பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்...

கனவுக்குப் பரிகாரம்!

அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள். நல்ல கனவு வந்தால் சரி, கெட்ட கனவானால் என்ன செய்வது? அந்தக் கனவுகள் பலிக்குமோ, பலிக்காதோ... இது ஒருபுறம் இருந்தாலும், இதனால் நம் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நம்மைப் படுத்தி எடுத்துவிடும். இதற்குப் பரிகாரமாகச் சில விஷயங்களைச் சொல்லிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

கெட்ட கனவுகளைப் பற்றி வெளியே மற்றவர்களிடம் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட கனவு வருமானால், மறுநாள் பகலில் பசுவுக்குப் புல், பழம், கீரை கொடுக்க வேண்டும். அதேபோல் `அச்சுதா, கேசவா, சத்ய சங்கல்பரே, ஜனார்த்தனா, ஹம்ச நாராயணா என்னைக் காத்தருள வேண்டும்' என்று பெருமாளின் திருநாமங்களைத் தியானித்து வழிபடுவதால், கெட்ட கனவுகளால் மனதில் ஏற்படும் பாதிப்புகள், மனச் சஞ்சலங்கள் விலகும்.

- ஆர்.கண்ணன், சென்னை-33

ஆறெழுத்து மந்திரம்!

சிவனாருக்கு உரியது பஞ்சாட்சர மந்திரம். மகாவிஷ்ணுவுக்கு உரியது அஷ்டாட்சரம். அதேபோல் முருகப்பெருமானுக்கு உரியது ஷடாட்சரமாகிய `சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரமாகும். மனம் நிறைந்த பக்தியோடு இந்த மந்திரத்தைப் பிரயோகிக்கும் முறைகளையும் பயனையும் தெரிந்துகொள்வோமா?

சரஹணபவ - இப்படிச் சொல்லி, தொடர்ந்து ஜபித்துவர சர்வ வசியம் உண்டாகும்.

ரஹணபவச - செல்வமும் செல்வாக்கும் பெருகும்.

ஹணபவசர - பகையும் பிணிகளும் நீங்கும்.

ணபவசரஹ - எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

பவசரஹண - சகல உயிர்களும் நம்மை விரும்பும்.

வசரஹணப - எதிரிகளின் சதி, அவர்களால் உண்டாகும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

- ப.சரவணன், திருச்சி-6

ஆன்மிக துளிகள்...

கால பைரவ பூஜை!

கால பைரவர் அவதரித்த, கார்த்திகை மாதம் வளர்பிறை அஷ்டமியில் அவரைக் குறித்து ‘கால பைரவ பூஜை விரதம்’ என்று செய்வார்கள். கலசத்தில் பைரவர் வடிவத்தை வைத்து, சிவபூஜை செய்வதைப் போலவே பூஜை செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் இந்தப் பூஜை செய்வது விசேஷம். முடியாத பட்சத்தில் கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி தினத்திலாவது இந்தப் பூஜையைச் செய்வது நல்லது. இதனால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; யம பயம் இருக்காது. அதேபோல் ஐப்பசி மாதம் தேய்பிறை அஷ்டமியை கால பைரவாஷ்டமி எனப் போற்றுவார்கள்.

வரும் ஐப்பசி 25 (நவம்பர்-11) சனிக்கிழமையில் கால பைரவாஷ்டமி வருகிறது. அன்று ஆலயத்துக்குச் சென்று பைரவ மூர்த்திக்கு நிகழும் விசேஷ வழிபாடுகளில் கலந்துகொண்டு, வடை மாலை சாற்றுவதுடன் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். இதனால் கடன் தொல்லை, வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகளால் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் ஆகியன நீங்கும்; தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும்.

- கே.ஆர்.சதாசிவம், துறையூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு