுக்கு உணவளித்துவிட்டு, மீதம் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதை ‘வைச்வதேவம்’ என்பர்.

இந்த முறையை முழுமையாக நடைமுறைப் படுத்த இயலாத நிலையில், சிறிதளவேனும் உணவளியுங்கள் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதை ‘பஞ்சக்ராசீ’ என்பர்.

மிகப் பழங்காலத்தில், நாம் உயிர்வாழ்வதற்குக் காரணமான உணவினை, நமக்குக் கிடைக்கச் செய்யும் தெய்வத்துக்கும் தேவதைகளுக்கும் நன்றிகாட்டும் வகையில், அவர்களுக்கே அர்ப்பணம் செய்வது என்பது சாஸ்திர நடை முறை.

அந்த நடைமுறையின்படி, எப்படி ஹோமம் வளர்த்து அந்த அக்னியில் அந்த அந்த தேவதைகளுக்கான ஹவிர்பாகத்தை அளிப்போமோ அதுபோல், நம் வயிற்றில் உள்ள அக்னியில் உணவை இடுகிறோம். அதற்கு முன் தேவதைகளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

அந்த வகையில், சதுர வடிவ மண்டலத்தின் எட்டுத் திசையிலும் தேவதைகளுக்கு ஐந்தைந்து கவளங்களாக அன்னத்தை அளிக்க வேண்டும்.

தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் ஆகிய ஐவருக்கும் ஐந்து கவளங்கள். வேதம் ஓதுவோர், அரசர்கள், வியாபாரிகள், உழைப்பாளி கள், வேடர்கள் ஆகிய ஐவருக்கும் ஐந்து கவளங்கள்.

அடுத்து, பூமியைப் பிளந்து வெளிவரும் செடி கொடிகள், வியர்வையில் தோன்றும் உயிரினங்கள், முட்டையில் இருந்து தோன் றும் உயிரினங்கள், கர்ப்பப் பையில் இருந்து வெளி வருபவை, மனதில் இருந்து தோன்றுபவை... இவற்றுக்கு என ஐந்து கவளங்கள்.

இப்படியாக... சம சதுர மண்டலத்தில் கவளங்களை வைத்து வணங்கி, சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதைத் தவிர சாஸ்திரம் வேறேதுவும் குறிப்பிடவில்லை.

ஆகவே, சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு பிடி உணவை இலையில் எடுத்துவைப்பதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட சிந்தனை.  இது, அடுத்த உயிர்களுக்கு உணவு இட வேண்டும் என்ற தர்ம சிந்தனையை வெளிப்படுத்துவதால், அவரவர் இஷ்டப்படி செய்யலாம்.
நல்லதுதான்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது?

வண்டிக்காரன்!

மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை. மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு. ஆனால், வண்டிக்காரன் உயிரற்ற வண்டியில் மாடு ஒன்றைப் பூட்டி, எந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வண்டியை ஓட்டுவான்.

எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம், எவ்வளவு பாரம்... இவை அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரனே!

தனக்கு அறிவிருந்தும் பாரத்தைச் சுமப்பதும் தான்தான் என்று தெரிந்திருந்தாலும் மாடுகளால் எதுவும் செய்ய இயலாது. அதுபோல், உடம்பு என்ற ஜட வண்டியில் ஆத்மா, உயிர் என்ற மாட்டைப் பூட்டி இறைவன் எனும் வண்டிக்காரர் ஓட்டுகிறார். அவரே தீர்மானிப்பவர்; இயக்குபவர்.

எவ்வளவு காலம், எவ்வளவு பாரம் என்று தீர்மானிப்பது இறைவனே. இதை உணர்ந்தவருக்குத் துன்பம் இல்லை; உணராதவருக்கு அமைதி இல்லை.

- படித்ததில் பிடித்தது!

- மீனா ரங்கநாதன், பெங்களூரு