Published:Updated:

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

ந்தச் சிறிய ஆங்கிலேயப் படை `நாமக்கல்’ என்ற சின்னஞ்சிறு ஊருக்குள் வந்தபோது நன்கு இருட்டியிருந்தது. படையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். வாள், ஈட்டி, துப்பாக்கி, ஒரு சிறிய பீரங்கி சகிதமாக அவர்கள் ஊருக்குள் நுழைந்திருந்தார்கள். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் படை வீரர்கள். கம்பெனி, ஒரு முக்கியமான காரியமாக அந்தப் படையை அனுப்பியிருந்தது.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளை `திப்பு சுல்தானைப் பிடிக்க வேண்டும்.’ மைசூர் அரசன் திப்பு சுல்தான். அவருக்கு பிரெஞ்சுக்காரர்களுடன் உறவு. அது ஆங்கிலேயர்களுக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமா, ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்துக்கொண்டிருந்தார். அவரைப் பிடிக்கத்தான் பல படைக்குழுக்களை, பல இடங்களுக்கு அனுப்பியிருந்தது கிழக்கிந்திய கம்பெனி. அந்தக் குழுக்களில் ஒன்று இந்தப் படை. இத்தனைக்கும் நாமக்கல் அன்றைக்கு திப்புவின் கட்டுப்பாட்டில் இருந்தது.  

நாமக்கல்லில் தங்குவதற்கு விடுதிகள் இல்லை. இருந்த ஒரு சத்திரத்திலும் ஆட்கள் நிறைந்திருந் தார்கள். படைக்குத் தலைமை வகித்த மேஜருக்கு மட்டும் ஓர் இல்லம் ஏற்பாடாகியிருந்தது. மேஜர், தன் வீரர்கள் தங்குவதற்கு இடம் தேடினான். கோயில்தான் வீரர்கள் தங்குவதற்குப் பொருத்தமான இடமாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்தான். வீரர்களைப் பிரித்து இரண்டு கோயில்களில் தங்கவைத்தான். அவற்றில் ஒன்று, `தீப்பாய்ந்த அம்மன் கோயில்.’ அதை `மூன்று குண்டாத்தாள் கோயில்’ என்றும் சொல்வார்கள். அந்தக் கோயிலின் மகிமை அந்த மேஜருக்கோ, அவன் படை வீரர்களுக்கோ தெரியாது.    

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

மேஜர் கோயிலைச் சுற்றிப்பார்த்தான். பாதுகாப்பான, பொருத்தமான இடம் என்று தனக்குத்தானே திருப்தியடைந்தான். ஒரு வீரனை அழைத்து, தன் குதிரையைக் கோயில் தூணில் கட்டி வைக்கச் சொன்னான். அது மழைக்காலம். படையைச் சீராக நடத்திச் செல்ல முடியவில்லை. பல இடங்களில் தங்கித் தங்கி நகர வேண்டியிருந்தது. வீரர்கள் சோர்ந்து போயிருந்தார்கள். `திப்புவைப் பிடிக்க முடியாதபடிக்கு இயற்கையே தடை போடுகிறதோ..!’ என்றுகூட மேஜருக்குத் தோன்றியது. வேறு வழியில்லை. இரண்டு, மூன்று நாள்களாவது இந்த ஊரில்தான் தங்கியிருக்க வேண்டும்.

மேஜர், வீரர்களை அழைத்துப் பேசினான். `அடுத்து எந்தத் திசையில் படை செல்ல வேண்டும்... திப்பு குறித்த ஒற்றுச் செய்தி ஏதாவது கிடைக்குமா...இந்த ஊரில் நமக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா... உணவு ஏற்பாடு...’ எல்லாவற்றைக் குறித்தும் விரிவாகப் பேசினான். காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு, அவன் தங்க வேண்டிய இல்லத்துக்குச் சென்றான். அந்த ஊர் அவனுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கப் போகிறது... அவன் வாழ்க்கையில் அதுவரை பார்த்திராத அதிசயங்களையெல்லாம் அவன் பார்க்கப்போகிறான் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இல்லத்துக்கு வந்தவன் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தான். பால் அருந்தினான். சற்று நேரம் மாடத்தில் நின்று ஊரையும் வானத்தையும் மாறி மாறிப் பார்த்தான். நட்சத்திரங்களைக் கரு மேகங்கள் மூடியிருந்தன. ஒரு நட்சத்திரம்கூட அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. மேஜர் தன் அறைக்குள் சென்று படுத்தான். வெகு நேரத்துக்கு உறக்கம் வராமல் புரண்டுகொண்டே யிருந்தான். `புது இடம்... அதுதான் உறக்கம் வரவில்லை’ என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு அவன் உறங்க ஆரம்பித்தபோது, நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

அவன் கண்ணைத் திறந்தபோது நன்கு விடிந்திருந்தது. சாளரம் வழியாக வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. யாரோ அவன் அறைக் கதவை பலமாகத் தட்டிக்கொண்டிருந்தார்கள். `துரை... துரை...’ என்று யாரோ கத்திக்கொண்டிருந் தார்கள். மேஜர் தன் ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டான். எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். வாசலில் அவன் படைவீரர்களில் ஒருவன் நின்றிருந்தான். அவன் முகம் வெளிறிப் போயிருந்தது. ``துரை... குதிரை... ஹார்ஸ்... ஹார்ஸ்...’’ என்று உளறினான். மேஜருக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பது புரிந்தது. தன் காலணியை அணிந்துகொண்டு விறுவிறுவென வெளியே வந்தான். கோயிலை நோக்கி விரைந்தான்.

கோயில் தூணில் கட்டியிருந்த அவன் குதிரை தரையில் மல்லாந்து, விறைத்துப்போய்க் கிடந்தது. அதன் கண்கள் ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தன. அவன் ஆசை ஆசையாக வளர்த்த குதிரை அது. விசாகப்பட்டினத்தில் ஓர் அரபு வியாபாரியிடம் பெரும் விலைகொடுத்து அந்தக் குதிரையை வாங்கியிருந்தான். மேஜருக்கு இதயம் வேகமாகத் துடித்தது. குதிரையைச் சுற்றிச் சுற்றி வந்தான். பாம்பு கடித்ததுபோன்ற தடயம் எதுவுமில்லை. வீரர்களை அழைத்து விசாரித்தான். முதல் நாள் குதிரைக்கு உண்ணக் கொடுத்த பெரிய கலயத்தை எடுத்து வரச் சொன்னான். அடியில் சிறிய அளவில் ஊறிப்போன கொள்ளு இருந்தது. அதைத் தொட்டு முகர்ந்து பார்த்தான். அதிலும் விஷம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. பின் எப்படி குதிரை இறந்தது? குதிரையைப் பராமரிப்பவனிடமும் மற்ற வீரர்களிடமும் மாறி மாறி விசாரித்தான். குதிரை இறந்ததற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. அதற்குள் ஊர் சனங்கள் அங்கே சேர ஆரம்பித்தார்கள்.

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

``துரை...’’ - உள்ளூர்வாசி ஒருவன் தயக்கத்துடன் மேஜர் முன்னே வந்து நின்றான்.

``என்ன?’’

``நீங்க இந்தக் கோயில்ல வந்து தங்கினதே தப்பு...’’ மெதுவான குரலில் சொன்னான் அந்த உள்ளூர்க்காரன். மேஜருக்கு அந்தச் சூழ்நிலையில் எரிச்சலோடு சிரிப்பும் வந்தது.

``இந்தக் கோயிலுக்கு என்ன?’’

``இது மூணு குண்டாத்தாள் கோயில் துரை. ரொம்பச் சக்திவாய்ந்த சாமிங்க. இங்கே போய்க் குதிரையைக் கட்டிவெக்கலாமா? அதான் சாமி குத்தம் ஆகிருச்சு. குண்டாத்தா சாமிங்க உங்க குதிரையைப் பலி வாங்கிடுச்சுங்க...’’

``சாமி குத்தமா? இந்தக் குதிரை உன் சாமியை என்ன செஞ்சுது?’’ என்று கோபப்பட்டான். சிப்பாய்களை அழைத்தான்.

``இன்னும் கொஞ்ச நேரத்துல இந்தக் கோயில் இங்கே இருக்கக் கூடாது. இடிச்சுத் தள்ளுங்க’’ என்று கூறிவிட்டுத் தான் தங்கியிருந்த இல்லம் நோக்கி வேகமாகச் சென்றுவிட்டான்.

அந்தப் படையில் ஆங்கிலேயர்களும் இந்தியச் சிப்பாய்களும் கலந்திருந்தார்கள். இந்தியச் சிப்பாய்களுக்குக் கோயிலை இடிக்கத் தயக்கம். ஆனால், தலைவனின் கட்டளையை மீற முடியுமா? ஆங்கிலச் சிப்பாய்கள் முன்னே செல்ல, இந்தியச் சிப்பாய்கள் பின்தொடர்ந்தார்கள். பெரிய கடப்பாரைகள், கோயிலை இடிக்கத் தேவையான மற்ற ஆயுதங்களோடு முன்னேறினார்கள். கோயில் சுவரில் கடப்பாரையால் முதல் அடி இறங்கியபோது அது நடந்தது.

``பாம்பு... பாம்பு...’’ என்று ஒரு வீரன் அலறினான். அது நல்ல பாம்பு. ஆறடிக்கும் மேல் நீளம். கோயில் சுவர் இடுக்கிலிருந்து அது வெளியே வந்திருந்தது. அரையடி உயரத்துக்குத் தலையுயர்த்தி, படமெடுத்து யாரைக் கொத்தலாம் என்பதுபோல் பார்த்தது. ஓர் ஆங்கிலேய வீரன் தன் வாளால் அதை வெட்ட முயன்றான். அது சரெலென விலகி, அருகிலிருந்த கற்குவியலுக்குள் நுழைந்து கொண்டது. வீரர்கள் துப்பாக்கியால் படபடவெனச் சுட்டார்கள். கடப்பாரையால் கற்களை விலக்கிப் பார்த்தார்கள். எவ்வளவு தேடியும் பாம்பு அகப்படவில்லை. இத்தனையையும் ஊர் சனம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.

அதற்கு மேல் படை வீரர்களுக்குக் கோயிலை இடிக்கத் துணிச்சல் வரவில்லை. கலந்து பேசினார்கள். இறுதியில், அவர்களில் நான்கு பேர் மட்டும் மேஜர் இருக்கும் இல்லத்துக்குப் போனார்கள். மேஜருக்கு அன்றையப் பொழுது நன்றாக விடியவில்லை. இன்றைக்கு ஏதோ பெரிய சிக்கல் நேரப்போகிறது என்பது மட்டும் அவனுக் குப் புரிந்தது. எதையோ யோசித்தபடி குளித்தான். அவனுக்குத் தன் ஊர் ஞாபகம் வந்தது. அங்கெல்லாம் இவ்வளவு மூட நம்பிக்கைகள் இல்லை. உண்மையில் இந்த ஊர்க்காரன் சொன்னது முட்டாள்தனமில்லையா? தெய்வ குத்தமாம். அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? அப்படியானால், குதிரை எப்படி இறந்துபோனது? உணவில் விஷமில்லை. விஷப்பூச்சிகளோ, பாம்போ கடித்த தடயமும் இல்லை. வீரர்களே கொன்று போட்டிருப்பார்களோ... எப்படி? குதிரையின் கழுத்தை நெரித்தா... குதிரையின் கழுத்தை நெரிக்க முடியுமா என்ன? அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

காலை உணவைச் சாப்பிட ஆரம்பித்தபோது மறுபடியும் அறைக்கதவு தட்டப்படும் ஓசை. வெளியே அவன் வீரர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. மேஜர், தன் உதவியாளை அழைத்தான். வீரர்களை உள்ளே அழைத்துவரச் சொன்னான். வீரர்கள் வந்தார்கள். நடந்ததைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டான் மேஜர்.

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

``சரி... கோயிலை இடிக்கப்போகிறீர்களா, இல்லையா?’’

வீரர்கள் பதில் சொல்லாமல், தலை கவிழ்ந்து நின்றார்கள்.

``அவ்வளவு பயமா உங்களுக்கு? நானே இந்த விஷயத்தைப் பார்த்துக்கொள்கிறேன்.’’

மேஜரின் நடவடிக்கைகள் அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியது. இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ என்கிற பீதியுடனேயே வீரர்கள் கிளம்பிப்போனார்கள்.

அந்தி முடியும் நேரம். இரவு மெள்ள அந்த ஊரைப் பற்றிக்கொண்டிருந்தது. மேஜர் கோயிலுக்கு நேர் எதிரே இடுப்பில் கைகளை வைத்தபடி நின்றுகொண்டிருந்தான். வீரர்கள், அவன் கட்டளைப்படி ஓர் ஓரமாக வைத்திருந்த பீரங்கியை, வண்டியோடு சேர்த்து இழுத்து வந்து மேஜருக்கு முன்பாக நிறுத்தினார்கள். அதைத் தயார் செய்தார்கள். மேஜரின் முகத்தையே பார்த்தபடி இருந்தார்கள். இப்போது முழு இருட்டு சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் வீரர்கள் சில தீப்பந்தங்களைக் கொளுத்தி, தூண்களில் கட்டினார்கள். கோயில் வாசலிலும் பல தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டன.

``ஆகட்டும். பீரங்கியில் மருந்தைச் சேர்த்தாகி விட்டது. இனி என்ன... நெருப்பைப் பற்ற வையுங்கள்.’’ மேஜர் ஆணையிட்டான்.

வீரர்கள் யாரும் பீரங்கியை வெடிக்க வைக்க முன்வரவில்லை. தலையைக் குனிந்தபடி இருந்தார்கள். கோயிலுக்கு எதிர்ப்புறம் ஊர்சனம் கூடியிருந்தது. அவர்களையும் மேஜர் பார்வையிட்டான். மேலும் மேலும் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தால், ஊராரின் தலையீட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அது பல விபரீதங்களை ஏற்படுத்தும் என்பது அவனுக்குப் புரிந்தது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் தன்னிடம் இதுகுறித்து விசாரித்தால், என்ன பதில் சொல்ல முடியும் என்று யோசித்துப் பார்த்தான். `உனக்குக் கொடுத்த வேலை என்ன... நீ செய்த வேலை என்ன?’ என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. ஆனாலும், இந்த விஷயத்தை அப்படியே விட அவனுக்கு மனமில்லை. இந்தக் கோயிலை ஏதாவது செய்துவிட வேண்டும் என்கிற ஒரு வீம்பு அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது. அருமைக் குதிரை இறந்து போய்விட்டது. பெரிய பாம்பு படமெடுத்து வந்தது என்று வீரர்கள் பயம் காட்டுகிறார்கள். ஊர் முழுக்கத் தன்னை வேடிக்கை பார்க்கிறது. இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை.   

``ஒரே குண்டு... இந்தக் கோயில் தரைமட்டமாகிவிடும். பார்க்கிறீர்களா?’’ என்றபடி பீரங்கியை நெருங்கினான். ஆனால்...

`அட இது என்ன... ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது? ஒரு விநாடிக்கு முன்னர்கூட நன்கு வெளிச்சமாக இருந்ததே... எரிந்துகொண்டிருந்த பந்தங்கள் எல்லாம் எங்கே? இல்லை... இல்லை... எனக்குத்தான் கண் தெரியவில்லை. என் பார்வை பறி போய்விட்டது. ஆண்டவரே... என் கண்களுக்கு என்ன ஆயிற்று?’ மேஜர் கைகளை நீட்டித் துழாவினான். எதுவும் தட்டுப்படவில்லை. யார் முகமும் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஆனால், யார் யாரோ பேசும், முணுமுணுக்கும் ஓசை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ``ஓ...’’ என்று வாய்விட்டுக் கதறினான். இதெல்லாம் அந்தக் கோயிலில் இருக்கும் தெய்வத்தின் லீலை என்பது அவனுக்குப் புரிந்தது. தான் தவறு செய்து விட்டோம் என்பது உறைத்தது.

மேஜர் அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். அவன் தன் ஆண்டவரை வணங்கும் பாணியில் கோயிலை, அதிலிருக்கும் தெய்வத்தை வணங்கினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து பூசாரி ஓடி வந்தார். மேஜரைத் தேற்றினார். கோயிலுக்கு ஏதாவது நேர்ந்து கொண்டால் அவன் பிரச்னை ஒருவேளை முடிவுக்கு வரலாம் என்று விளக்கினார்.

``அதற்கென்ன கொடுத்துவிடுகிறேன்’’ என்றவன், ஒரு பெரிய வயலையும், ஒரு தோப்பையும் கோயிலுக்குத் தானமாகத் தருவதாகச் சொன்னான். மனதாரக் கோயிலில் உறையும் தெய்வத்தைப் பிரார்த்தித்தான். மெள்ளக் கண்களைத் திறந்தான். அவன் கண்ணுக்கு ஏதோ தெரிந்தது.

- தரிசனம் தொடரும்...

தொகுப்பு: பாலு சத்யா

சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை

சொல்லின் செல்வர்கள்!

ஓர் ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், `‘ராமாயணத்தில் அனுமனைச் சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்’’ என்றார்.

கூட்டத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தவர்கள், யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார், ‘‘நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்தான் சொல்கிறேன்!’’

சங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism