மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?

      காரைக்காலுக்குச் சென்றிருந்த நாரதருக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். வெளியில் மழை கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது. இந்த அடைமழையில் நாரதர் வருவாரோ, மாட்டாரோ என்ற சிந்தனை உள்ளுக்குள் எழுந்த தருணத்தில் படாரென கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் நாரதர்.

மழைக்கு இதமாக இருக்கட்டுமென்று, சூடான இஞ்சித் தேநீரைப் பருகக் கொடுத்தோம். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தேநீரைப் பருகத் தொடங்கிய நாரதரிடம் கேள்வியை ஆரம்பித்தோம்.

‘‘காரைக்கால் ட்ரிப் எப்படி இருந்தது?’’ என்றோம்.

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?

நாரதர் லேசாகப் புன்னகைத்துவிட்டு, ‘‘மிக நன்று. எல்லா இடங்களிலும் புரட்டி எடுக்கிறது மழை. அது இருக்கட்டும்... காரைக்கால் விஷயத்தை விடவும் முக்கியமான விஷயங்களை உம்மிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்’’ என்றவர், என்ன ஏதென்று கேட்பதற்கு நமக்கு அவசியம் ஏற்படாதபடி அவரே தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

‘‘காரைக்காலில் இருந்து திரும்பும்போது மதுரை நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் பகிர்வு ஒன்றை அனுப்பிவைத்தார். அதிலிருந்த தகவலும் பின்னணியும் பக்தர்களை மிகவும் ஆதங்கப்பட வைத்திருக்கின்றன. விஷயம் இதுதான்...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஸ்திரத் தன்மை குறித்து யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சங்குபாண்டி என்பவர் மீனாட்சியம்மன் கோயிலைப் பற்றித் தகவல் அறிந்துகொள்ள, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், ஏழு கேள்விகளை மதுரை கோயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார்.

அதற்குக் கோயில் நிர்வாகத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அலட்சியமான பதில்கள்தான் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஒரு கேள்வி... கோயில் மண்டபத்தின் தூண்கள் சிதிலமடைந்துள்ளன என்ற தகவலின் அடிப்படையில் அதைப் பற்றி விவரம் அறியும்பொருட்டு கேட்கப்பட்டது. ‘ஆயிரங்கால் மண்டபத்தில் தற்போது எத்தனை தூண்கள் உள்ளன’ என்ற அந்தக் கேள்விக்கு, கோயில் தரப்பில் சொல்லப்பட்ட பதில் என்ன தெரியுமா?’’ என்று கேட்டு விட்டு நாரதர் நம் முகத்தை உற்றுநோக்க, நாம் ஆர்வம் தாங்காமல் கேட்டோம் ‘‘நீரே சொல்லும்... என்ன பதில் தந்தார்களாம்?’’

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?


‘‘கோயில் திறந்திருக்கும்போது நேரில் வந்து எண்ணிக் கொள்ளுங்கள் என்று பதில் அளித்திருக்கிறது கோயில் நிர்வாகம்’’ என்று நாரதர் சொல்ல, அதிர்ந்துபோனோம்.

‘‘என்ன நாரதரே… ஆர்.டி.ஐ மூலம் மக்கள் கேட்கும் கேள்விக்கு இப்படியா அலட்சியமாகப் பதில் சொல்வார்கள்?’’ என்று கேட்டு, நாரதரிடம் நமது ஆற்றாமையை வெளிப்படுத்தினோம். அத்துடன் ‘‘நாரதரே... இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தீரா?’’ என்றும் கேட்டோம்.

“விசாரித்தேன். ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான கேள்விகளுக்குப் பதிலளிப்பது வெளிப்படையானது. கோயில் திறந்திருக்கும் நேரத்தில் நேரில் வந்து பாருங்கள் என்று கூறுவது இயல்பான ஒன்றுதானே. இதில் எங்கள்மீது எந்தத் தவறும் இல்லை’ என்று சொல்கிறார் மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையர் நடராஜன்!’’ என்ற நாரதர், ‘‘இது இப்படியென்றால் இன்னொரு வாட்ஸ்அப் தகவல் வைணவ பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார் பூடகமாக.

சமீப நாள்களாக வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுவரும் திருவரங்கம் கோயில் சர்ச்சையைப் பற்றிதான் நாரதர் சொல்ல வருகிறார் என்பது தெரிந்தது. இருந்தாலும் அதுபற்றிய விரிவான தகவலைச் சொல்வார் எனும் எதிர்பார்ப்பில், அவரையே தொடர்ந்து பேசவிட்டோம்.

‘‘முதலில், வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட தகவலை அப்படியே சொல்கிறேன்.

‘இக்ஷ்வாகு மன்னர் முதலான  ரகுவம்ச மன்னர்களால் ஆராதிக்கப்பட்டவரும் திரேதா யுகத்தில் அவதாரம் எடுத்த ஸ்ரீராமபிரானால் பூஜிக்கப்பட்டவருமான திருவரங்கன் கோயில்கொண்டிருக்கும் தலம் திருவரங்கம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், திவ்விய தேசங்களில் முதன்மையானதுமான திருக்கோயில் அது.

திருவரங்கன் சந்நிதியில் கடந்த ஒரு வருட காலமாக, ஸ்ரீராமாநுஜரால் உருவாக்கப்பட்ட நித்யபடி கிரமங்களில் பல விஷயங்கள் மீறப் பட்டு, சம்பிரதாயத்துக்கு விரோதமாகச் சில காரியங்கள் நடந்துவருகின்றன.

காலை 5.30 மணிக்கு நடைபெறும் விஸ்வரூப தரிசனம் 6.30 - 7.00 மணிக்கு என்று இஷ்டம்போல் மாற்றப்பட்டு, எந்த முன்னறிவிப்பும் இல்லாம லேயே நடத்தப்படுகிறது. சில நாள்களில் 9 மணிக்கு நடைபெற வேண்டிய நம்பெருமாளின் புறப்பாடு, காலை 7 மணிக்குள்ளாகவே நடத்தப் படுகிறது. அவ்வாறு செய்தால் அனைத்து சந்நிதி களிலும் கோஷ்டி சேவை எப்படி நடைபெறும்?

காவிரி புஷ்கரம் நடைபெற்ற காலத்தில், உரிய காலங்களில் பெருமாளுக்கு நைவேத்தியங்கள் நடக்கவில்லை. உச்சிப்பொழுது நைவேத்தியம் சுத்தமாக நிறுத்தப்பட்டது. இரவு 12 மணி வரைக்கும் நடை திறக்கப்பட்டிருந்தது.

நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன?

ஸ்ரீராமாநுஜர் உருவாக்கிய நெறிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன. கூரேசர் தோட்டம் அழிக்கப்பட்டுள்ளது.

600 வருட பழைமையான கதவு முதலாக பல பொருள்கள் காணாமல் போயுள்ளன...’ என்று நீள்கிறது அந்தத் தகவல்’’ என்று கூறி முடித்தார் நாரதர்.

‘‘கேட்கும்போதே தலைசுற்றுகிறதே! இதுகுறித்து பக்தர்கள் யாரும் சம்பந்தப்பட்டவர் களிடம் புகார் தெரிவித்தார்களா?’’

‘‘இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு இ-மெயில் வழியாக நிறைய பக்தர்கள் புகார் செய்திருக்கிறார்கள். அதை நமக்கும் ஃபார்வர்டு செய்துள்ளார்கள்’’ என்று நாரதர் பதிலளிக்க அவரிடம், ‘‘புகாருக்கு ஏதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?’’ எனக் கேட்டோம்.

‘‘இதுவரை நடவடிக்கை இல்லை என்றுதான் கேள்விப்பட்டேன். மேலும் இப்படியான குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலருக்கும் சென்னையில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பிவைத்து விளக்கம் கேட்டோம்.’’

‘‘என்ன பதில் சொன்னார்கள்?’’

‘‘ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் நம்மைத் தொடர்புகொண்டு ‘மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுக்கு நடக்கும் பூஜைகளை யாரும் மாற்ற முடியாது. எப்போதும் செய்யும் உரிய நேரத்தில்தான் பூஜைகள் நடக்கின்றன. நைவேத்தியங்களிலும் எந்தக் குறையும் இல்லை. சொல்லப்படுவது எல்லாமே பொய்க் குற்றச் சாட்டுகள். அறநிலையத்துறை வகுத்திருக்கும் சட்டத்திட்டத்தின்படிதான் கோயில் நிர்வாகம் செயல்படுகிறது’ என்றார்.

சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறையின் தலைமை அலுவலகத்தின் தரப்பில், ‘இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது’ என்றதுடன் முடித்துக் கொண்டார்கள்’’ என்றார் நாரதர்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘திருவரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது’ என்ற தகவல் வாட்ஸ்அப்பில் வந்துவிழ, அதைப் படித்துவிட்டு நிமிர்ந்த நாரதர், ‘‘இந்தச் செய்தி சேனல்களில் வெளிவந்த சில மணி நேரத்திலேயே ‘முறைப்படி வழங்கப்படவில்லை விருது’ என்ற ரீதியிலான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிவிட்டன’’ என்றவர் தொடர்ந்து, ‘‘அதுபற்றி அடுத்தமுறை வரும்போது விவரமாக விசாரித்துவிட்டு வந்து சொல்கிறேன். அப்படியே காரைக்கால் மாவட்டத்தில் நான் தரிசித்து வந்த அம்மன் கோயில் குறித்தும் விலாவாரியாகப் பேசுவோம்’’ என்றபடியே எழுந்துகொண்டார் நாரதர்.

ஜன்னலைத் திறந்து வெளியே நோட்ட மிட்டவர், ‘‘மழை நின்ற பாடில்லை... இப்போதே கிளம்பினால்தான் உண்டு’’ என்றபடியே நமது பதிலுக்குக் காத்திருக்காமல், வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார்!

- உலா தொடரும்...