சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!
கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

உலகப் புகழ் பெற்ற மறைந்த கணித மேதை ராமானுஜத்தின் 125-வது ஜயந்தி
இந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி அன்று நிகழவிருக்கிறது.

##~##
ணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை 'த மேன் ஹூ நியூ இன்ஃபினிடி’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாக  எழுதியுள்ளார் ராபர்ட் கனிகல் என்னும் நூலாசிரியர். 'அற்புதமான படைப்பு’ என்று உலகம் எங்கிலும் பரவலாகப் பாராட்டப் பெற்ற இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காகவே இந்தியாவுக்கு வந்து, சில வாரங்கள் இங்கே தங்கியிருந்து ராமானுஜன் பிறந்த, வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பயணம் செய்து, தகவல் திரட்டி, ஆராய்ச்சிகள் செய்து, மிகவும் அருமையானதொரு படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார் ராபர்ட் கனிகல்.

கணித மேதை என்று மட்டுமே நாமெல்லாரும் அறிந்திருந்த ராமானுஜத்தின் ஆன்மிக பக்கம் பற்றி இந்தப் புத்தகத்தில் ராபர்ட் கனிகல் எழுதியுள்ளவற்றைப் படிக்கப் படிக்க வியப்பும் மலைப்பும் ஏற்படுகிறது.

கணிதத் துறையில் உள்ள பல ஜாம்பவான்களும் இன்றைக்கும் பிரமித்து நிற்கும் அளவுக்குத் தம் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ராமானுஜன், தமக்கு நாமகிரித் தாயாரின் அருள் இருந்தது என்று கூறியிருக்கிறார். ராமானுஜனைத் தமது ஆத்ம நண்பராக ஏற்று, லண்டனுக்கு வரவழைத்து, அவருக்கு உதவிகள் பல புரிந்து, அவரது பெருமைகளைப் பரப்பி, உலகப் புகழ்பெற்ற மேதையாக அறிவித்த பேராசிரியர் ஹார்டி, கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு நாத்திகர் என்பது விசித்திரமான முரண். ஆனால், அவரேகூட ராமானுஜனிடம் ஏதோ ஒரு அபூர்வ திறமையும் அமானுஷ்ய ஆற்றலும் இருந்ததாகத் தெரி¢வித்துள்ளார்.  

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

'பொறாமைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த ஒரு மனிதன், சூப்பர்லேடிவ் கணித மேதை சீனிவாச ராமானு ஜன். கடந்த ஆயிரம் ஆண்டுகளில், இந்தியாவில் இப்படி ஒரு மேதை பிறந்ததில்லை’ என்று குறிப்பிட்டி ருக்கிறார் ராபர்ட் கனிகல்.

நூலின் ஆரம்பமே தமிழ்நாட்டி லிருந்து துவங்குகிறது. நூலாசிரியரின் சரளமான எழுத்து நடை, நம்மை உடனே உள்ளுக்குள் இழுத்துக் கொண்டுவிடுகிறது.

'ராமானுஜனின் கண்டுபிடிப் புகளுக்கும், இன்றைய கணித உலகுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்றைக்கும் கணித நிபுணர்களைத் திகைக்க வைக்கும் அளவுக்கு அவரது கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. அவருடைய தியரம் எல்லாம் கம்ப்யூட்டர் துறையிலும், ஏன்...  கான்சர் ஆராய்ச்சிக்கும்கூடப் பயன்படுகின்றன. அவர் மட்டும் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!’ என்று தன் வியப்பையும் ஆதங்கத்தையும் ஒரு சேரக் கொட்டியிருக்கிறார் ராபர்ட் கனிகல்.

'என்னைப் பொறுத்தவரை கடவு ளின் வெளிப்பாடு இதில் இல்லை என்றால், எந்த ஈக்வேஷனுக்கும் அர்த்தமே இல்லை!’ என்று ராமானு ஜன் சொன்னதாகவும், தன் திறமை முழுமைக்கும் காரணம் நாமகிரித் தாயார்தான் என்று உறுதியாக நம்பிய தாகவும் இந்த நூலில் குறிப்பிட்டிருக் கிறார் கனிகல்..  

'ஒருபுறம் பகுத்தறிவுபூர்வமான, காரணங்களுக்கு உட்பட்ட எண்ணங் கள் ராமானுஜனிடம் காணப்பட்டா லும், அவருடைய உள்ளுணர்வு கூறும், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களும் அவரிடமிருந்து அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டு இருந்தன. அவற்றை மேற்கத்திய நண்பர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அமானுஷ்யமான தன்மை அவரிடம் இயல்பாக இருந்ததோடு, அதனிடம் அவர் சரணடைந்திருந்தார் என்றே சொல்லவேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் கனிகல்.

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

அவர் படித்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் பல!  பச்சையப்பன் கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த போது, ஒருமுறை காற்றில் அவரது தொப்பி பறந்துபோய்விட, குடுமித் தலை வெளிப்பட்டது. குடுமியை மறைத்தபடி தொப்பி அணிந்துதான் வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார் சம்ஸ்கிருத ஆசிரியர். அன்றைக்கு வெறுந்தலையோடு வந்த ராமானுஜனிடம், 'கடைக்குப் போய் தொப்பி வாங்கி அணிந்துகொண்டு வந்தால், உள்ளே வா!’ என்று அனுப்பிவிட்டார். 'புதுத் தொப்பி வாங்க என்னிடம் இப்போது காசு இல்லை ஐயா!’ என்று ராமானுஜன் கெஞ்சியும், ஆசிரியர் மசியவில்லை. தொப்பி மட்டுமில்லை; ராமானுஜனிடம் நல்ல உடைகள்கூட இருந்ததில்லை. பல நேரங்களில் அவருடைய நிலைக்கு இரக்கப்பட்டு, சக மாணவர்களே தங்கள் பணத்தைப் போட்டு அவருக்கு உடைகள் வாங்கித் தந்திருக்கிறார்கள். ராமானுஜனின் தந்தையின் வருமானம் மாதத்துக்கு சுமார் இருபது ரூபாய்தான். தவிர, சமையல் தொழில் செய்து ராமானுஜனின் தாய் கோமளத்தம்மாள் மாதம் பத்து ரூபாய் சம்பாதித்தார்.

மிகச் சிறந்த புத்திசாலியான ராமானுஜன் ஒருமுறை பரீட்சையில் தோல்வியுற்றார்; அவருக்கு ஸ்காலர்ஷிப்பும் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம்! ஆனால், அவர் பாடம்  சொல்லிக்கொடுத்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறினார்கள் என்பது அதைவிட ஆச்சரியம்!  

பேராசிரியர் ஹார்டிக்கு ராமானுஜனை லண்டனுக்கு வரவழைத்துக் கொள்ள ஆசை. தன் நண்பரும், கணித நிபுணருமான எரிக் ஹரால்ட் நெவில் என்பவரி டம் ராமானுஜனைச் சந்தித்துப் பேசி, இதற்குச் சம்மதிக்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார். தாய் சொல்லைத் தட்டாதவர் ராமானுஜன். அவர் சம்மதித்தாலும்,  மிகவும் ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த அவரின் தாயார் இதற்கு எப்படிச் சம்மதிப்பார்? ஆனால், அவர் சம்மதித்தார். அதுதான் ஆச்சரியம்!  

எப்படி இந்த மந்திரவித்தை நடந்தது என வியக்கிறார் நெவில்.

'பெங்களூர் ஜர்னல் ஆஃப் த இந்தியன் மேத்தமேட்டிகல் சொசைட்டி’யின் ஆசிரியர் டி.நாராயண அய்யர்தான் ராமானுஜனின் பல கணிதப் புதிர்களை வெளிக்கொண்டு வந்தவர்.

அவரும் மிகுந்த ஆசாரமானவர். அவர் கூறியது ராமானுஜனைச் சிந்திக்க வைத்தது. 'அம்மா சம்மதித்தால் கூடப் போதாது; அவள் சாதாரண மனுஷி. தெய்வத்தின் அனுமதி இருந்தால், அஞ்சாமல் செல்!’ என்றார் அவர். எனவே, தாயார், தெய்வம் இருவரின் அனுமதியும் கிடைத்தால்தான் லண்டன் செல்வது என்று தீர்மானித்தார் ராமானுஜன்.  

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

அந்த நேரத்தில் ராமானுஜனின் தாயார் ஒருநாள் ஒரு கனவு கண்டார்.  ராமானுஜனைச் சுற்றி நிறைய ஐரோப்பியர்கள் நிற்பது போலவும், நாமகிரித் தாயார் ராமானுஜனின் தாயிடம், 'உன் மகனுக்கும் அவனுடைய நீண்டகால விருப்பத்துக்கும் நீ குறுக்கே நிற்கக்கூடாது’ என்று கட்டளை இடுவது போலவும் கனவில் காட்சி தெரிந்தது. 'எனக்குத் தெரிந்தவரை இதுதான் நடந்தது.  நாமக்கல் நாமகிரித் தாயார் ராமானுஜன் லண்டன் செல்ல அனுமதித்து விட்டார்’ என்கிறார் நெவில்.

ராமானுஜனுக்கே நேராகக் கடவுளிடமிருந்து உத்தரவு வந்தது குறித்து இன்னோர் இடத்திலும் குறிப்பிட்டிருக்கிறார் கனிகல்.

'மூன்று இரவுகளாக, நாராயண அய்யரும் ராமானுஜனும் கோயில் பிராகாரத்திலேயே படுத்து உறங்கினார்கள். அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து, கல்லில் குடைந்த அந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னால், கோட்டை தெரிந்தது. முதல் இரண்டு இரவுகளில் ஒன்றும் நடக்கவில்லை. மூன்றாம் நாள் இரவு, கனவு கண்டு விழித்துக் கொண்ட ராமானுஜன், நாராயண அய்யரை எழுப்பி, 'ஒரு மின்னல் மாதிரி தெரிந்தது. நான் வெளிநாடு போகத் தடை எதுவும் இல்லை என்று யாரோ என் காதில் சொல்வது போலத் தெளிவாகக் கேட்டது’ என்று கூறினார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார் கனிகல்.

''இது மாதிரியே 'ஜோன் ஆஃப் ஆர்க்’குக்கும் நடந்திருக்கிறது. ஹிந்து மதத்தின் சிறப்பு என்னவென்றால், அதில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது என்பதுடன், மிகவும் பொறுமை உள்ள மதம் அது. வேறு எந்த மதத்தையும் அது மறுக்கவில்லை. அது ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொடுக்கவில்லை. இப்படித்தான் தொழ வேண்டும் என்ற நிபந்தனை எதையும் அது விதிக்கவில்லை’ என்று சிலாகித்துச் சொல்கிறார் கனிகல்.

கணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை!

ஆயிரக்கணக்கான தெய்வங்களில், தென்னிந்தியர்கள் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே வழிபடுபவர்களாக இருந்ததில்லை.  ஆனால், காலம் காலமாக அவர்கள் குடும்பத்தில் வழிபட்டு வந்த ஒரு குலதெய்வத்துக்கு, குடும்பத் தின் சோதனையான கட்டங்களில் விசேஷ பூஜைகள் செய்தனர்.

ராமானுஜனின் குடும்பத்தில், அவர்கள் வழிபட்ட குடும்ப தெய்வம் நாமகிரித் தாயாரும் நரசிம்மரும்தாம். பல வருடங்களுக்கு முன்பு, அதாவது ராமானுஜன் பிறப்பதற்கு முன்னால், அவருடைய தாயாரின் வழிப்பிள்ளையாக வந்து பேசப்போவதாக அவரின் கனவில் அறிவித்தாராம் நாமகிரித் தாயார். சின்ன வயதிலிருந்தே  இதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்த ராமானுஜன், எப்போதும் நாமகிரித் தாயாரின் பெயரைச் சொல்லியே வாழ்த்து கேட்பார்; ஆசிகளைக் கோருவார். தனக்குக் கணிதத்தில் சிறப்பு கிடைக்க, நாமகிரித் தாயார்தான் காரணம் என்று பலமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருப்பதோடு, தன் நாவில் நாமகிரித் தாயாரே கணித ஈக்வேஷங்களை எழுதித் தந்தார் என்றும் தன் நண்பர்களிடம் பரவசத்துடன் கூறுவாராம். தன் கனவில் நாமகிரித் தாயார் தோன்றி, சில கடினமான, புதிரான கணிதங்களுக்கு விடை கூடச் சொல்லித் தந்திருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறாராம் ராமானுஜன்.

ராமானுஜன் தனது கைப்பட எழுதிய நோட்டுப்புத்தகங்கள் பிரபலமானவை. ஒரு ஃபார்முலாவை நிரூபிப்பதற்கு, அவர் பல வழிமுறைகளைக் கண்டுபிடித்தார். அவற்றை எல்லாம் 1904 முதல் 1907 வரை, அந்த நோட்டுப் புத்தகங்களில்தான் எழுதி வைத்தார். ஒரு வகை விசித்திரமான பச்சை மசியில் அவற்றை எழுதியிருந்தார்.

'இப்போது கம்ப்யூட்டர்களும் வேர்டு பிராசசர்களும் வந்து வேலையைச் சுலபமாக்கி விட்டாலும், இவை தோன்றுவதற்குப் பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை திருத்தமாக ஒருவர் எழுதி வைத்துவிட்டுப் போகமுடியுமா என்பதை நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது’ என்கிறார் கனிகல்.

சுமார் நானூறு பக்கங்களில் ஒரு தமிழரின் சரிதத்தை இத்தனை விவரமாக, தவறுகள் இல்லாமல், கனிகலைவிட வேறு யாரும் சுவாரசியமாக எழுதியிருக்கமுடியாது.

ராமானுஜத்தின் திருமணம், ஜானகி அம்மா ளுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கை, கடைசி வரை ஹிந்துக் கடவுளர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என எதையும் கனிகல் விட்டுவைக்கவில்லை. ராமானுஜன் வறுமையில் கஷ்டப்பட்டது வரலாறு என்றாலும், அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தது, எந்தக் கல் நெஞ்சத்தையும் கரைத்துவிடும். காவிரியும், கும்பகோணமும், சாரங்கபாணி கோயிலும், நாமக்கல் நரசிம்மரும், நாமகிரித் தாயாரும், அத்தனை கணித ஆசான்களும் இந்த நூலில் உயிரோட்டத்துடன் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள்.

ராமானுஜன் பிறந்தது வியாழக்கிழமை டிசம்பர் 22, 1887. மறைந்தது திங்கள் கிழமை, ஏப்ரல் 26, 1920. 32 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்து, உலக சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு மேதை ராமானுஜன். ஹார்டிக்கு ராமானுஜன் கடமைப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழர்கள் ராபர்ட் கனிகலுக்கு இந்த ஒரு நூலுக்காக நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறார்கள்.