Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

சித்திர ராமாயணம்

எழுந்தனர் எய்தினர்

ண்டகாரண்யத்து முனிவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும்படியாக அமைந்தது ராமனின் பேச்சு.

‘‘சூர் அறுத்தவனும் சுடர்நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
ஆர் அறத்தினொடு அன்றிநின்றார் அவர்
வேர் அறுப்பேன் வெருவன்மின் நீர்’’ என்றான் ராமன்.


‘‘தருமதேவதை மட்டும் என் கட்சியில் இருந்தால் போதும்; வேறு தேவதைகள் எதிர்க்கட்சியில் இருந்தபோதிலும் கவலையே இல்லை. தரும விரோதிகளை வேரறுத்துவிடுவேன், பயப்படாதீர்கள்’’  என்ற ராமனின் அபய தானத்தைப் பெற்றுக்கொள்ளும் முனிவர்கள் அடைந்த ஆனந்தப் பரவசத்தை என்னவென்பது?!

விசேஷ  கெளரவம் வாய்ந்த  தங்கள் ஆசிரம தருமத்தின் அறிகுறியாக வுள்ள கோல்களை - தண்டங்களைப் பம்பரம் சுழற்றுவது போல் சுழற்றி விடுகிறார்கள். அந்த ஆனந்தப் பரவசத்திலேயே ஆடுகிறார்கள். தங்களை மறந்து குழந்தைகளைப் போல் நடந்துகொள்கிறார்கள்.

அதுமட்டுமா? தங்கள் உள்ளங்களில் பொங்கிய காதலைக் குடங்குடமாக மொண்டு அபிஷேகம் செய்கிறவர்களைப்போல மொய்த்துக்கொண்டார்கள் ராமனை. அவன், அவர்களைத் தனித் தனியே ஆசை தீரத் தொழுதான். அவன் தொழத் தொழ வாய் குளிர ஆசி சொன்னார்கள் முனிவர்கள்.

எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின்
கொழுந்தென நின்றஅக் குரிசில் வீரனைப்
பொழிந்தெழு காதலிற் பொருந்தினார் அவன்
தொழுந்தொறும் தொழுந்தொறும்
ஆசி சொல்லுவார்

சித்திர ராமாயணம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்களோடு அந்த வனத்தில் பத்து ஆண்டுகள் கழிந்தன. பின்னர் அகத்தியரின் ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டான் ராமன். அவன் வந்த காரியம் நிறைவேறுவதற்கு, அவன் தங்களுடன் தங்கியிருந்தால்  போதாது என்று தெரிந்துவிட்டதாம் தண்டக முனிவர்களுக்கு. மேலும், ‘தமிழ் முனிவரின் உதவி இன்றியமையாதது. அவரிடம் ராமன் ஆசியுடன் வில் முதலியனவும் பெற வேண்டியிருக்கிறது அல்லவா?’  என்ற அந்த முனிவர்கள் சிந்தையில் எண்ணியிருக்க வேண்டும்.

ராமனின் பயணம் தொடர்ந்தது. அந்தக் காட்டுவழி முன்னிலும் கஷ்டமானது. வெடிப்புள்ள இடங்கள், மூங்கில் அடர்ந்த காடுகள், இடையிடையே படர்ந்து செல்லும் சிறிய வழிகள். பையப் பையத்தான் மிகவும் ஜாக்கிரதையாகப் போக வேண்டியிருக்கிறது. இடையே சுதீட்சணன் என்ற முனிவரைச் சந்தித்து, வழி தெரிந்து யாத்திரை தொடர்ந்தது. அழகிய விந்திய மலைச் சாரல் வழியாகச் செல்கிறார்கள்.

லட்சிய வைத்தியன்

ராமன் வருகிறான் என்றதும் அவனை எதிர்கொண்டு அழைக்கச் சீடர்களோடு வந்தார் அகத்தியர். இந்தச் சந்திப்பு ராவணாதி ராட்சஸர்களுக்கு அவசியமானது. ஆகவே, அகத்தியர் எதிர்கொண்டதும் உலகமெல்லாம் பூரித்துப் போயிற்றாம். உவகைக் கடல் பொங்கி உலகங்களையெல்லாம் மூழ்கடித்துவிட்டதாம்.

அந்த ஆனந்த வெள்ளத்தினிடையே இரண்டு அலைகள் சந்திக்கின்றன என்று சொல்லும் படியாகச் சந்திக்கப்போகிறார்கள் இருவரும். ஆனால், அகத்தியரை ஒரு சிற்றலையாக எண்ணிவிடலாகாது.

வடதிசை `நீசம் உற’ தென்திசை வந்தவரல் லவா? வேதம் தந்த வடமொழியினும் உயர்ந்து நிலவத் தமிழ் தந்தவரல்லவா? விந்திய மலையை அடக்கியவரல்லவா?

இப்படியெல்லாம் குறுமுனிக்குப் பெருமை கற்பித்தது போதாதென்று கடலைக் குடித்தவ ரென்றும் கவிஞன் கூறுகிறான்.

சித்திர ராமாயணம்

`ஒருகை வாரினன்  முகந்தகடல்
எல்லாம் உண்டு அவர்கள்
பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான்’


ஒருமுறை தேவாசுர யுத்தத்தின்போது கடலில் மூழ்கி மறைந்துகொண்டார்களாம் அசுரர்கள். அவர்களைத் துரத்திப் பிடிப்பதற்குக் கடல்நீர் இடையூறாக இருந்ததால் தேவர்கள் அகத்தியரை நாடினார்கள். அவர் ஏதேனும் வழிசொல்லக் கூடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கக்கூடும். ஆனால், அகத்தியரோ அவர்கள் பிரார்த்தித்து முடிப்பதற்கு முன்பே ஒரு கையால் கடல் நீரை வாரி மொண்டு எடுத்து ஆசமனம் செய்துவிட்டாராம்.

தேவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். கடல் இல்லாமல் உலகம் இயங்குமா? ஆகவே அவர்கள், ‘‘அசுரவதத்தை அதிவிரைவில் முடித்துக்கொண்டு உண்ட கடலை மீண்டும் தயவுசெய்து உமிழ்ந்துவிட வேண்டும்’’ என்று முறையிட வேண்டியதாயிற்று.

அப்பேர்ப்பட்ட அகத்தியர், ராமனை மருத்துவனாகக் கருதுகிறார். அரக்கர் என்ற விஷ வேர்களை அடியோடு பறித்துக் களைந்து சமுதாயத்தைக் காப்பாற்றப் போகிறான் என்று துணிகிறார் அகத்தியர். ராமனது வைத்தியத்தால் தேவர்கள் பிழைத்துப் போவார்களாம்.

உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர்
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்க ளானார்
வெந்திறல் அரக்கர்விட வேர்முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன் எனத்தனி வலிப்பான்


உய்ந்தனர் என்ற தொடக்கமே அகத்தியரின் நம்பிக்கையை வலியுறுத்தத் தொடங்குகிறது. இச்செய்யுளைப் படிக்கப் படிக்க அகத்தியரின் நம்பிக்கை நம்மையும் தொற்றிக்கொள்ளும் என்று தோன்றுகிறது.

(29.2.48, 7.3.48 மற்றும் 14.3.48 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...)