சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

கவிஞர் பொன்மணி

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!


வந்துவிட்டார் சாயி!

கவான் பாபாவின் தரிசனத்துக்கு, எப்போதும் வருவதைவிடவும் இப்போது பல மாநிலங்களில் இருந்தும் 'மகா சமாதி’ தரிசனத்துக்கு பக்தர்கள் வந்துகொண்டிருப்பது அதிகமாயிருக்கிறது. பர்த்தி யாத்திரைக்கு வரும் பக்தர்கள், குழுவினராக வந்து ஓரிரு நாட்கள் தங்கி, 'மகா சமாதி’யின் முன், குல்வந்த் ஹாலில் கலைநிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, ஸ்வாமியைத் தரிசித்த தெய்வீக நிறைவோடும் மகிழ்வோடும் ஊருக்குத் திரும்புகின்றனர். அப்படி, ஆந்திர மாநிலம், 'பிரகாசம்’ மாவட்டத்தைச் சேர்ந்த சாயிபக்தர்கள், பர்த்தி யாத்திரைக்காகத் தயாராகத் தொடங்கினர். தங்கள் சமிதியைச் சேர்ந்த 'பாலவிகாஸ்’ பிள்ளைகளுக்கு, கலைநிகழ்ச்சிகளுக்காக நடனம் சொல்லிக் கொடுக்க, டான்ஸ் டீச்சரைத் தேடினர். நினைத்தபடி எவரும் கிடைக்கவில்லை. அதே மாவட்டத்தைச் சேர்ந்த, நடனம் தெரிந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவன், நடனம் கற்றுக் கொடுக்க முன்வந்தான். சில நாட்களுக்குள், 'பாலவிகாஸ்’ பிள்ளைகளுக்கு அவன் வெகு சிறப்பாக நடனம் கற்றுக் கொடுத்து, அருமையாகப் பயிற்சி தந்து, கலைநிகழ்ச்சிகளுக்கு அவர்களைத் தயார் செய்துவிட்டான். சமிதிக்காரர்கள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, பர்த்தி யாத்திரை சென்றனர். எதிர்பார்த்ததை விடவும் ஸ்வாமி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப்பெற்று, 'மகா சமாதி’யின் முன் பிரமாதமாக கலைநிகழ்ச்சியை நடத்தி மகிழ்ந்தனர்.

##~##
 
நடனம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் பர்த்திக்குக் கிளம்பிப் போனதும், அந்த இஸ்லாமிய இளைஞன் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் ஸ்வாமியைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை. அவனைப் பொறுத்தவரை, 'சத்யசாயி பாபா’ மிகவும் வயதான, தெய்வசக்தியுள்ள ஒரு பெரியவர்... அவ்வளவுதான். தன் ஊர்க்காரர்களான சாயிபக்தர்களின் கலை நிகழ்ச்சிக்கு, பிரதிபலனாக எதையும் எதிர்பாராமல் மனப்பூர்வமாக, மகிழ்ச்சியுடன் நடனம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தான். நடனக் கலைஞனான அந்த இளைஞனுக்கு, குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் இருந்தன. அவனுடைய அக்காவின் பிரசவம் மிகவும் சிக்கலுக்குள்ளாகியிருந்தது. பொருளாதாரப் பிரச்னை வேறு. டான்ஸ் சொல்லிக்கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து படுத்திருந்தபோது, அவனுக்கு ஒரு கனவு வந்தது. நிஜம் போலவே வெகு தத்ரூபமாக அது இருந்தது. ஸ்வாமி சத்யசாயிபாபா, மிகவும் இளமையான அழகிய தோற்றத்தில் அவனுக்குக் காட்சியளித்தார்! அந்தக் காட்சியால் கவரப்பட்டு, இளைஞன் மிகவும் உற்சாகமாகிப் போனான். ஸ்வாமி அவனைப் பார்த்து அன்போடு சொன்னார்...

''உனக்கு இந்த நடனம் சொல்லித் தந்த சேவையை நான் தந்ததே, உன் கர்மாவைத் தீர்த்து வைக்கத்தான். உன் பிரச்னைகள் எனக்குத் தெரியும். அதனால்தான் உனக்கு இந்தச் சுயநலமற்ற சேவையை செய்யக் கொடுத்தேன். உன் பிரச்னைகள் இனி தீரும்'' என்று சொல்லி மறைந்தார். படுக்கையிலிருந்து எழுந்த அந்த இளைஞன், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்; துரித கதியில் அவனுடைய குடும்பப் பிரச்னைகள் தீர்ந்தன. அவன் அக்காவின் 'டெலிவரி’ நார்மலாகியது!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

'சுயநலமற்ற சேவையன்றே உன் கர்மவினைகளைப் போக்கும்’ என்று ஸ்வாமி பாபா அடிக்கடி சொல்வது உண்டு. அதை 'மகா சமாதி’ அடைந்த சில நாட்களில், மீண்டும் வந்து அவர் சொல்லியது... அழகோடும் இளமையோடும் காட்சியளித்தது... அந்த இளைஞனின் பிரச்னைகளைத் தீர்த்தது... எல்லாம் கேட்கும்போதே மகிழ்ச்சியாயிருக்கிறது!

புட்டபர்த்தியில் பெரும்பாலும் மின்வெட்டு வருவதில்லை. ஸ்வாமி 'மகா சமாதி’யான பின்பு, இந்த வருடம் தசராவை ஒட்டி,  சில நாட்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. பகவானின் பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் எப்போதும் போல் மாலையில் குல்வந்த் ஹாலுக்கு வந்து, பஜனில் கலந்து பாடி, நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு, ஸ்வாமிக்கு மகா சமாதியின் முன் ஆரத்தியானதும்தான், தாங்கள் தங்கிப் படிக்கும் பள்ளி- கல்லூரிகளின் விடுதியறைகளுக்குத் திரும்புவார்கள். உணவருந்திவிட்டு, 'ஸ்டடி க்ளாஸ்’ முடித்துவிட்டுத் தூங்கப் போவார்கள்.

'குளோபல் ரேடியோ’வில் வேலை பார்க்கும் ஒரு பக்தரின் குழந்தை, ஸ்வாமியின் பள்ளியில் தங்கி, இரண்டாம் வகுப்பில் படிப்பவன். அவன், இரவில் 'பாத்ரூம்’ போவதற்காகத் தூக்கத்திலிருந்து எழுந்து, வெளியே வந்தான். அப்போது 'கரன்ட்’ போய்விட்டது. கும்மிருட்டாக இருந்ததால், குழந்தை பயந்துவிட்டான். நடந்து போவதற்கு பயமாக இருந்தது. அவசரமாக 'பாத்ரூம்’ போயாக வேண்டும். மிரண்டு போய் நின்றவனின் முன், ஸ்வாமி சத்யசாயி பாபா வெண்ணிற உடையில் தோன்றினார். திடுதிப்பென்று ஸ்வாமியைப் பார்த்ததும் சிறுவன், 'ஸ்வாமி’ என்று கூப்பிட்டான். ஸ்வாமி அவனைத் தட்டிக் கொடுத்து, பயத்தைப் போக்கி, அவன் கையைப் பிடித்துக் கொண்டு போய்,  பாத்ரூமில் விட்டு, அதன் பிறகு அவனை அழைத்து வந்து, அவன் அறைக்குள் அனுப்பிவிட்டு மறைந்தார். அடுத்த நாள் காலையில் அந்தச் சிறுவன், ஸ்வாமி வந்து தன்னை  பாத்ரூமுக்கு அழைத்துப் போய் வந்ததைச் சொல்ல... ஆசிரியர்களும் சக மாணவர்களும் பக்தர்களும், 'ஸ்வாமி வந்து நடமாடத் தொடங்கியதை’ நினைத்து ஆனந்தங்கொண்டாடினார்கள்.

இன்னொரு நாள்... பள்ளிப் பிள்ளைகள் ஸ்வாமி தரிசனம், பஜன் எல்லாம் முடிந்து விடுதிக்குத் திரும்பி சாப்பிட்டுவிட்டு, 'ஸ்டடி க்ளாஸு’க்காக வகுப்பறையில் உட்கார்ந்து, ஆசிரியை பாடம் சொல்லிக்கொடுக்க... கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். திடீரென்று கரன்ட் கட் ஆகிவிட்டது. சிறுவர்கள் பயத்தில் 'ஓ’வென்று சத்தமிட்டனர். ஆசிரியை, 'இதோ... பக்கத்து அறையிலிருந்து மெழுகுவத்தியை ஏற்றி வருகிறேன். பயப்படவேண்டாம். கரன்ட் வந்துவிடும்’ என்று சொல்லிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியே போனார். ஆசிரியை போனதும், பிள்ளைகளுக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது. முகம் தெரியாத இருட்டில் 'கிலி’ பிடித்துப் போய் அமர்ந்திருந்த பிள்ளைகளின் முன், மேடையின் மேல் திடீரென்று ஸ்வாமி பிரகாசமான வெண்ணிற உடையில் தோன்றினார். பயம் போய்,  சந்தோஷமும் உற்சாகமும் பொங்க, 'ஸ்வாமி,’ 'சாயிராம்’ என்று குரல் எழுப்பினார்கள் பிள்ளைகள். ஸ்வாமி அவர்களைப் பார்த்து சந்தோஷத்தோடு சிரித்தபடியே 'Why Fear When I am here’ நானிருக்க பயமெதற்கு’ என்ற ஆங்கில பஜனைப் பாடலைப் பாடத் தொடங்கினார். பிள்ளைகள் குதூகலமாகிவிட்டார்கள்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ஸ்வாமி வந்ததும், பாடிக்கொண்டிருப்பதும், அப்படி ஓர் ஆனந்தத்தையும் தைரியத்தையும் அவர்களுக்கு அளித்துவிட்டது. ஸ்வாமி, அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தவர், சற்று நேரத்தில் ஆசிரியை மெழுகுவத்தியோடு வந்து நுழைவதற்குள் மறைந்துவிட்டார்.

ஆசிரியையிடம், ஸ்வாமி வந்து நின்று பாடியதைப் பிள்ளைகள் சொல்ல, அவர் ஆச்சரியத்தில் உறைந்தார். 'ஸ்வாமி வந்த செய்தி’ பக்தர்களுக்கெல்லாம் பரமானந்தத்தையும், பகவான் நம் காவலுக்கு எப்போதுமிருப்பார் என்ற பரம நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. பிறந்த நாளை ஒட்டிய பொழுதுகளில், கனவிலோ நேரிலோ ஸ்வாமி வெண்ணிற உடையிலேயே காட்சியளிப்பது உண்டு.  அதே போல் இப்போதும் ஸ்வாமி, வெண்ணிற உடையிலேயே தன் பிறந்த நாள் வரும் நெருக்கத்தில் வந்து நடமாடியிருக்கிறார்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

'ஸ்ரீசத்யசாயி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவருக்குத் தீவிரமான காய்ச்சல் வந்தது. அவருடன் விடுதியில் தங்கியிருக்கும் நண்பர்... சக மாணவர், அவரை ஸ்வாமியின் ஹாஸ்பிடலில் சேர்த்தார். டிஸ்சார்ஜ் ஆகும் நாளன்று காலை 5 மணிக்கு, தான் வந்து அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால், அந்த மாணவர் மருத்துவ மனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்’ ஆகும் நாளன்று காலையில் இவர் தன்னை மறந்து தூங்கிவிட்டார். திடுதிப்பென்று எழுந்து பார்த்தால் நேரமாகிவிட்டிருந்தது. பதறிப்போய் மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு போனால் அந்த மாணவர், டிஸ்சார்ஜ் ஆகிப்போயிருந்தார். 'இதென்ன, நான்தான் வந்து அழைத்துப் போகிறேன் என்றேனே! அதற்குள் என்ன அவசரம்!’ என்று நினைத்தவர், வேகமாக விடுதிக்குத் திரும்பிப் போய் பார்த்தால், அந்த மாணவர் அறையில் உட்கார்ந்திருந்தார். 'ரொம்ப ஸாரி! காலையில அடிச்சுப் போட்டாப்ல தூங்கிட்டேன். என்னால வரமுடியாம போச்சு!’ என்று நண்பர் சொல்ல, அந்த மாணவர் ஆச்சரியத்துடன், 'என்ன சொல்றே? நீதானே காலைல ஹாஸ்பிடல்லேர்ந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்தே?’ என்றார் பதற்றமும் பரபரப்புமாக! 'நான் வரவேயில்லையே’ என்று நண்பர் குழம்ப, அவரின் உருவத்தில் போய் அந்த மாணவரை அழைத்து வந்தது ஸ்வாமிதான் என்று புரிந்ததும், அங்கே இருந்த அன்பர்கள், வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திணறிப்போய் நின்றார்கள்.

நம் ஸ்வாமி நம்மோடுதான் இருக்கிறார்; எப்போது வேண்டுமானாலும் ஆபத்பாந்தவனாய் வந்து நம்மைக் காப்பார் என்ற நம்பிக்கை, பக்தர்கள் அனைவருக்குள்ளும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. புட்டபர்த்தியில் மட்டுமல்ல, ஸ்வாமியை அன்போடு வழிபடும் எத்தனையோ இடங்களில் ஸ்வாமி சத்யசாயிபாபா பிரத்யட்சப்பட்டிருக்கிறார். காட்சி தந்து அருள்வதும், மறைந்து நின்று அருள்வதும் இறைவன் இயல்புதானே! ஆழ்ந்த அமைதியில் மனமுருகிக் கரைந்து, ஸ்வாமியை நினைத்திருந்தால் நம்முன் சாயி வந்து நிற்பார். இது சத்தியம்!

- அடுத்த இதழில் நிறைவுறும்