
மகுடேசுவரன்
ஐந்து பிரிவினராகப் பிரிந்த பாமினி அரசர்களில் அடில்சாகி பரம்பரை யினர் பீஜப்பூர் அரசர்களாகப் பதவியேற்றனர். பாமினி அரசர்கள் சிற்றரசர் களாகத்தான் தடுமாறிக்கொண்டிருந்தார்களே தவிர, நிலைத்த வல்லமையான ஆட்சியைத் தந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. எப்போதும் பதவிப் போட்டிகளும் உட்பூசல்களும் நிறைந்திருந்தமையால் அவ்வரசர்களால் பேரரசைக் கட்டியமைக்க முடியவில்லை. பாமினி அரசர்களுக்கு நேர் எதிராக விஜயநகரப் பேரரசு வளம்பெருகி நிலைத்து நின்றது. விஜயநகர மன்னர்களின் பெருஞ்செல்வம் அண்டை நாட்டு அரசர்களைப் பொறாமையோடு ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை.
யூசுப் அடில்சா என்பவர்தான் பீஜப்பூர் அடில்சாகி பரம்பரையில் முதலாமவர். அவரை முகுந்தராவ் என்னும் மராட்டிய சிற்றரசர் கடுமையாக எதிர்த்து வந்தார். யூசுப் அடில்சா, முகுந்தராவைக் கொன்றுவிட்டு அவருடைய குடும்பத்தைச் சிறைபிடித்தார். பீஜப்பூர் அரசரானதும் யூசுப் அடில்சா ஆண்டுதோறும் விஜயநகரத்தின்மீது போர் தொடுக்கத் தொடங்கினார். கி.பி. 1501-ம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட அந்தக் கொள்ளைப் படையெடுப்புகள் விஜயநகரத்தின் அமைதியைக் குலைத்தன. பெரும்படையோடு எல்லைக்குள் புகுந்து அகப்பட்ட குடிகளை யெல்லாம் கொன்று குவித்தது பீஜப்பூர்ப்படை. அகப்படும் செல்வங்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு பறந்தது. போர் அறிவிப்பு என்று ஏதுமில்லாமல் தொடர்ச்சியாக இத்தகைய கொடுங்கொள்ளைகளும் படுகொலைகளும் விஜயநகர எல்லைக்குள் அரங்கேற்றப்பட்டன. இச்சூறையாடலில் ஆண்டுதோறும் நூற்றாயிரத்துக் கும் குறைவில்லாத விஜயநகரக் குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

கிருஷ்ண தேவராயர் முடிசூட்டிக்கொண்டதும் பீஜப்பூர்ப் படையினரின் இந்தக் கொடுங் கோன்மைக்கு வாள் முனையில் முடிவு கட்டுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார். கி.பி. 1510-ம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் படைகள் திவானி என்ற இடத்தில் யூசுப்பின் படைகளைத் தவிடு பொடியாக்கின. அந்தப் போரில் யூசுப்பின் தலை மயிரிழையில் தப்பியது என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து ராயரின் படைகள் விரட்டிச்சென்று கோவில்கொண்டா என்ற பகுதியில் யூசுப்பை வெட்டிக்கொன்றன. கிருஷ்ண தேவராயரின் வெற்றிக்களி அத்தோடு முடியவில்லை. கல்புருகி, ரெய்ச்சூர் பகுதிகளையும் கைப்பற்றினார். பாமினி அரசர்களின் படைகள் சிதறடிக்கப்பட்டன. ராயரின் அந்தப் படையெடுப்பினால் பல்லாண்டுகளாக கிருட்டிணை நதிக்கரையில் நிலவிய உயிரச்சம் நீங்கியது எனலாம்.
பேரரசுக்கு வடகிழக்கே அடங்காமல் இருந்த ஒரிசாவின் கஜபதிகள் இப்போது கிருஷ்ண தேவராயரின் பார்வைக்குள் அகப்பட்டனர். விஜயநகரப் பேரரசின் ஒட்டுமொத்தப் படையணி களும் ஒரிசாவை நோக்கிச் சென்றன.
யூசுப் அடில்சா கொல்லப்பட்ட பிற்பாடு, பீஜப்பூரின் அரியணையைக் கைப்பற்ற காலந் தோறும் நிகழும் வழக்கமான பதவிச் சூழ்ச்சிகளும் கொலைகளும் அரங்கேறின. யூசுப் அடில்சாவுக்கும் முகுந்தராவின் சகோதரிக்கும் மகனாகப் பிறந்தவர் இஸ்மாயில் அடில்சா. யூசுப்புக்குப் பிறகு இஸ்மாயில் அடில்சா பீஜப்பூரின் மகுடத்தைச் சூடிக்கொண்டார். இஸ்மாயில் அடில்சா பதவியேற்றபோது அவருக்குப் பதின்மூன்றாம் அகவை. பெயரளவுக்குச் சிறுவன் இஸ்மாயிலைப் பதவியில் அமரவைத்துவிட்டு கமால்கான் என்பவர் ஆட்சி நடத்தி வந்தார். கமால்கானுக்குப் பீஜப்பூரின் சிங்காதனத்தைக் கைப்பற்ற இதுவே உகந்த காலம் என்று சிறுவனைக் கொல்ல முயன்றார். ஆனால், இஸ்மாயிலின் தாயார் கமால்கானைக் கொன்று தம் மகனைக் காப்பாற்றினார். பதவி வெறிக்கொலைகள் அத்தோடு முடிந்துவிடவில்லை. கமால்கானின் புதல்வர் சப்தார்கானும் இஸ்மாயிலைக் கொல்ல முயன்றார். சப்தார்கானின் முயற்சியும் நிறைவேறவில்லை. பிடிபட்ட சப்தார்கானும் கொல்லப்பட்டார் என்பதைக் கூற வேண்டிய தில்லை.
விஜயநகரத்துக்கு வெற்றி மேல் வெற்றியாகக் குவிந்துகொண்டிருந்த நேரத்தில் பீஜப்பூர் அரசும் அரச பதவியும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. வலிமையற்ற சிற்றகவை அரசனின் காவலற்ற பகுதியாக பீஜப்பூர் இருந்தது. அது பிற பாமினி அரசர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. பீடாரின் அரசர் அமீர் பரீதின் தலைமையில் நான்கு பாமினி அரசர்களும் பீஜப்பூரை நோக்கிப் படையெடுத்தனர். அப்போது பீஜப்பூர் இஸ்மாயில் அடில்சாவிடம் திறமையான பன்னிரண்டாயிரம் குதிரை வீரர்கள் இருந்தனர். அந்தச் சிறு படையணியைக்கொண்டே கூட்டணிப் படையை இஸ்மாயிலால் விரட்டியடிக்க முடிந்தது. இது இளைஞர் இஸ்மாயில் அடில்சாவின் நம்பிக்கையைப் பெருக்கியது என்று சொல்ல வேண்டும்.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் குதிரைப்படைகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் என்று போர்முறைகளில் பெருத்த மாற்றங்கள் தோன்றின. கொல்வழிகள் பன்மடங்காகின. கத்தி, ஈட்டி, அம்பு, வாள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு போரை வெல்வது இயலாது என்னும் நிலை தோன்றியது. படை மறவர்களின் எண்ணிக்கையும் ஒரு பொருட்டில்லை என்றானது. திறமையான குதிரை வீரர்களும் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இருந்தால் போதும், மிகப்பெரிய எண்ணிக்கை யிலான காலாட்படையினரைக் கொன்று குவித்துவிட முடியும்.
கி.பி. 1516-ம் ஆண்டு கலிங்கப் படையெடுப்புக் காக விஜயநகரத்தின் தொண்ணூறு விழுக்காட்டுப் படைகள் கிளம்பிப் போயிருந்தன. விஜயநகரத்தால் கைப்பற்றப்பட்ட ரெய்ச்சூர்க் கோட்டையைக் கைப்பற்ற இஸ்மாயிலுக்கு அது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. விஜயநகரத்தின் காவல் வலிமை யில்லாமல் இருந்த ரெய்ச்சூர்க் கோட்டையை இஸ்மாயில் அடில்சா மீண்டும் தன்வயமாக்கிக் கொண்டார். அந்நேரத்தில் கலிங்கத்தை நோக்கிச் சென்றிருந்த விஜயநகரப் படைகள் உதயகிரிக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தன. கோட்டைக்குள் பஞ்சமும் பசியும் தலை விரித்தாடியபோதும் முற்றுகை தொடர்ந்தது. இந்நிலையில் ராயரின் திறமையான படைத் தலைவரான திம்மராசு ஒரு திட்டம் தீட்டினார். நள்ளிரவில் கோட்டையின் ரகசியப் பின்வாசலுக் குள் நுழைந்து ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டார். அத்தாக்குதலில் இளவரசனும் மிகச்சிறப்பான வில்வீரனுமான வீரபத்திர கஜபதியைச் சிறைபிடித்தார்கள். அது கலிங்கப் பேரரசர் பிரதாப உருத்திர தேவ கஜபதிக்கு மிகப் பெரிய பின்னடைவாயிற்று. கலிங்கத் தலைநகரை விட்டு வெளியேறியபோதும் அவரை விஜயநகரப் படைகள் விடவில்லை. அந்த விரட்டல் வங்காளத் துக்கு அருகிலான உத்கலம் வரைக்கும் சென்றது.
இனி மேற்கொண்டு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிலையில் கஜபதியிட மிருந்து அமைதித் தூது வந்தது. அதன்படி பிரதாப உருத்திர கஜபதியின் மகள் அன்னபூர்ணா தேவி, கிருஷ்ண தேவராயருக்கு மணம் முடித்துத் தரப் பட்டாள். அந்தத் திருமணத்தால் விஜயநகரமும் கலிங்கமும் ஒன்றுக்குள் ஒன்றாயின. கொண்ட வீட்டுப் பகுதியின் ஆளுநராக திம்மராசு பதவியில் அமர்த்தப்பட்டார். போருக்குப் போன இடத்தில் பெண்ணெடுத்துத் திரும்பியவரானார் கிருஷ்ண தேவராயர்.
அன்னபூரண தேவிக்கும் ராயருக்கும் நிகழ்ந்த ஊடலும் காதலும் பாராமுகமும் வேறொரு காப்பியச் சுவையைத் தருவன. தந்தையின் கலிங்கப் பெருநிலத்தை வென்ற ராயர் மகளின் நெஞ்சத்தில் ஒரு சிற்றிடத்தைப் பெறுவதற்குப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை.
கலிங்கத்திலிருந்து விஜயநகரப் படைகள் திரும்பியபோது ரெய்ச்சூர்க் கோட்டை கையை விட்டுப் போயிருந்தது. இஸ்மாயில் அடில்சாவின் படைகள் கோட்டையைக் கைப்பற்றியிருந்தன. இம்முறை ரெய்ச்சூர்க் கோட்டையைப் படையெடுத்து மீட்பது எளிதாக இருக்காது என்று கிருஷ்ண தேவராயருக்குத் தெரிந்திருந்தது.
- தரிசிப்போம்...