மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 13

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  13
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 13

மகுடேசுவரன்

தின்மூன்றாம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் கோலோச்சிய பேரரசர்கள் ஹொய்சாளர்கள். அவர்களுடைய வீழ்ச்சிக்குப் பின்னர் நிலவிய களேபரமான அரசியல் சூழ்நிலையில் தோன்றி நிலைத்தவர்கள்தாம் விஜயநகரப் பேரரசர்கள். விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த பேரரசரான கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர். துளுவ வம்சத்தில் இரண்டாவதாகப் பட்டத்துக்கு வந்தவர். துளுவ மரபின் முதலாம் அரசரான வீர நரசிம்மர்தான் தம் இளவல் கிருஷ்ண தேவராயருக்கு முடிசூட்டுகிறார்.

கி.பி 1509-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் நாள் இருபத்துச் சொச்சம் அகவையரான கிருஷ்ண தேவராயருக்கு முடிசூட்டு விழா நடந்தது. கிருஷ்ண தேவராயர் பட்டமேற்றுக்கொண்ட போது விஜயநகரப் பேரரசு அதன் வரலாற்றின் கொடுமையான இக்கட்டுகளால் சூழப்பட்டிருந்தது. அப்போதைய வரலாற்றுச் சூழல் என்ன என்பதைச் சரியாக அறிந்து கொண்டால்தான் கிருஷ்ணதேவராயர் செய்தவற்றின் மாட்சிமையை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  13

பதினைந்தாம் நூற்றாண்டில் அரபிக் கடலோரத் துறைமுகங்களின் வழியாக பேரளவிலான ஏற்றுமதி இறக்குமதி வாணிகம் நடைபெற்றது. அவ்வணிகத்தில் கள்ளிக்கோட்டை யின் சாமூத்திரி அரசரே பெரும்பங்கு வகித்தார். அரபிக்கடல் வழியாக எகிப்துக்கும் துருக்கிக்கும் மிளகு முதலான கார நறுமணப் பொருள்களின் ஏற்றுமதிச் சந்தை அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து வந்துசேர்ந்த போர்த்துக்கீசியர்களின் நோக்கமும் கார நறுமணப் பொருள் வணிகம்தான். கேரளக் கடற்கரைக்கு வடக்கிலிருந்த கோவா, டையூ போன்ற துறைமுகங்களில் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் இருந்தது. ஆனால், கடல் வணிகத்தில் சாமூத்திரி மன்னரிடமிருந்த தன்னாளுமையைப் பறிக்க முடியவில்லை. இதனால் கேரள மீனவர்களை அடித்துதைப்பதும் படகுகளை நொறுக்குவதுமான கொடுஞ்செயல்களில் போர்த்துக்கீசியர்கள் ஈடுபட்டனர்.

போர்த்துக்கீசியர்களின் கடல் அடாவடிகளை ஒடுக்கும்விதமாக சாமூத்திரி மன்னர் நடவடிக்கை எடுத்தார். போர்த்துக்கீசியர்களின் பெரும் நாவாய்ப் படைகளின் வலிமைக்கு முன்னால் சாமூத்திரி அரசரின் படை பலம் சிறிதுதான். அதனால் தம்மோடு வணிக உறவில் இருந்த எகிப்திய அரசர் மம்லுக் சுல்தானின் உதவியை நாடினார். மம்லுக் சுல்தானின் பரிந்துரையின் காரணமாக துருக்கிய அரசர் இரண்டாம் பயசித் தமது பீரங்கிப் படையினரை அனுப்பி உதவினார். போர்த்துக்கீசியர்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த குஜராத் அரசர் மகமூத் பெகாடாவும் இக்கூட்டணியில் சேர்ந்து கொண்டார்.

கூட்டணிப் படைகள் போர்த்துக்கீசியர்களோடு கடற்போரில் ஈடுபட்டன. 1508-ம் ஆண்டில் மகாராட்டிரத்தின் சாவுல் என்ற துறைமுகத்தருகே நடைபெற்ற போரில் போர்த்துக்கீசியர்கள் தோற்றனர். அதற்கு அடுத்த ஆண்டிலேயே டையூ துறைமுகக்கரையில் நடைபெற்ற போரில் போர்த்துக்கீசியர்கள் வெற்றி பெற்றனர். அந்தப் போர் வெற்றியால் போர்த்துக்கீசியர்களுக்கு நூற்றுக்கணக்கான துருக்கிய அடிமைகள் கிடைத்தனர். அவர்கள் பீரங்கிகளையும் வெடி மருந்துகளையும் தயாரிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள். அப்போர்த் தோல்விக்குப் பின் அரபிக்கடல் வணிகம் முழுமையாகவே போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.  சாமூத்திரி மன்னரின் போர்க்கூட்டணியும் முடிவுக்கு வந்து வலிமையற்றவர் ஆனார்.

பாமினி, பீஜப்பூர் சுல்தான்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவா துறைமுகத்தையும் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றிக்கொண்டனர். கோவா துறைமுகத்தில் துருக்கியத் தொழிற்படை யினரைக்கொண்டு பீரங்கி வார்ப்புக்கூடம் ஒன்றை அமைத்தனர். இதனால் பீஜப்பூர் சுல்தான் போர்த்துக்கீசியர்களை எதிர்க்கத் துணியவில்லை. அரசியல் காய்நகர்த்தலாக கோவா துறைமுகத்துக்கும் விஜயநகர அரசருக்கும் வரவேற்பு கிடைத்தது.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி  13

கார நறுமணப் பொருள்களால் பெருகியிருந்த போர்த்துக்கீசியர்களின் வாணிகம் ஒரு கட்டத்துக்கு மேல் போர்க்குதிரைகள், பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் என்று விரிவடைந்தது. பாமினி விஜயநகர அரசர்களின் தீராப் பகையால் அந்தப் பகுதியில் எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளை விற்பதற்கு பாமினி விஜயநகர மன்னர்களைப் போர்த்துக்கீசிய ஆளுநர் ஏலத்துக்கு அழைக்கும் நிலையும் ஏற்பட்டது. அந்த அளவுக்கு அங்கே இரு தரப்பினரும் படைக் கலன்களைப் பெருக்கிக்கொண்டிருந்தனர்.

இந்தியாவில் கி.பி 1526-ம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிபட் போரில்தான் பாபர் என்னும் முகலாயர் பீரங்கிகளைப் பயன்படுத்தினார் என்று வரலாற்றில் எழுதுகிறார்கள். அதற்கும் முன்பாகவே கோவாவில் பீரங்கி வார்ப்புக்கூடம் நிறுவப்பட்டதையும் ரெய்ச்சூர்க் கோட்டைப் போரில் அவை பயன்படுத்தப்பட்டதையும் வரலாற்றாசிரியர்கள் மறந்துவிட்டார்கள். போர்த்துக்கீசியர்களுக்கும் சாமூத்திரி மன்னரின் கூட்டுப் படையணியினருக்குமான கடற்போரிலும் பாய்மரக் கப்பல்களில் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.

போர்த்துக்கீசியர்கள் கடல்வழி வாணிகத்திலும் துறைமுக ஆட்சியைத் தக்கவைப்பதிலும்தான் கருத்தாக இருந்தார்களே ஒழிய, உள்நாட்டுக்குள் அவர்கள் கால்வைக்க முடியாதபடி பல்வேறு அரசர்கள் படை பலங்களோடு நின்றனர். கிருட்டிணை ஆற்றுக்குத் தென்பகுதி முழுவதும் விஜயநகரப் பேரரசாக இருந்தது. கள்ளிக்கோட்டை அரசரும் இலங்கை தீவும் விஜயநகரத்துக்குத் திறை செலுத்தப் பணிக்கப்பட்டிருந்தன. ஒரிசாவின் கஜபதிகளிடமிருந்தும் விஜயநகரத்துக்குத் திறை வந்தது. கிருட்டிணை ஆற்றுக்கு வடக்கே இருந்த பாமினி சுல்தான்கள்தாம் விஜயநகரத்தின் கழுத்தில் பாய்ந்த கோடரிக் காம்பாக மாறினர்.

பாமினி சுல்தான்கள் ஐந்து பிரிவினராக உடைந்து சிதறியதுதான் விஜயநகரத்தின் தனிப்பெரும் வலிமைக்குக் காரணமாயிற்று. பீஜப்பூர் அடில் சாகி, கோல்கொண்டா குதுப் சாகி, பீரார் இமாத் சாகி, பீடார் பரீத் சாகி, அகமதுநகர் நிசாம் சாகி என்று பாமினி சுல்தான்கள் ஐந்து அரசாட்சியினராகப் பிரிந்தனர். இவர்களில் பீஜப்பூர் சுல்தான்தான் விஜயநகரத் துக்கு வடக்கே கிருட்டிணை ஆற்றினைத் தாண்டி நிலைக்கொண்டிருந்தவர். எதிர்பாராத நேரத்தில் விஜயநகர எல்லைக்குள் நுழைந்து கொள்ளை யடித்துச் செல்வதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. கல்லும் மண்ணும் சூழ்ந்த தக்காணத்தில் பொன்விளையும் பூமியாக விளங்கியது துங்க பத்திரைக்கும் கிருட்டிணை ஆற்றுக்கும் இடைப்பட்ட சமவெளிதான். அந்தச் சமவெளியை யார் ஆள்வது என்பதுதான் மூன்று நூற்றாண்டு களாகத் தீராத பகையாக இருந்தது. அதை முடித்து வைப்பதற்கான சூளுரையோடு களமிறங்கியவர் தான் கிருஷ்ண தேவராயர்.