மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!

குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!
பிரீமியம் ஸ்டோரி
News
குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: தே.தீட்சித்

சிவனடியார்களுக்கு மிகவும் பரிச்சயமானது, ‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற பதிகம். அந்தப் பதிகத்தைத் திருஞானசம்பந்தர் பாடிய திருத்தலம்தான்... அந்தக் காலத்தில் திருப்பாச்சிலாச் சிராமம் என்றழைக்கப்பட்ட திருவாசி. திருச்சிக்கு அருகே அமைந்திருக்கும் இத்தலம், தீராத நோய்களை...  குறிப்பாக வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் தலமாக விளங்குகிறது.

தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் 62-வது தலம் இது. இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. இது ஹொய்சாள சோழ நாயக்கர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற கோயில்கள் போல் அல்லாமல் சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், அக்னி மூலையில் மேற்கு நோக்கி (ஒருவரையொருவர் பார்ப்பதுபோல) அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். கர்ப்பக்கிரகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழே சுயம்புநாதராகக் காட்சி தருகிறார் மூலவர். 

‘‘கிழக்கே பார்த்திருக்கும் இந்தச் சிவபெருமான் ரொம்ப விசேஷமானவர். திங்கட்கிழமையில் இவருக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நிரந்தர வேலை, வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சர்ப்பத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று ஆனந்தக் கூத்தாடும் நடராஜர் உற்சவர் சிலை இங்கே மட்டும்தான் இருக்கிறது. வலிப்பு நோய் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடராஜர் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து நோயைத் தீர்க்கிறார் என்பது ஐதீகம்’’ என்கிறார் கோயிலின் அர்ச்சகர் மோகன் குருக்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!

கோயில் சொல்லும் திருக்கதை

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு முயலக நோய் (வலிப்பு நோய்) பீடித்திருந்தது. மன்னன் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எத்தனையோ வைத்தியர்களைப் பார்த்தும் அவளின் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. மனம் நொந்துபோன மன்னன் கோயிலுக்கு வந்து, சிவபெருமானின் சந்நிதியில் மகளைக் கிடத்தி, ‘‘இறைவா, என் மகளின் பிணியைத் தீர்க்க வேண்டியது இனி உன் பொறுப்பு’’ என்று வணங்கி, குணப்படுத்தும் பொறுப்பைப் பெரு மானிடமே விட்டுவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில், திருஞானசம்பந்தர், மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இந்தத் தலத்துக்கு எழுந்தருளினார். மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்று, தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினார். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர், சிவனை வேண்டி ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க...’ எனும் பதிகத்தைப் பாடி வணங்க, மன்னன் மகள் குணமடைந்து எழுந்தாள். சிவபெருமான் அவளது முயலக நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன்மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜரின் காலுக்குக் கீழே மற்ற கோயில்களில் இருப்பதுபோல் முயலகன் உருவம் இருக்காது; இறைவன் திருவடியின்கீழ் சர்ப்பம் திகழ, அதன் மீது நடனமாடும் திருக்கோலத்தில் திகழ்கிறார்.

நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தலத்து நடராஜரை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

‘‘மன்னன் மகளுக்கு நோய் தீர்த்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர வேண்டும். இதனால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும்’’ என்கிறார் மோகன் குருக்கள்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!

இறைவனுக்குப் பெயர் வந்த வரலாறு

இந்தத் தலத்துக்கு வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான், பொன் எதுவும் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், `சிவன் இருக்கிறாரா, இல்லையா' என்ற பொருள்பட ஒரு பதிகம் பாடினார். அதன் கடைசிப் பாடலில், தான் இறைவனை இகழ்ந்து பாடியதைப் பொறுக்குமாறு வேண்டி, ‘அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை’ என்று குறிப்பிட்டுப் பாடுகிறார்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!


அடுத்த சில கணங்களில் அவருக்குக் காட்சி யளித்த ஈசன், சுந்தரர் வேண்டிய பொன் முடிப்பைத் தந்தார். அப்போதும், அது உண்மை யிலேயே பொன்தானா, தரமானதுதானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்குவந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தைச் சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக்கொண்டனர்.

ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, ‘பொன் தரமானதுதான்’ என்றார். உடன்வந்தவரும் அதை ஆமோதித்தார். மறு நிமிடம் இருவருமே மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவபெருமானே காட்சியளித்துத் தாமே வணிகர் வடிவில் வந்து பொன்னை உரைத்துக் காட்டியதைச் சுந்தரருக்கு விளக்கினார். உடன்வந்தவர் மகாவிஷ்ணு என்பதையும் அவருக்கு உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு ‘மாற்று உரை வரதர்’ அல்லது ‘மாற்று உரைத்த ஈஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

பாலர்களின் நோய் தீர்க்கும் பாலாம்பிகை

சரீர உபாதைகள் உள்ள குழந்தைகளின் பாலாரிஷ்டம் எனும் உபாதையைப் போக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது திருவாசி. இங்கே அருள்புரியும் பாலாம்பிகை மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். தாமரை மலர் மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கு பார்த்தபடி இருக்கும் அம்பிகையின் அழகு, வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

திருவாசியில் வசித்த வணிகர் ஒருவரின் மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி வன்னிமரத்தின் கீழ்த் தவமிருந்து, அவரை மணந்ததாகக் கூறப்படுகிறது. வன்னிதான் இங்கு தல விருட்சமாக விளங்குகிறது. இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது, அம்பாளுக்கே முதலில் வழிபாடு செய்யப்படுகிறது. பிறகுதான் சுவாமிக்கு நடக்கிறது. அத்துனை முக்கியத்துவம் வாய்ந்த, சக்திபடைத்த தெய்வமாக விளங்குகிறாள் பாலாம்பிகை.

பால் குடிக்காமல் அழும் குழந்தைகள், உடலில் ஏதும் பிரச்னை இருக்கும் குழந்தைகள் மற்றும் பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளை இங்கேயுள்ள அம்பாள் சந்நிதிக்கு அழைத்து வந்து, காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள் அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளிக்கச் செய்தால், பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

குறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி!

அன்னமாம் பொய்கை

அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள அன்னமாம் பொய்கை என்ற தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு (இவற்றுள் ஏதேனும் ஒரு கிழமையில்) ஆகிய தினங்களில் காலை 7 மணிக்கு அன்னமாம் பொய்கையில் நீராடி, புத்தாடை உடுத்தி, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். இது போல ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்து வழிபட்டால்,  நல்ல வரன் அமைந்து, திருமணம் வெகு சீக்கிரம் நடைபெறும்.

அம்பாள் சந்நிதியின் முகப்பில் இரண்டு துவாரபாலகிகளைக் காண முடிகிறது. திருமண மாகாத பெண்கள் இந்த துவாரபாலகியருக்கு மஞ்சள் கயிறு கட்டியும் பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்கள் இவர்களின் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக, இவர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

திருக்கோயிலின் அமைப்பு

ஏழு நிலை ராஜகோபுரமும் பெரிய சுற்றுச் சுவரும் கோயிலுக்குக் கம்பீரத் தோற்றத்தைத் தருகின்றன. ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் காட்சியளிக்கிறார்.

 கொடிமரம், பலிபீடம், நந்தி தேவர் ஆகியவற்றைத் தாண்டி, கட்டை கோபுர வாசல். அதன்பின்னர் மூலவர் சந்நிதி. கோஷ்டத்தில் நால்வர், அறுபத்து மூவர், கன்னிமூல கணபதி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர். சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனிப் பிராகாரங்கள் உள்ளன. சுற்றுப் பிராகாரமும் அமைந்துள்ளது. இங்குள்ள நவகிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளனர்.

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப் பட்ட இத்தலத்தில் வாதம், வலிப்பு மற்றும் பாலாரிஷ்ட நோய்கள் நீங்குவதுடன் திருமணத் தடை, குழந்தையின்மை ஆகிய குறைகளும் நீங்குகின்றன. நீங்களும் ஒருமுறை திருவாசிக்குச் சென்று தென்னாடு கொண்டானின் திருவருளைப் பெற்று வாருங்களேன்.

- தரிசிப்போம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

எங்கே இருக்கிறது?

திருச்சியிலிருந்து முசிறி, நாமக்கல், சேலம் செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருவாசி. பிரதான சாலையில் இறங்கி, கிளைச் சாலையில் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் பகல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8 மணி வரை.