பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

‘உண்பதற்கு முன்  ஒருவருக்கு உணவிடு!’

ஆ.சிவசூரியன், தூத்துக்குடி

சகலமும் சாயி!‘சாயியின் அருள்பெற்ற இன்னோர் அடியார் உண்டு. அவரைப் பார்க்கும் தருணங்களில், சாட்சாத் சாயியையே நேரில் தரிசித்த பரவசம் பொங்கும் எனக்குள்’ என்று குறிப்பிட்டுச் சென்ற இதழில் எழுதியிருந்தார் வாசகர் சிவசூரியன்.

அந்த அடியாரைப் பற்றி...

`ஷீர்டி சாயிபாபா’ திருமந்திர நகர் எனும் தூத்துக்குடியின் திருவீதிகளில் தினசரி உலா வருகிறார். அதுவும் ஒரு வேளையல்ல; இரு வேளைகள். ஆம், காலை 8 முதல் 9 மணிக்குள்ளும், நண்பகலில் 12:30-க்கு மேல் 1:30-மணிக்குள்ளும் உலா வரும் இரண்டு சக்கர வாகனம் ஒன்று தூத்துக்குடி பேருந்து நிலையம், ஆலய வளாகம் போன்ற இடங்களில் நிற்கும். அதன் இருபுறமும் பச்சை வண்ணத்திலான பெட்டிகள் இருக்கும்.

வாகனத்தை ஓட்டிவரும் அன்பர் அந்தப் பெட்டிகளில் இருந்து உணவுப் பொட்டலங்களை எடுத்து மனநலம் குன்றியவர்கள், ஏழை எளிய ஆதரவற்றோருக்கு வழங்குவார். அவர்தான் ‘இயற்கை சாரிட்டபிள் டிரஸ்ட்’டின் நிறுவனர் சாய் இயற்கை ராஜாராம். தினசரி குறைந்தபட்சம் 250 நபர்களுக்கு உணவு எனும் இந்தச் சேவையை, கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்கிறார் ராஜாராம். தோற்றத்திலும் ஏறக்குறைய பாபாவைப் போன்றே காட்சித்தரும் இவர், தூத்துக்குடியில் ‘தென்னகத்தின் ஷீர்டி’ எனுமளவுக்கு மூன்றுதள அமைப்பில் பாபாவுக்கு ஆலயம் நிர்மாணித்துத் தொண்டாற்றி வருகிறார். தினமும் சாயி பக்தர்களால் நிரம்பிவழிகிறது அந்த ஆலயம்.

உணவுப் பணி மட்டுமின்றி, இயற்கையைப் பேணும்விதமாக மரக்கன்றுகள் நடுதல், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளோரின் பிள்ளைகள் கல்வியைத் தொடர உதவுதல், மருத்துவ உதவிகள் என நீள்கிறது இயற்கை ராஜாராமின் நற்பணிகள். மன நோயாளியைக் குளிப்பாட்டிச் சுத்தப்படுத்தி ஆடை மாற்றுகிறார். மனச்சிதைவுக்கு ஆளான சிலரை பௌர்ணமி, அமாவாசை தினங்களில் நெருங்கவே முடியாது. ஆனால், இவரது அன்புக்குத் தலைவணங்கி அவர்கள் உணவுப் பொதியை அமைதியாக வாங்கிக்கொள்கிறார்கள். சமூக மாற்றத்துக்கான முன்னோடியாக வழிகாட்டிவரும் சாய் இயற்கை ராஜாராமின் தாரக மந்திரம் - ‘நீ உண்பதற்கு முன் ஒருவருக்கு உணவிடு!’ சாயிபாபா மறையவில்லை இப்போதும் நம்மோடு வாழ்கிறார், இதுபோன்ற அடியவர்களின் உருவில்!

சகலமும் சாயி!

நம்மைத் தேடி வருவார்!

ஆர்.சாய் முத்துக்குமார், ராயப்பேட்டை

நான் அடிக்கடி ஷீர்டிக்குப் போவதுண்டு. அங்கிருந்து திரும்பும்போது ஷீர்டி நினைவாக நண்பர்களுக்கு வழங்குவதற்காகவே சில பரிசுப் பொருள்களை வாங்கி வருவேன். அப்படி ஒருமுறை நான் வாங்கிவந்த பரிசுகளில் நண்பர்களுக்குக் கொடுத்ததுபோக, பாபா டாலருடன் கூடிய கீ செயின் ஒன்று மட்டும் மீதம் இருந்தது. ஒருநாள் வங்கிக்குப் பணம் எடுக்கச் சென்றேன். டோக்கன் எடுத்துக்கொண்டு, இருக்கையில் அமர்ந்தேன். என் டோக்கன் எண் 18. அங்கேயுள்ள 3 கவுன்ட்டர்களிலும், மாறி மாறி டோக்கன் நம்பரைக் கூப்பிடுவார்கள். நான் மனதுக்குள், ‘எந்த கவுன்ட்டரில் உள்ளவர் என் நம்பரைக் குறிப்பிட்டுக் கூப்பிடுகிறாரோ, அவரிடம் இந்த டாலரைக் கொடுக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டேன்.

மிகச் சரியாக, 17-ம் டோக்கன் 3-வது கவுன்ட்டரில் அழைக்கப்பட்டு அந்த நபருக்கான வேலை முடிந்து, என்னைக் கூப்பிடும் தருணத்தில், அந்தக் கவுன்ட்டரில் உள்ளவர் தேநீர் அருந்த சென்றுவிட்டார். அதனால் இரண்டாவது கவுன்ட்டரில் என்னை அழைத்தார்கள். நான் முடிவுசெய்து வைத்திருந்தபடி பணி முடிந்ததும் அந்தக் கவுன்ட்டரில் இருந்த பெண்மணியிடம் சாயி கீ செயினைக் கொடுத்தேன். அந்தப் பெண்மணி எழுந்து நின்று பக்தியுடன் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார். அத்துடன் அவர் கூறிய விஷயம் என்னைச் சிலிர்க்கவைத்தது.

தினமும் மயிலை சாயிபாபா கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் வங்கிக்கு வருவாராம் அந்தப் பெண்மணி. ஆனால், அன்று வீட்டில் விருந்தினர்கள் வந்திருந்ததால் அவர்களை உபசரிப்பதில் நேரமாகிவிட்டது. ஆகவே, கோயிலுக்குச் செல்லாமல் நேராக வங்கிக்கு வந்துவிட்டாராம். ஆனாலும், இன்று பாபாவைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என்ற பரிதவிப்பு அவருக்குள். இந்த நிலையில்தான் என்மூலம் பாபா கீசெயின் கிடைக்கவும் சிலிர்த்துப்போனாராம்.

‘‘பாபாவே டாலர் மூலம் நேரில்வந்து எனக்குத் தரிசனம் கொடுத்துவிட்டார்'' என்றார் கண்ணீருடன். என்னை வியப்படைய வைத்த விஷயத்தை நானும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ``இன்றைக்கு மூன்றாவது கவுன்ட்டருக்குத்தான் நான் சென்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த மேடம் டீ குடிக்கச் சென்றுவிட, நீங்கள் அழைத்தீர்கள். என்னுடன் பாபாவும் வந்துவிட்டார்’’ என்று நான் கூறியதும் அந்தப் பக்தையின் சிலிர்ப்பு இரட்டிப்பானது. கண்களில் நீர்மல்க எனக்கும் பாபாவுக்கும் மனதார நன்றிகூறி வணங்கினார். தன்னை மனதில் இருத்திக்கொள்ளும் பக்தர்களைவிட்டு பாபா ஒருபோதும் விலக மாட்டார்!

சகலமும் சாயி!

தாயுமானவர்!

இந்திராணி தங்கவேல், சென்னை

என் மகனைப் பிரசவித்திருந்தபோது எனக்குச் சுத்தமாகத் தாய்ப்பால் இல்லை. ஆதலால் மருத்துவரின் பரிந்துரைப்படி லாக்டோஜன் கொடுத்து வந்தேன். ஒருநாள் லாக்டோஜன் தீர்ந்துவிட்டபடியால் பக்கத்து டவுனுக்கு ஆள் அனுப்பி வாங்கி வரச் சொன்னேன். அங்கு அது கிடைக்கவில்லை. ஆதலால் தஞ்சை செல்ல இருந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பணம் கொடுத்து 2 டின் வாங்கி வரச் சொல்லியிருந்தேன். அவரும் இரவுக்குள் வந்துவிடுவதாகக் கூறிச் சென்றார்.

ஆனால், ஆஸ்பத்திரியில் இருந்த உறவினரின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தபடியால் அவரால் அன்றிரவு வர முடியவில்லை. நான் என் ஒன்றரை வயது நிரம்பிய மகளுக்குக் கொடுப்பதற்காக இரண்டு பிளாஸ்க்குகளில் தினமும் பசுவின் பால் காய்ச்சி நிரப்பி வைத்திருப்பேன். தொடர்ந்து அழும் 16 நாள் நிரம்பிய என் மகனுக்குக் கொடுப்பதற்காக பிளாஸ்க்கை திறந்தால் மே மாத கடும் வெயிலில் பால் திரிந்துபோய் இருந்தது. இரவு பத்து மணியாகி விட்டது. பாலுக்காகக் குழந்தை கத்தி கதறுகிறான். எனக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. என் அம்மா அக்கம்பக்கத்து வீடுகளுக்கெல்லாம் சென்று பசும்பால் இருந்தால் கொடுங்கள் என்று அழாத குறையாகக் கேட்கிறார். எல்லோரும் இப்போதுதான் தயிர் ஊற்றினேன் என்கிறார்கள்.

அந்த நேரத்தில் டெல்லியில் என் பக்கத்து வீட்டில் பூஜித்த ஷீர்டி சாயிபாபாவின் திருவுருவம் கண்முன்னே நிழலாடிச் சென்றது. அடுத்த நிமிடமே எனக்கு முன் பிரசவித்து இருந்த என் அக்கா மகள் குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைந்து, ``ஏன் சித்தி தம்பி அழறான்? இந்தப் பாப்பா நிறைய பால் குடிக்க மாட்டேன் என்கிறது. எனக்குப் பால் கட்டிக்கொண்டு மூன்றாம் நாள் காய்ச்சல் வந்து விடுகிறது. டாக்டரிடம் சென்றோம். அவர் அங்கு இல்லை. அதுதான் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்து விட்டேன்'' என்றார்.

எனக்கோ போன உயிர் திரும்பி வந்ததுபோல் இருந்தது. `கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல்' இருக்க, அவளிடம் பிரச்னையைக் கூற, ``அப்படியா சித்தி'' என்று கூறிவிட்டுப் பையனை எடுத்துப் பசியாற்றினாள். அன்றிரவு முழுவதும் என்னுடனே படுத்திருந்து குழந்தை அழும்போதெல்லாம் எழுந்து பால் கொடுத்து உதவி புரிந்தாள். அப்போது ‘காட்சி தந்து ஆட்சி செய்த’ ஷீர்டி சாயிபாபா என் இஷ்டதெய்வம் ஆகிவிட்டார்.

நம்பினோர் கெடுவதில்லை!

கோ.கற்பகவள்ளி, சென்னை

தன்மீது நம்பிக்கை வைப்பவர்களை பாபா ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நிரூபிக்கும் சம்பவம் இது.

சகலமும் சாயி!அரசு ஊழியரான நான் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன்.

2009-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதியன்று பதவி உயர்வுப் பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்று, கோவைக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. பதவி உயர்வு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய எனக்கு அழுகைதான் வந்தது. காரணம், என் குழந்தையை அப்போதுதான் பள்ளியில் சேர்த்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. கோவையும் எனக்குப் பரிச்சயமில்லாத ஊர். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதெல்லாம் சாயிபாபாவைப் பற்றிய நம்பிக்கையோ, ஞானமோ கிடையாது. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆந்திராவைச் சேர்ந்த மாமி ஒருவர் இருந்தார். சாயி பக்தையான அவர் ஒன்பது வார விரதத்தைப் பூர்த்திசெய்திருந்தார். வெற்றிலை - பாக்கு வாங்க என்னையும் அழைத்தார். வீட்டுக்குச் சென்ற என்னிடம் தாம்பூலம் கொடுத்த மாமி, சாயியின் ஒன்பது வார விரதம் குறித்த புத்தகத்தையும் கொடுத்தார். முதலில் வேண்டா வெறுப்பாகத்தான் படிக்கத் தொடங்கினேன். ஆனால், படிக்கப் படிக்க ஏதோ ஓர் உந்துதல். அடுத்து வந்த வியாழக்கிழமை முதல் விரதத்தை ஆரம்பித்தேன். காலையில் வீட்டில் பூஜை. தொடர்ந்து  மயிலை சாயி கோயிலில் வழிபட்டுவிட்டு அலுவலகம் செல்வேன்.

மூன்றாவது வாரம் பாபாவைத் தரிசித்துவிட்டு வந்தேன். மாலை 4 மணிக்கு அரசிடம் இருந்து ஓர் ஆணை வந்தது. கடும் போட்டிகளுக்கு மத்தியில் பதவி உயர்வு கிடைத்ததுடன், சென்னையிலேயே பணியில் அமர்த்தப்பட்டேன். அந்தக் கணம் முதல் என் மனதில் நிலையாகக் கோயில்கொண்டுவிட்டார் சாயிபாபா! அதுமட்டுமா இன்னோர் சம்பவமும் உண்டு. அவரின் திருவருளால் எனக்கு வீடு கிடைத்ததும், ‘‘பாபா! நீங்கள் எந்த ரூபத்திலாவது வந்து, இந்த வீட்டில் சாப்பிட்டு என்னையும் என் குடும்பத்தையும் வாழ்த்த வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டேன். என்ன ஆச்சர்யம்... முதியவர் ஒருவர் வந்தார். அதுவும் எப்படி... பாபாவைப் போன்றே நீண்ட அங்கி அணிந்திருந்தார் அவர். என் கைப்பட நானே பரிமாற, திருப்தியுடன் உணவருந்திவிட்டு எங்களை மனப்பூர்வமாக ஆசீர்வதித்துச் சென்றார்.

எனக்குப் பரிச்சயமில்லாத அந்த அன்பர், என் கணவருக்குச் சில நாள்கள் மட்டுமே அறிமுகமானவராம். அவர் பாபாவின் பக்தர் என்பதும் நீண்ட நாள்கள் கழித்துதான் எங்களுக்குத் தெரியவந்தது. எது எப்படியோ எனது வேண்டுகோளை ஏற்று, பாபாவே நேரில் வந்து விருந்துண்டு சென்றதாகவே நான் கருதுகிறேன்.

சகலமும் சாயி சமர்ப்பணம்!

- அனுபவங்கள் தொடரும்

அன்பார்ந்த வாசகர்களே!

ஸ்ரீசாயியின் திருவருளால் உங்கள் வாழ்விலோ, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்விலோ பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கலாம். அந்த அற்புத அனுபவங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவற்றில் சிறப்பான அனுபவங்கள் சக்தி விகடன் இதழில் இடம்பெறுவதுடன், அவற்றுக்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. 

அனுப்பவேண்டிய முகவரி: ‘சகலமும் சாயி - அனுபவம் அற்புதம்’ பகுதி, சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2

இ.மெயில் முகவரி: sakthi@vikatan.com
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு